மோடிக்கு ஓட்டுப் போட்டீங்கள்ல… அனுபவியுங்க!

9
மோடிக்கு ஓட்டுப்

பெரும்பான்மையாக வெற்றி பெற்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமலே மோடி ஆட்சி அமைத்து விட்டார். இதில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது.

நல்லது என்னவென்றால் ஒரு முடிவைச் செயல்படுத்த மற்ற கூட்டணிக் கட்சிகளின் அரசியல் மிரட்டலுக்கு பணிய வேண்டியதில்லை.

எடுத்துக்காட்டு கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் திமுக தனக்கு தொழில்நுட்பத் துறை தான் வேண்டும் என்று மத்திய அரசை மிரட்டிப் பணியவைத்து, இதன் மூலம் நடந்த ஊழல்கள் அனைவரும் அறிந்தது.

இது போல யாரும் தற்போது மத்திய அரசை மிரட்ட முடியாது. சுதந்திரமாக செயல்படலாம். Image Credit

கெட்டது என்னவென்றால் அதுவும் இதே. யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற எண்ணம்.

எனவே மத்திய அரசு என்ன நினைக்கிறதோ அதை எந்த எதிர்ப்பும் இல்லாமல் செயல்படுத்த முடியும்.

விமர்சனங்கள்

இதைச் சாதகமாக வைத்து மரபணு மாற்று விதை, பொதுத் துறை நிறுவனங்களில் அந்நிய முதலீடு போன்றவற்றை அனுமதித்து தற்போது அது சர்ச்சையாகி இருக்கிறது.

பாஜக தேர்தலுக்கு முன்பு பொதுத் துறை நிறுவனங்களில் அந்நிய முதலீடு, மரபணு மாற்று விதைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங் அரசுடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தாமதமாகக் கூட இல்லாமல், உடனடியாக செயல்படுத்த முயற்சித்து இருக்கிறது / வருகிறது .

தற்போது பலரின் கேள்வியே மோடி வெற்றி பெற வேண்டும் என்று கூறியவர்களை, “இப்பப் பாருங்க.. மோடி என்ன செய்கிறார்.. இப்பவாவது புரிகிறதா? இதைத் தான் நாங்கள் அப்பவே சொன்னோம்.

மோடிக்கு கொடி பிடித்தீங்களே இப்ப என்ன ஆச்சு பாருங்க?” என்பதாகும். மோடி ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது.

முதலில் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே நல்ல, நிலையான அரசாங்கம் அமைய வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.

காங் அல்லது பாஜக

தேர்தல் சமயத்தில் மக்களுக்கு இருந்த வாய்ப்பு காங் அல்லது பாஜக என்பதாகும்.

காங் ஆட்சியில் மற்ற கட்சிகளின் தலையிடுதலால் காங் அரசு மூன்றாவது அணி போல எப்படித் திணறியது என்பதைப் பார்த்தோம்.

இவர்களே இந்த லட்சணத்தில் இருந்த நிலையில் மூன்றாவது அணி வந்தால் என்ன ஆகும்?

ஒருவேளை மன்மோகன் அரசு சிறப்பாக ஆட்சி நடத்தி இருந்தால், மக்கள் ஏன் மாற்றத்தைப் பற்றி நினைக்கப் போகிறார்கள்.

மிக மோசமாக ஊழல் செய்து காங் நாட்டையே அழித்து விட்டது. இந்த நிலையில் மக்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு மோடி மட்டுமே!

மூன்றாவது அணி

மூன்றாவது அணியெல்லாம் நிலையற்ற தன்மையை உருவாக்கி நாட்டைச் சீரழிக்க மட்டுமே உதவும்.

ஆளாளுக்கு “நான் சொல்வதை செய்யவில்லை என்றால், ஆதரவை விலக்கி விடுவேன்” என்று மிரட்டிக்கொண்டு இருப்பார்கள்.

திமுக 40 இடத்தை வைத்து காங் அரசை மிரட்டி எத்தனை சாதித்தது (தமிழ் நாட்டுக்கல்ல) என்பதை பலரும் அறிவீர்கள்.

