இப்படம் பார்த்ததும் தோன்றியது “எப்படி இப்படத்தை எடுத்தார்கள்?” என்ற கேள்வி தான். Take Off உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
Take Off
பலருக்கு நினைவு இருக்கலாம், 2014 ம் ஆண்டு Islamic State of Iraq and Syria (ISIS) அமைப்பு, ஈராக் மீது தாக்குதல் நடத்தியது.
அப்போது அங்கே பணிக்காகச் சென்ற 19 செவிலியர்கள் (Nurse) அவர்களிடம் மாட்டிக்கொண்டனர்.
அவர்கள் எப்படி தப்பித்து இந்தியா திரும்பினர் என்பதைப் பற்றியதே இக்கதை.
ISIS
இச்சம்பவம் நன்கு நினைவு இருக்கிறது.
செவிலியர்களை தீவிரவாதிகள் விடுவித்த போது IS அமைப்பினரை போராளிகள் என்று இங்குள்ளவர்கள் பலர் ஃபேஸ்புக்கில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
சில மாதங்களுக்குப் பின் அவர்கள் உண்மை முகம் தெரிந்து அனைவரும் அதிர்ந்து விட்டனர்.
விவாகரத்து
(தந்தை) குடும்ப சூழ்நிலைக்காக, பார்வதி திருமணமாகியும் பணிக்குச் செல்ல, அது அவரது கணவர் வீட்டில் உள்ளவர்களுக்குப் பிடிப்பதில்லை.
ஆனால், இவருக்கும் வேறு வழியில்லாததால் பணிக்குச் செல்ல, பின்னாளில் அதுவே பிரச்சனையாகி விவாகரத்து வரை சென்று விடுகிறது.
இவரை விரும்பும் சக ஊழியர் Kunchacko Boban தன்னுடைய திருமண விருப்பத்தைத் தெரிவிக்க, விருப்பமிருந்தும் பார்வதி மறுக்கிறார்.
பின்னர் குடும்ப கட்டாயம், ஈராக் செல்வது போன்ற காரணங்களால் திருமணத்துக்கு ஒத்துக்கொள்கிறார்.
இருவரும் ஈராக் சென்று அங்கே எப்படி பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் என்பதை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் கூறியிருக்கிறார்கள்.
உளவியல் சிக்கல்கள்
பார்வதியின் முதல் கணவருக்குப் பிறந்த பையனுக்கும் Kunchacko Boban கும் இடையே நிலவும் பிரச்சனைகளை, உளவியல் சிக்கல்களை அழகாகக் கூறி கையாண்டும் இருக்கிறார்கள்.
Kunchacko Boban பக்குவமான நபர், இவரின் பொறுமை, சிக்கல்களைப் பதட்டப்படாமல் கையாளும் விதம் மிகப்பிடித்தது.
எப்படி இப்படத்தை எடுத்தார்கள்?
முதல் வரியைத் திரும்பக் கூறுகிறேன். இப்படம் பார்த்ததும் தோன்றியது “எப்படி இப்படத்தை எடுத்தார்கள்?” என்ற கேள்வி தான்.
இதை ஏன் கூறுகிறேன் என்றால், பெரிய முதலீட்டுப் படங்களுக்கு இணையாக அவ்வளவு தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு வீச்சு, கட்டிடங்கள் இடிந்து இருப்பது, தீவிரவாதிகள், இராணுவ வீரர்கள் என்று எதுவுமே செயற்கையாக இல்லை
ஒரு போர் நடைபெறுகிறது என்றால், சூழ்நிலை எப்படி இருக்குமோ அது அப்படியே படமாக்கப்பட்டுள்ளது. எப்படி இதெல்லாம் எடுத்தார்கள்? என்று வியப்பாக இருந்தது.
எங்கே இதெல்லாம் எடுத்தார்கள்? இப்பவும் இதுபோல இடங்கள் உள்ளனவா? இதற்கெல்லாம் எப்படி நடிகர்களைத் தேர்வு செய்தார்கள்?
இடத்துக்கு எப்படி அனுமதி வாங்கினார்கள்? எப்படி இதுபோல எடுக்க அங்கே ஒத்துக்கொண்டார்கள்? என்று ஏராளமான கேள்விகள்.
உலகப்படம்
பலர் மலையாளம் பேசுகிறார்கள் என்பது மட்டுமே லாஜிக்கலாகக் கேள்வி இருந்தது, மற்றபடி இது ஒரு உலகப்படம். உலகப்படம் என்றால், எந்த நாட்டினரும் படத்தைத் தங்களோடு தொடர்புபடுத்தி உணர்வுப் பூர்வமாகப் பார்க்க முடியும்.
இந்தியாவுக்கான இந்திய தூதரக அதிகாரியாக வரும் பஹத் பாசில் சிறந்த நடிப்பு.
மலையாள திரை உலகுக்கு கிடைத்த நடிப்பு பொக்கிஷம் பஹத் பாசில். எக்கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அக்கதாப்பாத்திரமாகவே மாறி விடுவார்.
