மம்முட்டி நடிப்பிலும் தயாரிப்பிலும், உண்மைக்கதையை (2017) அடிப்படையாக வைத்து வெளியான படம் Kannur Squad. Image Credit
Kannur Squad
மம்முட்டி தன் குழுவினர் மூவருடன் பல கடினமான குற்றங்களைக் கண்டுபிடிப்பார். அவருக்குச் சிக்கலான ஒரு கொலைக் குற்றம் ஒப்படைக்கப்படுகிறது.
அதை மம்முட்டி எப்படி துப்பு துலக்குகிறார் என்பதே Kannur Squad.
கொலை கொள்ளை
ஒரு வீடு திட்டமிட்டுக் கொள்ளையடிக்கப்பட்டு தொழிலதிபர் Abdul Wahab கொல்லப்பட்டுகிறார்.
இந்தி பேசினார்கள் என்பதைத்தவிர, காவல்துறைக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை ஆனால், அரசியல் ரீதியாக இப்பிரச்சனை மாநில அளவில் பெரிதாகிறது.
அனைத்து தரப்பினருக்கும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், மம்முட்டியை 10 நாட்களில் குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நியமிக்கிறார்கள்.
இப்படம் பார்க்கும் அனைவருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று நினைவுக்கு வராமல் இருக்காது. அதே போன்று பல காட்சிகள், சூழ்நிலைகள், பணப்பற்றாக்குறை உள்ளது.
மம்முட்டி இக்குற்றவாளிகளைத் துப்பறிவது சுவாரசியமாக இருக்கும்.
உத்தரப்பிரதேசம்
குற்றவாளிகளைத் தேடி உத்தரப்பிரதேச கிராமத்துக்குச் செல்லும் போது நடக்கும் சம்பவங்களைப்பார்த்தால், திகிலாக உள்ளது.
உண்மையாகவே அங்குள்ள கிராமம், மக்கள் இப்படித்தான் இருப்பார்களா! அல்லது படத்துக்காக மிகைப்படுத்தப்பட்டதா என்று சந்தேகம் வரும் அளவுக்கு உள்ளார்கள்.
குற்றவாளிக்காக ஒரு கிராமமே திரண்டு வருவதைப்பார்த்தால் பகீரென்று உள்ளது.
இவர்களோடு மாட்டும் அம்மாநில காவலரும் நடக்கும் ரணகளத்தில் சிக்கி அவதிக்குள்ளானாலும், இறுதியில் இக்காவலர் பகுதி நெகிழ்ச்சியாக உள்ளது.
யோகி ஆதித்யநாத் வந்த பிறகு உத்தரப்பிரதேசம் மாறி வருகிறது என்றாலும், மாற வேண்டியது ஏராளம் உள்ளது என்பதாகத்தெரிகிறது.
மம்முட்டி குழுவினர்
மம்முட்டி குழுவில், மம்முட்டி மட்டுமே புத்திசாலியாகக் காட்டப்படுகிறார்.
மற்றவர்களிடம் எந்தச் சிறப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது சொன்ன வேலையைச் செய்கிறார்கள் என்பதாகத் தான் காட்டப்படுகிறது.
மாறாக அவர்களின் தனித்திறமையையும் காட்டுவதாக அமைந்து இருந்தால், ‘குழு’ என்பதற்கான அர்த்தம் வலுவாக இருக்கும்.
அவர்களில் ஒருவர் சூழ்நிலை காரணமாக லஞ்சம் வாங்கி அது எப்படி குழுவின் ஒற்றுமையைப் பாதிக்கிறது என்பது எதார்த்தம்.
முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்கும் நேரத்தில், குறிப்பாக போதுமான நேரம் இல்லாத நேரத்தில் நடப்பதை, மம்முட்டி சரியாகக் கையாள்வது சிறப்பு.
மம்முட்டிக்கு நடனமும், சண்டையும் பிரச்சனை. அனுபவப்பட்டவரான மம்முட்டிக்கு சண்டை இன்னும் இயல்பாக வரவில்லை என்பது வியப்பளிக்கிறது.
அரசியல்
காவல் துறையின் உள் அரசியல், மேலதிகாரிகளின் நெருக்கடி, அவர்களுக்கு அரசியல்வாதிகள் கொடுக்கும் நெருக்கடி, அவர்களுக்கு மக்கள் கொடுக்கும் நெருக்கடி என்று தொடர் சங்கிலியாக உள்ளது.
IPS அதிகாரியான கிஷோர் பொருத்தமான தேர்வு. உண்மையான அதிகாரி போலவே உள்ளார், பேசுகிறார், பக்குவமாக நடந்தும், புரிந்தும் கொள்கிறார்.
மொத்த படத்தையும் மம்முட்டியே சுமக்கிறார். வயதில் மூத்தவராக இருந்தாலும், இளம் உயர் அதிகாரிகளிடையேயான அவரது உடல்மொழி சிறப்பு.
நேர்மையான நபர் என்பதை விட, தன் வேலையை விருப்பமாகச் செய்வார். அதற்காக எந்த எல்லைக்கும் துணிந்தவராக உள்ளார்.
