கூகுள் “Tez” செயலி பயன்படுத்துவது எப்படி?

5
Tez App

BHIM செயலி போல, Tez என்ற தனது UPI செயலியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. தாமதமான அறிமுகம் என்றாலும், தனித்தன்மையால் விரைவில் பயனாளர்களைக் கவரும். Image Credit

திங்கள் (18 September 2017) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் எனக்கு அதீத ஆர்வம் அதுவும் கூகுள் என்றால்.. 🙂 .

Tez எப்படிப் பயன்படுத்துவது?

Apple store / Google Play சென்று Tez செயலியை நிறுவிக்கொள்ளுங்கள்.

உங்களின் வங்கியை தேர்வு செய்தால், கூகுள் தானாகவே உங்கள் Mobile எண்ணை வைத்து வங்கிக்கணக்கைச் சேர்த்து விடும்.

இதன் பிறகு நீங்கள் எவருக்கும் பணத்தை எளிதாகக் கட்டணமில்லாமல் அனுப்பலாம். எதிர்காலத்தில் வங்கிகள் கட்டணம் விதித்தால், கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு HDFC கட்டணம் விதித்தது பின்னர் எதிர்ப்புக் காரணமாகத் திட்டத்தைக் கை விட்டது குறிப்பிடத்தக்கது.

BHIM, PhonePe போன்ற UPI செயலிகளை ஏற்கனவே பயன்படுத்தி வருகிறேன்.

UPI வசதியின் சிறப்பு என்னவென்றால், நம்முடைய வங்கிக்கணக்கு விவரங்களை எவருக்கும் கொடுக்க வேண்டியதில்லை. மெய்நிகர் (Virtual) முகவரி போதுமானது.

உதாரணத்துக்கு giriblog@upi .

இதைக் கொடுப்பவர்களுக்கும் எளிது, பணம் அனுப்பவர்களுக்கும் எளிது.

கட்டுப்பாடுகள்

PhonePe செயலி போல Tez செயலியிலும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1 லட்சம்₹ வரை அனுப்ப முடியும். BHIM செயலி அதிகபட்சம் 20,000₹.

எந்த செயலியாக இருந்தாலும் HDFC வங்கி ₹20,000 வரையே அனுமதிக்கிறது. எனவே, HDFC அதுக்கு சரிப்பட்டு வராது 🙂 .

பிற்சேர்க்கை – HDFC தற்போது 20,000₹ க்கும் மேலும் UPI பணப்பரிமாற்றத்தை அனுமதிக்கிறது.

ReadBHIM (UPI) செயலி பயன்படுத்துவது எப்படி?

சலுகைகள்

செயலியை யாருக்காவது பரிந்துரைத்து அவர்கள் நீங்கள் அனுப்பிய சுட்டி (Link) வழியாகச் செயலியை நிறுவி, இருவரும் பணப் பரிமாற்றம் செய்தால் இருவருக்கும் ₹51 கிடைக்கும்.

பணப்பரிமாற்றம் செய்தால், ₹1000 வரையும், வார பரிமாற்றத்தில் ₹1 லட்சம் வரையும்  உங்களுக்குப் பரிசுப் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.

Rewards பகுதியில் Scratch செய்தால், கிடைக்கும் பரிசுப் பணம் தெரியும். எனக்கு ₹17 கிடைத்தது 🙂 . சில நேரங்களில் “Better Luck Next Time” என்றும் வரும்.

நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

Cash Mode

மற்ற செயலிகளில் இல்லாத Cash Mode என்ற வசதி இதில் உள்ளது. நம்முடைய வங்கிக்கணக்கு, UPI ID தகவல்களைக் கொடுக்க வேண்டியதில்லை, எளிமையாகவுள்ளது.

ஒருவருக்கு பணம் அனுப்பிய History அதிலேயே தொடர்வதால், இதற்கு முன் எப்போது, எவ்வளவு அனுப்பினோம் என்ற தகவலை சரிபார்க்க எளிதாகவுள்ளது.

இது எப்படிச் செயல்படுகிறது?

இதைச் செய்யப் பணம் செலுத்துபவரும் பணம் பெறுபவரும் அருகருகே இருக்க வேண்டும்.

Cash Mode ல் சென்று நாம் கொடுப்பதாக இருந்தால், Pay என்பதைத் தள்ள வேண்டும், பெறுபவர் Receive தள்ள வேண்டும்.