இது போல மொத்த ஆட்சியும் இருந்தால், அந்த அரசாங்கம் விளங்குமா!

கெஜரிவால்

அடுத்த சிறு வாய்ப்பு கெஜரிவால். கெஜரிவால் பற்றி நான் எழுதியதற்கு சிலர் கோபித்துக்கொண்டார்கள்.

அதெப்படி புதியதாக ஒருவருக்கு வாய்ப்பு அளிக்காமல் இப்படியே வழக்கமான அரசியல்வாதிகளை ஆதரிக்கலாம் என்று!

இதைப் பற்றிக் கூறினால் மீண்டும் அதையே தான் கூற வேண்டும்.

கெஜரிவால் டெல்லியில் நிரூபித்து பின் சட்டமன்ற தேர்தலுக்கு வந்து இருக்க வேண்டும் ஆனால், ஆசையில் இவர் அகலக்கால் வைத்து முதலுக்கே மோசம் செய்து கொண்டார்.

தற்போது நடைபெறப் போகும் நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியில்லை என்று கூறும் அளவிற்கு அவரைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டது. இது யார் தவறு?

கெஜரிவால் ஆதரவாளர்கள் கோபித்துக்கொள்ள வேண்டியது பொறுப்பில்லாமல் செயல்பட்ட கெஜரிவால் மீது தானே தவிர, வாக்களிக்காத மக்கள் மீதல்ல.

டெல்லியில் கெஜரிவால் மாற்றம் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையில் மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தார்கள் ஆனால், பொறுப்பின்றி நடந்து தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

எனவே பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மியை மக்கள் புறக்கணித்து விட்டார்கள். இதில் மக்களின் தவறு என்ன? கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாதது யார் தவறு?

எனவே மக்களை இந்த விசயத்தில் குறை சொல்லாதீர்கள். மோடி அரசும் காங் அரசு போலவே கொள்கைகளைக் கொண்டு இருந்தால் பாஜக க்கும் இதே நிலை தான் அடுத்த தேர்தலில்.

எனவே மக்களுக்கு இருந்த வாய்ப்பு பாஜக மட்டுமே!

காங் செய்த ஊழல்

பாஜக க்கு விழுந்த வாக்குகள் குஜராத்தில் மோடியின் சில செயல்பாடுகளை மனதில் நிறுத்தியும், காங் செய்த ஊழல்களைக் கண்டு வெறுத்தும் இவர்களுக்கு போட்ட வாக்காகக் கருதலாம்.

வாக்களித்தவர்கள் அனைவருமே பாஜகவைப் பிடித்துத் தான் வாக்களித்தார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது.

இருந்த வாய்ப்பில் (வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை)  பாஜகவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

நம்ம தமிழ்நாட்டையே எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளலாம். கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்தது, அவர்கள் செய்த ஊழல் தமிழ்நாடு அல்ல உலகமே அறிந்தது.

அடுத்த முறையும் இவர்களே வந்தால், தமிழ்நாட்டையே விற்று விடுவார்கள் என்ற எண்ணம் தான் பெரும்பாலான மக்களிடையே இருந்தது.

அதன் எதிரொலி தான், பதவியில் இல்லாத ஐந்து வருடமும் எந்த வித போராட்டத்திலும் நேரடியாக கலந்து கொள்ளாமல், மக்களுக்கான குரலையும் கொடுக்காமல் தேர்தலுக்குக் கொஞ்ச நாள் முன்னாடி வந்து பிரச்சாரம் செய்து “ஜெ” அமோக வெற்றி பெற்றார்.

எப்படி?

காரணம், கடந்த ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு மற்றும் ஒரு மாற்றம் வேண்டி.

தற்போது ஜெ ஆட்சிக்கு வந்த பிறகு செய்த பல நடவடிக்கைகள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இன்னும் மின்சாரப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை.

