Nice View (2022 Mandarin) | An Inspirational Story

2
NIce View Movie

குங்ஃபூ படங்கள் மட்டுமே சீனப்படமாகப் பார்த்து வந்து, மாறுதலாக அசத்தலான குடும்பப் படமாகப் பார்க்க நேர்ந்ததே Nice View. Image Credit

Nice View

பெற்றோரை இழந்த Jing Hao க்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட தங்கை. தங்கைக்கு அறுவை சிகிச்சை செய்ய அதிகப் பணம் தேவை.

Mobile Service கடை வைத்துள்ள Jing Hao, Quality Check ல் நிராகரிக்கப்பட்ட மொபைல்களை வாங்கி சரி செய்து சிகிச்சைக்குப் பணம் சேர்க்க திட்டமிடுகிறான்.

சக்திக்கு மீறி முதலீடு செய்து அனைத்தையும் முடித்த பிறகு அரசாங்கம் இவ்வகைச் செயலைச் சட்டவிரோதம் என்று கூறி விடுகிறது.

மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டிய Jing Hao இதிலிருந்து தப்பித்தானா? என்பதே Nice View.

Jing Hao

20 வயது மட்டுமே நிரம்பிய Jing Hao தனது 6 வயது தங்கைக்காகக் கஷ்டப்பட்டு உழைப்பதும், தன் தங்கையை எப்படியாவது குணப்படுத்திவிட வேண்டும் என்று நம்பிக்கையுடன் பல முயற்சிகளை எடுப்பதும் எவரையும் கலங்கடிக்கும்.

அதிகச் சம்பளம் கொடுக்க முடியாமல், விவரம் தெரியாதவர்களை வைத்து அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து வேலை வாங்குவது வெண்ணிலா கபடிக்குழுவில் இருப்பவர்களைப் போல உள்ளது.

இதெல்லாம் நம்ப முடியாததாக இருந்தாலும், கதை சொல்ல வருகிற கருத்துக்காக இவற்றை மன்னித்துக் கடந்து செல்ல வைக்கிறது.

Jing Hao சிறு வயதில் தைரியமாக நம்பிக்கையாக முயற்சிப்பது, படம் பார்க்கும் எவருக்கும் நம்பிக்கையை, போராட வேண்டும் என்ற உறுதியை அளிக்கும்.

பணப்பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் கண்ணீர் விடும் நேரத்தில் உடன் இருப்பவர்கள் நம்பிக்கை கொடுக்கும் காட்சியும், இறுதியில் முன்பணம் கிடைக்குமா? என்று கேட்கும் காட்சியும் கண்ணீரை வரவழைத்து விட்டது.

இப்படம் ஏன் எனக்கு ரொம்பப் பிடித்தது?

Jing Hao கதாப்பாத்திரத்துக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் உள்ளது.

இவன் தங்கைக்காகக் கஷ்டப்படுவான், நான் அப்பாவின் கடனைக் கட்ட போராடினேன். இவனுக்கும் 20 வயது எனக்கும் 20 வயது.

Jing Hao க்கு கல்லூரி செல்ல விருப்பம் இருக்கும் ஆனால், பணமில்லை என்று செல்ல முடியாது. எனக்கும் கல்லூரியில் படிக்க விருப்பம் ஆனால், பணம் இல்லாததால் கல்லூரியில் இணைய முடியவில்லை.

இது போல நிறைய ஒற்றுமைகள் உள்ளது கூறினால், சுயபுராணமாக இருக்கும்.

சுருக்கமாக, Jing Hao சூழ்நிலைகளைப் பார்க்கும் போது போராடிய பழைய நினைவுகள், பலர் செய்த உதவிகள் நினைவுக்கு வந்து சென்றது.

படத்தின் ஒளிப்பதிவு அற்புதமாக இருந்தது.

இது போல ஒரு கதைக்கு ஒளிப்பதிவுக்குப் பெரிய அளவில் வாய்ப்பில்லை ஆனால், இதிலும் அழகாகக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளார்கள்.

யார் பார்க்கலாம்?

அனைவரும் பார்க்கலாம், பார்க்க வேண்டும்.

இளமை காலத்தில் கஷ்டப்பட்டு வாழ்க்கையை கடந்து வந்தவர்கள், அனுபவித்து இருக்க வேண்டிய இளமை கொண்டாட்டங்களைத் தவறவிட்டவர்கள் அனைவரையும் அவசியம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

நிச்சயம் ஏதோ ஒரு காட்சி உங்கள் பழைய நினைவைக் கொண்டு வரும்.

தற்போதைய 2K Kids பெரும்பாலானவர்களுக்கு commitment என்று எதுவும் கிடையாது ஆனால், அதற்கு முந்தைய தலைமுறைக்கு commitment தான் வாழ்க்கையே.

