குற்றமே தண்டனை [2016]

7
குற்றமே தண்டனை Kutrame Thandanai

காக்கா முட்டை” என்ற படத்தின் மூலம் நம் தமிழ் திரையுலகை கவுரவப்படுத்திய இயக்குநர் மணிகண்டனின் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் “குற்றமே தண்டனை”.

குற்றமே தண்டனை

நாயகன் விதார்த் இருக்கும் குடியிருப்பில் ஒரு பெண் (ஐஸ்வர்யா) கொல்லப்படுகிறார். இவரைக் கொன்றது யார்? என்பது படத்தின் கதை.

விதார்த் பார்வைக் குறைபாடுள்ள நபராக நடித்து இருக்கிறார். பார்வைக்குறைப்பாடு என்றால் குளுக்கோமா போல நடுவில் (நேரே) பார்வை தெரியும் வலது இடது மேலே கீழே தெரியாது.

பார்க்க வேண்டும் என்றால் தலையைத் தான் திருப்ப வேண்டும்.

பின்வரும் படம் உங்களுக்குப் பாதிப்பை உணர்த்தும், தெரிகிற பார்வை தெளிவாகத் தெரியும். Image Credit

தமிழில் பார்வைக் குறைப்பாடு பற்றிப் படங்கள் நிறைய வந்துள்ளன ஆனால், இது போலப் படம் இதற்கு முன் வந்ததில்லை.

தமிழில் புதிய முயற்சி அதோடு பார்வைக் குறைபாடு பற்றிப் புதிய விசயத்தைப் பலருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

விதார்த்

மிகை நடிப்புச் செய்யாமல் மிக இயல்பாக நடித்துள்ளார் விதார்த். தன் பார்வைக் குறைப்பாட்டை மற்றவர்கள் அறியாதவண்ணம் நடந்து கொள்வது சிறப்பு.

விதார்த் கடனட்டை (Credit Card) பணம் வசூல் செய்பவராக வருகிறார். குடும்பமில்லை, தனியாக இருப்பார்.

இவரைப் புகைப்பவர் போலக் காட்டியிருக்கிறார்கள். இது தேவையே இல்லையே! தவிர்த்து இருக்கலாமே! என்று நினைத்தேன் ஆனால், இதற்குக் காரணம் படத்தின் கதையில் உள்ளது.

இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்களாக ரகுமானும் இன்னொரு புதுமுகமும் வருகிறார்கள். இவர்களிடம் இருந்து தன் பார்வை குறைபாட்டைச் சரி செய்யப் பணம் பெற முயல்கிறார் விதார்த்.

காக்கா முட்டையில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா இதில் வெகு குறைவான நேரமே வருகிறார்.

ஒன்றை கவனித்தீர்களா?! கிராமமோ நகரமோ சேரியோ எந்தக் கதாப்பாத்திரத்துக்கும் அம்சமாகப் பொருந்துகிறார்.

இவருக்குச் சமீபமாக ரசிகர்கள் பலர் அதிகமானதாகக் காண்கிறேன் 🙂 .

ரகுமான் வழக்கம் போல அலட்டிக்காமல் நடித்து இருக்கிறார். ரகுமான், நீலிமா போன்றோருக்கு வயதே ஆகாதோ என்று பார்க்கும் போதெல்லாம் தோன்றுகிறது 🙂 .

காவல் அலுவலகம் அதிகாரிகள் உட்பட அனைத்தும் மிக இயல்பு. எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் சாதாரணமாக வந்து செல்கிறார்கள்.

மணிகண்டன் படத்தில் இந்த விசயம் என்னை ரொம்பக் கவர்ந்தது.

பின்னணி இசை

படத்தில் பாடல்களே இல்லை. முழுக்க இளையராஜா பின்னணி இசை தான்.

இது போலப் பாடல்களே இல்லாமல் அல்லது மான்டேஜ் பாடல்கள் முயற்சியுடன் இனி திரைப்படங்கள் வர வேண்டும். நம் தமிழ் திரைப்படங்களின் தரத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

அனைவரும் புகழ்வது போல இளையராஜா பின்னணி இசை என்னை அவ்வளவாகக் கவரவில்லை. படமே சில நேரங்களில் டாக்குமெண்டரி படம் போலச் செல்கிறது.

அதை இசை இன்னும் அதிகப்படுத்துகிறது.

பின்னணி இசை பழைய முறையில் உள்ளது. இன்னும் பயத்தையும் பரபரப்பையும் கூட்டியிருக்கலாம் ஆனால், சாதாரணமாகவே சென்றது.

டைட்டில் மற்றும் குறிப்பிட்ட சில இசை மட்டுமே கவர்ந்தது.

அனைவரும் பின்னணி இசையைப் புகழ்ந்து இருக்கிறார்கள். இதனால் எனக்கே என் மீது சந்தேகம் ஆகி விட்டது. என் ரசனை சரியில்லையா?! என்று. Opinion differs!

இதில் ஒரு காட்சி கண் மருத்துவரிடம் சென்று விதார்த் சோதனை செய்யும் போது…

மருத்துவர் “ஏன் முன்பே பரிசோதனை செய்யவில்லை” என்று கேட்டதற்கு “எல்லோருக்கும் இப்படித்தான் கண் தெரியும் என்று நினைத்தேன்” என்பார் 🙂 .

இது கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியாதது போலத் தோன்றினாலும், ஒரு இயல்பான வார்த்தையாக, எண்ணமாகத் தோன்றியது.

“ஜி” கலாச்சாரம்

“இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்துக்குப் பிறகு “ஜி” கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்து விட்டது.

இருவர் சந்தித்தால் “வாங்க ஜி” “சரி ஜி” “சொல்லுங்க ஜி” என்று கூறுவது அதிகரித்து விட்டது. நான் ஒரே ஒரு நண்பனிடம் மட்டும் “ஜி” என்று கூறுவேன் 🙂 .

