இஸ்லாம் சமுதாய வழக்கத்தின் மீதான விமர்சனமாகப் புர்கா படம் வெளியாகி, சர்ச்சைகளை ஏற்படுத்தியது. Image Credit
முன்பே aha OTT யில் கவனித்தாலும், பார்க்கத் தோன்றவில்லை ஆனால், பலரும் கடுமையாக விமர்சனம் செய்ததால் இயல்பான ஆர்வத்தில் பார்த்தேன்.
புர்கா
லக்ஷ்மி என்ற குறும்படத்தை எடுத்துச் சர்ச்சையானது பலருக்கு நினைவிருக்கலாம். அக்குறும்படத்தை இயக்கிய இயக்குநர் தான் புர்கா படத்தை இயக்கியதும்.
லக்ஷ்மி இந்து மதம் சார்ந்து சர்ச்சையானது, புர்கா முஸ்லீம் மதம் சார்ந்து சர்ச்சையானது.
திருமணமான ஒரு வாரத்திலேயே தனது கணவரை விபத்தில் இழக்கிறார் மிர்னா. இஸ்லாம் வழக்கப்படி நான்கு மாதங்கள் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் அப்போது ஏற்படும் வகுப்புக் கலவரத்தில் பணத்துக்காகக் கலந்து கொண்ட கலையரசன் குத்துப்பட்டு மிர்னா வீட்டுக்குச் சாகும் நிலையில் வருகிறார்.
சில மாதங்கள் மருத்துவம் பார்த்த அனுபவத்தில் மனிதாபிமான அடிப்படையில் கலையரசனை மிர்னா காப்பாற்றுகிறார்.
ஒரு நாளில் நடைபெறும் சம்பவம் இது. ஒரு நாளில் இவர்கள் இருவரிடையே நடக்கும் உரையாடலே புர்கா.
இத்தா
கணவர் இறந்தால் / விவாகரத்தானால் பெண் நான்கு மாதங்கள் 10 நாட்கள் குறிப்பாகப் புதியவர்களைச் சந்திக்காமல் வீட்டினுள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதாகக் கூறப்படுகிறது.
காரணம், ஒருவேளை இடைப்பட்ட காலத்தில் அப்பெண் முன்னாள் கணவர் மூலமாகக் கருவுற்று இருந்தால், அனைவருக்கும் தெரிந்து விடும்.
இல்லையென்றால், அடுத்தவரைத் திருமணம் செய்து ஒருவேளை குழந்தை யாருக்குப் பிறந்தது என்ற குழப்பத்தைத் தவிர்க்கவே இந்த இடைவெளி என்று காரணம் கூறப்படுகிறது.
அக்காலத்தில் விஞ்ஞானம் வளரவில்லை எனவே, இந்தக்கட்டுப்பாடு தேவையாக இருந்து இருக்கலாம் ஆனால், தற்போது DNA போன்ற தொழில்நுட்பங்கள் இருக்கும் போது இது அவசியமா என்று கேள்விகள்.
DNA சோதனை செய்வதெல்லாம் ஒரு பெண்ணை அவமானப்படுத்துவது போல என்று இத்தாத்தை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள்.
சிலர் எவ்வளவு கட்டுப்பாடு இருந்தாலும் தவறு செய்யப்போகிறார்கள், தவறு செய்யாதவர்கள் எவ்வளவு வாய்ப்புக்கிடைத்தாலும் தவிர்க்கப் போகிறார்கள்.
எனவே, இதுவொரு தனிப்பட்ட நபரின் நடவடிக்கை சார்ந்தது.
ஒரு நாள் கதை
இப்படம் ஒரு விவாதமாகச் செல்கிறது, கிட்டத்தட்ட ஆவணப்படம் போல.
ஒரே வீட்டில் பெரும்பகுதி படம் முடிந்து விடுகிறது. கலையரசனும் மிர்னாவும் தங்கள் தரப்பு கேள்விகளை விளக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
எதனால் முகத்தை மறைக்கிறீர்கள்? எதனால் இப்படியொரு தனிமை? எதற்கு நான்கு மாதங்கள்? ஏன் இன்னமும் மாறாமல் இருக்கிறீர்கள்? என்ற கேள்விகள் கலையரசனிடம்.
இளம் விதவையான மிர்னாக்கு இப்படி வீட்டில் அடைந்து கிடப்பது பிடிக்கவில்லை ஆனால், கட்டுப்பாடுகளை மீற முடியவில்லை.
ஏற்றுக்கொள்ளவும், எதிர்க்கவும், மீறவும் முடியாமல் திரிசங்கு நிலை.
