ஒடிஷாவில் நடந்த ரயில் விபத்து பல அரசியலை புரிய வைக்கிறது. அவை என்னவென்று பாப்போம். Image Credit
பாராட்டுக்குரிய மாநிலம்
ஒடிஷா அரசியலையும் மக்களையும் நிச்சயம் பாராட்ட வேண்டும்.
நவீன் பட்நாயக் மாநிலக் கட்சியாக இருந்தாலும், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, எந்தப் போலி அரசியலையும் செய்யாமல் ஒத்துழைப்பு கொடுத்துக் குறுகிய நாட்களில் பழைய நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.
உண்மையாகவே வியப்பாக உள்ளது.
இதே நிலை தமிழகத்தில் நடந்து இருந்தால், என்ன ஆகி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். இரண்டு வாரங்களுக்கு ஓட்டிக்கொண்டு இருந்து இருப்போம்.
அதோடு பல்வேறு சர்ச்சைகள், தொலைக்காட்சி விவாதங்கள், சண்டைகள், விமர்சனங்கள் என்று ரணகளமாக இருக்கும்.
ஆனால், அங்கோ அதற்குள் இயல்பு நிலை கிட்டத்தட்ட திரும்பி விட்டது. அரசு இயந்திரம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, குறுகிய காலத்தில் சரி செய்துள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் இது பற்றிய செய்தியே அங்கு இருக்காது போல. இதைக் கற்பனையிலும் தமிழகத்தில் நினைக்க முடியவில்லை.
தமிழகத்தில் மட்டும் ஏன் அரசியல் கேவலமாக உள்ளது?! இப்பிரச்சனை என்றில்லை எந்தப்பிரச்சனை நடந்தாலும் இப்படித்தான் உள்ளது.
அரசியலையும் தாண்டித் தமிழகம் நல்ல நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றால், தமிழகத் தொலைக்காட்சி ஊடகங்களை ஒழித்துக்கட்டினால் போதுமானது.
இங்கே இருந்து உதயநிதி ஸ்டாலின் சென்றதே வீண் என்கிற வகையில், போன வேகத்தில் திரும்பி வந்து விட்டார் காரணம், அனைத்தையும் அதற்குள் ஒடிஷா அரசு செய்து விட்டது. இதை நம்பவே முடியவில்லை!
ஐந்தாவது முறை
நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக ஆட்சி செய்கிறாராம். இவர் ஆட்சி பற்றியோ, இம்மாநிலத்தைப் பற்றியோ பெரியளவில் தெரியாது.
அதற்குக் காரணம், தமிழகம் போல எப்போதும் பிரச்சனைகளால் நிரம்பி இருக்கவில்லையென்பதாகக் கருத வேண்டியுள்ளது.
ஒருவேளை தமிழக அரசியல் போல அனைத்துக்கும் விளம்பரம் செய்து கொள்ளாததும், துதிபாடும் ஊடகங்கள் இல்லாததும் காரணமாக இருக்கலாம்.
இவர் ஆட்சி எப்படியுள்ளது? எதனால் மற்ற கட்சிகள், பாஜக உட்பட ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்று இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
தமிழகத்தில் நாகரீக அரசியலை எதிர்பார்க்க முடியாது என்றாலும், ஒடிஷா போன்ற மாநிலங்களைப் பார்த்துப் ஏக்கப்படாமலும் இருக்க முடியலை.
ஒடிஷா என்ன பாடமெடுத்தாலும், தமிழக அரசியல் அதை உணராது என்பது கசப்பான உண்மை.
ரயில் விபத்து
விபத்து என்றாலே எதிர்பாராமல் நடப்பது தான் ஆனால், சில கவனக்குறைவால் நடப்பது, சில பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் மீறி நடப்பது.
எடுத்துக்காட்டாக நான் இருக்கும் ஐடி துறையை வைத்தே கூறுகிறேன்.
சப்போர்ட் பிரிவில் உள்ள குழு (Team) அவர்களது டேட்டா சென்டரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பல வருடங்களாக எந்தப்பிரச்சனையும் இல்லாமல் கொண்டு சென்று இருப்பார்கள்.
என்ன தான் எச்சரிக்கையாக இருந்தாலும், அனைத்தையும் தாண்டி என்றாவது ஒரு நாள் பிரச்சனையாகி விடும்.
பல வருடங்களாகப் பிரச்சனை இல்லாமல் கொண்டு சென்றதை ஒருவரும் பாராட்டி இருக்க மாட்டார்கள் ஆனால், பிரச்சனை என்றதும் பாய்வார்கள். இவ்வளவு வருடங்களாக சரியாக இருந்தது கண்டுகொள்ளப்படாது.
இதுவரை தரமான சேவையைக் கொடுத்து இருந்ததையோ, மேம்படுத்தியுள்ளதையோ எவரும் கணக்கில் எடுக்க மாட்டார்கள்.
