சில படங்கள் வருடங்கள் ஆனாலும் மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருக்கும் படங்களில் ஒன்று “ரத்தக்கண்ணீர்” என்ற காலத்தால் அழியாத காவியம்.
MR.ராதா அவர்களின் அற்புதமான நடிப்பில் வெளிவந்த படம்.
வசனங்களே ரத்தக்கண்ணீர் பலம்
வசனங்களும் காட்சியமைப்புமே படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணங்களாகும்.
சமீப படங்களில் அரசியலை, மூட நம்பிக்கையைக் கிண்டலடிக்கும் காட்சிகள் நிறைய வருகிறது.
ஆனால், இவற்றிக்கெல்லாம் தாய் என்றால் நான் கண்டிப்பாக இந்தப்படத்தின் வசனங்களையும் லாவகமாகக் கையாண்ட MR.ராதா தான்.
அடேங்கப்பா! என்னமா பேசிக் கலக்கி இருக்கிறார்.
ஒவ்வொரு வசனத்தையும் கேட்கும் போது கொஞ்சம் கூடப் பழைய படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. அந்த அளவிற்கு வசனங்களில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
எப்படி இதெல்லாம் யோசிக்க முடிந்தது! எப்படி 50 வருடம் கழித்துப் படம் பார்த்தாலும் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி வசனங்களை அமைக்க முடிந்தது! என்று வியப்பாக இருந்தது.
MR.ராதா வெளிநாட்டில் படித்து இந்தியா திரும்பி இருப்பார்.
மேற்கத்திய கலாச்சாரங்களை அப்படியே பின்பற்றும் வெளிநாட்டு மோகம் கொண்ட நபர், உடன் வுமனைசர். எப்போதும் பாலியல் பெண்களின் இடமே கதி என்று இருப்பார்.
அவருக்குத் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் ஆனாலும் காந்தா (MN.ராஜம்) என்ற பெண்ணே கதி என்று இருப்பார்
இவருடைய அம்மா மனைவி மாமனார் என்று யாரையும் மதிக்க மாட்டார்.
பின்னாளில் இவருக்கு குஷ்ட நோய் வந்து விடும். அதன் பிறகு காந்தா அவரை விட்டு விலகி வேறு ஒருவரைத் தேடிப் போய் விடுவார்.
இவரின் நிலை என்ன? அதன் பிறகு என்ன ஆகும் என்பதை நம் வயிற்றை பதம் பார்த்துக் கூறி இருக்கிறார்கள்.
லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்
இவருடைய அறிமுகமே அசத்தலாக இருக்கும் பாமர மக்கள் அமர்ந்து இருப்பார்கள் அவர்களிடையே இவர் பேசுவார் எப்படி… “லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்” என்று ஆரம்பிப்பார் அமர்ந்து இருக்கும் மக்கள் கடுப்பாகி விடுவார்கள்.
‘யோவ்! தமிழ்ல பேசு! தமிழ்ல பேசு!!‘ என்று கத்த ஆரம்பித்து விடுவார்கள். இவர் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அலப்பறையா பேசுவார் பாருங்க! யாரும் சிரிக்காமல் இருக்கவே முடியாது.
MR.ராதா அவருடைய அம்மாவைக் கவுன் போடச்சொல்லி கூற ஆரம்பிப்பதில் இருந்து அவருடைய நக்கல் ஆரம்பமாகும் அது படம் முடியும் வரை தொடரும்.
இவருக்குத் திருமணமாகி முதலிரவு எந்த நேரத்தில் நடத்தலாம் என்று ஒரு ஐயருடன் அவருடைய மாமனார் விவாதித்துக்கொண்டு இருப்பார்.
“இப்ப பாருங்கோ! சந்திரன் உச்ச நிலையில இருக்கிறான்!” என்று ஐயர் சொல்லும் போது சரியா MR.ராதா உள்ளே வருவாரு! நம்மால் சிரிப்பை அடக்கவே முடியாது.
MR.ராதா வரும் போதே நமக்குத் தெரிந்துவிடும் இடம் ரணகளம் ஆகப்போகிறது என்று.
வந்தவுடன் அவர் பேசுவதைக் கேட்டு ஐயர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியே விடுவார்.
சிக்கிய மாமனார்
அவருடைய மாமனார் கெட்டப்பை பார்த்து அவரை யாரோ என்று நினைத்து அவரையும் செம ஓட்டு ஓட்டிவிடுவார் 🙂 .
மாமனாரை Mr.பிள்ளை என்று கலாய்க்கும் காட்சியில் அவர் பூசி இருக்கும் விபூதியையும் ருத்ராட்சக்கொட்டையையும் பார்த்து..
