அண்ணாமலை DMK Files என்ற பெயரில் திமுக தலைவர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டுள்ளார். தற்போது பரபரப்பான பிரச்சனையாகச் சென்று கொண்டுள்ளது.
DMK Files
அண்ணாமலை DMK Files என்ற காணொளி வெளியிட்ட போது அதிர்ச்சியாக இருந்தது. Image Credit
காரணம், அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ள நபர்கள் அனைவருமே மிகப்பெரிய கட்சிக்காரர்கள், அரசியல், பணப் பலம் மிக்கவர்கள்.
இவ்வளவு பலமுள்ளவர்களை அதுவும் ஆளுங்கட்சியாக உள்ளவர்களை எதிர்த்து வெளியிட உண்மையிலேயே தைரியம் வேண்டும்.
என்ன தான் மோடி / அமித்ஷா ஒப்புதல் இல்லாமல் இதை வெளியிட்டு இருக்க முடியாது என்றாலும், வெளிப்படுத்துவது எளிதான செயல் அல்ல.
காரணம், இது ஒரு சிக்கலான பிரச்சனை.
தெரிந்து தெரியாமலோ நாம் தவறு செய்து இருக்க வாய்ப்புண்டு. அவ்வாறான தவறை தோண்டியெடுத்துக் கழுத்தில் கத்தி வைப்பதற்கான முழு வாய்ப்புள்ளது.
கர்நாடகாவில் பணி புரிந்த போது அண்ணாமலை லஞ்சம் வாங்கினாரா அல்லது வேறு கறுப்பு புள்ளி உள்ளதா என்று சல்லடை போட்டுத் தேடியுள்ளார்கள் ஆனாலும் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
தவறான தகவலை கூறியதுக்கு மன்னிப்பு கேட்கவில்லையென்றால், ₹500 கோடி மானநஷ்ட வழக்கு போடுவேன் என்று RS பாரதி கூறியதற்கு ‘சட்ட நடவடிக்கைக்குத் தயார்‘ என்று அண்ணாமலை கூறி விட்டார்.
ஆருத்ரா நிறுவனத்தில் ₹84 கோடி பெற்றதாக கூறியதற்கு RS பாரதி மன்னிப்பு கேட்கவில்லையென்றால், ₹500 கோடியே ₹1 ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து, கிடைக்கும் பணத்தை PMCares க்கு அனுப்புவேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக ஊடகங்கள்
ஊழல் செய்தவர்களை விட மிகக்கேவலமான நபர்களாகக் கருதுவது, தமிழகச் செய்தி ஊடகங்களைத்தான். இவர்களைத் திட்டிச் சலித்து விட்டது.
எந்த அளவுக்குத் திமுக கட்டுப்பாட்டில் உள்ளார்கள் என்பதைத் தெள்ளத்தெளிவாகத் தமிழக மக்கள் அனைவருக்கும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
அண்ணாமலை பேசியதை நேரலையாக ஒளிபரப்புச் செய்து கொண்டிருந்த தொலைக்காட்சி ஊடகங்கள் திடீரென ஒளிபரப்பை துண்டித்து விட்டன.
யாரிட்ட கட்டளை?!
இணையத்தில் நேரலை ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
ஒன்றுமில்லாத பிரச்சனைக்கெல்லாம் விவாதம் நடத்தும் ஊடகங்கள் இதுவரை இப்பிரச்சனை பற்றிக் கண்டுகொள்ளவே இல்லையென்பது எவ்வளவு கேவலம்!
அண்ணாமலை S/N 147 சொன்னாரா 149 சொன்னாரா என்று கேள்வி கேட்கவும், சொன்ன தகவல் சரியா என்று ஜிம்சன் கடிகார கடைக்குச் சென்று உறுதிப்படுத்தியவர்களுக்குத் திமுகவினர் பற்றித் தெரிவிக்கப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்த தோன்றவில்லை பார்த்தீர்களா!