இதன் வலி இதற்காக உழைத்தவர்களுக்கு மட்டுமே புரியும். மற்றவர்களுக்கு இதுவொரு கடந்து செல்லும் தருணம் அவ்வளவே.
கூகுள் நிறுவனம் எப்படிப்பட்ட எச்சரிக்கைகளைப் பின்பற்றும் என்பதை அறிந்து இருப்பீர்கள் ஆனால், அவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கடுமையாக முயற்சித்து விரைவில் பழைய நிலைக்குக் கொண்டு வருவார்கள்.
ஆனால், கூகுளால் இவ்வளவு வருடங்களாக இலவசமாகப் பயனடைந்தவர்கள் பொறுமையில்லாமல் அவற்றை மறந்து கூகுளை திட்டுவார்கள்.
அஷ்வினி வைஷ்ணவ்
ரயில்வே துறை அமைச்சருக்கு இப்படியான ஒரு மோசமான நிலை.
கடந்த இரு வருடங்களில் இவர் செய்த சாதனைகளை, வருமானத்தை அதிகரித்ததை, ஏற்பட்ட மாற்றங்களை அறியாதவர்களே இவரைப் பதவி விலகக் கூறுவார்கள்.
இதுவரை இந்தியாவில் ரயில்வே துறையில் அமைச்சராக இருந்தவர்களை விடக் கடந்த இரு வருடங்களில் இவர் செய்த மாற்றங்கள், முன்னேற்றங்கள் அதிகம்.
விபத்து ஏற்பட்டது தவறு தான், அதுவும் 275 உயிர்கள்.
ஆனால், இதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்பது எப்படி ஏற்புடையதாகும்? சரியாகச் செயல்படாத அமைச்சர் என்றால், பதவி விலகக் கூறுவதில் எந்தத் தவறுமில்லை.
சரி! பலரும் கூறுவது போல இவர் பதவி விலகி விட்டால், நடந்தது இல்லையென்று ஆகி விடுமா?! இழந்த உயிர்கள் திரும்பி விடுமா?! அடுத்து வரும் அமைச்சர் கொண்டு வந்து விடுவாரா? இனி விபத்தே நடக்காது என்று உறுதி கூற முடியுமா?
ஆனால், பதவி விலகாமல், பொறுப்பைத் தட்டி கழிக்காமல், இந்திய வரலாற்றிலேயே நடந்த மோசமான விபத்துகளில் ஒன்றான இந்த விபத்தில் ஏற்பட்ட சேதத்தை விரைவில் சரி செய்துள்ளார்.
வெறும் 51 மணி நேரங்களில் பாதைகள் சரி செய்யப்பட்டு முதல் சரக்கு ரயில் கிளம்பி விட்டது. இதெல்லாம் சாதாரணச் செயல் என்று நினைக்கிறார்களா?
அடுத்த நாள் பெரும்பாலான ரயில்களும் அப்பாதையில் செல்லத் துவங்கி விட்டன. இரண்டு நாட்களும் இரவு பகலாக விபத்து நடந்த இடத்திலேயே இருந்து பிரச்சனைகளைச் சரி செய்துள்ளார்.
பிரச்சனைகளைக் கண்டு பயந்து பதவி விலகுபவர் நேர்மையானவர் ஆனால், பிரச்சனைகளை மிகக்குறைந்த காலத்தில் சரி செய்து இயல்பு நிலைக்குக் கொண்டு வருபவர் திறமையற்றவரா?
இப்படியெல்லாம் யோசிக்க மனசாட்சியில்லாதவரால் தான் முடியும்.
தலைமைப்பண்பு
எத்தனையோ சாதனைகளைச் செய்தும் இப்பிரச்சனையால் அனைவரும் குறை கூறும் நிலைமைக்கு ஆளாகி விட்டோமே என்று மன உளைச்சல் ஆகி இருப்பார்.
ஆனால், தன் கடமையிலிருந்து விலகாமல் சரி செய்துள்ளார். உண்மையாக, நேர்மையாக உழைத்தவர்களுக்கு மட்டுமே இதன் வலி புரியும். மற்றவர்களுக்கு அரசியல் செய்ய மட்டுமே பயன்படும்.
இதுவரை பதவி விலகியவர்கள் வேறு பதவிகளையே பெறவில்லையா? வேறு துறை அமைச்சர்கள் ஆக வில்லையா? அங்கே பிரச்சனைகள் நடக்கவில்லையா? அரசியலை விட்டுச் சென்று விட்டார்களா?
அப்படியென்றால், பதவி விலகினால் மட்டுமே அனைத்தும் சரியாகி விடுமா?!
பொறுப்பை உணர்ந்து 51 மணி நேரங்களில் முதல் சரக்கு ரயிலைத் தன் துறை ஊழியர்களால் இயக்க வைத்த அஷ்வினி வைஷ்ணவ் பாராட்டுக்குரியவர்.
