வழக்கு எண் 18 / 9 (2012)

15
வழக்கு எண் 18 / 9

காதல் கல்லூரி படங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு எதார்த்த, நடைமுறை வழக்கு எண் 18 / 9 கதையோடு களம் இறங்கி இருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

காதல் படத்தை ஒரு கோடியில் முடித்துத் தருவதாகக் ஷங்கரிடம் கூறி அதற்குள்ளாகவே முடித்து அதை மிகப்பெரிய வெற்றி படமாக்கி இருந்தார்.

இந்தப்படத்தில் அந்தச் செலவு கூட ஆகி இருக்காது போல அனைவருமே புதுமுகங்கள் இயல்பான இடங்கள் என்று திரைக்கதையை மட்டுமே நம்பி எடுத்து இருக்கிறார்.

கேமரா கூட டிஜிட்டல் கேமரா தானாம். Image Credit

வழக்கு எண் 18 / 9

இதில் இரு கதைகள். இரண்டையும் எந்த வித சிக்கலும் இல்லாமல் பொருத்தமாக இணைத்து மிக மிகச் சிறப்பாகத் திரைக்கதை அமைத்து இருக்கிறார்.

ஒரு கதை வேலு (ஸ்ரீ) என்கிற சிறுவன் குடும்ப நிலை காரணமாக வட மாநில முறுக்கு சுடும் வேலைக்குச் சென்று பின் பல வருடங்கள் இருந்து அடிபட்டுச் சென்னை திரும்புகிறான் ஏதாவது வேலை செய்து பிழைக்க.

சென்னையில் ஆர்த்தி (மனிஷா) தினேஷ் (மிதுன்) 12 ம் வகுப்பு படிக்கும் இளசுகள்.

இவர்களிடையே ஏற்படும் இனக்கவர்ச்சி அதில் தினேஷ் எப்படி மொபைல் தொழில்நுட்பத்துடன் ஆர்த்தியை படம் பிடித்து மற்றவர்களுக்குக் காட்டுகிறான்.

அதன் தொடர்ச்சி எங்கு சென்று முடிக்கிறது என்பது இன்னொரு கதை.

ஆர்த்தி வீட்டில் பணி புரியும் பெண்ணாக ஜோதி (ஊர்மிளா) இந்த இரண்டு கதையில் உள்ளவர்களும் அருகிலே இருப்பதால் ஒருவருக்கொருவர் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்.

எதிலும் சம்பந்தப்படாமல் மாட்டிக்கொள்ளும் வேலைக்காரப் பெண் ஜோதி.

ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள் யார் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள் என்பதை வகைப்படுத்தவே சிரமமாக உள்ளது.

வேலு

என்னைப்பொறுத்தவரை வேலு முதல் தினேஷ் இரண்டாவது ஆர்த்தி மூன்றாவது ஜோதி நான்காவதாக வருவார்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில்.

இதில் ஜோதி நான்காவது இடம் என்றாலும் சிறப்பாகச் செய்து இருக்கிறார் அவருக்கு நடிக்கக் கிடைத்த வாய்ப்புகள் குறைவு இவரும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

வேலு அசல் தெருவோர பையனாகவே தெரிகிறார்.

பசியால் கீழே கிடக்கும் போதும், சிறையில் அழும் போதும், பொய் பேசத் தெரியாமல் இருப்பதும் என்று கூறிக்கொண்டே போகலாம்.

கிடைத்த இடத்தில் எல்லாம் சிக்சர் அடித்து இருக்கிறார்.

தினேஷும் ஆர்த்தியும் இந்தக்கால இளசுகளை அப்படியே கண் முன் நிறுத்துகிறார்கள். அப்படியே என்றால் அப்படியே தான்.

பாலாஜி சக்திவேல்

எனக்கு வியப்பாக இருந்தது இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் எப்படி தெரிந்தது? என்று.

ஒரு பேட்டியில் பாலாஜி சக்திவேல் அவர்கள் இந்தப்படத்தில் உதவி இயக்குனர்கள் பங்கு அதிகம் அவர்கள் இல்லை என்றால் இவ்வளவு சிறப்பாக என்னால் எடுத்து இருக்க முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

எனவே கண்டிப்பாக இந்த விசயத்தில் அவர்கள் பெரும் உதவி செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அதிலும் தினேஷ் ஆர்த்தியை மடக்க செய்யும் செயல்கள் அதைத் தெரிந்தும் தெரியாதது போலக் காட்டி ரசிக்கும் ஆர்த்தி என்று நடைமுறை எதார்த்தத்தை அப்படியே பிரதிபலித்து இருக்கிறார்கள்.

