கே ஜி எஃப் இரண்டாம் அத்தியாயம் (2022)

6
கே ஜி எஃப் இரண்டாம் அத்தியாயம்

பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட KGF அத்தியாயம் 1 க்கு தமிழில் வரவேற்பில்லை. பின்னர் OTT மற்றும் கலர்ஸ் டிவியில் அடிக்கடி பார்க்கப்பட்டும் அதன் வசனங்களாலும், அதையொட்டி வந்த மீம்களாலும் பிரபலமாகி கே ஜி எஃப் இரண்டாம் அத்தியாயம் க்கு எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. Image Credit

கே ஜி எஃப் இரண்டாம் அத்தியாயம்

முதல் அத்தியாயத்திலேயே பிரம்மாண்டமான காட்சிகளை வைத்து இருந்தாலும் இரண்டாம் அத்தியாயத்தில் மிகப்பிரம்மாண்டமான காட்சிகளை வைத்துள்ளார்கள்.

யஷ் அறிமுகமாகும் இடமே மிரட்டலாக இருக்கிறது.

பம்பாய்க்கு டானாக இருந்த ராக்கி இந்தியா முழுமைக்குமே டானாகி அவரை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு வளர்ந்து விடுகிறார்.

ஒரு கட்டி தங்கத்தை கூட விட்டுக்கொடுக்காதவர் சேர்த்த தங்கத்தை எல்லாம் என்ன செய்கிறார்? இறுதியில் என்ன ஆனது? என்பதே கே ஜி எஃப் இரண்டாம் அத்தியாயம்.

தயாரிப்பு

முதல் அத்தியாயம் பார்த்தவுடனே எனக்குத் தோன்றியது எந்த தைரியத்தில் இப்படத்துக்கு இவ்வளவு செலவு செய்தார்கள் என்பது தான்.

இயக்குநர், நடிகர் என்று எவருமே பிரபலமானவர்கள் இல்லை. இதைவிட கன்னட திரையுலகம் மிக குறுகிய வசூல் வட்டத்தைக்கொண்டது.

இப்படியிருக்கையில் இயக்குநரை, நடிகரை நம்பி இவ்வளவு பெரிய முதலீடு செய்தது மிகப்பெரிய தைரியமான முடிவு. ஒருவேளை சொதப்பியிருந்தால் அவரால் மீண்டு இருக்கவே முடியாது.

இப்படத்தின் வசூலுக்கு முழுத்தகுதியானவர் இப்படத்தின் தயாரிப்பாளர்.

இயக்கம் நடிப்பு

எப்படி இவருக்குள்ளே இப்படியொரு மாஸ் திறமை இருந்தது என்று ஒவ்வொரு காட்சியிலும் வியக்க வைக்கிறார் இயக்குநர்.

அனைத்துக்காட்சிகளுமே ஏதாவது ஒரு வகையில் பிரம்மாண்டமாக உள்ளது ஆனால், இப்படத்தின் முதலீடு அதிகபட்சமே 100 – 120 கோடி. 10 மடங்கு இலாபம்.

பல காட்சிகள் Mad Max படத்தை நினைவுபடுத்தியது.

இவ்வளவு குறைந்த முதலீட்டில் இப்படியொரு படமா! இதில் யஷ் க்கு குறைந்த சம்பளமாக இருக்கும் என்பதாலே இது சாத்தியமாகி இருக்கிறது.

யஷ் தன்னை ஒவ்வொரு காட்சியிலும் இப்படத்துக்கு பொருத்தமான நாயகன் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். என்ன ஒரு மாஸான நடிப்பு!

காவல் அலுவலகத்தை சல்லடையாக துளைத்து, சூடான துப்பாக்கியில் சிகரெட் பற்ற வைக்கும் காட்சியில் தெறிக்க விடுகிறார்.

இதில் வியப்பு என்னவென்றால், முதல் அத்தியாய வெற்றி கண்ணை மறைக்காமல் மிகை நடிப்பு செய்யாமல் நடித்துள்ளது தான்.

தேர்ந்த அனுபவ நடிகரைப் போல மிக அனாயசமாக நடித்துள்ளார். மாஸ் நடிப்புக்கு பெயர் போன ரஜினியே இவர் நடிப்பை கண்டு வாயடைத்து இருப்பார்.

அலட்டல் இல்லாத அசால்ட்டான உடல்மொழியில் அற்புதமாக நடித்துள்ளார்.

