IRCTC யில் தனியார் முகவர்கள் முறைகேடாக முன்பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, சமீபத்தில் கைது செய்யப்பட்டார்கள். இதைத்தொடர்ந்து ரயில்வே துறை அமைச்சர் கோயல், தனியார் முகவர்களுக்குத் தடை விதிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
இதற்குக் கோயல் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியுள்ளது.
தனியார் முகவர்கள் எப்படி வந்தார்கள்?
முன்பு இணையப் பயன்பாடு மிகக்குறைவு. அதோடு முன்பதிவு செய்யும் வசதி, ரயில் நிலையங்களில் மட்டுமே இருந்தது. எனவே, அனைவரும் இதற்காக அலைய வேண்டி இருந்தது.
எடுத்துக்காட்டுக்கு, எங்கள் ஊர் கோபி, எனக்கு ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்றால், ஈரோடு ரயில்நிலையம் சென்று முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது.
இதற்காகத் தனியார் முகவர்களை ரயில்வே துறை அனுமதித்தது அதாவது, அந்தந்த ஊரிலேயே முகவர்கள் பயணிகளுக்கு இணையம் வழியாக முன்பதிவு செய்யும் முறையை அனுமதித்தது.
இதன் மூலம், அதிகத் தூரம் பயணம் செய்ய வேண்டிய தேவை இல்லாமல், அவரவர் ஊரிலேயே முகவர்கள் மூலம் இணையம் வழியாக முன்பதிவு செய்ய முடிந்தது.
இணையத்தின் வளர்ச்சி
கடந்த 5 வருடங்களில் இணையம் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் வளர்ந்து விட்டது.
திறன்பேசி (Smart Phone) பெரும்பாலானவர்கள் பயன்படுத்தத் துவங்கி விட்டார்கள்.
நேரடியாக முன்பதிவு மையங்களில் செய்பவர்களை விடத் திறன்பேசி பேசி வழியாக முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து விட்டது.
எனவே, முகவர்களின் தேவை குறைந்து விட்டது.
முகவர்களின் சட்ட விரோத செயல்
இணையத்தின் வளர்ச்சி காரணமாகவும், தொழில்நுட்ப மேம்பாட்டாலும், முகவர்களும் தங்களுடைய அனுமதியை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி, பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து வருடத்துக்கு ₹50 – ₹100 கோடி சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தனியார் முகவர்களுக்குத் தடை
இணையம் வளர்ந்து விட்டது, பொதுமக்கள் இணையத்தில் தாங்களாகவே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி பெருகி விட்டது.
எனவே, இனி தனியார் முகவர்கள் தேவையில்லை என்று ரயில்வே துறை கருதுகிறது.
இணையம் வழியாக முன்பதிவு செய்ய முடியாதவர்கள், நேரடி மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம், தட்கால் உட்பட பண்டிகை நாட்களில் சட்ட விரோதமாக முன்பதிவு செய்வது தடுக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பெற முடியும்.
விரைவில் நிரந்தரமாகத் தனியார் முகவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, சட்ட விரோத பயணச்சீட்டு முன்பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம்.
ரயில்வே துறையின் இந்நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது.
தொடர்புடைய கட்டுரை