கிரெடிட் டெபிட் கார்டு வழியாக இணையப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு RBI புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. Image Credit .
தற்போதுள்ள வழக்கப்படி ஒருவர் கிரெடிட் / டெபிட் அட்டை வைத்து இருந்தால், அவர் வாங்கியது முதல் எந்தக் கூடுதல் நடவடிக்கையும் எடுக்காமல் இந்த அட்டைகள் விவரங்கள் மூலம் இணைய பரிவர்த்தனை செய்ய முடியும்.
ஆனால், இச்சேவையை அனைவரும் பயன்படுத்துகிறார்கள் என்று கூற முடியாது, காரணம், இணைய பரிவர்த்தனை குறித்துத் தெரியாதவர்கள் ஏராளமானோர் இந்தியாவில் உள்ளனர்.
WhatsApp பெரும்பான்மையானோர் பயன்படுத்தினாலும், இணையம் வழியாகப் பொருட்களை, சேவைகளை வாங்குவது அனைவருக்கும் தெரியும் என்று கட்டாயமில்லை.
எனவே, இவர்களை ஏமாற்ற ஏராளமானோர் கிளம்பியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ‘கார்டுல இருக்குற 16 நம்பர் சொல்லுங்கோ சார்‘ என்று ஒரு கிராமத்து நபரிடம் வங்கி மேலாளர் போல, வட இந்தியர் ஒருவர் பேசிய ஆடியோ சுற்றிக் கொண்டு இருந்ததைப் பலர் கேட்டு இருக்கலாம்.
இவையல்லாமல் குறுந்தகவல் அனுப்பியும், வேறு வழிகளில் தொடர்பு கொண்டும் மக்களை ஏமாற்றுகிறார்கள். விஷயம் தெரிந்தவர்கள் புறக்கணித்து விடுகிறார்கள்.
இது போல அப்பாவி மக்கள் ஏமாறுவதைத் தடுக்க RBI புதிய முறையை வரும் மார்ச் 16 2020 முதல் அமல்படுத்தப் போகிறது.
புதிய கிரெடிட் டெபிட் கார்டு (Credit Debi Card)
மார்ச் 16 முதல் யாரெல்லாம் புதிய கிரெடிட் டெபிட் அட்டை பெறுகிறார்களோ அவர்களுக்கு இணைய பரிவர்த்தனை (Default) முடக்கப்பட்டு இருக்கும்.
இவ்வசதி தேவைப்படுகிறவர்கள் எப்போது வேண்டும் என்றாலும், இச்சேவையைச் செயல்படுத்திக் கொள்ளலாம்.
பழைய கிரெடிட் டெபிட் கார்டு (Credit Debit Card)
ஏற்கனவே கிரெடிட் டெபிட் அட்டை வைத்துள்ளவர்கள், இதுவரை இணைய பரிவர்த்தனை செய்தது இல்லையென்றால், அவர்களது இணைய பரிவர்த்தனை வசதி முடக்கப்படும்.
தேவையென்றால், எப்போது வேண்டும் என்றாலும் மீண்டும் செயல்படுத்திக் கொள்ளலாம்.
இதன் மூலம் இச்சேவையைப் பயன்படுத்தாதவர்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும். RBI யின் இச்செயல் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
தொடர்புடைய கட்டுரைகள்
நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்று.. பகிர்வுக்கு நன்றி கிரி..