பெற்றோர்கள் நிச்சயம் இந்தப்படத்தை பாருங்கள்.

உங்கள் வீட்டில் கூட ஒரு ஆர்த்தியோ தினேஷோ இருக்கலாம். செயல்பாடுகளில் கொஞ்சம் முன்னபின்ன இருக்கலாம் ஆனால், இவை போல 100 % நடக்கிறது.

தினேஷ் கொண்டு வரும் மொபைல் காணொளியைப் பார்த்து அவனை உற்சாகப்படுத்தும் நண்பர்கள், ஆர்த்தியை உசுப்பேற்றும் நண்பிகள் எல்லாம் தெருக்கு தெரு இருக்கிறார்கள்.

இவர்கள் இல்லாமல் மனதில் நிற்கும் பாத்திரங்களாக வேலுவின் நண்பனாக வரும் கூத்துப் பட்டறை பையன், காவல்துறை அதிகாரியாக வரும் குமாரவேல் (இவர் காதல் படத்தில் சார் பதிவாளாராக வருவார்), பாலியல் தொழிலாளி, வேலு வேலை செய்யும் பிளாட்பார கடை முதலாளி என்று பலர் மிக மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

இதில் அந்தச் சிறுவன் பேசும் பேச்சுக்குத் திரையரங்கில் பலத்த கைதட்டல். குமாரவேல் அப்படியே நிஜ காவல்துறை அதிகாரி போலவே பேசுகிறார்.

பாடல்கள் இரண்டு ஆனால் பின்னணி இசை இல்லாமல். இதனாலே படத்தின் நீளம் குறைவு. படத்தின் பின்னணி இசை அவ்வளவாகத் திருப்தி இல்லை.

குறைகள் என்று எதையும் பெரிதாகக் குறிப்பிட முடியவில்லை.

சில இடங்களில் கேமராவை கதாப்பாத்திரங்களின் உடலில் கட்டி விட்டுக் கேமரா இவர்கள் முகத்தைப் பார்த்தது போல வைத்து இருக்கிறார்கள்.

இதனால் அவர்கள் இயல்பாக நடக்க முடியாமல் சிரமப் படுகிறார்கள்.

பார்க்கவும் நன்றாக இல்லை. இதைத் தவிர்த்து இருக்கலாம்.

பலரும் இந்தப்படத்தை ஆஹா ஓஹோ என்று அளவுக்கு மீறிப் புகழ்வது போலத் தெரிகிறது.

இது நல்ல படம் தான் என்றாலும் அனைவரும் கொடுக்கும் ஹைப் அதிகம் என்றே கருதுகிறேன்.

அனைவரும் பார்க்க வேண்டிய படம் குறிப்பாக மாணவர்கள், பெற்றோர்கள்.

Directed by Balaji Sakthivel
Produced by N. Subash Chandrabose, Ronnie Screwvala
Written by Balaji Sakthivel
Starring Mithun Murali, Sri, Urmila Mahanta, Manisha Yadav
Music by R. Prasanna
Cinematography S. D. Vijay Milton
Editing by Gopi Krishna
Studio Thirupathi Brothers, UTV Motion Pictures
Release date(s) May 4, 2012
Running time 115 minutes

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

15 COMMENTS

  1. பகிர்வுக்கு நன்றி கிரி… படம் இன்னும் பார்க்கவில்லை, இந்த வார இறுதிக்குள் பார்த்து விடுவேன்… ஏதார்த்தமான படங்கள் சில சமயங்களில் தோல்வி அடைந்தாலும், அந்த தோல்வியும் நிச்சயம் அழகு தான்!!!!

