லென்ஸ் [2017] Danger Of Sex Chat

4
லென்ஸ்

ணையத்தில் அறிமுகமில்லா ஒருவருடன் செய்யும் Sex Chat காணொளி பற்றிய தகவலை இன்னொருவர் கூறி மிரட்டினால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

உங்கள் துணையுடன் உறவு கொண்ட காணொளி இணையத்தில் உள்ளது என்று மூன்றாம் நபர் அழைத்துக் கூறினால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

பக்கென்று உள்ளதா?! இது தான் லென்ஸ் படத்தின் கதை.

லென்ஸ்

ஒருவரை Video Chat ல் அழைத்து, தான் தற்கொலை செய்யப்போவதாகவும் அதை நேரலையாகப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்.

இவர் முடியாது என்று மறுக்க, அப்படியென்றால் நீ செய்த Sex Video Chat யை இணையத்தில் ஏற்றி விடுவேன் என்று மிரட்ட இவர் அதிர்கிறார்.

சொன்னதோடு இல்லாமல் காணொளியையும் காட்ட அதிர்ச்சியின் எல்லைக்கே செல்கிறார்.ஏன் இவரை மிரட்டுகிறார்? இறுதியில் என்ன ஆகும்? காணொளியை வெளியிட்டு விடுவாரா? என்பதே கதை.

கொஞ்சம் அசந்தாலும் பலான படம் போல மாறி விடக்கூடிய முழுச் சாத்தியமும் உள்ளது ஆனால், அனைவரையும் செவுள்ள சாத்துன மாதிரி ஒரு கதை.

2014 ல எழுதிய “நம் அந்தரங்கம் பாதுகாப்பானதா?” கட்டுரையில் நான் கூறிய நிகழ்வுகள் பல இக்கதையில் வரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடக்கும்.

வெளியிலே தலை காட்ட முடியாது ஆனால், இப்பெண்ணின் தவறு எதுவுமில்லை.

ஏற்கனவே, விரிவாக எழுதியுள்ளேன். விருப்பமுள்ளவர்கள் பின்வருவனவற்றைப் படித்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.

Read1 : நம் அந்தரங்கம் பாதுகாப்பானதா?

Read2 : செக்ஸ் ஒரு விரிவான பார்வை!

Scandal

இணையத்தில் Porn காணொளிகள் பிரச்சனையில்லை ஆனால், Scandal காணொளிகள் தான் பிரச்னை. இதைத் தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு காலத்தில் Scandal காணொளிகள் இணையத்தில் பார்ப்பேன், பிறகு திடீர் என்று குற்ற உணர்வாகி, பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

இப்படத்தில் பாதிக்கப்பட்ட பெண் இதுபோலப் பார்ப்பவர்களை, பார்த்தவர்களைக் கேட்பார் பாருங்க.. கேள்வி. எனக்குச் செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது.

இந்த மாதிரி காணொளி பார்ப்பவங்க, பார்த்தவங்க யாராக இருந்தாலும், இக்காட்சியியில் சுருக்குனு இருக்கும்.

பல மாநில மொழிகளுக்குப் படம் எடுக்கப்பட்டதால், இந்தி, மலையாளம், ஆங்கிலம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். படத்தில் தமிழ் பேசுவது மிகக் குறைவு.

தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் சத்தியமா புரிந்து படம் பார்க்க முடியாது.

முழுக்க தமிழில் பேசுவது போலவே எடுத்து இருக்கலாம். ஏன் ஆங்கிலம்?

ஆபத்து

சிற்றின்பங்களையும், உடல் உறவுகளையும் நினைவுக்காகக் காணொளியாக எடுக்கும் மாணவர்கள், இளைஞர்கள், திருமணமானவர்கள் அனைவருக்கும் ஒன்று கூற விரும்புகிறேன்.

ஆபத்தில்லை என்று நினைக்கும் காணொளிகள் உங்களுக்கே இணையத்தில், WhatsApp ல் வந்து பேரதிர்ச்சி கொடுக்கும்.

சில நிமிட சபலங்கள் / தடுமாற்றங்கள் / தவறுகள் உங்கள் வாழ்க்கையையே நரகமாக்கி விடும்.

இது தொழில்நுட்ப உலகம், எங்கும் பாதுகாப்பில்லை. கடவுளை விட CCTV / Hidden கருவிகளே நம்மைக் கண்காணித்துக்கொண்டு இருக்கின்றன.

குழந்தைகளுடன் இத்திரைப்படத்தைக் காண முடியாது. விழிப்புணர்வு திரைப்படத்தை எடுத்த அறிமுக இயக்குநர் ஜெயபிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. நான் படம் வந்த போதே பார்த்தேன். .. நான் ஒரு உண்மையை கூற வேண்டும், எனக்கு இந்த மாதிரி ஸ்கேண்டல் வீடியோ பார்க்கும் பழக்கம் பல வருடங்களாக இருந்தது, என்னால் நிறுத்தவே முடியவில்லை. எவ்ளோ தான் கட்டுப்படுத்தினால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. என்னுடைய வேலையே இணையத்தில் தான் என்பதால் எப்படியாவது இந்த விடியோக்கள் என் கண்களுக்கு அகப்பட்டு விடும்.