தற்போது வரை கேள்வி கேட்பவர்கள் அண்ணாமலை கடிகாரத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார்களே தவிர எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்று திமுகவினரை கேட்கவில்லை.
அரசு பதவியில் உள்ளவர்கள் பல கோடி மதிப்புடைய கார்களில், பல கோடி மதிப்புள்ள கடிகாரம் கட்டி வலம் வருகிறார்களே!
இவர்களைக் கேள்வி கேட்க ஊடகங்களுக்கேன் தோன்றவில்லை?
உதயநிதியிடம் கேள்வி கேட்டால், ‘இதற்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது‘ என்று கூறுகிறார். உடனே அந்த ஊடகவியலாளர் ‘சரி சார்‘ என்கிறார்.
இதே போல அண்ணாமலைக்குச் சரி என்று நகர்ந்து விடுவார்களா?! எத்தனை கேள்வி தோண்டி துருவிக் கேட்கிறார்கள்.
அண்ணாமலையிடம் கேட்கத் தைரியம் உள்ளது ஆனால், திமுகவினரிடம் கேட்கத் தைரியம் இல்லை. இவர்கள் தான் இந்தியாவின் நான்காம் தூண்.
கண்ணாடி முன் நின்று காறித் துப்பிக்கொள்ளுங்கள்.
வங்கி பரிவர்த்தனை
அண்ணாமலை கூறியது, நான் நேர்மையானவன் என்று நிரூபித்தால் மட்டுமே அடுத்தவரைக் கேள்வி கேட்க முடியும். எனவே, என் சொத்து, கிரெடிட் கார்டு மற்றும் வங்கிக்கணக்கின் விவரங்களை வெளியிடுகிறேன் என்று வெளியிட்டுள்ளார்.
எப்போதுமே திறந்த புத்தகமாக இருந்து விட்டால் பிரச்சனைகள் இல்லை.
வெளியிடுவதில், பல தனிப்பட்ட தகவல்கள் இருக்கும். பெரிய இரகசியம் இல்லையென்றாலும், மற்றவர்கள் பார்க்க அனுமதிக்க மாட்டோம்.
இவை நாம் என்ன மாதிரியான நபர்? எதற்குச் செலவு செய்கிறோம்? என்பதையும் வெளிப்படுத்துவதால், இவற்றை வெளியிடுவது எளிதானதல்ல.
மற்றவர்களின் விவரங்களும் உள்ளது. அண்ணாமலை இதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார்.
சாதாரண நபரே தன்னுடைய வங்கி விவரங்களை வெளியிட முடியாது எனும் போது அரசியல்வாதிகள் வாய்ப்பே இல்லை.
இதை அண்ணாமலை செய்துள்ளார், பாராட்டப்பட வேண்டியது.
மற்றவர்களும் இனி ‘அந்தாளே எல்லாத்தையும் இணையத்தில் வெளியிட்டு விட்டார். இனி இருந்தால் நிரூபித்துக்கொள்‘ என்று கூறி விடுவார்கள்.
ஒரு ரூபாய் சம்பளம்
ஒரு ரூபாய் சம்பளம் போதும் என்று ஜெ அறிவித்தது அவருக்கே வினையாக முடிந்தது.
அதாவது, ஒரு ரூபாய் கூறினாலும் அவர் செலவுக்கு என்ன செய்வார் என்றும், வரும் பணம் ஊழலால் வந்தது என்றும் மக்களுக்குத் தெரியும்.
எனவே, மக்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி ஒரு ருபாய் சம்பளம் பெறுபவருக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள்? என்று கேட்க வசதியானது.
சில நேரங்களில் நாம் செய்வது பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாகி விடுகிறது.
இதே போல ஸ்டாலின் தனது சொத்துப் பட்டியலில் தனக்குக் கார் இல்லை என்று கூறி இருந்தார். அனைவருக்கும் தெரியும், இதுவொரு வடிகட்டிய பொய் என்று.
