க்ரோம் இயங்குதளம் (Chrome OS) வெற்றி பெறுமா?

14
Chrome OS க்ரோம் இயங்குதளம்.

கூகுள் தன் அடுத்த பிரம்மாண்டத் தயாரிப்பான க்ரோம் இயங்குதளத்தை (OS) மடிக்கணினியுடன் (Laptop) இணைத்து விரைவில் வெளியிடப்போகிறது.

க்ரோம் இயங்குதளம்

எனவே, அதற்குண்டான ஆயுத்தப்பணிகளில் மிகத்தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது. இது பற்றிச் சிலர் ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள், சிலர் இது என்னவென்றே தெரியாமல் இருக்கலாம்.

எனக்கு தெரிந்தவைகளை அதிகம் குழப்பாமல் கூற முயற்சி செய்கிறேன் 🙂 .

க்ரோம் மடிக்கணினி என்றால் என்ன?

கூகுள் தனது புதிய இயங்கு தளத்தை வெறும் இயங்குதளமாக வெளியிடாமல் மடிக்கணினியுடன் இணைத்து வெளியிடுகிறது (OS+Hardware).

Netbook என்ற மடிக்கணினியைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

அதனோட ஒத்தது இதுவாகும் ஆனால், அதில் நம் தகவல்களைச் சேமிக்க மென்பொருள்களை நிறுவ நாம் ஹார்ட்டிஸ்க் பயன்படுத்துவோம் இதில் அந்த விசயமே கிடையாது.

இதில் சேமிக்க முடியாது. வேறு க்ரோம் கணிப்பொறி மூலமாகத் தகவல்களைப் பார்வையிட முடியும், உங்கள் கணிப்பொறி  தேவை என்பது கிடையாது.

எப்படி என் தகவல்களைச் சேமிப்பது?

க்ரோம் இயங்குதளம் (OS) இணைய இணைப்பு மூலம் இயங்குகிறது அதாவது, இணைய இணைப்பு இல்லாமல் இந்த இயங்கு தளத்தைப் பயன்படுத்த முடியாது.

தகவல்கள் அனைத்தும் Cloud computing எனப்படும் முறையில் கூகுள் சர்வர் லையே சேமிக்கப்படும்.

அதாவது உங்கள் க்ரோம் மடிக்கணினி தொலைந்து போனாலோ உடைந்து போனாலோ உங்கள் தகவல்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது வேறு யாரும் உங்கள் தகவல்களைத் திருட முடியாது.

நாம் திரைப்படங்களை நம்முடைய ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைப்போம் இதில் எப்படி என்பது தெரியவில்லை.

காரணம், நாம் எத்தனை அளவு GB பயன்படுத்தலாம் அல்லது நமக்குப் பொதுவாக ஒவ்வொரு கூகுள் கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள இலவச அளவில் மட்டுமே பயன்படுத்த முடியுமா போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை.

மற்ற இயங்குதளங்களைப்போல (Microsoft, Apple, UNIX, Linux) பிரபலம் ஆகுமா?

கூகுள் கூறுவது என்னவென்றால் “எங்களை நம்பினால் அனைத்தும் முடியும்” என்பதாகும் ஆனால், இந்த முறை அமெரிக்கா இங்கிலாந்து சிங்கப்பூர் போன்ற இணைய கட்டமைப்பு சிறப்பாக உள்ள நாடுகளுக்கு பொருந்தி வரலாம்.

ஆனால், இந்தியா போன்ற நிலையற்ற இணைய தொடர்பு கொண்டுள்ள நாட்டில் பிரபலமாகப் பல ஆண்டுகள் எடுக்கும்.

காரணம், நமது ஊரில் இணையம் இன்னும் இதைப் பயன்படுத்தும் அளவிற்கு வேகம், தரம் இல்லை.

அடிக்கடி இணைய தொடர்பு போய் விடுகிறது இதைப்போலச் சமயங்களில் இந்த மடிக்கணினியைப் பயன்படுத்த முடியாது. இதுவே காரணம்.

