கோபி என்றால் உங்களில் பலருக்கும் நினைவிற்கு வருவது இயற்கை, திரைப்பட படப்பிடிப்பு, அதிமுக.
கோபி
இங்கே உள்ளவர்கள் அன்பானவர்கள் யாருடைய வம்புக்கும் போகாதவர்கள் (நான் கூறுவது பொது வாழ்க்கையில்) எந்த வன்முறையும் இங்கே நடக்காது.
தற்போது பந்த் அவ்வளவாக நடப்பதில்லை நல்ல விஷயம் தான் ஆனால் முன்பு அடிக்கடி தமிழ்நாட்டில் அல்லது இந்திய அளவில் பந்த் நடக்கும்.
பொதுவாக பந்த் நடக்கிறது என்றால் அங்கே வன்முறை இல்லாமல் இருக்காது.
கோபியில் வன்முறை மட்டுமல்ல கடையடைப்பு கூட நடக்காது இதை நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆனால் இது உண்மை.
அவரவர் அவங்க வேலையைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.
எந்தப் பந்த்திற்கும் ஆதரவு சுத்தமாக இருக்காது.
சிறு வயதில் பாபர் மசூதி இடிப்பு நடந்த போது முஸ்லிம்கள் கூட்டமாக குழுமியது மட்டுமே எனக்குத் தெரிந்து போராட்டமாக நினைவில் இருக்கிறது.
அதன் பிறகு கூட அரசியல் கட்சிகள் சார்பில் சிறு அளவில் மட்டுமே போராட்டம் நடந்துள்ளது வன்முறை என்று சொல்லக்கூடிய அளவில் இல்லை.
மாற்றல்
அமைதியான இடம் என்பதால் இங்கே மாற்றலாகி வருபவர்கள் கூட பதவி உயர்வு கிடைத்தாலும் மாற்றலாகி செல்வதில்லை.
இங்கேயே இடத்தை வாங்கி வீட்டைக் கட்டி விடுகிறார்கள். எப்படி கடை போட்டாலும் விற்பனை ஆகும்.
ஈரோடு சத்தி கோவை திருப்பூர் என்று அனைத்து இடங்களுக்கும் வசதி.
இதனால் அதிகம் பேர் இங்கே குடி பெயர்ந்து சமீப காலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டது.
இங்கே இருந்து தினமும் திருப்பூர் செல்கிறவர்கள் எல்லாம் நிறைய உள்ளார்கள்.
மலையாளிகள்
தற்போது தொலைபேசியில் அம்மாவுடன் பேசும் போது கோபியில் மலையாளிகள் கடைகளை எல்லாம் அடித்து உடைத்து விட்டார்கள்.
பூட்டி இருந்த கடைகளைத் திறந்து அங்குள்ள பொருட்களை உடைத்து விட்டார்கள் என்று கூறிய போது எனக்கு மிக வியப்பாக இருந்தது கோபியில் கூடவா! என்று.
தொலைக்காட்சி செய்தியில் கோபி சம்பவங்கள் வந்த பிறகு தான் உண்மையாலுமே ரொம்பப் பிரச்சனை போல என்று தோன்றியது.
இதை எதற்கு கூறுகிறேன் என்றால் இது நாள் வரை அமைதியாக இருந்தவர்கள் கூட கொந்தளித்துள்ளார்கள் என்றால் அதற்குக் காரணம் மலையாளிகள் பலர் நடந்து கொண்ட விதமே!
தமிழர்களின் பொறுமையை சோதித்தது பெண்களை மானபங்கப்படுத்தியதே முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன்.
இது இல்லை என்றாலும் பிரச்சனை ஆகி இருக்கும் என்றாலும் இது ரொம்ப சென்சிடிவ் விஷயம் என்பதால் தமிழர்களின் கோபத்தை அவர்கள் முதன் முறையாக பார்க்கிறார்கள்.
இதை மலையாளிகள் எதிர்பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன்.