‘என்ன மேன்! இது கோடு கோடா இருக்கு!‘ என்று கேட்பார்! அதற்கு அவர் இது விபூதி பட்டை என்றதும் ‘வாட் (what) பட்டை?‘ என்று கூறி அவரைக் கடுப்பாக்குவது அதகளம்.
மாமனார் கடுப்பாகி பேசும் போது MR.ராதா செய்யும் சேட்டைகள் தான் வடிவேல் ஒரு படத்தில் “என்ன கைய பிடிச்சு இழுத்தியா” என்ற காமெடிக்கு பயன்படுத்தி இருக்கிறார்.
MR.ராதாவின் தாயார் இறந்ததால், உறவினர்கள் வந்து அழுதுகொண்டு இருப்பார்கள்.
அங்கே வந்து ‘நானே சும்மா இருக்கேன் இவனுக எதுக்கு இப்படி அழறாணுக‘ என்று அப்படியே கொத்து கொத்தாகத் தூக்கி அனைவரையும் வெளியே வீசி விடுவார்.
இக்காட்சி “அந்நியன்” படத்தில் பிரகாஷ்ராஜ் தம்பி இறந்த பிறகு அவரைப் பார்க்க ஒரு பெரியவர் அழுது கொண்டே வந்து பிரகாஷ்ராஜை கட்டிப்பிடிப்பார்.
உடனே பிரகாஷ்ராஜ் அவரை அப்படியே கொண்டு போய் ஒரு இடத்தில் உட்கார வைத்து அவர் வாயை அடைத்து விடும் காட்சியை நினைவு படுத்தியது.
எக்காலத்திற்கும் ஏற்ற வசனங்கள்
எக்காலத்திற்கும் ஏற்ற வசனங்கள் என்று கூறினேனே! ஒரு சின்ன எடுத்துக்காட்டு
“தொழிலாளர் கட்சி, முதலாளி கட்சி, சாமியார் கட்சி இதே வேல..(வேலை) இந்தியால க்ரோர்ஸ் (கோடிகள்) கணக்கா வச்சுட்டு இருக்கான் கட்சிய!
எல்லா கட்சியும் பிசினெஸ்ல பூந்துட்டான்… பெக்கர்ஸ்…. வேற ஒண்ணுக்கும் லாயக்கில்ல… “
ரத்தக்கண்ணீர் வசனம் இக்கால சூழ்நிலைக்கு அப்படியே பொருந்துகிறது!
குஷ்டரோகி ஆனதும் அடையாளமே மாறி, பார்வையும் போய் விடும். யாராலையும் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாது அவருடைய நண்பர் SSR உட்பட.
சாப்பாட்டிற்கு பிச்சை தான் எடுத்துக்கொண்டு இருப்பார் யாராவது பணம் கொடுத்தால் கூட வாங்க மாட்டார் சாப்பாடு இருந்தால் போடுங்க என்பார்.
அவரின் நிலை பார்த்து SSR ‘வாப்பா! உனக்கு ஹோட்டல்ல சாப்பாடு வாங்கித்தருகிறேன்‘ என்பார்!
‘யப்பா! வேண்டாம்டா… ஹோட்டல் சாப்பாடுல கல்லு பொறுக்க என்னால முடியாதுப்பா!‘ என்று அந்தக் கஷ்டத்திலும் நக்கலடிப்பார்.
SSR வீட்டுக்குச் சென்றதும் ‘போடுறது தான் போடுறீங்க அப்படியே கறி சோறு போடுங்க‘ என்றதும்..
SSR ‘நாங்க ஜீவ காருண்ய கட்சியில் இருக்கிறோம் அசைவம் சாப்பிட மாட்டோம் எந்த உயிரையும் கொல்ல மாட்டோம்‘ என்பார்.
‘அடடா! திங்கிறதுக்குக்கூட கட்சி வச்சு இருக்காங்கடா யப்பா!!‘ என்று முனகிக்கொண்டே ‘நீங்க உயிரைக் கொல்றதே இல்லையா!
சரி… ராத்திரில மூட்டைப் பூச்சி கடிச்சா என்னப்பா செய்யறீங்க!‘ என்று திருப்பிப் போட்டு வாங்குவதும் சிரிப்பு வெடி தான். ஏகப்பட்ட சிரிப்பு வெடிகள் படம் முழுவதும் உள்ளது.
இப்படியே கூறினால் நான் ரத்தக்கண்ணீர் மொத்தப்படத்தையும் கூறி விடுவேன் போல… ஒவ்வொரு காட்சி வசனங்களும் அவ்வளவு அட்டகாசமாக இருக்கும்.