இதன் பிறகு ஒலி அலைகள் மூலம் அருகே இருப்பவர் பெயரைச் செலுத்துபவருக்குக் காட்டும்.

இந்த ஒலி அலைகளின் சத்தம் நமக்குக் கேட்காது.

பெறுபவர் பெயரையும், நம் வங்கியையும் தேர்வு செய்து, தொகையைக் குறிப்பிட்டு அனுப்பினால் முடிந்தது 🙂 . உடனே பெறுபவரது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த வசதி மூலம் கடைகளில், புதிய நபர்களுடன் நம்முடைய தகவல்களைக் கொடுக்காமலே பணம் செலுத்த, பெற முடியும்.

கொசுறு 1

நான் IDFC வங்கியை இதில் பயன்படுத்தினேன் ஆனால், சரியாக வேலை செய்யவில்லை.

கூகுள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் விசாரித்த போது சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யுங்கள் என்றார்கள், பின்னர் வேலை செய்தது.

ஆனாலும், நிலைத்தன்மையோடு இல்லை. மற்ற வங்கிகளில் சரியாக இருந்ததால், ICICI க்கு மாறிக்கொண்டேன், இதில் பிரச்சனையில்லை.

நாம் பயன்படுத்தும் அனைத்து வங்கிகளையும் இணைத்துக் கொள்ளலாம், வேண்டிய வங்கியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கொசுறு 2

UPI ID முகவரியை இணைக்கும் போது சில நேரங்களில் வேலை செய்யவில்லை.

முதல் நாள் என்பதால், கூட்டம் காரணமாக இது போன்ற நிலை ஏற்பட்டதாகவும், விரைவில் சரியாகி விடும் என்று கூகுள் கூறியுள்ளது.

கூகுள் போன்ற பெரிய நிறுவனம் இதை எல்லாம் உணர்ந்து இதற்குத் தகுந்த முன் ஏற்பாடுகளைச் செய்து இருக்க வேண்டும். இது போன்ற காரணங்கள் ஏற்புடையதல்ல.

கொசுறு 3

தற்போது குறைந்தபட்ச வசதிகளுடனே வந்துள்ளது. விரைவில் கட்டணம் செலுத்தும் வசதி, கடனட்டை இணைக்கும் வசதி, கட்டண நினைவூட்டல் வசதி போன்றவற்றையும் கொண்டு வரப்போவதாகக் கூகுள் கூறியுள்ளது.

கொசுறு 4

Tez என்றால் இந்தியில் வேகம் என்று அர்த்தமாம். டேய் கூகுள்! மத்திய அரசு தான் எல்லாத்துக்கும் இந்தி பெயரை வைக்கிறது என்றால், நீயும் வடா தோசா பெயரையே வைக்கிறியேடா! கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கொசுறு 5

நான் இதுவரை PhonePe / BHIM செயலி பயன்படுத்தி வந்தேன், இனி Tez தான் பணப்பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப் போகிறேன்.

என்ன இருந்தாலும் நம்ம கூகுளாச்சே! கூகுள் நமக்கு எவ்வளவோ சிறப்பான வசதிகள் தருகிறது, அதுக்கு என்னால முடிந்த சிறு உதவி 🙂 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

 1. இதுவரை BHIM உபயோகித்து வந்தேன், இதை செயல் படுத்தி பார்க்க வேண்டும் போல் உள்ளது. தகவலுக்கு நன்றி கிரி அவர்களே.

 2. இது போன்ற செயலிகள் குறித்து எனக்கு இன்னமும் நம்பிக்கை வரவில்லை கிரி. இப்போது ரயில் கட்டணம், குடும்பத்தினருக்கு அனுப்பும் பணம் இந்த இரண்டுக்கும் தான் ஆன் லைன் மூலம் வங்கியைப் பயன்படுத்துகின்றேன். அதிக பட்சம் பத்து ரூபாய் வசூலிக்கின்றார்கள். மளிகைக்கடையில் பண அட்டைக்கு கடைக்காரர் தனியாக கட்டணம் வசூலிக்கின்றாரா? என்பதனைக் கேட்டு விட்டு அட்டையைக் கொடுப்பதுண்டு. பெட்ரோல் நிலையங்களில் நாலைந்து முறை அட்டை கொடுத்து ஏமாந்து விட்டேன். அவர்கள் ஐநூறு ஆயிரம் என்றால் கூட இருபது ரூபாய் பிடித்துவிடுகின்றார்கள். நம்மவர்கள் கல்லில் நார் உறிக்கும் கலையைக் கற்றவர்கள். களேபரங்கள் முடிந்து சரியான தெளிவு உருவாகும் போது இது போன்ற செயலிகள் மீது நம்பிக்கை வரக்கூடும். விளக்கமாக அழகாக நேர்த்தியாக சொல்லியிருக்கீங்க. நன்றி.