உடைமைகள்
செய்திகளில் தமிழர்களின் உடமைகளைப் பறித்து பல காலமாக பாரம்பரியமாக வாழ்ந்தவர்களை எல்லாம் அடித்து துரத்தி விட்டார்கள் என்று படிக்கும் போது எனக்கு கர்நாடகா காவிரிப் பிரச்சனை தான் நினைவிற்கு வந்தது.
ஒரு முறை இதே போல காவிரிப் பிரச்சனையால் தமிழர்களை அடித்து துரத்தி சொத்துகளை அவர்களது பணியாளர்களே பறித்துக்கொண்டு விரட்டியது எல்லாம் இதைக் கேட்டவுடன் நினைவிற்கு வந்தது.
அப்போது இது போல் ஊடகங்கள் இல்லை அதனால் பல விஷயங்கள் பலருக்கு தெரியாமலே போய் விட்டது. கால மாற்றத்தில் இவற்றை மக்களும் மறந்து இருப்பார்கள்.
சம்பவங்கள் வேறு என்றாலும் பிரச்சனை ஒன்று தான் அது “தண்ணீர்”
வந்தோரை வாழவைக்கும் தமிழகம்
பொதுவாக தமிழர்கள் எதற்கும் அசைந்து கொடுக்க மாட்டார்கள். எதையுமே பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள் மற்ற மாநிலத்தவர் அவர்கள் மாநிலத்தை விட இங்கேயே நிம்மதியாக இருக்கிறார்கள்.
சென்னையில் இதை நேரிடையாகக் காணலாம் மற்ற மாநிலத்தவர் நம் ஊரில் சுதந்திரமாக இருப்பது போல மற்ற மாநிலங்களில் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
அதனால் தான் தமிழகத்தை “வந்தோரை வாழவைக்கும் தமிழகம்” என்று கூறி விட்டார்கள்.
இது 100 சதவீதம் உண்மையானது தமிழன் என்பதற்காக மட்டும் இதைக்கூறவில்லை மறுக்க முடியாத உண்மை இது.
தண்ணீர் பிரச்சனை

தற்போது இந்த தண்ணீர் பிரச்சனைக்காகவும் மலையாளிகள் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காகவும் பொங்கி எழுந்தது எனக்கு மிகப் பெரிய வியப்பாக இருக்கிறது.
உண்மையைக் கூறினால் இந்த அளவிற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
அதைவிட முக்கியமான ஒன்று லட்சக்கணக்கில் யாருடைய முன்னெடுப்பும் இல்லாமல் திரண்டது.
இதை இந்தியாவே எதிர்பார்த்து இருக்காது என்று நினைக்கிறேன். எதோ ஒரு நாள் இதைப்போல திரண்டார்கள் என்றால் எப்படியோ எதேச்சையாக நடந்தது என்று விட்டு விடலாம் தினம் தினம் இது போல திரள்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய விஷயம்.
இந்தப் பிரச்னையை விடுங்கள்… மக்கள் இதைப்போல ஒன்றாகக் கூடுகிறார்கள் எதிர்க்கிறார்கள் என்பதே மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் விசயமாக உள்ளது.
நாளை மக்கள் இது போல மற்ற விசயங்களுக்கும் போராடுவார்கள் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியுள்ளது.
அதிக எண்ணிக்கையில் மலையாளிகள்
மலையாளிகள் எந்தத் தைரியத்தில் தமிழர்களின் கடைகளையும் வீடுகளையும் அடித்துத் துரத்துகிறார்கள் என்று தெரியவில்லை.. குருட்டு தைரியம் என்ற ஒன்றைத்தவிர.
தமிழகத்தில் பெரும்பாலும் மலையாளிகளே ஆக்கிரமித்துள்ளனர்.
கோவையில் கால் வாசி பங்கு அவர்கள் தான் இருப்பார்கள் எந்த டீ கடை சென்றாலும் அவர்களே உரிமையாளர்களாக இருப்பார்கள்.