தற்போது பார்த்தாலும் பழைய படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வே வராது என்பது தான் இந்தப்படத்தின் சிறப்பு.
இந்தப்படத்தை 1000 முறை நாடகமாகப் போட்டு இருக்கிறார்களாம் இதுவே கூறும் மக்கள் எந்த அளவிற்கு ரசித்தார்கள் என்பதை.
ரத்தக்கண்ணீர் படத்தின் கடைசி 20 நிமிடங்கள் சும்மா விறுவிறுன்னு போகும். ஒவ்வொரு காட்சிக்கும் சிரிக்காமல் இருக்கவே முடியாது!
இது வரை ரத்தக்கண்ணீர் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாகப் பாருங்கள். படம் பார்த்த பிறகு இவ்வளவு நாள் இப்படத்தை பார்க்கவில்லையே! என்று நினைப்பீர்கள்.
YouTube ல் பார்க்க –> இரத்தக்கண்ணீர் – Link
Read : Take Off [மலையாளம் – 2017] “உலகப்படம்”
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
ரசனையான விமர்சனம். எம்.ஆர். ராதாவின் நையாண்டி தெறிக்கும் நகைச்சுவையை பிற படங்களில் ரசித்துள்ளேன். இந்தப் படம் பார்த்ததில்லை. பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது:)!
சக்தி விகடன் பொறுப்பாசிரியர் ரவிபிரகாஷ் கூறுகிறார்….
நம்மவர்களுக்கு நம்மவர்களை மதிக்கத் தெரியாது.
————————————————————————————————–
நேற்றைய ஞாயிற்றுக் கிழமையன்று ‘ரத்தக்கண்ணீர்’ சிடி வாங்கி வந்து வீட்டில் போட்டுப் பார்த்தேன். 1954-ல் வெளியான படம். அடேங்கப்பா..!
55 வருடங்களாகியும் இன்றைக்குப் பார்த்தாலும் கொஞ்சமும் சலிப்பின்றி, விறுவிறு சுறுசுறுவென்று இருந்தது படம்.
எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்கு எந்த உலக நடிகனும் கிட்டே வரமுடியாது என்று சொல்வேன். ஆரம்பத்தில் அந்தப் பணக்காரத் திமிர், பின்னர் குஷ்டம் வந்தபோதும் இம்மியளவும் குறையாத நையாண்டி எனப் பின்னிஎடுத்திருக்கிறார் மனுஷன். இடி, மழை, புயலில் அவரை எம்.என்.ராஜம் வீட்டை விட்டுத் துரத்தும் காட்சியை அவ்வளவு த்ரில்லாகப் படமாக்கியிருப்பார்கள் கிருஷ்ணன்-பஞ்சு.
‘குற்றம் புரிந்தவன்’ பாடலைப் படமாக்கியிருக்கும் விதமும், பாடலின் இடையிடையே எம்.ஆர்.ராதாவின் குரலும் அபாரம். பாட்டு முடிந்து, அவர் கடற்கரைச் சாலையில் நீள நெடுக கையை வீசிக்கொண்டு நடந்து வரும் காட்சி மிகவும் அற்புதம்!
இதன் வசனகர்த்தா திருவாரூர் தங்கராசு. கலக்கியிருக்கிறார். ‘நாய்க்கு என்னடா போட்டே?’ ‘சோறு போட்டேன்.’ ‘சோறு போட்டே ஃபூல்! சோறு தின்கிற நாய் இந்திய நாய். இது அமெரிக்க நாய். அவிழ்த்துவிடு, இஷ்டப்பட்டதைத் திங்கட்டும்’ என்கிற பணத் திமிராகட்டும்… ‘ஜீவகாருண்ய கட்சியைச் சேர்ந்தவங்களா? அப்படின்னா என்னப்பா அர்த்தம்?’ ‘நாங்க உயிர்களைக் கொல்லமாட்டோம்.’ ‘ஓஹோ.. ராத்திரில மூட்டைப்பூச்சி கடிச்சா என்னப்பா செய்வீங்க?’ என்று கேட்கிற நக்கலாகட்டும்…
இன்றைக்கும் உலக அளவில் பேசப்படவேண்டியவர் திருவாரூர் தங்கராசு. ஆனால், என்ன ஆனார்? ரத்தக்கண்ணீர் படத்துக்குப் பிறகு வேறு எதற்காவது வசனம் எழுதினாரா? எனக்குத் தெரியவில்லை.
அதான் ஆரம்பத்திலேயே சொன்னேனே… நம்மவர்களுக்கு நம்மவர்களை மதிக்கத் தெரியாது!