இதனால் மக்கள் கடுப்பாகும் போது திமுக காரங்க “அம்மாவுக்கு ஓட்டுப் போட்டீங்கள்ல அனுபவியுங்க” என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

இதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா? என்னமோ இவர்கள் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடியதைப் போலவும், இதை எல்லாம் வேண்டாம் என்று மறுத்து மக்கள் ஜெ க்கு வாக்களித்தது போலவும் கிண்டலடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இனி அடுத்தது திமுக வருகிறது என்று வைத்துக்கொள்வோம். வழக்கம் போல இதே கதை தான். அதிமுக காரங்க என்ன சொல்வாங்க…!

“பார்த்தீங்களா.. எங்களைப் புறக்கணித்து திமுக விற்கு வாக்களித்தீங்கள்ல நல்லா வேணும்..” என்று நக்கல் அடிப்பார்கள்.

கடைசியில் வாக்களித்தவர்கள் தான் இவர்களிடம் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள்.

தவறை எல்லாம் செய்து விட்டு என்னமோ இவர்கள் நல்லாட்சி செய்ததைப் போலக் கேள்வி கேட்பார்கள். கட்சிகாரங்க எல்லாம் பொதுமக்களைக் கிண்டலடிக்க என்ன தகுதி இருக்கிறது?

நான் இன்று வரை மக்கள் செய்த தவறாகக் கருதுவது “காமராஜர்” அவர்களைத் தோற்கடித்தது தான்.

என்றைக்கு இதைச் செய்தார்களோ அன்றிலிருந்து இன்றுவரை நமக்கு பிரச்சனை தான்.

மோடி தான் தற்போதைய ஒரே வாய்ப்பு

நான் ஒரு கட்டுரையில் கூறி இருந்தது…

நாடு இருக்கும் நிலைக்கு நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ மோடி தான் தற்போதைய ஒரே வாய்ப்பு. மோடியை ஆதரிப்பதால் அவர் செய்யும் அனைத்தையும் நான் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் இல்லை.

சுருக்கமாக, மோடி ஒன்றும் உத்தமபுத்திரன் என்று நான் சான்றிதழ் கொடுக்கவில்லை. எனக்கு வேறு வழியில்லை. இது பற்றி ஏற்கனவே விரிவாகக் கூறி இருக்கிறேன்.

மோடி வேண்டாம் என்பவர்களிடம் யாரை கையைக் காட்டுகிறீர்கள் என்றால் பதில் இல்லை. தற்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு காங் / பாஜக. இது தான் நிதர்சனம்.

இது தான் பொதுஜனத்தின் எண்ணமும், இது தான் தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்தது. அதாவது சுருக்கமாக, யாராவது நல்லது செய்ய மாட்டார்களா!

இந்த ஊழல், வளர்ச்சியின்மை போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்காதா.. நாடு முன்னேறாதா! நமக்கு நல்லது நடக்காதா என்று ஆதங்கம். இது தான் வாக்களித்தவர்களின் நிலை.

எதிர்ப்பு

தற்போது என்ன நடக்கிறது என்றால், மோடி அரசு செய்த சில சர்ச்சையான நடவடிக்கையான பொதுத் துறை நிறுவனங்களில் அந்நிய முதலீடு, மரபணு விதை மாற்றம்.

இந்தித் திணிப்பு, ரயிலில் இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதி நீக்கம் நடவடிக்கைகளால் வாக்களித்த பலர் கடுப்பாகி இருக்கிறார்கள் என்பது உண்மை.

இதில் இந்தித் திணிப்பு, மரபணு மாற்று விதை, ரயிலில் இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதி நீக்கம் போன்றவற்றை எதிர்ப்பு காரணமாக (தற்காலிகமாக) திரும்பப் பெற்று விட்டார்கள்.

மோடியை எதிர்த்தவர்கள் என்னமோ இவர்கள் 100% உண்மையான அரசியல்வாதியைப் பரிந்துரைத்தது போலவும் அதை மக்கள் ஒதுக்கி விட்டு மோடிக்கு வாக்களித்துப் போலவும் இணையத்தில் கிண்டலடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

“மோடிக்கு ஓட்டுப் போட்டீங்கள்ல… அனுபவியுங்க!” என்று கூறும் போது சிரிப்பாக இருக்கிறது.