மாஸ் படங்களில் நடிப்பவர்கள் ஏன் மிகை நடிப்பு செய்யக்கூடாது என்பதற்கு KGF சிறந்த எடுத்துக்காட்டு.

சஞ்சய் தத்

வில்லன் எவ்வளவுக்கெவ்வளவு பலமாக இருக்கிறாரோ அந்தளவுக்கு படத்தின் மதிப்பும் கூடும். வில்லன் பலமாக இருந்தால் தான் நாயகனுக்கும் சவாலாக இருக்கும்.

இதில் சஞ்சய் தத் மிரட்டலான வில்லனாக வருகிறார் ஆனால், அவரின் வயது சிறு தடையாக இருக்கிறது. பல காட்சிகளில் அவரின் உடல் தளர்வு தெரிகிறது.

காட்சிகள்

முதல் அத்தியாயம் போல சவாலாக இல்லாமல் எதிரிகளை எளிதாக சமாளிப்பது ஏற்புடையதாக இல்லை, Jus like that நடந்து விடுகிறது.

என்ன தான் பெரிய டான் என்றாலும் பிரதமர் ரவீனாவை அவர் இடத்துக்கே சென்று துப்பாக்கியுடன் மிரட்டுவது கொஞ்சம் கூட நம்பும்படியில்லை.

படம் வெற்றி பெற்றதால் இக்குறைகள் முக்கியத்துவம் பெறவில்லை. ஒருவேளை தோல்வி அடைந்து இருந்தால், இக்காட்சியை கிழித்து தொங்க விட்டு இருப்பார்கள்.

சில காட்சிகள் நம்ப முடியவில்லை என்றாலும் நம்மை சிந்திக்க விடாதபடி இருக்கும். இது போல ஒரு காட்சி RRR ல் ராம் சரண் அத்தனை பேரையும் அடித்து ஒருவரை இழுத்து வருவதைக்கூறலாம்.

பாட்ஷாவில் ரஜினி அடித்து ஒருவர் மின்சார கம்பத்தில் மோதி விழும் காட்சி நம்ப முடியாததாக இருந்தாலும், காட்சியமைப்பும் நடிப்பும் நம்மை ரசிக்க வைக்கும்.

இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு! என்று யோசித்தாலும் காட்சியமைப்பு மற்றும் நடிப்பால் அவை ஏற்றுக்கொள்ளும்படியாகி விடுகிறது.

இறுதியில் முடிவு தான் புரியவில்லை. எதற்காக இவ்வளவையும் செய்யணும்? பின்னர் கடலுக்குப் போகணும்? இவ்வளவு பேர் கஷ்டப்பட்டது எதற்காக?

மூன்றாம் அத்தியாயத்தில் இதற்கான பதில்கள் இருக்கலாம்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலம். இதனோடு அரங்க அமைப்பும் படத்தின் பிரம்மாண்டத்துக்கு கை கொடுத்துள்ளது.

யார் பார்க்கலாம்?

அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். ஏற்கனவே பார்த்து இருப்பீர்கள் 🙂 .

பலரும் முதல் அத்தியாயம் நல்லா இல்லை என்று கூறிய போதே, நன்றாக உள்ளது எனக்குப் பிடித்தது என்று விமர்சனத்தில் கூறி இருந்தேன்.

கே ஜி எஃப் இரண்டாம் அத்தியாயத்தை விட KGF அத்தியாயம் 1 தான் ரொம்பப் பிடித்தது காரணம், அப்படத்தில் எல்லாமே இயல்பாக வந்தது போல இருந்தது.

பெரும்பான்மையோருக்கு கே ஜி எஃப் இரண்டாம் அத்தியாயம் தான் பிடித்துள்ளது. இதற்கு முதல் அத்தியாயத்தை ரசிக்காதது கூடக் காரணமாக இருக்கலாம்.

யஷ்க்கு இப்படத்தின் வெற்றி அளவுகோலாக மாறி அடுத்து வரும் படங்களுக்கு தலைவலியாக இருக்கும். அதோடு தாடியை எடுத்து விட்டால் அமுல் பேபி போல மாறி விடுவார் 🙂 .

கன்னட பட வரலாற்றில் தவிர்க்க முடியாத நபராக, காலத்துக்கும் நினைவு கூறப்படும் நடிகராக யஷ் இருப்பார்.