    ஒரு நாள் நான் வீட்டில் பார்த்துக்கொண்டு இருக்கும் பொது என் காதலி என்னிடம், இந்த மாதிரியியான விடீயோக்களை பார்ப்பதை நிறுத்த சொல்லி வற்புறுத்தினால் . நான் என்னுடைய நிலைமையையும் இதை நிறுத்த முடியாமல் தவிப்பதையும் அவளிடம் மனம் விட்டு கூறினேன். பொறுமையாக எல்லாத்தையும் கேட்டவள் என்னிடம், “இனி இப்படியான படங்கள்லாம் பார்க்கும் பொது நம்மள நினைத்தது பார், நான் சாலையில் செல்லும் பொது என்னை யாராவது என்னை பார்த்தாலே உனக்கு வலிக்குது இல்ல, அப்போ நீ மட்டும் அப்படி இன்னொரு பொண்ணை பாக்கலாமா , நீயும் நானும் தனிமையில் இருக்கும் வீடியோ வை யாரவது எடுத்து நெட்ல போட்ட அதையும் நீ இப்படித்தான் பார்ப்பியா, அவளை உன் குடும்ப பெண்ணாக நினை , என்னைத்தவிர மற்ற பெண்களை எல்லாம் அக்கா தங்கை யாக நினைக்கிற , அவங்க அந்தரங்கத்த எட்டி பார்க்கறது தப்பில்லையா னு ” நிறைய கேட்டா என்னால தாங்க முடியல.

    ஒரு வாரமா அவ கிட்ட பேசல.. எனக்கு பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிடிச்சு. அப்புறம் கொஞ்ச கொஞ்சமா அவ சொன்னதை மனசுல ஏத்தி ,, வீடியோ பாக்கும் பொது அவங்கள என் அக்கா தங்கையா நினைசிப்பேன் அப்படியே அடிவயிறு கலங்கி நெஞ்சு வலிக்கிற மாதிரி ஆகிடும். அப்புறம் அந்த வீடியோ பார்ப்பதை நிறுத்திடுவேன், அன்னைக்கு முழுவதும் வேறு வீடியோ பார்க்க மாட்டேன். இப்படியே கொஞ்ச கொஞ்சமா நிறுத்தி இப்போது முழுவதுமா நிறுத்தி விட்டேன். சாலையில் செல்லும் எந்த பெண்ணையும் தவறாக அல்ல அவர்கள் அழகை கூட ரசிப்பது கிடையாது. அவ்ளோ பயமா இருக்குது. அவள் கூறிய வார்த்தை. இதெல்லாம் இந்த படம் பார்க்கும் பொது அந்த பாதிக்கப் பட்ட பெண் கேட்ட கேள்விகள் என்னை அவ்ளோ வா பாதிக்கல ஏன்னு தெரியல. நான் மன்னிப்பு மட்டும் கேட்டுக்கொண்டேன் அதில் நடித்த பெண்ணிடம், நான் பார்த்த வீடியோ க்களில் இருந்த பெண்களின் மொத்த ரூபமாக அவளை நினைத்து கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டேன். தாம்பரம் வித்யா வில் தான் அந்த படம் திரையிட்டு இருந்தார்கள்.

  2. நானும் இந்த மாதிரியான படங்களை நீண்டகாலம் பார்த்து கொண்டே இருந்தேன் . நிறுத்த முடியவில்லை . திருமணம் ஆன பின் கூட நிறுத்த முடியவில்லை
    ஒரு சந்தர்ப்பத்தில் என் சித்தப்பா மகளின் வீடியோ வை இணையத்தில் பார்க்க வேண்டிய சோகமான நிலை வந்ததது
    அதன் பின் என்றுமே பார்க்கவில்லை முற்றாக நிறுத்தி விட்டேன்

  3. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தேவையா??? வேண்டாமா என்றால்???? பதில் கூற தெரியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் மனதில் அடிக்கடி நினைப்பதுண்டு. இந்த தொழில்நுட்பம் இல்லாத நேரங்களில் கூட நம்மால் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ முடிந்தது. அந்த சுதந்திரமும், நிம்மதியும் இருக்கிறதா?? என்றால் நிச்சயம் இல்லை என்றே கூற முடியும்.

    தனிமையில் நாம் செய்யும் தவறுகளை பற்றி கவலை கொள்வதில்லை. அவைகள் பொதுவில் வெளிப்படும் போது அந்த வேதனையின் வலியினை கூற முடியாது. பலரது வாழ்வின் திசையை இந்த தவறுகள் மாற்றியதுண்டு. நமது நெருங்கிய நட்பு வட்டாரங்களில் கூட காண முடியும்.

    அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்டினி, நமக்கு வந்தால் இரத்தம்… இது தான்.. பொதுவாக இவைகளை கடந்து செல்ல எண்ணுவேன்… எனக்குள் இருக்கிற மிருகம் முழிக்கும் தருணங்களில், எண்ணங்களையும், சிந்தனைகளையும் வேறு திசைகளில் செலுத்துவேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  4. @கார்த்திகேயன் பிரபு காளிதாஸ்

    இது எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை. நீங்கள் சொல்லி விட்டீர்கள் மற்றவர்கள் கூறவில்லை.

    இதை தவிர்க்க வேண்டும் இல்லையென்றால், நமது மனநிலையே பாதிக்கப்படும்.

    இதில் இருந்து விடுபட்டது மகிழ்ச்சி. தொடர்ச்சியாக பின்பற்றுங்கள்.

    @யாசின் “எனக்குள் இருக்கிற மிருகம் முழிக்கும் தருணங்களில், எண்ணங்களையும், சிந்தனைகளையும் வேறு திசைகளில் செலுத்துவேன்.”

    இதுவே நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here