என்ன தான் மனிதாபிமானம் என்றாலும், ஒரு ஆணை தனியாகவுள்ள ஒரு பெண் காப்பாற்றுவது அதுவும் கட்டுப்பாடுகள் மிகுந்த இஸ்லாம் மதத்தில் நடப்பதை பலரும் விமர்சனம் வைத்துள்ளார்கள்.
இவர்கள் இருவரின் பழக்கம் குழப்பமான நிலையைக் கொண்டு சென்று இறுதியில் தெளிவாக முடித்து இருப்பது நிம்மதியளித்தது.
வழக்கங்கள்
இஸ்லாம் மதத்தில் கட்டுப்பாடுகள் காலத்துக்கு ஏற்பப் பெருமளவு மாறவில்லை, அக்கால வழக்கங்களே இன்றும் பின்பற்றப்படுகிறது.
இதில் சில விருப்பப்பட்டுப் பின்பற்றப்படுகிறது, சில சமுதாயத்தை எதிர்க்க முடியாமல், தனித்து விடப்படுவோம், மற்றவர்களின் எதிர்ப்புக்கு ஆளாவோம் என்ற பயத்தில் வேறு வழி இல்லாமல் தொடரப்படுகிறது.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால் 20+ வருடங்களுக்கு முன்பு இருந்த சூழ்நிலை தற்போது இல்லை.
குறிப்பாக அரபு நாடுகளுக்கு பணி காரணமாக சென்று வந்தவர்கள் தமிழ்நாட்டிலும் அதே வழக்கங்களைத் புகுத்துகிறார்கள், இவை தமிழகத்துக்குப் புதியது.
எளிதாகப் புரிந்து கொள்ள, முன்பு தமிழகத்தில் புர்கா, ஹிஜாப் அணிய மாட்டார்கள். வெள்ளை மற்றும் ரோஸ் வண்ண புள்ளிகளைக் கொண்ட (சரியாக நினைவில்லை) புடவையைத் தலையைச் சுற்றி அணிந்து கொள்வார்கள்.
என் தாத்தா கார் வைத்து இருந்த போது கைவாணி என்ற முஸ்லீம் நபரே ஓட்டுநராக இருந்தார். எனவே, அவரது குடும்பத்தில் அனைவருடனும் நன்கு பழக்கம் உண்டு.
ஆனால், தற்போது வஹாபியிசம் / அரபு வழக்கங்கள் தமிழகத்தில் அதிகரித்ததால், தமிழகத்துக்குப் புதிய வழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் வந்து விட்டன.
இவை முன்பு தமிழகத்தில் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. அங்கு இங்கொன்றாக இருக்கலாம் ஆனால், பெரும்பான்மையினரிடம் இல்லை.
புர்கா அணியாத முஸ்லீம் பெண்களைக் காண்பதே தமிழகத்தில் தற்போது அரிதாகி விட்டது. இது போன்ற பல மாற்றங்கள் தற்போது ஏற்பட்டுள்ளது.
அதிலும் எப்படித்தான் இந்தக் கொடுமையான வெயிலில் கறுப்பு உடையை அணிந்து இருக்கிறார்களோ! வெயிலை ஈர்க்கும் தன்மை கறுப்பு வண்ணத்துக்கு உள்ளதால், அதிக வெப்பம் இருக்கும். வேறு வண்ணத்தையாவது தேர்வு செய்யலாம்.
மாற்றங்கள்
இந்து மதம் பல பிற்போக்கான வழக்கங்களைக் கொண்டு இருந்தது அனைவருக்கும் தெரியும் ஆனால், கால மாற்றத்தில் அவை வழக்கொழிந்து விட்டன.
இன்னமும் பல பிற்போக்கான வழக்கங்கள் இருக்கவே செய்கின்றன. இவையும் ஒரு காலத்தில் மாறும். காலத்துக்கேற்ப தன்னை இந்து மதம் தகவமைத்துக்கொள்கிறது.
அப்பா காலமான போது அம்மாக்குச் செய்ய வேண்டிய பழமையான சடங்குகள் பல இருந்தன. இதைச் செய்ய நான் ஒத்துக்கொள்ளவில்லை.
துவக்கத்தில் உறவினர்கள் (குறிப்பாகப் பெண்கள்) தயங்கினாலும், பின்னர் என் பிடிவாதத்தால் வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொண்டார்கள்.
என் எதிர்ப்பில் அம்மாக்கு உடன்பாடென்றாலும், எங்களுக்கு ஏதாவது ஆகிடுமோ என்று அம்மா பயப்பட்டார்கள் ஆனால், மற்ற பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருங்கள் என்று சமாதானப்படுத்தினேன்.
இன்னமும் மத வழக்கங்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு ஆனால், இது போன்ற முட்டாள்தனமான சடங்குகளை எதிர்க்கிறேன்.