Directed by Prashanth Neel
Written by Prashanth Neel
Produced by Vijay Kiragandur
Starring Yash, Sanjay Dutt, Raveena Tandon, Srinidhi Shetty, Prakash Raj
Cinematography Bhuvan Gowda
Edited by Ujwal Kulkarni
Music by Ravi Basrur
Release date 14 April 2022
Running time 168 minutes
Country India
Language Kannada

தொடர்புடைய திரை விமர்சனம்

கே ஜி எஃப் [2018] முதல் அத்தியாயம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. என்னது KGF 1 க்கு தமிழில் வரவேற்பு இல்லையா? உங்களுக்கு அப்போது இந்த படம் பற்றி தெரியவில்லை என்று சொல்லுங்கள். நிறைய பேர் OTT டிவியில் தான் பார்த்தார்கள் என்பது உண்மை தான். ஆனால் தியேட்டரில் அப்போதே பார்த்தவர்கள் நிறைய பேர் படம் மிக நன்றாக உள்ளது என்று கூறினார்கள். தமிழுக்கு புது ஹீரோ. பாகுபலி அளவிற்கு முதலில் அவர்கள் இந்த படத்திற்கு PROMOTION செய்யாததால் தியேட்டரில் பலபேர் பார்க்காமல் விட்டுவிட்டார்கள்.

  2. (இறுதியில் முடிவு தான் புரியவில்லை. எதற்காக இவ்வளவையும் செய்யணும்? பின்னர் கடலுக்குப் போகணும்? இவ்வளவு பேர் கஷ்டப்பட்டது எதற்காக?)

    படத்தில் அவரே சொல்லி இருப்பாரே. எதற்காக இவ்வளவு தங்கம் சேர்க்கிறேன் என்று. தன் அம்மாவிற்கு செய்த சத்தியத்திற்காக தான் என்ன வேணாலும் செய்வேன் எந்த எல்லைக்கும் செல்வேன் என்பதை சொல்வார். அதுமட்டுமல்லாமல் அந்த மக்களுக்காக வீடு கட்டி இருப்பார். அதுவு‌ம் கடைசியில் காட்டுவார்கள். தான் சேர்த்து வைத்த தங்கம் அரசாங்கம் கையில் கிடைத்து விடக்கூடாது என்று புத்திசாலித்தனமாக கடலில் கடைசியில் சேர்த்து விடுவார். அதை எடுப்பது மிகக்கடினம் என்று அரசாங்க அதிகாரி யஷ் மரணமடைந்த பிறகு பிரதமர் ரவீனா டன்டனிடம் கூறுவார். 2வது முறை படம் பாருங்க. நிறைய புரியும். நிறைய பேருக்கு 2 வது முறை படம் பார்க்கும் போது பல விஷயங்கள் புரிந்தது. எனக்கும்.

  3. (யஷ்க்கு இப்படத்தின் வெற்றி அளவுகோலாக மாறி அடுத்து வரும் படங்களுக்கு தலைவலியாக இருக்கும். அதோடு தாடியை எடுத்து விட்டால் அமுல் பேபி போல மாறி விடுவார்)

    உண்மை. இதுபோன்ற உலகமே போற்றும் ஒரு படத்தை கொடுத்து விட்டால் அதற்கு பிறகு இதைவிட அல்லது இதற்கு சமமாக அவரின் அனைத்து படங்களும் இருக்கும் என்று மக்களும் எதிர்பார்ப்பார்கள் அவருக்கும் அந்த பதட்டம் இருக்கும். பாகுபலி பிரபாஸ் இப்போது இந்த சிக்கலில் தான் இருக்கிறார். பாகுபலி போன்று மாஸ் படத்தில் நடித்து விட்டு தற்போது அந்த வெற்றியை அவரால் தக்கவைக்க முடியாமல் திணறுகிறார் அடுத்தடுத்து தோல்வி படங்களாக தருகிறார். இந்த போன்ற மாஸ் படத்தில் நடிப்பது பெரிய அதிர்ஷ்டம் என்றாலும் பிறகு அதுவே அவர்களுக்கு பதட்டமாகவும் இருக்கிறது. ராதே ஷ்யாம் தோல்விக்கு பிறகு பிரபாஸ் ஒரு பேட்டியில் கூறும்போது மக்கள் என்னிடம் அனைத்து படங்களும் பாகுபலி போன்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் எனக்கு அதுவே பதட்டமாக இருக்கிறது என்று கூறுகிறார். பாவம் தான்.