யார் ஆட்சி வேண்டும்?

நானும் மோடி எதிர்ப்பாளர்களை அப்போது இருந்து ஒரே கேள்வியைத் தான் கேட்கிறேன். இதைக் கேட்டு எனக்கே சலித்து விட்டது.

பட்டுன்னு சொல்லுங்க யார் ஆட்சி அமைத்து இருக்க வேண்டும் என்று..!

உங்களால் கூற முடியாது. ஏனென்றால், மோடி வேண்டாம் என்று கூற மட்டுமே முடியும், வேறு யார் வர வேண்டும் என்று உங்களால் கூற முடியாது. இது தான் உண்மை.

காங் வேண்டாம், பாஜக  வேண்டாம் என்றால் இனி யாராவது மாய மந்திரமாக ஒருத்தர் வந்து பிரதமராகி விடுவாரா!

நீங்கள் காதைச் சுற்றி மூக்கைத் தொட முடியாமல் நிற்பது போல இல்லாமல் மக்கள் நேரடியாக வாக்களித்து இருக்கிறார்கள் அவ்வளவே!

வாக்களித்தவர்களில் இரு பிரிவினர் இருக்கிறார்கள். ஒன்று நாட்டுக்கு நல்லது செய்வார்கள் என்றெண்ணி வாக்களிப்பவர்கள்.

இன்னொன்று மோடிக்காக வாக்களித்தவர்கள் அதாவது மோடி எது செய்தாலும் சரியென்று வாதிடுபவர்கள்.

இதில் முதல் பிரிவில் வருபவர்கள் தான் வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள்.

நான் மோடியை ஆதரித்து இருந்தாலும், என்னால் மோடி நல்லது செய்தால் பாராட்டவும் அதே சமயம் தவறு இருந்தால் எந்தத் தயக்கமும் இல்லாமல் விமர்சிக்கவும் முடியும்.

ஏனென்றால் மோடி செய்யும் அனைத்திற்கும் கொடி பிடிக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் எனக்கு இல்லை.

மோடி எது செய்தாலும் பாராட்டும் அவரின் தீவிர ஆதரவாளர்களுக்கும் / எதிர்ப்பாளர்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்!

ஒருவர் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார் இன்னொருவர் கண்மூடித்தனமாக எதிர்க்கிறார். இது தான் உண்மை.

நடவடிக்கைகள்

இதே மோடி அரசு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது.

இது மிக மிக அவசியமான நடவடிக்கை குறிப்பாக, நம்மைப் போன்ற நீர் வளம் இல்லாத மாநிலத்திற்கு.

கடந்த காங் அரசு ஏற்றுக்கொண்ட வர்த்தக மேம்பாட்டு ஒப்பந்தத்திற்கு மோடி அரசுத் தடை விதித்து விட்டது.

இது அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளுக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்து இருக்கிறது.

இவற்றைப் பாராட்ட எதிர்ப்பாளர்களுக்கு மனம் இருக்கிறதா? இருக்கும் ஆனால், பாராட்டினால் நம்ம கவுரவம் குறைந்து விடுமே என்று அமைதியாக இருப்பார்கள்.

என்னவோ மோடி வரவில்லை என்றால், எந்தப் பிரச்சனையுமின்றி இந்தியா இருக்கும் என்பது போலவே பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒருவேளை மோடி வராமல் வேறு யாரும் வந்து இருந்து, அவர்களால் மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால், தற்போது நக்கல் அடிப்பவர்கள் வந்து பிரச்னையைச் சரி செய்து தருவீர்களா?!

இருந்த வாய்ப்பில் மக்கள் மோடியைத் தேர்ந்தெடுத்தார்கள், குறைகள் இருந்தால் விமர்சிக்கப் போகிறார்கள். இதில் என்ன பெரிய இழுக்கைக் கண்டீர்கள்?

நீங்களும் யார் வர வேண்டும் என்பதைக் கூற மாட்டீர்கள், வாக்களித்தாலும் கிண்டல் செய்வீர்கள்.

என்ன தான் உங்கள் பிரச்சனை!