சபாஷ் கிரி!
நான் அனுபவித்ததை அப்படியே நீங்களும் எழுதியிருக்கீங்க ..என்னா படம் ? என்னா வசனம் ? என்னா கலைஞன் எம்.ஆர்.ராதா? அப்பப்பா .. ராதா மாதிரி ஒரு கலைஞன் நாம ரசிக்க கிடைச்சது நமக்கு பெருமை.
//’ படம் பார்த்த பிறகு இவ்வளவு நாள் இந்தப்படத்தை பார்க்காமல் விட்டு விட்டோமே! என்று கண்டிப்பா நினைப்பீர்கள். //
உண்மை… முதன்முதலில் ரத்தகண்னணீர் படத்தை பார்த்ததும் என் மனம் நினைத்தது இது தான்.
படத்தின் கடைசி 20 நிமிடங்கள் சும்மா விறுவிறுன்னு போகும். ஒவ்வொரு காட்சிக்கும் நம்மால் சிரிக்காமல் இருக்கவே முடியாது! அந்த அளவிற்கு நக்கலும் நையாண்டியுமாக பின்னி பெடலெடுத்து இருப்பார்.
…….இது ஒரு சோகப்படம் என்று நினைத்து கொண்டு இருந்தேன். உங்கள் விமர்சனம் வாசித்த பின், படம் பார்க்கும் ஆசை வந்து விட்டது.
////’ படம் பார்த்த பிறகு இவ்வளவு நாள் இந்தப்படத்தை பார்க்காமல் விட்டு விட்டோமே! என்று கண்டிப்பா நினைப்பீர்கள். //
படத்தை நானும் நீண்ட நாட்கள் கழித்துதான் பார்த்தேன்
ஞாபகபடுத்தியதற்கு மிக்க நன்றி
நடிகவேள் M.R.ராதா அவர்களிடம் மிகவும் பிடித்ததே அந்த நக்கலும் நையாண்டி கலந்த பேச்சுதான்…
தொடரட்டும் உங்கள் பணி…
நல்ல விளக்கமான விமர்சனம்..தமிழ்மணம் டாப் 20 பிளாக் லிஸ்ட்டில் 5 வது இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
ஒரு சில படங்களை நாம் மிகத்தாமதாக பார்ப்போம் பார்த்து விட்டு அட! இத்தனை நாள் இவ்வளவு அருமையான படத்தை பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று நம்மை நாமே நொந்து கொள்வோம்
கரெக்ட்
‘ரத்த கண்ணீரை’ முதலில் ‘ரத்த சரித்தரம்’ என்று தவறாக விளங்கியதால் ஒரு கணம் ஆடிப்போயிட்டன், பின்னாடி வாசிக்கும்போதுதான் நார்மலுக்கு வந்தன் 🙂
இரத்தக் கண்ணீரால் இன்றும் வாழும் நடிகர் விவேக் 🙂
சிறு வயதில் பார்த்திருந்தாலும் உங்கள் பதிவு பார்க்க தூண்டியிருக்கிறது, பார்க்கிறேன்.
ரொம்ப அருமையான படம்!
அவர் கஷ்டப்படும் நிலையில் இருக்கும்போதும் காமெடியா பேசுவார் செம படம்!
அண்ணே !!!! அது என்ன நட்சத்திர வாரம் ? எதுனா சினிமாவில சான்ஸ் கிடைச்சிருக்கா? உண்மையா கேட்கிறேன் !!!!
எம் .ஆர் .ராதா அவர்களின் நையாண்டியான நடிப்பு என்னை கவர்ந்த ஒன்று என்ன கிரி தொடர்ந்து எழுதி பட்டைய கிளப்புறீங்க தொடர்ந்து எழுதுங்கள்
படத்தைப் பற்றி அனைத்து சிறப்புக்களையும்
விரிவாக தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்.
இவ்வைமரிசனம் படம் பார்க்கும் ஆவலைத்
தூண்டிவிட்டுவிட்டது.
அடுத்த் ஒரு கேள்வி:
இப்படத்தை மறுதயாரிப்பு செய்ய்லாமா,
கூடாதா? கூடாது என்றால்- ஏன்?
செய்யலாம் என்றால் எம்.ஆர்.ராதாவுக்கு
பதிலாக விவேக் ஒக்கேவா? ஓக்கேயில்லையென்றால் யார் பொருத்தம்?
இப்படத்தை 40 வருடங்களுக்கு முன் முதல் முறை பார்த்துள்ளேன். பின் பல தடவை. எம் ஆர் ராதா அவர்களின் அட்டகாசமான நடிப்புக்காகவும் பார்த்தேன்.