மருத்துவமனை சென்றால் செவிலியர்களாகவும் அவர்களே நிறைந்து இருப்பார்கள்.
சென்னையில் கூடப் பெரும்பாலான டீக்கடை அவர்களே நடத்திக்கொண்டு இருப்பார்கள்.
இவர்களை எல்லாம் அவர்கள் ஊருக்கே கிளம்புங்கள் என்று அனைவரும் கிளம்பினால் (ஏற்கனவே பல இடங்களில் நடந்து கொண்டு இருக்கிறது) என்ன நடக்கும்?
கேரளா அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு இதைப்போல செய்து கொண்டு இருக்கிறார்கள் இதற்கு அப்பாவி மக்கள் பலியாகிக்கொண்டு இருக்கிறார்கள்.
வழக்கம் போல பிரச்சனை செய்வது ஒருத்தன் பாதிக்கப்படுவது இன்னொருத்தனாகத் தான் இருக்கிறான். அது தமிழர்கள் ஆனாலும் சரி மலையாளிகள் ஆனாலும் சரி.
கம்யுனிசம்
கேரளாவில் கம்யுனிசம் நிறைந்து இருப்பதால் அங்கே ஒரு தொழிலும் உருப்படியாக செய்ய முடிவதில்லை ஏதாவது போராட்டம் தடை என்று நடத்திக்கொண்டு இருப்பார்கள்.
இதனால் பெரும்பாலான தொழில் செய்பவர்கள் மற்ற மாநிலங்களுக்கு நகர்ந்து விட்டார்கள் அதில் இவர்கள் அதிகம் இருப்பது தமிழகம் தான்.
இயற்கை வளம் கேரளாவில் நிறைந்து இருந்தாலும் காய்கறி முதற்கொண்டு அவர்கள் நம்பி இருப்பது தமிழகத்தைத் தான்.
காய்கறி
சில நாள் காய்கறி வரத்து தடுக்கப்பட்டதாலே அவர்கள் இடத்தில் தக்காளி கிலோ 200 ருபாய் விற்கிறது. எவ்வளவு நாள் அவர்கள் தாக்குப்பிடிக்க முடியும்.
இதனால் தமிழர்களுக்கும் நஷ்டம் உண்டு என்பதையும் மறுக்க முடியாது.
டன் கணக்கில் விற்பனை செய்து கொண்டு இருந்தவர்களுக்கு விற்பனை இல்லாதது நஷ்டம் தான் ஆனால் ஒப்பீட்டளவில் சமாளிக்கக்கூடிய அளவில் நாம் இருக்கிறோம் அவர்கள் இல்லை.
மாற்று மாநிலத்தில் இருந்து காய்கறி பெறுவது என்பது எல்லாம் எந்த அளவிற்கு சரியாக வரும் என்று தெரியவில்லை அவர்களுக்கு கூடுதல் செலவு தான் ஆகும்.
மலையாளிகள் செய்வது போலத் தமிழர்கள் மலையாளிகளைத் துரத்த ஆரம்பித்தால் நிச்சயம் மலையாளிகளால் தாக்குப்பிடிக்கவே முடியாது.
இதனால் இழப்பு அவர்களுக்கே நம்மவர்கள் எப்படி இருந்தாலும் சமாளிப்பார்கள். எனக்கு அதில் எந்தச் சந்தேகமுமில்லை.
ஜீவ நதி
நமக்குப் பிரச்சனை தண்ணீர் மட்டுமே! ஒரு ஜீவ நதி நமது மாநிலத்தில் இல்லாமல் போனது நம் அதிர்ஷ்டம் இன்மை என்று நினைப்பதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
உச்ச நீதி மன்றத் தீர்ப்பிற்குப் பிறகு கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது அதிகரித்து இருப்பதாக செய்திகளில் வருகிறது இதற்கு தமிழகத்திலும் எதிர்வினை நடக்கிறது.
இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.