பொதுமக்கள் எவரும் தான் கெட்டுப் போக வேண்டும் என்று நினைத்து வாக்களிப்பதில்லை.

அனைத்து மக்களின் எண்ணமும் நாடு முன்னேற வேண்டும், மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும், அனைத்து மக்களும் அடிப்படை வசதிகளைப் பெற வேண்டும் என்பது மட்டுமே!

எனவே, பாராட்டையும் விமர்சனத்தையும் ஆளை வைத்துத் தனக்கு பிடிக்கிறது / பிடிக்கலை என்று எடை போடாமல் அவர்களின் நடவடிக்கைகளை வைத்து விமர்சனம் செய்யுங்கள்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

9 COMMENTS

 1. கிரி.. “இதுவும் கடந்து போகும்” என்பது போல வரும் ஐந்து ஆண்டுகளும் (அடுத்த 5 ஆண்டுகளும்) இப்படி தான் செல்லும் என்பதில் எனக்கு ஐயமில்லை.. மேல யார் வந்தால் என்ன, கீழ யார் வந்தால் என்ன, நமது வீட்டு அடுப்பு, நமது உழைப்பில் மட்டுமே எறியும் என்பது தான் நிஜம்..யாரை குறை கூறி,விமர்சித்து என்ன ஆகபோகிறது…???

 2. மோடிக்கு ஓட்டு போடாத மக்கள் ஏன் அனுபவிக்க வேண்டும்?

  • காங்கிரஸ்கு ஒட்டு போடாத மக்கள் 10 வருடம் அனுபவித்தார்களே. ஏன் இருவரையும் பிடிக்காதவர்கள் தொடர்ந்து அனுபவித்து கொண்டிருக்கிறார்களே

 3. ஹாய் கிரி

  மோடி பெரிய அளவில் காய்களை நகர்த்தி வருகிறார். நீங்களோ பெரிய அளவில் சிறிய பிரச்சனைகளுக்கு பயப்படுகுறீர்கள் . வாழ்க்கையில பயம் இருக்கலாம் . பயமே வாழ்க்கை ஆயிட கூடாது . ( தலைவர்).
  இந்திய மற்ற நாடுகளுக்கு இணையாக ஏன் இல்லை என்று கேள்வி கேட்டால் மட்டும் போதாது. செயல் படுத்துவது கடினமானது. அதற்க்கு கடினமான நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.

  1. அயல்நாடு உடனான இணக்கம் . இதில் முந்தைய அரசு பெரிதும் கோட்டை விட்டது. அதற்காக நமது அண்டை நாடுகளுக்கும்( நேபால், பூட்டான் ) , ஜெர்மனி , பிரேசில், அமெரிக்க முதலான நாடுகளுக்கு பயணம் செய்கிறார் மோடி.
  2. கட்டமைப்பு வசதிக்கு பணம் மற்று தொழில் நுட்பம் தேவை . அவர்களிடம் இருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யவே செல்கிறார்.( உ . நேபாளத்தில் ஹைட்ரோ எலெக்ட்ரிக் ப்ராஜெக்ட் மூலமாக இந்தியாவிற்கு மின்சாரம்) .
  3. இந்தியாவில் காப்பீட்டு நிறுவங்களில் அந்நிய முதலீடு முன்பு 26% இருந்தது . இப்போது 49% செய்தால் , பலரும் காப்பெடு பெறலாம். தற்போது 4% மக்கள் மட்டுமே காப்பெடு செய்திருக்கிரார்கள். அதற்க்கு முதலீடு தேவை. ( காப்பீடு என்பது உயிர் மட்டுமில்லை. நெருப்பு, நீர், வீடு, வாகனம், உடல் நிலை எல்லாவற்றிக்கும் தான், எல்லாவற்றிற்கும் முதலீடு தேவை .
  4. இன்று ரயில் நிறுவங்களில் 100% அந்நிய முதலீடு கட்டமைப்பு வசதிக்காக , செயல் படுத்தி இறுக்கிறார் . இது அவசியம் தேவை. ஏன் இந்தியாவில் விபத்து நடக்கிறது என்று கேள்வி கேட்டால் பயன் வந்து விடாது. அதற்க்கு மோடி முயற்சி எடுக்கிறார் .
  5. இன்னும் பல எழுதலாம் , வரவேற்க தக்க நிகழ்வுகளை . எல்லோரையும் சந்தோச படுத்துவது அரசாங்கத்திற்கு கடினம் .