இதுவே ஒரு தலைமைப்பண்புக்கு அழகு, பயந்து கோழை போலப் பதவி விலகுவதல்ல. அஸ்வினி வைஷ்ணவ் சிறந்த மேலாண்மையாளர்.
அஸ்வினி வைஷ்ணவ் தொலைத்தொடர்பு துறையில் எதிர்பார்த்த அளவுக்குச் செய்யத் தவறி இருக்கலாம் ஆனால், ரயில்வே துறையில் முழு உழைப்பையும் கொடுத்துள்ளார்.
என் மனமார்ந்த பாராட்டுகள், நன்றிகள். அஷ்வினி வைஷ்ணவ் மேலும் உழைத்து ரயில்வே துறையை மேம்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.
CBI விசாரணைக்கு விபத்து உட்படுத்தப்பட்டுள்ளது, வாய்ப்பே இல்லையென்று அதிகாரிகள் கூறும் நேரத்தில் என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும்.
சாலை விபத்தில் வருடத்துக்கு லட்சக்கணக்கில் சாகிறார்கள், சாலை விபத்தில் இறந்தவர்கள் கொரோனாவால் இறந்ததை விட அதிகம் என்பது பலருக்குத் தெரியாது.
டாஸ்மாக்கால் பலர் சாகிறார்கள், குடி குடும்பத்தையே அழிக்கிறது ஆனால், இதைப் பற்றி என்றாவது இவரை விமர்சிப்பவர்கள் யோசித்து இருக்கிறார்களா?!
விபத்தை நியாயப்படுத்தவில்லை ஆனால், இதை மட்டுமேயல்லாமல் மற்ற காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே கூற வருவது.
கிரி, உண்மையில் இது ஒரு சோகமான சம்பவம்.. இறந்தவர்களின் புறத்திலிருந்து அதை நோக்கும் போது தான் அதன் வலியை உணர முடியும்.. அந்த வலி இந்த நிகழ்வை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கோ / பத்திரிக்கைகளின் TRP யை மட்டும் ஏற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களுக்கு இது என்றுமே புரியாது..
ரயில்வே துறை அமைச்சரின் ராஜினாமா? என்பது எனக்கு நீண்ட நாளாக உள்ள சந்தேகம்.. ஒரு குறிப்பிட்ட துறையில் பிரச்சனை ஏற்படும் போது அதற்கு ஒரு தனிநபர் மட்டும் எவ்வாறு காரணமாக இருக்க முடியும்.. விசாரணையை தொடங்காமல் ராஜினாமா செய்ய சொல்வது எவ்வாறு நியாயம்??? அவரை மட்டும் பதவி விலக சொல்வது நியாமா?? நிச்சயம் அவரின் கடந்த கால செய்லபாடுகளையும் / பணி திறனையும் நோக்க வேண்டும்..
பல அரசு வங்கிகளில் கடன் பெற்று, வங்கியை திவாலாகி விட்டு ஓடி செல்லும் ஒவ்வொரு தொழிலதிபரின் பின் நிச்சயம் ஏதேனும் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளும் / அரசியல் வாதிகளும் கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை.. ரயில் விபத்தில் மனித உயிர் / வங்கி திவாலில் பணம்.. இது மட்டும் தான் வித்தியாசம்..
@யாசின்
“ஒரு குறிப்பிட்ட துறையில் பிரச்சனை ஏற்படும் போது அதற்கு ஒரு தனிநபர் மட்டும் எவ்வாறு காரணமாக இருக்க முடியும்..”
வழக்கமாக தலைமையை தான் கேள்வி கேட்பார்கள் என்பது இயல்பு.
ஆனால், இதுவரை என்ன செய்துள்ளார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
விபத்துக்கு யார் எப்படி பொறுப்பேற்க முடியும்? அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக செய்தும், அனைத்தையும் மீறி நடக்கிறது.
விசாரணை செய்ய வேண்டும்.
ஒருவேளை வைஷ்ணவ் ஊழல் செய்துள்ளார், நிர்வாகம் சரியாக செய்யவில்லையென்றால், ராஜினாமா செய்யச் சொல்வது நியாயமான கோரிக்கை.
“தொழிலதிபரின் பின் நிச்சயம் ஏதேனும் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளும் / அரசியல் வாதிகளும் கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை.”
உண்மை. இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஒருவேளை எடுக்கிறார்கள் ஆனால், நமக்கு தெரியவில்லையா என்பது எனக்குத் தெரியவில்லை.
/ இதே நிலை தமிழகத்தில் நடந்து இருந்தால், என்ன ஆகி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். இரண்டு வாரங்களுக்கு ஓட்டிக்கொண்டு இருந்து இருப்போம். /
ஏன் இப்படி யோசிக்கறிக்க
@பிரவீன்
இது எடுத்துக்காட்டுக்காக கூறப்பட்டது, நடக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவ்வாறு யாரும் நினைக்கவும் மாட்டார்கள்.