  2. உங்களோட விமர்சனம் படிக்காம இந்த கமெண்ட் போடுறேன்… இன்னைக்கு படம் பாக்க போறேன்… பாத்திட்டு வந்து இன்னொரு கமெண்ட் போடுறேன்…

    • படம் பார்த்து விட்டேன்… உண்மையிலையே மிக திருப்திகரமான படம் தான்…

  3. வாழ்த்துக்கள் மகேஷ்

    ரஜினி – லதா மாதிரி உங்கள் குடும்ப வாழ்கை அமையவேண்டும்

  4. தலைவர் வீடியோவை FB ல Share பண்ணிக்கிறன் :p இந்த படமெல்லாம் எங்களுக்கு DVD லதான்; தியேட்டர்ல போகாது!! 🙁

    மகேஷ் அவர்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

  5. மகேஷ் அண்ணனுக்கு வாழ்த்துகள். கிரிண்ணே, அப்படியே “நூறு வருஷம்” பாட்டையும் போட்டு இருக்கலாமே! 🙂

    • அப்துல்லா மகேஷுக்கு இனிமேல் தான் திருமணம் ஆகப்போகிறது அந்தப்பாடல் திருமணம் ஆன பிறகு போடலாம் 🙂

  6. நண்பர் கிரிக்கு,(பல உணர்வுகள் ஒத்திருப்பதால் நண்பர் என பல நாட்களாக நினைத்து கொள்வேன்.)
    வணக்கம்,
    இது எனது முதல் கடிதம் ஆனால் தங்களை பற்றிய பரிச்சயம் தங்கள் எழுத்தின்மூலம் வெகுவாக உண்டு. நான் தங்களது தளத்தை 2 ஆண்டு காலமாக படித்து வருகிறேன். ஆனால் இதுவரை கருத்தொன்றும் இட்டது கிடையாது. எனது பார்வையில் பல முக்கிய விடயங்களை பற்றி எழுதாமல் / பொது வெளியில் விவாதிக்காமல் நீங்கள் மௌனமாக இருப்பதாக எனக்கு தோன்றும். இது எனது எண்ணம் மட்டுமே. உண்மையில் உங்களுக்கு வேலைப்பழு உள்ளதாலும் இருக்கலாம். சரி சொல்ல வந்ததை கூறிவிடுகிறேன்.

    இப்படம் பார்த்து முடித்தவுடன் எந்தந்த பதிவர்கள் இதை பற்றி எப்படியெல்லாம் எழுதுவார்கள் என யோசித்து கொண்டிருதேன். அதில் நீங்கள் லிஸ்ட்லயே இல்ல, சரி பார்த்துவிடலாம் என தங்கள் தளத்துக்கு வந்து பார்த்தல் எனக்கு ஆச்சரியம்!!

    என்னையும் சார்ந்த இந்த சமுகத்தில் சுற்றி நடைப்பவைகளை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளேன். நிச்சயம் இதில் உள்ளபடி நிறைய நடக்கிறது. நாமும் செய்தி தாளை படித்துவிட்டு மறந்து விடுகிறோம். என்னை பொறுத்தவரை இத்திரைப்படம் ஒரு சமுக அக்கறையுடன் மிக சிரத்தையாக கையாளப்பட்டுள்ளது. கொஞ்சம் சறுக்கினாலும் தனுஷும் அவர் குடும்பமும் சேர்த்து செய்த சீர்கேட்டை (துள்ளுவதோ இளமை) போல் ஆகிவிட்டிருக்கும். ஆனால் துளி கூட விரசம் கலக்காமல் சொல்ல வேண்டியதை மிக சரியாய் சொல்லிவுள்ளார் இயக்குனர்.
    Hats off to balaji sakthivel sir, and his entire team for a good movie

    கண்டிப்பாக நீங்கள் இது பற்றி எழுதாமல் விட்டிருந்தீர்களானால் அடுத்த எதோ ஒரு திரைப்பட விமர்சனத்தில் கண்டிப்பாக கடுமையாக விமர்சித்து இருந்திருப்பேன். அந்தளவு கோவம் இருந்தது. இப்போது அடைப்பு குறிக்குள் () இருப்பது உண்மையாகி விட்டதா.
    நன்றி கிரி.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    அன்புடன்
    த.சிட்டிபாபு

    • சிட்டி பாபு உங்களின் விரிவான விமர்சனத்திற்கு நன்றி. தற்போது நேரமில்லாததால் விரிவாக பதில் அளிக்க முடியவில்லை. விரைவில் உங்களுக்கு பதில் அளிக்கிறேன்.