அப்போது எதோ அக்காலச் சூழ்நிலைகளுக்காகச் சடங்குகள் இருந்தன அதற்காக இக்காலத்திலும் அதைத் தொடர வேண்டும் என்பதில்லை.
அதாவது, மற்றவர்களுக்குச் சங்கடத்தை, அவமானத்தை, விருப்பமில்லாத, நெருக்கடியை ஏற்படுத்தும் எந்த வழக்கங்களிலும் உடன்பாடில்லை. ஆனால், அதே மகிழ்ச்சியை, பண்பாட்டைத் தொடரும் வழக்கங்கள் எவ்வளவு இருந்தாலும் தொடர விருப்பமே.
ஒளிப்பதிவு
கவனித்தவரையில் aha OTT யில் மற்ற OTT யை விடக் காணொளி தரமாக உள்ளது.
புர்கா படம் முழுக்கவே அட்டகாசமான ஒளிப்பதிவு தரத்துடன் உள்ளது. பார்க்கவே பளிச்சென்று, வண்ண மயமாக அசத்தலாக உள்ளது.
துவக்கத்தில் ஆர்வம் இல்லாமல் பார்த்தாலும், ஒளிப்பதிவே தொடர்ந்து பார்க்க வைத்தது. படத்தில் எந்தச் செலவும் இல்லை, OTT க்காகவே எடுக்கப்பட்ட படம்.
பின்னணி இசைக்குப் பெரியளவில் வேலையில்லை.
யார் பார்க்கலாம்?
இரு வேறு மதத்தினர் எவ்வாறு விவாதிக்கிறார்கள்? என்ன மாதிரியான கேள்விகளை, விளக்கங்களைக் கொடுக்கிறார்கள் என்று பார்க்க விரும்புவர்கள் பார்க்கலாம்.
ஒரே இடத்தில் கதை நடப்பதால், பொறுமை வேண்டும். அதோடு இத்தா பற்றியும் சில கட்டுப்பாடுகளைப் பற்றிய விவாதம் மட்டுமே என்பதால், சுவாரசியமாக இருக்காது.
எனவே, இது அனைவருக்குமான படமல்ல.
சர்ச்சையைக் கிளப்பி விட்டவர்களால் என்னமோ எதோ என்று எதிர்பார்த்து பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும் 🙂 .
aha OTT யில் காணலாம்.
Directed by Sarjun KM
Starring Mirnaa Menon, Kalaiyarasan
Cinematography Balamurugan
Edited by B Pravin Baaskar
Music by Sivatmikha
Distributed by Aha Tamil
Release date 7 April 2023
Running time 82 minutes
Country India
Language Tamil
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. பொதுவாக எந்த குறிப்பிட்ட மதத்தை விமர்சித்து வரும் செய்திகளையும், படங்களையும் பார்ப்பதில் எனக்கு என்றுமே ஆர்வம் கிடையாது.. நான் பார்ப்பதும் இல்லை.. என் மதத்தில் எனக்கு தவறு என்று தெரிந்த பலவற்றை (தனிப்பட்ட நபர்களின் சுய லாபத்துக்காக கொன்டு வரப்பட்டவைகளை-திணிக்கப்பட்டவைகளை ) நான் பின்பற்றுவது இல்லை . உதாரணமாக தர்கா வழிபாடு, இறந்தவர்களுக்கு செய்யும் சடங்குகள், சிறப்பு பிராத்தனைகள், கடவுளுக்கு நடுவில் உள்ளவர்களை வழிபடுவது.. என பல விசியங்கள் etc ..எந்த சூழலிலும் இதை தொடர்வது கிடையாது..
ஆனால் அடுத்த மதத்தினர் சடங்குகளையும், அவர்களின் வழிபாட்டு முறைகளையும் என்றுமே நான் குறை கூறியது கிடையாது.. இத்தனை ஆண்டுகள் சக்தியுடன் பழகி இருந்தாலும் மதம் குறித்த விசியங்களை இருவருமே பேசியது கிடையாது.. என்னை விட சக்தி மதத்தின் மீது அதிக பற்று கொண்டவர்.. நாள், கிழமை, விரதம் எல்லாவற்றையும் முடிந்த வரை சரியாக கடைபிடிப்பார்.. இன்று வரை எங்கள் வீட்டில் அவர் அசைவம் சாப்பிட்டது இல்லை.. காரணம் அவர் வரும் போதெல்லாம் ஏதாவது ஒரு விசேஷ நாளாக இருக்கும்..