எதிர்காலத்தில் இணையம் இல்லாமல் எதுவுமே இல்லை என்பதை கூகுள் சரியாகப் புரிந்து வைத்து இருக்கிறது அதனாலே அதையொட்டி இதைத் தயாரித்து உள்ளது.

இணையம் மூலம் பெரும் பணம் சம்பாதித்து வருகிறது. எனவே, அதிகளவில் மக்கள் க்ரோம் இயங்குதளம் மூலம் இணையத்தில் இருந்தால், இவர்களால் அதிகளவில் பணம் ஈட்ட முடியும்.

இதை எல்லாம் கணக்குப்போட்டே செய்துள்ளார்கள்.

இதற்கு ஆதரவு எப்படி?

இது பற்றி எதுவும் யாருக்கும் சரியாகப் புரியாததால் கணிப்பது சிரமமே!

மக்கள் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு தான் இதைப் பற்றிப் பேச முடியும். கூகுள் ஏற்கனவே பயனாளர்கள் தகவல்களைத் திருடுகிறது என்ற குற்றச்சாட்டு உண்டு.

இவ்வாறு உள்ள நிலையில் இணையத்தில் இவர்களை நம்பி இருக்க வேண்டிய நிலை வந்தால், பின்னாளில் இவர்கள் வைத்ததே சட்டம் என்பதைப்போல ஆகி விடும் என்கிற குற்றச்சாட்டைப் பலர் கூறி வருகிறார்கள் அது உண்மையும் கூட.

தற்போதே கூகுள் இல்லை என்றால் பலருக்கு வேலையே ஓடாது! அதனுடைய ஒரு சேவை பாதிக்கப்பட்டால் கூட உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

15 நிமிடங்கள் கூகுள் தேடுதல் வேலை செய்யவில்லை என்றால் அந்தச் சமயத்தில் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் அந்த அளவிற்கு அதை நம்பி உள்ளார்கள்.

குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் கூகுள் தேடுதல் இல்லை என்றால் பலர் வேலை பறி போய் விடும். நான் கூறியது கூகுள் ஊழியர்கள் அல்ல 😉 .

க்ரோம் ஸ்டோர்

நமக்குத் தேவையானவற்றை இங்கே சென்று நிறுவிக்கொள்ளலாம்.

இதில் இலவசங்களும் உண்டு, கட்டணம் கட்டி பெறும் முறையும் உண்டு ஆனால், தேவையான முக்கியமான Apps கள் இலவசமாகக் கிடைக்கிறது.

அதாவது கூகுள் சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கப்பார்க்கிறது.