பாடல்கள் இல்லை ஆனால், பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்துக்குப் பெரும் துணை புரிந்துள்ளன.
குறிப்பாக வடமாநில காட்சிகள் தொகுப்பு அழகு. அதோடு உத்தரப்பிரதேச காட்சிகள் ஒரு த்ரில்லர் பகுதி போலவே உள்ளது.
ஒளிப்பதிவாளரான Roby Varghese Raj க்கு Kannur Squad இயக்குநராக முதல் படம்.
யார் பார்க்கலாம்?
அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். நிச்சயம் ஏமாற்றாது.
₹30 கோடியில் தயாரிக்கப்பட்டு ₹100 கோடி வசூலித்துள்ளது.
Hotstar ல் காணலாம்.
Directed by Roby Varghese Raj
Screenplay by Muhammed Shafi, Rony David Raj
Story by Muhammed Shafi
Produced by Mammootty
Starring Mammootty, Rony David Raj, Azees Nedumangad, Shabareesh Varma, Kishore, Vijayaraghavan
Cinematography Muhammed Rahil
Edited by Praveen Prabhakar
Music by Sushin Shyam
Production company Mammootty Kampany
Release date 28 September 2023
Running time 161 minutes
Country India
Language Malayalam
தொடர்புடைய கட்டுரை
Mirzapur | Series | ரணகளமான உத்தரப்பிரதேசம்
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி.. படம் எனக்கு பிடித்து இருந்து.. அதுமட்டுமில்லாமல் ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்த உணர்வும் தோன்றியது.
தீரன் அதிகாரம் ஒன்று : கண்டிப்பாக படத்தை பார்க்கும் போது இந்த உணர்வு ஏற்பட்டது.. ஆனால் இந்த படத்தோட காட்சியமைப்புகள் Kannur Squad படத்தில் வரவில்லை.. தீரன் அதிகாரம் ஒன்று இசை வேற மாதிரி… பின்னனி இசைக்காகவே நான் சில காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பேன்.
உத்தரப்பிரதேசம் : இந்த மாநிலத்தின் வரலாறு பற்றி அதிகம் தெரியவில்லை. திரையில் பார்த்தது மட்டும் தான்.. அடிப்படையில் ஒரு விதமான வாழ்க்கை முறையை மேற்கொண்டு விட்டு மாறுதல் என்பது குறிப்பிட்ட சில வருடங்களில் சாத்தியமில்லை.. இன்னும் சில காலம் பிடிக்கலாம்..
மம்முட்டி குழுவினர் : இது இயல்பான ஒன்று தான்.. ஹீரோக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் என்பது மறுக்க இயலாதது.. சண்டை காட்சிகளை அவரது பாத்திரத்துக்கு தகுந்தது போல வடிவமைத்ததாக உணர்கிறேன்.. இருப்பினும் 72 வயத்தில் இவரது உடல்மொழி அருமை..
IPS அதிகாரியான கிஷோர் : ஒரு மிக சிறந்த நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டே வருகிறார்… உடல்மொழி மாஸாக இருக்கும்..
நேரம் கிடைக்கும் போது மம்முட்டி நடித்த Unda படத்தை பார்க்கவும்.. வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம்.. தேர்தல் பணிக்காக வேறு மாநிலத்துக்கு செல்லும் காவல் துறையை பற்றியது..
@யாசின்
“இந்த படத்தோட காட்சியமைப்புகள் Kannur Squad படத்தில் வரவில்லை”
கார்த்தியும் அவரது குழுவினரும் சென்று மாட்டிக்கொள்வது போல, இவர்களும் மாற்றிக்கொள்வார்கள்.
அதோடு பணப்பற்றாக்குறை, அதைச் சமாளிப்பது, வேறு மாநிலங்களில் தொடர்ந்து பயணிப்பது ஆகியவை நினைவுக்கு வந்து சென்றது.
ஆனால், இதுவும் ஒரு உண்மை கதை என்பதால், இது போலவே இருப்பதில் வியப்பில்லை.
“பின்னனி இசைக்காகவே நான் சில காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பேன்.”
சரியா சொன்னீங்க. தாறுமாறான பின்னணி இசை. வில்லன் அறிமுகம் எல்லாம் வேறு லெவெலில் இருக்கும். பின்னணி இசை ரொம்பப் பிடித்த படம்.
“குறிப்பிட்ட சில வருடங்களில் சாத்தியமில்லை.. இன்னும் சில காலம் பிடிக்கலாம்..”
உண்மையே! 15 வருடங்களுக்கு மேல் ஆகலாம். அதுவும் உறுதியில்லை.
“நேரம் கிடைக்கும் போது மம்முட்டி நடித்த Unda படத்தை பார்க்கவும்.. வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம்..”
இதை பார்த்து விட்டேன்.. இதுவும் வேறு மாநிலம் சென்று சமாளிக்கும் காவல்துறை கதை. நன்றாக இருக்கும்.