இப்படத்திலும் தன் பங்கை மிகச் சிறப்பாகச் செய்து இருக்கிறார். வேறு ஒருவராக இருந்தால், மிகை நடிப்பு செய்து இக்கதாப்பாத்திரத்தையே சொதப்பி இருக்க வாய்ப்புள்ளது.
இயக்குநர் மகேஷ் நாராயன்
இயக்குநர் மகேஷ் நாராயன், அடிப்படையில் படத்தொகுப்பாளர் (Editor). ஏராளமான திரைப்படங்களுக்குப் படத்தொகுப்பாளராக இருந்தாலும், Take Off தான் இவருக்கு முதல் படம்.
ஒளிப்பதிவாளர் என்றாலாவது இயக்குநருடன் இருந்து அனுபவம் கிடைத்து இருக்கும் என்று நினைக்கலாம், படத்தொகுப்பாளராக இருந்து இதுபோல ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்றால் வியப்பாக உள்ளது.
விஸவரூபம் 2 படத்துக்கும் இவர் தான் படத்தொகுப்பாளர்.
படத்தின் ஒளிப்பதிவு ஈராக்கிலேயே நம்மை உலவ விட்டுள்ளது. எனக்கு வெளிநாட்டு படம் பார்ப்பது போலவே இருந்தது.
கதாப்பாத்திரங்கள் தான், நாம் பார்ப்பது இந்தியப்படம் என்று உணர்த்துகிறது. காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது.
படத்தையே ஒன்றி கவனித்ததில் பின்னணி இசையைக் கவனிக்காமல் விட்டு விட்டேன். திரும்ப ஒரு முறை பார்க்க வேண்டும்.
இது போன்ற படங்களைப் பார்க்கும் போது தமிழிலும் இது போன்ற படங்கள் வர வேண்டும் என்ற விருப்பத்தை ஏக்கத்தைக் கூட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
தரமான படம்! அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
Directed by Mahesh Narayan
Produced by Anto Joseph, Shebin Backer, Megha Rajesh
Written by Mahesh Narayan, P. V. Shajikumar
Starring Kunchacko Boban, Parvathy, Fahadh Faasil, Divyaprabha, Asif Ali
Music by Shaan Rahman
score: Gopi Sunder
Cinematography Sanu John Varghese
Edited by Mahesh Narayanan, Abhilash Balachandran
Release date 24 March 2017 (India)
Running time 139 minutes
தொடர்புடைய கட்டுரை
Adaminte Makan Abu [2011] ஒரு “ஹஜ்” பயண போராட்டம்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நீங்க பரிந்துரைத்த திரைப்படம் andhadhun (2018) மிக நன்றாக இருந்தது மிக்க நன்றி நண்பா.
உங்களுக்கு இரண்டு படங்கள் பரிந்துரைக்கிறேன்.
Julia’s Eyes (2010)
Frozen (2010) thriller movie
இந்தப்படங்கள் இன்னும் நான் பார்க்கவில்லை
Frdன் https://www.youtube.com/channel/UClF9UTljviumfJf7t-VR5tg
பரிந்துரையிலேயே பார்க்க போகிறேன்.
கிரி, மற்ற மொழி திரைப்படங்களை பார்க்க நினைத்தாலும், நேரமின்மை மற்றும் மனைவிக்கு விருப்பமின்மை இதுபோல சில காரணங்களால் பார்க்க முடியவில்லை.. தற்போது திரையரங்கிற்கே வெகு அரிதாக தான் செல்கிறேன்.. நீங்கள் பரிந்துரைக்கும் சில படங்களே 6 மாதம் சென்ற பின் தான் பார்க்கிறேன்.. பலவற்றை தவற விட்டதும் உண்டு.. இந்த படத்தின் கதைக்களம் எனக்கு விருப்பமான ஒன்றாக தோன்றுகிறது.. கிட்டத்திட 11 ஆண்டுகளுக்கு மேல் பாலை நிலத்தில் பணிபுரிவதால் என்னவோ படத்தை பார்க்க வேண்டும் என்ற அதிகமாக இருக்கிறது..
இந்த படத்தை நீங்க ரொம்ப ரசித்து பார்த்து இருப்பதால், இதே கதையம்சம் கொண்ட வேற படத்தை நான் பரிந்துரைக்கிறேன்.. கண்டிப்பாக நீங்க விரும்புவீர்கள்.. காவியமாதவன் நடித்த படம்.. மலையாளத்தில் (படத்தின் பெயர் Khaddama ) தமிழிலும் வந்து இருக்கிறது பெயர் : பாலைவனரோஜா.. (நான் youtube இல் தான் தற்செயலாக ஏதோ தேடி கொண்டு இருக்கும் போது பார்த்தேன்..) படத்தை நீங்கள் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக விமர்சனம் எழுத தோன்றும்.. படத்தில் யதார்த்தமான பல விஷியங்கள் உண்டு.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@பிரதீபன் பரிந்துரைக்கு நன்றி. விரைவில் பார்க்கிறேன்.
@யாசின் நீங்க சொன்ன Khaddama கண்டிப்பாக பார்க்கிறேன். YouTube ல் இருந்தது.. அடுத்த வாரம் பார்த்து விடுவேன். நன்றி.
அருமையான படம் கிரி. விறுவிறுப்பாக இருந்தது.