மதம் என்ற ஒரு கோட்பாடே மனிதனின் வாழ்வியலை சரியான பாதையில் கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட ஒன்றாக கருதுகிறேன்.. காலபோக்கில் அதன் போக்கு வேறு மாதிரி மாறிவிட்டது .. தற்போதைய காலமாற்றத்துக்கு தகுந்தது போல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை.. மாற்றங்களை நிச்சயம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.. நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தாலும் ஏதோ ஒரு சுழலில் நிச்சயம் ஏற்று கொள்ள வேண்டிய சூழல் தனாகவே அமைந்து விடும்..
இஸ்லாம் மதத்தை பொறுத்தவரை அதற்கான தனித்துவம் இருக்கிறது.. நீங்கள் பொது வெளியில் பார்க்கின்ற தனி நபர்களையோ / அவர்களின் வாழ்வியலையோ வைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது.. (குறிப்பாக அரபு நாடுகளுக்கு பணி காரணமாக சென்று வந்தவர்கள் தமிழ்நாட்டிலும் அதே வழக்கங்களைத் புகுத்துகிறார்கள், இவை தமிழகத்துக்குப் புதியது.) உண்மை..
ஆனால் இஸ்லாமிய மதத்தில் அரபிகள் செய்வதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றோ / பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.. குரான் – புனித நூல் & ஹதீஸ் (நபியின் வாழ்வியல்) இதை மட்டும் தான் பின்பற்ற வேண்டும்.. இவற்றை தவிர வேறு எதையும் பின்பற்ற வேண்டியது இல்லை..
தனிநபர்களின் வாழ்வியலை வைத்து இஸ்லாம் இது தான் என்று முடிவு செய்ய முடியாது.. காரணம் இங்கு இஸ்லாமியர்கள் பல பிரிவுகளில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.. இவர்களுக்குள் பல வேறுபாடுகள் உள்ளது.. உதாரணமாக நான் தமிழ் பேசும் முஸ்லீம். அதே போல் உருது பேசும் நபர்கள் உண்டு..எங்களுக்கும், இவர்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு.. (கைவாணி என்ற முஸ்லீம் நபரே ஓட்டுநராக இருந்தார்) இந்த பல பிரிவுகளில் இவரும் ஒரு பிரிவாக இருந்து இருப்பார்..
@யாசின்
“அடுத்த மதத்தினர் சடங்குகளையும், அவர்களின் வழிபாட்டு முறைகளையும் என்றுமே நான் குறை கூறியது கிடையாது.”
சந்தேகமே இல்லை.
“மதம் என்ற ஒரு கோட்பாடே மனிதனின் வாழ்வியலை சரியான பாதையில் கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட ஒன்றாக கருதுகிறேன்.. காலபோக்கில் அதன் போக்கு வேறு மாதிரி மாறிவிட்டது”
மனிதனை நல்வழிப்படுத்த கொண்டுவரப்பட்ட மதம் நாளடைவில் அதன் உண்மையான காரணத்தை விட்டு விலகிச் செல்வது கசப்பான உண்மை.
“தற்போதைய காலமாற்றத்துக்கு தகுந்தது போல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை.. மாற்றங்களை நிச்சயம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.”
இதை உணராதவர்களாலே பிரச்சனைகள்.
“நான் தமிழ் பேசும் முஸ்லீம். அதே போல் உருது பேசும் நபர்கள் உண்டு..எங்களுக்கும், இவர்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு.”
என்ன மாதிரியான வேறுபாடுகள்? தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்.
விருப்பப்பட்டால் கூறலாம், இல்லையென்றால் தவிர்த்து விடுங்கள். எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
உணவு, உடைகள் என அடிப்படையிலே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றது.. வணக்க வழிபாடுகளிலும் வேறுபாடுகள் உண்டு.. குறிப்பாக உருது முஸ்லிம்களுக்கு தர்காவிற்கு செல்லும் பழக்கம் அதிகம் உண்டு.. சந்தன கூடு, உர்ஸ், கந்தூரி இவர்கள் ஆர்வத்துடன் கொண்டாடுவார்கள்..
நான் முற்றிலும் அதற்கு நேர் எதிரானவன்..
இறந்தவர்களுக்கு விசேஷ சடங்குகள், 3 / 7 / 40 நாள் பிராத்தனை என இஸ்லாத்தில் இல்லாதவற்றை செய்வார்கள்.. நாங்கள் அதை செய்வது இல்லை.. (30/40 ஆண்டுகளுக்கு முன் செய்து இருக்கிறோம்.. தவறு என்று தெரிந்த பின் விட்டு விட்டோம்) இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இன்னும் தொடர்கின்றனர்..
எனக்கு தெரிந்த வரை இரண்டு பிரிவுகளுக்கு இடையில் 99% திருமணங்கள் நடைபெறாது. இன்னும் பல வேற்றுமைகள் இருக்கிறது .. வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் பேசுவோம்..
நன்றி யாசின்