இதைக் கலாய்த்து ஒரு காட்சி வருகிறது. ரொம்ப ரசித்தேன். எனக்கும் இந்த “ஜி” கலாச்சாரம் பிடிக்கவில்லை.

ஒரு தவறை மறைக்க முயற்சித்தால், அது முடிவு இல்லாமல் தொடர்ந்து நம் நிம்மதியைக் குலைத்து விடும் என்று படம் உணர்த்துகிறது.

ஒவ்வொருவரும் பாதிக்கப்படுவது இயல்பான காட்சிகள்.

“குற்றமே தண்டனை” என்ற தலைப்பே கதை சொல்கிறது. மேலும் விளக்கினால் படத்தின் படத்தின் முக்கியக் காட்சிகளைக் கூற வேண்டும் ஆனால், அது உங்களின் படம் பார்க்கும் ஆர்வத்தைப் பாதிக்கும்.

படம் இயல்பான திரைப்படங்களை ரசிப்பவர்களுக்கானது. மசாலா அம்சங்களை எதிர்பார்த்துச் சென்றால், ஏமாற்றமே மிஞ்சும்.

தமிழில் இது போல மாறுபட்ட இயல்பான திரைப்படங்களை வரவேற்கிறேன்.

தொடர்புடைய திரைவிமர்சனம்

காக்கா முட்டை [2015]

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

 1. படத்தின் தலைப்பு நன்றாக இருக்கிறது. படமும் என் ரசனைக்கு ஏற்ற மாதிரி தான் உள்ளது. கடந்த 6 மாதமாக எந்த படமும் பார்க்கவில்லை. விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போது தான் நண்பன் சக்தியுடன் இரண்டு படமாவது பார்க்க எண்ணியுள்ளேன். பகிர்வுக்கு நன்றி கிரி.

 2. யாசின் படம் டாக்குமெண்டரி மாதிரி இருப்பது மட்டுமே குறை. மற்றபடி இயல்பான படம்.

 3. சேதுபதி வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்கள் தவிர நீங்கள் குறிப்பிட்ட மற்ற படங்கள் அனைத்தும் தரமான படங்கள் அண்ணா மெட்ரோ உரியடி படங்களை நான் அடிக்கடி பார்த்துக் கொண்டு இருக்கிறேன்

 4. மெட்ரோ செமையா இருக்கு கார்த்தி. விரைவில் விமர்சனம் எழுதுகிறேன். உறியடியும் நல்ல படம்.

  வேலைனு வந்துட்ட வெள்ளைக்காரன் நகைச்சுவைக்காகப் பார்க்கலாம். மோசமில்லை.

 5. அருமையான விமர்சனம் கிரி. நேற்று தான் இந்தப் படத்தைப் பார்த்தேன் (Tentkotta உபயத்தில்). நீங்களும் நீலிமா ரசிகரா 🙂 பின்னணி இசை பற்றிய உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடே. தேவையற்ற இடங்களிலும் கூட இரைச்சலாக உணர்ந்தேன். படத்தின் கதையைக் கூறாமல் அதே சமயம் படத்தைப் பார்க்கத் தூண்டும் வகையில் உங்களால் மட்டுமே விமர்சனம் செய்ய முடியும் என்று மறுபடியும் நிரூபித்து உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

 6. “நீங்களும் நீலிமா ரசிகரா ?”

  ஆமாம்… பல வருடங்களாக நீலிமா அப்படியே இருக்காங்களே.. எப்படினு புரியல 😀

  ” பின்னணி இசை பற்றிய உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடே. தேவையற்ற இடங்களிலும் கூட இரைச்சலாக உணர்ந்தேன்”

  ராஜா ரசிகரா இருந்தாலும், நீங்களாவது நான் சொன்னதை நம்புனீங்களே! 🙂

  ஒரு முறை கதையைக் கூறி விட்டேன்..(படத்துல கதையே இல்லைனு சொன்னதால்) ஒருவர் கிண்டல் செய்தார்.. அதிலிருந்து கதையை விமர்சனத்தில் கூறுவதை நிறுத்தி விட்டேன்.

  தொடர்ந்து என் விமர்சனம் படித்து உங்கள் கருத்தை கூறுவதற்கு நன்றி

 7. கொலை செய்யாமல் அந்த பையன் தண்டனை பெறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
  மற்றபடி அவரவர் செய்த குற்றத்திற்கு அவரவர்க்கு தகுந்த தண்டனை கிடைக்கிறது.

  //பின்னணி இசை பழைய முறையில் உள்ளது. இன்னும் பயத்தையும் பரபரப்பையும் கூட்டியிருக்கலாம் ஆனால், சாதாரணமாகவே எனக்குச் சென்றது. டைட்டில் மற்றும் குறிப்பிட்ட சில இசை மட்டுமே என்னைக் கவர்ந்தது.

  அனைவரும் பின்னணி இசையைப் புகழ்ந்து இருக்கிறார்கள். இதனால் எனக்கே என் மீது சந்தேகம் ஆகி விட்டது. என்னுடைய ரசனை சரியில்லையா?! என்று. Opinion differs!//

  படம் முழுக்க பெரும்பாலும் பின்னனி இசை விதார்த்தின் மனநிலையில் இசைக்கப்பட்டிருக்கும். முதல் முறை படம் பார்க்கும் போது பின்னனி இசை க்ரைம் ட்டோனில் இருக்கும். இரண்டாவது முறை பார்க்கும் போது, குற்றவாளியின் படபடப்பாக இருக்கும். சவுண்ட் பழையதாக இருக்கலாம். அதை பயன்படுத்தியவிதம் சரியே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here