குறிப்பிடத் தக்க அம்சங்கள்

  • இணையம் அவசியம்
  • வைரஸ் ஸ்கேனர் நிறுவ வேண்டிய அவசியமில்லை. இதில் வைரஸ் வராது இதற்குண்டான முழுப்பாதுகாப்பையும் கூகுள் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது.
  • 8 நொடிகளில் Boot ஆகி விடும்.
  • இயங்குதளம் தானியங்கியாகத் தானே புதுப்பித்துக்கொள்ளும்.
  • பாதுகாப்பு விசயத்தில் மிகவும் திறமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • தற்போது க்ரோம் உலவியை (Browser) எப்படிப் பயன்படுத்துகிறீர்களோ அதேபோலத்தான் ஏறக்குறைய க்ரோம் இயங்குதளமும் இருக்கும். சுருக்கமாகக் கூறுவதென்றால் க்ரோம் உலவியில் தான் உங்கள் முழு வேலையும் நடக்கும்.
  • Samsung & Acer நிறுவனங்கள் இச்சிறிய மடிக்கணினியை தயாரித்து வெளியிடுகின்றன. இதில் Samsung க்கு கூடுதல் ஆதரவு காணப்படுகிறது.
  • வடிவமைப்பில் வழக்கமான முறையில் இருந்து மாறுபட்டு இருக்கும்
  • 2011 ஜூன் மாதம் 15 ம் தேதி வெளியாகிறது
  • மென்பொருட்களை நிறுவ Apple நிறுவனத்தின் Apple Store போல கூகுள் Chrome Web Store ஆரம்பித்துள்ளது.
  • பின்னாளில் Tablet PC களில் வரலாம், தற்போதைக்கு எந்தத் திட்டமுமில்லை.
  • Linux இயங்கு தளத்தை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ள க்ரோம் இயங்குதளம் ஒரு சுதந்திர மென்பொருள் (Open Source) ஆகும்.
  • இயங்குதளத்திற்கு என்று செலவு செய்யத்தேவையில்லை விண்டோஸ் போல. கூகுள் Docs மூலம் Microsoft Office கோப்புகளைப் பார்க்கலாம். எனவே, இதை தனியாகப் பணம் கொடுத்து வாங்கத் தேவையில்லை.
  • ஆனால், அதில் உள்ள எளிமையாகப் பயன்படுத்தும் வசதி இதில் கிடைக்காது, பின்னாளில் மாற வாய்ப்புண்டு.
  • விண்டோஸ் பயன்படுத்திப் பழக்கப்பட்டவர்கள் இந்த இயங்குதளத்தில் அவ்வளவு எளிதாக வேலை செய்ய முடியாது.
  • பல்வேறு மென்பொருளை விண்டோஸில் பயன்படுத்தி பழகி விட்டதால், இதில் சிலவற்றை அவசரத்திற்கு பயன்படுத்த முடியாத போது கடுப்பையே தரும். எனவே, பழகச் சில காலங்கள் எடுக்கும்.
  • Linux எப்படி விண்டோஸுக்கு இணையாக அனைத்துக்கும் மாற்று மென்பொருள் வைத்துள்ளதோ அது போல இதற்கும் பின்னாளில் வரலாம் ஆனால், இதைத் தேடத்தான் நமக்குப் பொறுமை இருக்காது.

Linux க்கு வந்த அதே பிரச்சனை தான் இதற்கும் வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன் ஆனால், கூகுள் பயனாளர்கள் பிரச்சனைகளை உடனக்குடன் கவனத்தில் எடுத்து சரி செய்வதால் வித்தியாசப்படலாம்.

எடுத்துக்காட்டாக, எத்தனையோ கூகுள் மின்னஞ்சல்கள் பிரச்சனைகளுக்குக் கூகுள் முக்கியத்துவம் கொடுத்துச் சரி செய்து உள்ளது, பயனாளர்கள் வேண்டுகோளுக்கிணங்க.

இதுவே கூகுள் வெற்றியின் ரகசியம்.

க்ரோம் இயங்குதளம் நிச்சயம் விண்டோஸ் க்கும் Mac கிற்கும் சவாலாக இருக்க முடியாது, குறைந்த பட்சம் கொஞ்ச வருடங்களுக்கு. இணையத்தை மட்டும் பயன்படுத்துபவர்கள் மத்தியில் வேண்டும் என்றால் இது பிரபலமாகலாம்.

எப்படியும் இரண்டையும் பயன்படுத்துபவர்களாகத் தான் பெரும்பாலனவர்கள் இருப்பார்கள். இதை மட்டுமே எவரும் பயன்படுத்தி தற்போதைய நிலையில் அனைத்து வேலையையும் செய்ய முடியாது.

வாடகைக்கு

கூகுள் இச்சிறிய மடிக்கணினிகளை பள்ளி மற்றும் நிறுவனங்களுக்கு வாடகைக்கு தருகிறது. இதற்காக மாதம் இவ்வளவு கட்டணம் என்று செலுத்தினால் போதுமானது.

இதைப்பார்த்தால் எனக்கு அம்பானி 500 ரூபாய்க்கு மொபைல் கொடுத்து ஆரம்பித்தாரே அந்தக்காட்சிகள் நினைவுக்கு வருகிறது 🙂 .

க்ரோம் இயங்குதளம் வெற்றி பெறுமா?

இது மிகப்பெரிய கேள்வி தான்.