இக்கதை இன்னொன்றையும் உணர்த்துகிறது.

நமக்கு நெருக்கடி வரும் போது தான் நமக்குள்ளே உள்ள முழுத்திறமையையும் பயன்படுத்த முயல்கிறோம்.

ஒருவேளை Jing Hao க்கு அப்படியொரு நிலை வரவில்லையென்றால், Mobile Service செய்தே வாழ்க்கையை முடித்து இருக்கலாம்.

எனவே, கஷ்டமும் ஒருவகையில் நாம் முன்னேறக் கடவுள் கொடுக்கும் வாய்ப்பே 🙂 .

உணர்ந்தவர்கள் சாதிக்கிறார்கள், மற்றவர்கள் முடங்கி விடுகிறார்கள். எனவே, துவண்டு விடாமல், போராடினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

NETFLIX ல் காணலாம்.

Directed by Wen Muye
Written by Zhou Chucen, Wen Muye, Han Xiaohan, Zhong Wei
Produced by Ning Hao
Starring Jackson Yee, Tian Yu
Cinematography Wang Boxue
Edited by Liu Jinghao, Wang Nan
Music by Huang Chao
Release date February 1, 2022 (China)
Running time 106 minutes
Country China
Language Mandarin

தொடர்புடைய விமர்சனங்கள்

Home (2021 மலையாளம்) ஐந்து நிமிடம் பேசலாமா?

The African Doctor (2016 French) | யாருமே வரலையே!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. கிரி, சின்ன வயத்திலிருந்தே ஜாக்கிஜான்,ஜெட்லீ, புரூஸ்லி படங்கள் மிகவும் பிடிக்கும். பள்ளியில் படிக்கும் போது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விஜய் டிவியில் இவர்கள் நடித்த டப்பிங் படங்கள் ஒளிபரப்பும் போது அதிகம் விரும்பி நான் பார்ப்பேன். என்னுடன் என் நண்பனின் தந்தையும் ஆர்வமாக பார்ப்பார். தற்போதும் நான் அரிதான தருணங்களில் சில சீனா / கொரியா படங்கள் பார்ப்பதுண்டு.

  12 வருடங்களுக்கு முன்பு பார்த்த RED CLIFF படம் பாகுபலியை மிஞ்சும் விதத்தில் பிரமாண்டமாக இருந்தது.. குறிப்பாக இந்த படத்தின் சண்டை காட்சிகளும், படத்தின் இயற்கை சுழலும் என்னை வெகுவாக கவர்ந்தது.

  கொரிய படங்களில் நம் படங்களில் வருவது போல் செண்டிமெண்ட் காட்சிகளும், கொரியாவின் கிராமத்தின் அழகும் படத்தை வெகுவாக ரசிக்க வைக்கும். நகரமும், கிராமமும் இருவேறு துருவங்களாக காட்சி படுத்தபட்டிருக்கும்.

  2002 இல் வெளிவந்த THE WAY HOME கொரியா படத்தை தற்போது நான் பார்த்தாலும் கண்ணில் நீர் வரும். கிராமத்து பாட்டிக்கும், நகரத்திலிருந்து வந்த பேரனுக்குமான உறவு அப்படி காட்சி அமைக்கபட்டிருக்கும்.

  நான் அரிதாக வெகு சில படங்களை பார்க்கும் போது மட்டும் ரொம்ப பீல் பண்ணி அழுது இருக்கிறேன்.. இன்னொரு முறை அழகி படத்தை பார்க்க எனக்கு தைரியம் வரவே இல்லை. காரணம் முதல் முறை பார்த்த போது போது ஏற்பட்ட வலியும், அந்த காயமும் இன்னும் மாறவே இல்லை. நீங்கள் இந்த பதிவில் குறிப்பிட்ட படத்தை பார்க்க முயற்சிக்கிறேன். உங்களை கவர்ந்த சீனா / கொரிய / ஜப்பான் படங்களின் பெயர்கள் நினைவில் இருந்தால் பட்டியலிடவும். பகிர்வுக்கு நன்றி கிரி.

 2. @யாசின்

  நீங்கள் பரிந்துரைத்த படங்களைப் பார்க்க முயற்சிக்கிறேன்.

  “உங்களை கவர்ந்த சீனா / கொரிய / ஜப்பான் படங்களின் பெயர்கள் நினைவில் இருந்தால் பட்டியலிடவும்.”

  பட்டியல் உள்ளது ஆனால், அவை அனைத்துமே நீங்கள் விரும்பாத வன்முறை, சண்டை படங்களே! 🙂 .

  தேடிப்பார்த்து கிடைத்தால், உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here