  7. நல்லா இருக்கு கிரி விமர்சனம் பாத்துட வேண்டியது தான்

    “இது நல்ல படம் தான் என்றாலும் அனைவரும் கொடுக்கும் ஹைப் அதிகம் என்றே கருதுகிறேன்.” – இந்த நேர்மை தான் தல உங்க பிளஸ் .. எப்பவும் நீங்க இதை விட்டுறாதீங்க

    – அருண்

  8. கிரி, இன்னைக்கு தான் படம் பார்த்தேன். யதார்த்தமான படங்களை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்ற கூற்றை சுக்கு நூறாக்கி இருக்கிறார் இயக்குனர். அதற்கே அவருக்கு ஒரு சல்யுட். திரையுலக ஜாம்பவான்கள் தான் அந்த எண்ணத்தில் இருக்கிறார்களே தவிர, ரசிக்ககூடிய யதார்த்தமான படங்களை மக்கள் இரு கை கொண்டு ஆரவாரத்தோடு வரவேற்ப்பார்கள்.

    இதில் இன்னொரு விஷயம். வேறு எந்த பெரிய படமும் சுனாமி போல வந்து இது போன்ற படங்களை தூக்கி கடாசிவிடாமல் இருந்தது பெரிய ஆறுதல்.

  9. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின் படம் நன்றாகப் போவதாகத்தான் அனைவரும் கூறுகிறார்கள்.

    @தினேஷ் 🙂

    @ஜீவதர்ஷன் அப்படியா! நான் கூட அனைத்துப் படமும் உங்கள் பகுதியில் வரும் என்று நினைத்தேன்.

    @சிட்டி பாபு

    “எனது பார்வையில் பல முக்கிய விடயங்களை பற்றி எழுதாமல் / பொது வெளியில் விவாதிக்காமல் நீங்கள் மௌனமாக இருப்பதாக எனக்கு தோன்றும். இது எனது எண்ணம் மட்டுமே. உண்மையில் உங்களுக்கு வேலைப்பழு உள்ளதாலும் இருக்கலாம்.”

    என்னுடைய பழைய இடுகைகளை (Post) எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் பெரும்பாலும் சமூகம் சார்ந்ததாகவே இருக்கும் அதாவது அனைத்தைப் பற்றியும் விமர்சித்து எழுதுவேன். ஒரு கட்டத்தில் எனக்கு பொறுமை போய் விட்டது நாம் எதற்கு வெட்டியாக இது பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று விட்டது. ஊர்ல இருக்கிறவன் எல்லாம் ஊழல் பண்ணுறான்.. கொள்ளை அடிக்கிறான்.. மக்கள் பணத்தை விரையம் செய்கிறார்கள் கட்டமைப்பை சரி செய்ய முயற்சி எடுப்பதில்லை இது போல கூறிக்கொண்டே போகலாம். எத்தனை முறை தான் சொன்னதையே சொல்வது திட்டியதையே திட்டுவது ஒரு கட்டத்தில் சலிப்பாகி விட்டது. எவனோ எப்படியோ போகிறான்.. சும்மா நாம எதுக்கு கத்திட்டு இருக்க வேண்டும் என்று பொதுவான விசயங்களை மட்டும் எழுதுகிறேன். இப்ப பொங்குவதை குறைத்துக்கொண்டேன் 🙂 இது குறித்து ஒரு இடுகையில் கூறி இருந்தேன் ஆனால் எந்த இடுகை என்று மறந்து விட்டது.

    ஈழதமிழர்கள், மின்சாரம், இலவசம், தேர்தல் என்று ஏகப்பட்ட விஷயங்கள் எழுதி இருக்கிறேன்.. திரும்ப அதையே எழுத என்ன இருக்கிறது. காட்சிகள் எதுவும் மாறி இருந்தால் எழுதலாம் அதே தான் அப்படியே உள்ளது எந்த வித மாற்றமும் இல்லாமல் சொல்லப்போனால் அதிகம் தான் ஆகிறது அப்படி இருக்கும் போது சும்மா வறட்டு கத்து கத்திக்கொண்டு இருப்பதால் என்ன பயன் என்று வெறுத்துப் போய் விட்டு விட்டேன். அதனாலே உங்களுக்கு நான் எதுவும் இது பற்றி எழுதவில்லை என்று தோன்றுகிறது என்று நினைக்கிறேன்.