  அப்புறம் மற்றொன்று. கரூர் வைஸ்யா வங்கியில் ரூபே அட்டை ஒன்று கொடுக்கின்றார்கள். எப்படிப் போனாலும் ஒரு குறிப்பிட்டத் தொகையை பிடிப்பதே அவர்களின் வாடிக்கை. முக்கால் வாசி வங்கிகள் கொள்ளைக்கூட்டமாக உள்ளது.நான் பயன்படுத்து வங்கிகள் எப்படி உள்ளது எங்கள் சேவை என்று அழைத்துக் கேட்கும் போது அவர்கள் காதில் ரத்தம் வரவைப்பது என் சமீப கால கொள்கையாக உள்ளது.

 3. இதுவரை இந்த செயலியையும் பயன்படுத்தியது கிடையாது. இந்தியா திரும்பும் போது இவைகளை பயன்படுத்த வேண்டும். கடனட்டை கூட இதுவரை எனக்கு உபயோகம் இல்லாததால் வாங்கவில்லை.. எப்போதாவது வாங்கலாம் என்ற எண்ணம் தோன்றினாலும் வீண்செலவு பயம் & பாதுகாப்பின்மை என்ற காரணங்களுக்காக வாங்க வேண்டுமா???? என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் எழுகிறது. பகிர்வுக்கு நன்றி கிரி..

 4. Thanks for sharing this.
  One of my friend referred Tez to me and I got 51.

  First 3 days, I was unable to add my account in Tez.

  Now it is smooth.

  PayTM, MobiKwik rules. All local shops started accepting MobiKwik and PayTM everywhere here.
  Fuel Station, Medicals, Hospitals, petty shops, vegetable stores, Hotels
  – everywhere I do cashless transactions. Stopped carrying Credit / Debit cards with me.

  Amazon Pay Balance is also growing. I use PhonePe regularly.

 5. @சோமேஸ்வரன் முயற்சி செய்யுங்க. துவக்கத்தில் மெதுவாக பரிமாற்றங்கள் நடந்தது, தற்போது சரியாகி விட்டது.

  @ஜோதிஜி இதில் பயப்பட எதுவுமில்லை. நீங்கள் தொடர்ச்சியாக கடனட்டை, இணையம் மூலமாக பணம் செலுத்த துவங்கும் போது இதன் நெளிவு சுளிவுகளை தெரிந்து கொள்வீர்கள்.

  நான் பணம் கொடுக்க முடிந்தவரை தவிர்க்கவே செய்வேன். ஏனென்றால், இதில் பல லாபங்கள் உள்ளது. நமக்கு Points , சலுகைகள் என நிறைய கிடைக்கும்.

  RuPay அட்டையை நான் பயன்படுத்த நினைக்கிறேன் காரணம், இது இந்திய நிறுவனம் ஆனால், இவர்கள் பற்றி அட்டை மட்டும் வைத்து இருக்கிறார்கள், கடனட்டை இல்லை.

  நான் எப்போதுமே கடனட்டை தான் பயன்படுத்துவேன்.

  @யாசின் நீங்க எப்பாவது ஊருக்கு நிரந்தரமாக வரும் போது நம்ம ஊரு இது போன்ற செயலிகளில் கலக்கிக்கொண்டு இருக்கும் 🙂

  @தமிழ்நெஞ்சம் நல்லா இருக்கீங்களா? 🙂

  எனக்கு rewards ல் இதுவரை 283 ருபாய் கிடைத்துள்ளது.

  துவக்கத்தில் சரியாக வேலை செய்யவில்லை. செம்ம கடுப்பாகி 3 rating கொடுத்தேன். சமீபமாக பரவாயில்லை, வேகமாக உள்ளது. இருப்பினும் PhonePe அளவுக்கு இல்லை.

  விரைவில் சரி செய்வார்கள் என்று நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here