  4. யாரோ சொல்லி தான் KGF 1 பார்த்தேன்.. படம் ஆரம்பமே build up அதிகம் இருந்ததால் என்னடா படம் இப்படி போகுதே!!! என்று இருந்தது.. ஆனால் படத்தோட கேமரா / ஆர்ட் ஒர்க் என்னை பிரம்மிக்க வைத்தது.. KGF பற்றி பள்ளி படிக்கும் போது நிறைய கதைகளை கேட்டு இருந்ததால், இடைவேளைக்கு பிறகு படம் எனக்கு ரொம்ப ஆர்வத்தை ஏற்படுத்தியது..

    KGF 2 இன்னும் பார்க்கவில்லை.. படத்தை பற்றி POSITIVE REVIEW தான் இருக்கிறது.. படம் வெற்றி படம் என்பதில் சந்தேகம் இல்லை.. படம் சரியில்லை என்றால் 2/3 நாட்களுக்குள்ளே தெரிந்து விடும்.. (கே ஜி எஃப் இரண்டாம் அத்தியாயத்தை விட KGF அத்தியாயம் 1 தான் ரொம்பப் பிடித்தது காரணம், அப்படத்தில் எல்லாமே இயல்பாக வந்தது போல இருந்தது…)

    பாகுபலி படத்திலும் எனக்கு மிகவும் பிடித்தது முதல் பாகம் தான்.. இரண்டாம் பாகம் வசூல் அதிகம் இருந்தாலும் முதல் பாகம் மேக்கிங் செம்ம!!!

    (முதல் அத்தியாயம் பார்த்தவுடனே எனக்குத் தோன்றியது எந்த தைரியத்தில் இப்படத்துக்கு இவ்வளவு செலவு செய்தார்கள் என்பது தான்.

    இயக்குநர், நடிகர் என்று எவருமே பிரபலமானவர்கள் இல்லை. இதைவிட கன்னட திரையுலகம் மிக குறுகிய வசூல் வட்டத்தைக்கொண்டது.

    இப்படியிருக்கையில் இயக்குநரை, நடிகரை நம்பி இவ்வளவு பெரிய முதலீடு செய்தது மிகப்பெரிய தைரியமான முடிவு. ஒருவேளை சொதப்பியிருந்தால் அவரால் மீண்டு இருக்கவே முடியாது.

    இப்படத்தின் வசூலுக்கு முழுத்தகுதியானவர் இப்படத்தின் தயாரிப்பாளர்.) தயாரிப்பாளருக்கு இருக்கும் அதே பதட்டமும், பயமும் நிச்சயம் நடிகருக்கும், இயக்குனருக்கும் இருந்து இருக்கும்..)

    தற்போது எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நம்புகிறேன்.. தற்போது தான் இவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக கவனமாக இருக்க வேண்டும்.. குறிப்பாக இயக்குனர் / நடிகர்…

  5. @ஹரிஷ்

    “என்னது KGF 1 க்கு தமிழில் வரவேற்பு இல்லையா? உங்களுக்கு அப்போது இந்த படம் பற்றி தெரியவில்லை என்று சொல்லுங்கள்.”

    என் அனுபவம் நான் கேள்விப்பட்டதை வைத்து கூறுகிறேன். உங்கள் அனுபவமாக வேறாக இருந்தால் அது உங்கள் தனிப்பட்ட கருத்து.

    “இந்த போன்ற மாஸ் படத்தில் நடிப்பது பெரிய அதிர்ஷ்டம் என்றாலும் பிறகு அதுவே அவர்களுக்கு பதட்டமாகவும் இருக்கிறது.”

    உண்மை. பெரிய வெற்றி பெற்றுவிட்டால் அதைத் தக்க வைப்பது எளிதல்ல.

    @யாசின் KGF 2 பாருங்க. நன்றாக இருக்கும்.

  6. கிரி.. இரண்டு/மூன்று நாட்களாக டிக்கெட்க்கு முயற்சி செய்து நேற்று தான் படத்தை பார்த்தேன்.. நிறைய திரையரங்களில் படம் வெளியாகி இத்தனை நாளாகியும் டிக்கெட் கிடைக்க வில்லை என்பது உண்மையில் ஆச்சரியம் தான்.. நாங்கள் 8 நண்பர்கள் சென்றோம்.. படம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ரசனை..படம் எனக்கு பிடித்து இருந்தது..

    உங்களுக்கு உள்ளது போல் சில கேள்விகள்?? எனக்கும் உள்ளது.. படத்தின் art direction செம்ம.. வசனங்களும் சூப்பர்.. படத்தில் கார்கள், உடைகள்.. என ரசிக்க பல உள்ளது.. மீண்டும் ஒரு முறை தனிமையில் பார்க்க வேண்டும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here