    நீங்கள் இது பற்றி கூறவில்லை வேறு ஏதாவது என்றால் அது என்ன என்று விளக்கவும்.

    “இப்படம் பார்த்து முடித்தவுடன் எந்தந்த பதிவர்கள் இதை பற்றி எப்படியெல்லாம் எழுதுவார்கள் என யோசித்து கொண்டிருதேன். அதில் நீங்கள் லிஸ்ட்லயே இல்ல, சரி பார்த்துவிடலாம் என தங்கள் தளத்துக்கு வந்து பார்த்தல் எனக்கு ஆச்சரியம்!!”

    இரண்டு வருடமாக என் தளத்தை படித்தும் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்தது தான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது காரணம் எந்த ஒரு நல்ல படத்தையும் நான் தவறவிட்டது இல்லை. நல்ல படங்கள் / பொது ஜனம் ரசிக்கும் படங்களை (OK OK) மட்டுமே நான் விமர்சனமாக எழுதி வருகிறேன் (ஆங்கிலப் படங்கள், நடுநிசி நாய்கள் விதிவிலக்கு) அப்படி இருக்கும் போது இந்தப்படத்தை நான் எழுதவில்லை என்றால் தான் ஆச்சர்யம். நீங்க என்னுடை திரை விமர்சனங்களை பாருங்கள் அதில் எத்தனை நல்ல படங்களை பாராட்டி எழுதி இருக்கிறேன் என்று புரியும். இன்று வரை ஆடுகளம் விமர்சனம் எழுதவில்லை என்று எனக்கு ஒரு மனக்குறை அதோடு ஆரண்ய காண்டம் பார்க்கவில்லை என்று வருத்தம்.

    “கண்டிப்பாக நீங்கள் இது பற்றி எழுதாமல் விட்டிருந்தீர்களானால் அடுத்த எதோ ஒரு திரைப்பட விமர்சனத்தில் கண்டிப்பாக கடுமையாக விமர்சித்து இருந்திருப்பேன். அந்தளவு கோவம் இருந்தது.”

    உங்கள் கோவம் ஏன் என்று எனக்கு சத்தியமாக புரியவில்லை 🙂 அதோடு இதை நான் எழுத முடியாமல் போக தனிப்பட்ட காரணங்களும் இருக்கலாம் உதாரணமாக எனக்கு நேரமில்லாததால் இந்தப்படம் பார்க்க முடியவில்லை என்றால் என்னால் எழுதி இருக்க முடியாது அதோடு சில நேரங்களில் தாமதமாக படம் பார்ப்பேன் அப்போது விமர்சனம் எழுதுவது வீண் என்பதால் கூட தவிர்த்து விடுவேன். இது போல நேர்மையான காரணங்கள் இருக்கும் போது இந்தப்படம் பற்றி எழுதவில்லை என்று நீங்கள் அடுத்த விமர்சனத்தில் கோபப்பட்டால் நான் எப்படி பொறுப்பாக முடியும்.

    “இப்போது அடைப்பு குறிக்குள் () இருப்பது உண்மையாகி விட்டதா”

    🙂 சிட்டிபாபு உங்களின் விரிவான விமர்சனத்திற்கு நன்றி. விமர்சனங்களை எப்போதும் வரவேற்கிறேன்.

    @அருண் நன்றி

    @பாமரன் இதற்கு ஊடகங்கள் பலத்த ஆதரவு கொடுத்தன அதுவும் இந்தப்படம் வெற்றி பெற முக்கியக்காரணங்கள். என்னைப் பொறுத்தவரை காதல் படத்திற்கு கீழே தான் இந்தப்படம் வரும். இதை விட நல்ல படங்கள் எவ்வளவோ வந்து இருக்கின்றன ஆனால் எல்லோரும் ஏன் இதை இதுவரை வந்த படங்களிலேயே இது தான் சிறந்த படம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தான் புரியவில்லை.

  10. கிரி, நேறறு தான் படத்தை எனக்கு பிடித்திருந்தது, ஆனால் என் மனைவிக்கு பிடிக்கவில்லை… நேரம் இருப்பின் மீண்டும் இதனை பார்பேன்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here