₹100 கோடி சொத்துள்ளது என்று காட்டவில்லையென்றாலும், சில அடிப்படை வசதிகள் உள்ளது என்று காண்பிப்பதில், அரசியல்வாதிகளுக்கு என்ன பிரச்சனை என்று புரியவில்லை.
கார் இல்லை, வீடில்லை என்று கூறினாலும் யாரும் இவர்கள் கக்கன், காமராஜர் என்று நம்பவும் போவதில்லை.
ஸ்டாலின் கட்டியிருக்கும் கடிகாரத்தின் ஒரு முள்ளின் மதிப்பு கூட ஒரு சராசரி பொதுஜனத்தின் சொத்து இருக்காது.
ஜெ போலச் செய்தது தான் ஸ்டாலின் செய்ததும்.
தற்போது அனைவரும், கார் கூட இல்லாதவருக்கு எப்படி இவ்வளோ சொத்து என்று கேட்கிறார்கள். இது கேட்க எளிதாக ஜெ கூறிய ‘ஒரு ரூபாய்’ விஷயம் போல உள்ளது.
ஸ்டாலினுக்குப் பிள்ளையார் பிடிக்காது என்றாலும், பிரச்சனை குரங்காகி விட்டது.
ஒரே ஒரு வாட்ச் பில்
அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை மீதுள்ள காண்டில் ஒன்றுமில்லாத சப்பை விஷயமான ரஃபேல் கடிகாரத்தை வைத்துக் கலாய்ப்பதாக நினைத்து விமர்சனம் செய்து வந்தார்.
ஆனால், அண்ணாமலையோ இந்தக் கடிகார விஷயத்தை வைத்து, ஒரு மிகப்பெரிய பிரளயத்தையே எழுப்பி விட்டார்.
எனக்கென்னவோ செந்தில் பாலாஜி தேவை இல்லாமல் திமுக தலைவர்களைச் சிக்கலில் கொண்டு வந்து நிறுத்தி விட்டதாகவே தோன்றுகிறது.
அண்ணாமலை எந்த அரசு பதவியிலும் இல்லை. அவர் எத்தனை லட்சம் கடிகாரம் கட்டி இருந்தால் இவர்களுக்கு என்ன? வேறு யாரும் பரிசளித்தால் கூட என்ன தவறு?
பிரச்சனை என்னவென்று நான் கருதுகிறேன் என்றால், சல்லடை போட்டுத் தேடியும் இவர்களால் அண்ணாமலை மீது எந்தக் குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே, இந்தக் கடிகார விஷயத்தைப் பெரிதாக்கலாம் என்று நினைத்துச் செய்தது அவர்களுக்கே வினையாகி விட்டது.
இப்பவும் சீரியல் நம்பர்ல பிரச்சனைன்னு பேசிட்டு இருக்காங்களே தவிர, ஒரு உறுதியான ஊழல் குற்றச்சாட்டோ, லஞ்ச குற்றச்சாட்டோ வைக்க முடியவில்லையே!
யாரோ செந்தில் பாலாஜியிடம், 'அண்ணே! அண்ணாமலை கட்டியிருக்குற வாட்ச் 5 லட்சம் இருக்கும், கேட்டு அந்தாளை சிக்க வைக்கலாம்' என்று சொதப்பல் யோசனை கொடுத்துப் புலி வாலை பிடிக்க வைத்து விட்டார்கள்.
எனவே, செந்தில் பாலாஜியும் ஆத்தா வையும் சந்தைக்குப் போகணும் காசு கொடுங்கற மாதிரி வாட்ச் பில் வாட்ச் பில்ன்னு இதையவே பேசிட்டு இருக்கார்.
தாக்கம் எப்படியிருக்கும்?
கணிக்க முடியவில்லை.
காரணம், மக்களுக்கு இவர்கள் செய்த, செய்யும் ஊழல்கள் அனைத்தும் தெரியும். தற்போது எண்களாகப் பார்க்கிறார்கள்.