இதற்குப் பதில் அக்டோபர் மாதம் போல நமக்குத் தெரியும் என்று நம்புகிறேன். கூகுள்  பெருமளவில் முதலீடு செய்துள்ளது. எனவே, மிகக்கவனமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

கூகுள் இதைத் தயாரித்துக்கொண்டு இருக்கும் போதே Apple நிறுவனத்தின் Tablet PC வெளியாகி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்று விட்டது.

ஒருவேளை இது வரவில்லை என்றால் கூகுள் இன்னும் தெம்பாக இருந்து இருக்கும்.

தற்போது அதை விடச் சிறியதாகப் பயன்படுத்த எளிதாக வந்து விட்டதால், கூகுள் சிக்கலில் மாட்டிக்கொண்டது.

தற்போது மேலும் சில மாற்றங்களைப் புகுத்தியுள்ளது. இதன் மூலம் Tablet PC யை விஞ்சலாம் என்று கணக்குப்போட்டுக்கொண்டுள்ளது.

இது எந்த அளவிற்கு வேலைக்கு ஆகும் என்று தெரிய கொஞ்ச மாதங்களாகும்.

எப்படி இருந்தாலும் கூகுளால் இந்தியா போன்ற நகரங்களில் அவ்வளவு விரைவில் இடத்தைப் பிடிக்க முடியாது.

இந்தியாவில் இன்னும் மைக்ரோசாப்ட் விண்டோஸில் இருந்து Mac, Linux போன்றவற்றிக்கு மாறவே யோசித்துக்கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் இந்தியா போன்ற நாடுகளில் க்ரோம் இயங்குதளம் வரவேற்பு சிரமம் தான்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

14 COMMENTS

  1. க்ரோம் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றிங்க.

    விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  2. குரோம் பற்றிய செய்திகளை அதிகம் உங்கள் தளத்தில் தான் தெரிந்து கொண்டேன் கிரி.

    க்ரோம் இயங்குதளம் எனக்கு ரொம்ப எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது, இது லினக்ஸின் மற்றொரு ப்ளேவர் போல தான் என்று நினைக்கின்றேன்.

  3. இனையவேகம் மற்றும் WIFI அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு இது ஓகே

    மேலும் இது தொழில் மற்றும் இனைய பயன்பாடுகளுக்கு மட்டுமே
    பொருந்தும் சில கேம்கள்( Age of Empire) போன்ற பதிவுசெய்து விளையாடும் கேம்கள்
    கொஞ்சம் கஸ்டம்தான்

    பார்ப்போம்

    சிங்கப்பூரில் இது விற்பனைக்கு உள்ளதா அங்கெல்லாம் இணையம் விலை எப்படி

  4. குரோம் பற்றிய செய்திகளுக்கு மிக்க நன்றி.
    மற்றபடி தலைவர் உடல்நிலை தேறி வார நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன்…

  5. திரைப்பட செய்திகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் வெற்றிமாறன் சென்னையில் பிறந்தவர். கிராமத்து வாழ்க்கையைப் பற்றி முழுமையாக அறியாமல் இது போன்ற ஒரு படத்தை கொடுத்து இருப்பது தான் இதில் முக்கியமான ஆச்சரியம். மற்ற நடிகர்களை விட தன்னை சரியான முறையில் சீர்படுத்திக் கொண்டு ஒவ்வொரு படியாக மேலே வந்தவர் தனுஷ்.

  6. @ நட்புடன் ஜமால் //இது லினக்ஸின் மற்றொரு ப்ளேவர் போல தான் என்று நினைக்கின்றேன்.//

    ஆமாம்.

    @ கிரி .. பல கோணங்களிலிருந்தும் இதை அலசி இருப்பதால், இந்தக் கட்டுரையை எழுத நிறைய நேரம் எடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி.