அவர் படங்கள் பெரும்பான்மையாக பார்த்து ரசித்துள்ளேன்.
ரத்தக் கண்ணீர் – அவருக்குப் பெருமை சேர்த்தது.
இளைஞராகிய நீங்களும் இப்போதாவது ரசிப்பது மகிழ்ச்சி.
இளைஞர்களே! 5 புதியபடமானால் 1 பழைய படமெனப் பாருங்க. இவரும் பத்மினியும் நடித்த சித்தியையும் பாருங்கள்.
ராமலக்ஷ்மி, ஸ்ரீநிவாசன், ஜோ, தமிழ் மலர்,சித்ரா, மாணவன், செந்தில் குமார், ஜீவதர்ஷன், எஸ் கே, ராஜ், சரவணன், கலையன்பன், ரோஸ்விக் மற்றும் ஜோகன் வருகைக்கு நன்றி
@ராமலக்ஷ்மி கண்டிப்பா பாங்க! 🙂
@ஸ்ரீநிவாசன் வசனகர்த்தா திருவாரூர் தங்கராசு என்று தெரியப்படுத்தியமைக்கு நன்றி. இவருடைய வசனங்களில் வந்த படங்கள் என்ன என்று தேடவைத்து விட்டது இந்தப்படம்.
@ஜோ நிஜமாகவே இவர் ஒரு அற்புதம்!
@சித்ரா படம் சூப்பர்!
@செந்தில் குமார் தெரிவித்தமைக்கு நன்றி.
@ஜீவதர்ஷன் விவேக் 🙂
@ராஜ் ஏற்கனவே இது பற்றி ஒரு இடுகையாவே கூறி இருக்கிறேன் மறுபடியுமாமாமாமாமாமா! செல்லாது செல்லாது.
@சரவணன் நீங்க ராஜ் இரண்டு பேரும் ஒரு இடுகையை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அது இது தான் https://www.giriblog.com/tamilmanam-star/
@கலையன்பன் உங்களுக்கு MR.ராதா அவர்கள் மேலே என்ன கோபம் 🙂 விவேக் எல்லாம் …நினைத்தாலே வயிற்றை புரட்டது. ஒரு சில படங்களை மீண்டும் எடுத்தால் அதை கேவலப்படுத்தியது போலவே இருக்கும் அதைப்போன்ற படங்களில் ஒன்று தான் இந்தப்படமும். இந்தப்படத்தில் இவருடைய நடிப்பை எவராலும் ஈடு செய்ய முடியாது.. மீறி முயற்சித்தால் அசிங்கப்பட்டே போவார்கள். நீங்க இந்தப்படம் பாருங்க பார்த்துட்டு சொல்லுங்க நான் கூறுவது எவ்வளவு உண்மை என்று புரியும்.
@ரோஸ்விக் இது ஏற்கனவே கேட்டு இருக்கிறேன். MGR ஐ எப்படி கூறுகிறார் கேட்டீர்களா! இவரால் மட்டுமே முடியும் 🙂
@ஜோகன் சித்தி படம் பற்றி கூறியமைக்கு நன்றி. கண்டிப்பாக பார்க்கிறேன்.
இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும் என்னிடம் பிடித்த படம் எது என்று கேட்டால் ரத்தக்கண்ணீர் என்று தான் எப்போதும் சொல்வேன்
அன்புள்ள கிரி,
ரத்தக் கண்ணீர் விமர்சனம் மிக அருமை. அதில் ஒரு வசனம் வரும். எம்.ஆர்.ராதா நோய் வந்த பின் தெருவில் நட்ந்து கீழே விழுந்து விடுவார். அப்பொழுது ஒரு வசனம் சொல்வார் “ஏண்டா ரோடு போடுகிறேனு சொல்லிட்டு கல்ல போட்டு 6 மாதமா அப்படியே விட்ருவீங்களே”னு. அது இப்பொழுதும் பொருந்தி வரும் 🙂
நன்றி சொல்லியதற்கு நன்றி கிரி…
செனே மீ நிசே பிச்டுரே மி email
சார். கலக்குறீங்களே…………
இப்பதான் முதல்முறையாக தங்கள் blog பக்கம் வர்றேன்…
மிகவும் அருமை …….
நான் பார்த்து நினைத்து நினைத்து சிரித்த படம்,…
எத்தனை நடிகர்திலகம் உலகநாயகன் சூப்பர் ச்டார் சூர்யா ஆர்யா விக்ரம் வந்தாலும் நடிக வேள் mr ராதா விற்கு ஈடு யாரும் வர மடியாது