  நீங்கள் அருண் ஜைட்லேயின் நேர்காணலை தொலை கட்சியில் கண்டிப்பாக பார்க்க வேண்டும் . அவர் எல்லா கேள்விகளுக்கும் நன்றாக விளக்கம் அளித்திருக்கிறார்.

  பொறுமை கொள்ளுங்கள் . நன்றாக நல்லவைகளை அனுபவிப்பீர்கள். நல்ல வளமான எதிர்காலம் வரும் என்று கட்டாயம் நம்புகிறேன். ஜெய் ஹிந்த் .

 4. 1. இவர் அயல்நாடு சென்று ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. சீனா விஷயத்தில் மோடியின் கர்ஜனை, இப்போது என்ன்ன ஆச்சு?
  2. உள்நாட்டில் ஏராளமான வளம் உள்ளது. நாம் ஏற்றுமதி செய்யல்லாம் என்று மோடி தேர்தல் பிரசாரத்தில் சொன்னதை மறந்து விட்டேர்களா?
  3. அயல்நாடு நாடு நிறுவனங்கள் வந்தால் அவர்கள் ஒன்றும் இலவசமாக தர மாட்டார்கள். அது மக்கள் மனநிலையை பொறுத்தது?
  4. 2025-ல் முதல் புல்லட் ரயில் ஓடும் என்கிறார்கள். லாலு ஊழல்வாதி என்று சொனாலும் அவர் ரயில்வேயை எப்படி லாபகரமாக நடத்தினார்?
  எல்லோரையும் சந்தோசப்படுத்த வேண்டாம். காங்கிரஸ் வழியில் வீறு நடைபோடும் மோடி எல்லோரையும் சாகடிக்காமல் இருந்தால் sarithaan

 5. // “மோடிக்கு ஓட்டுப் போட்டீங்கள்ல… அனுபவியுங்க!” என்று கூறும் போது சிரிப்பாக இருக்கிறது//

  அம்மாவுக்கு வாக்கு போட்டு 37 தொகுதிகளை அம்மாவுக்கு பரிசளித்தவங்க இப்படி சொல்லும் போது தான் தங்க முடியா சிரிப்பாக இருக்கிறது.

 6. அண்ணா மோடி விசயத்தில் நானும் உங்கள் கருத்தை எதிர்ப்பை எதிர்பார்ப்பை ஆதரிக்கிறேன். மோடி நாட்டு மக்களிடம் டைம் கேட்டு இருக்கார் இல்ல அதுவரைக்கும் அனைவரும் பொறுமையாக இருக்கலாம் . நாம் கடந்த பத்து வருடங்களாக காட்டிய பொறுமையை இன்னும் சில மாதங்களுக்கு காட்டி மோடி என்ன தான் செய்ய போறார்னு பாக்கலாம்………

 7. @யாசன் உண்மை

  @ஷஜு தாமஸ் மின்மினி கருத்தே என் கருத்தும்.

  @ஆனந்த் நல்லது நடந்தால் ரொம்ப சந்தோசம். பார்ப்போம்..!

  @ஆதவன் எனக்கு இந்த லாலு விஷயம் மட்டும் புரியவே இல்லை.. உலகமகா ஊழல் மன்னன் இவர் எப்படி ரயில்வேயை லாபகரமாக நடத்தினார் என்று மண்டைய பிச்சுட்டு இருக்கிறேன். நிஜமாகவே இது எனக்கு பல ஆண்டு சந்தேகம்.

  @வேகநரி 🙂

  @கார்த்தி ரைட்டு

 8. கிரி….

  ….மண் ஒட்டவேயில்ல….இதெல்லாம் பாத்தா முடியுமா நீங்க நடத்துங்க….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here