எனவே, இதை ஒரு சம்பவமாகக் கடந்து சென்று விடுவார்களா? அல்லது இந்த எண்கள் மக்கள் மனதில் மாற்றங்களை ஏற்படுத்துமா? அல்லது தமிழக மக்களின் மறதியால் இதுவும் புறக்கணிக்கப்படுமா?
தெரியவில்லை.
அண்ணாமலை உஷாராக, அனைத்தையும் ஒரே சமயத்தில் வெளியிடவில்லை. இதற்கு எப்படி Reaction உள்ளது? திமுகவினர் எப்படி React செய்கிறார்கள் என்று பார்த்துத் தான் அடுத்ததை வெளியிடுகிறார்.
RS பாரதியும் பதட்டத்திலேயோ அல்லது அவசரத்திலேயோ அளிக்கும் பதிலில் முரணான தகவல்களைக் கொடுத்துள்ளார். இவை திமுக க்கு சிக்கலாகாதா?!
அண்ணாமலை கொடுத்துள்ளது பொதுவெளியில் உள்ள தகவல்கள். எனவே, இதை இவர்கள் எப்படி மறுக்க முடியும்?
மறுத்தால், வேறொருவர் பெயரைக் கூற வேண்டும். கூறினால், அவர் மீது விசாரணை செல்லும்.
₹5 கோடி ₹10 கோடி என்றால், எதையாவது கூறி சமாளிக்கலாம் ஆனால், ₹10,000 / ₹50,000 கோடிகளை எப்படிச் சமாளிக்க முடியும்?
மாறினால் அவர்களிடம் வந்த பணத்துக்கான source கேட்பார்களே?
சட்டத்தில் ஏராளமான ஓட்டைகள் உள்ளது. திமுக ஏற்கனவே விஞ்ஞானத் திருடர்கள் என்று பெயர் பெற்றவர்கள். எனவே, இதைத் தாண்டி வருவார்களா? அண்ணாமலை வலையில் சிக்குவார்களா?
காலம் தான் கூற வேண்டும்.
பாத யாத்திரை
வருமானத்துக்கு அதிகமான சொத்துப் பிரச்சனை எப்படிப் போகும் என்று கணிக்க முடியவில்லை ஆனால், ஜூன் / ஜூலையில் அண்ணாமலை செல்லப்போகும் பாதயாத்திரையில் மிகப்பெரிய மாற்றம், வளர்ச்சி இருக்கும்.
பாதயாத்திரையில் இப்பிரச்சனையைக் நகரம், கிராமமாகக் கொண்டு செல்ல 100% வாய்ப்புள்ளது.
எல்லாமே ஒரு அலை தான். அந்த அலை வந்தால், அண்ணாமலை / பாஜக வளர்ச்சி சூறாவளியாக இருக்கும். இல்லையென்றால், சாதாரணமாகக் கடக்கப்படும்.
அடுத்த எட்டு மாதங்களும் ரணகளம் தான் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
பார்ப்போம் 🙂 .
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி.. ஒரு நடுத்தர வாழ்க்கை வாழ்கின்ற சராசரி மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் எந்த சுகமும் அனுபவிக்காமல் மரணித்து விடுகிறான்.. 80,90% நடுத்தர மக்களின் நிலை இது தான்.. ஆனால் அரசியல்வாதிகளின் வாழ்வியலை புரிந்து கொள்ள முடியவில்லை.. கோடி கோடியாக பணங்களை எவ்வாறு இவர்களால் சம்பாரிக்க முடிகிறது??? இந்த நிலையெல்லாம் என்று மாறுமோ?? கடவுளுக்கு தான் வெளிச்சம்..
@யாசின்
“கோடி கோடியாக பணங்களை எவ்வாறு இவர்களால் சம்பாரிக்க முடிகிறது???”
அதைவிட இவ்வளவு பணத்தை வைத்து என்னதான் பண்ணுவாங்க..!