  7. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  8. சித்ரா ஜமால் முஸ்தபா தினேஷ் ஜோதிஜி பிரபு சரவணன் மற்றும் ஆனந்த் வருகைக்கு நன்றி

    @ஜமால் ஆமாம்

    @முஸ்தபா சிங்கப்பூர் ல் எப்போதும் கொஞ்சம் தாமதமாகத்தான் வரும். அமேரிக்கா ஐரோப்பா பகுதிகளில் தான் முதலில் வெளியாகும். நான் தற்போது ஃபைபர் இணைய இணைப்பு பயன்படுத்துகிறேன். நம்ம ஊர் பணத்தில் 2150 ருபாய் மாதம் வரும் ஆனால் இது 100 MBS ஆகும். நமது ஊரில் தற்போது தான் 8 MBS வந்துள்ளது என்று நினைக்கிறேன் அதற்கே ஆயிரக்கணக்கில் வாங்குகிறார்கள் மற்றும் தரவிறக்கத்திற்கு (Download) கட்டுப்பாடு உண்டு. இங்கே எந்தவிதக் கட்டுப்பாடுமில்லை.

    @ஜோதிஜி உண்மை தான். தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிகர் (நல்ல இயக்குனர் கைகளில்)

    @பிரபு எனக்கு எழுதவே நீண்ட நேரம் எடுத்தது ஆனால் இதை யோசிக்க அதிக நேரம் ஆகவில்லை. நான் தொடர்ந்து இவற்றைப் பற்றி படித்துக்கொண்டு இருப்பதாலும் மற்றும் எதை எழுதினாலும் ஆரம்பத்தில் இருந்து கோர்வையாக எழுதவதால் சிரமம் இல்லாமல் எழுதி விட்டேன்.

    எழுதுகிறவர் கஷ்டம் எழுதுகிறவருக்குத்தான் தெரியும் என்பது போல கேட்டு இருக்கிறீர்கள் 🙂 நன்றி. சில இடுகைகள் எழுத ரொம்ப நேரம் எடுக்கும் ஆனால் சில கவனிக்கப்படாமலே போய் விடும்.. சில சிரமமில்லாமல் எழுதி இருப்பேன்.. அதற்க்கு பலத்த ஆதரவு காணப்படும்.

  9. பாமரனான எனக்கு உங்களுடைய இந்த பதிவு புரிவதற்கு கொஞ்சம் கஷ்டம்தான்.

    ராஜேஷ்.v

  10. ஹாய்,

    அங்காடி தெரு படத்துக்கு ஒரு விருது இல்லைன்னு நெனைக்கும் பொது கஷ்டம்ஹா இருக்கிறது

  11. அண்ணே !!! உங்க எழுத்துக்கள் அருமை !!! என்ன பான்ட் உபயோகிக்கிறீங்க ? என்ன template ?

  12. @ராஜேஷ் முடிந்தவரை எல்லோருக்கும் புரிகிற மாதிரி எழுதவேண்டும் என்று தான் நினைக்கிறேன்.. இருப்பினும் ஒரு சில தொழில்நுட்ப பதிவுகள் இதைப்போல ஆகி விடுகிறது.

    @டேவிட் உண்மை தான். அங்காடித்தெரு ரொம்ப நல்ல படம் கண்டிப்பாக இதற்க்கு ஒரு விருது கொடுத்து இருக்க வேண்டும். ஆடுகளம் சிறந்த படம் என்றாலும் ஆறு விருது ரொம்ப அதிகம் தான்.

    @ராஜ் எழுத்துக்கள் அருமை என்றதும் ஆஹா! ராஜ் நம்ம எழுத்தை பாராட்டுறாருன்னு பார்த்த என்ன ஃபான்ட் கேட்டு இப்படி டேமேஜ் பண்ணிட்டீங்களே! 🙂 jus Kidding

    என்ன ஃபான்ட் னு எனக்கு தெரியல இது WordPress ஃபான்ட் அப்புறம் நீங்க ஏற்கனவே படித்து இருப்பீங்க என்னுடையது selfhosting தளம் என்பதை. இது Thesis என்ற நிறுவனத்தின் டெம்ப்ளேட் ஆகும். இதை பணம் கட்டியே பெற முடியும் மற்றும் தற்போது இது WordPress க்கு மட்டுமே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here