இந்த நீர்ப் பிரச்னைக்குத் தீர்வே கிடையாது. எந்தத் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் மற்றவர்கள் பிரச்சனையே செய்வார்கள்.
அப்போது பிரிக்கும் போதே சரியாக பிரித்து இருந்தால் இந்தப் பிரச்சனை இல்லை.
இனி காலா காலத்திற்கும் இது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒன்று இதற்கு முடிவே இல்லை.
இன்னும் கொஞ்ச நாளில் ஏதாவது நடக்கும் பின் அப்படியே இந்தப் பிரச்சனை தற்காலிகமாக அமுங்கி விடும். இது தான் நடக்கப்போகிறது.
இதுவும் கடந்து போகும்
பிரச்சனை தென்மாவட்டத்துக்கு என்பதால்தான் இவ்வளவு வீரியம்.
பொருளாதாரத்தடைதான் சிறந்த வழி. இங்கு விலைவாசியாவது குறையும்.
ஓட்டு பொறுக்கிகள், தங்கள் எம்.பி பதவியை ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்து கவனத்தை ஈர்க்கலாம். 40 எம்.பிக்கள் இல்லை என்றால் மத்திய அரசு பெரும்பான்மையை இழக்கும். ஆனா செய்யமாட்டானுக………..
பாதிக்கப்படும் 3 தொகுதியிலும் காங்கிரஸ்கானுகதான் எம்.பி.
என்னத்தை சொல்றது கிரி. தமிழரா இல்லாம பொதுவான ஆளா இந்த பிரச்சினையை பார்த்தாலும், கேரளா செய்வது நியாயமா படலை. உச்ச நீதிமன்றம் நீரின் அளவை 142 அடியாக உயர்த்தவேண்டும் என்று தீர்ப்பு அளித்தும் இன்னும் அதை நிறைவேற்ற மாட்டோம் அப்படீன்னு அடம் பிடிகிறவங்களை ஏன் NDTV, CNN போன்ற ஊடகங்கள் கேள்வி கேட்காம இருக்காங்கன்னு புரியலே. இதுவே தமிழ் நாடு இப்படி ஒரு தீர்ப்பை மதிக்காம நடந்து இருந்தா, ஏதோ தமிழ் நாடுன்னாலே சட்டத்தையும், நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காத தீவிரவாதிங்க ன்ற ரேஞ்சுக்கு இவனுங்க கத்தி தீர்த்து இருப்பானுங்க. எந்த விஷயத்துலேயும் இந்த தேசிய ஊடகங்களுக்கு தமிழ் நாடு ன்னாலே பாரபட்சம் தான்.
ஒரு வாதத்துக்காக அணை பலவீனமா இருக்கு அப்படீன்னு வச்சுக்கிட்டாலும், கேரளா, “அணையை பலப் படுத்துங்க இல்லை, இடிச்சிட்டு அதே இடத்துல புதுசா கட்டுங்கன்னு” தமிழ் நாட்டை தான் வலியுறுத்தனுமே தவிர, “அதை இடிச்சிட்டு நாங்க புதுசா கட்டுவோம், உங்களுக்கு தேவையான தண்ணீரை நாங்க தருவோம்னு” சொல்றது சுத்த ‘நம்பியார்’ தனமா தான் இருக்கு.
பிரச்சினை எவ்வளவு தீவிரமா இருந்தாலும் மற்ற மாநிலத்தவரை நம்ம ஊருல அடிக்கிறது அநாகரீகம். வேணும்னா, அவங்க கிட்டே போய் அமைதியா நம்ம நிலைமையை எடுத்து சொல்லி புரிய வச்சு, அவங்களை விட்டே கேரளாவில பாதுகாப்பு இல்லாத தமிழருக்கு ஆதரவும், தமிழரை அடிக்கிற மலையாளிகளுக்கு கண்டனமும் தெரிவிக்கச் சொல்லி வலியுறுத்தலாம்.
இன்னொன்னு, DAM 999 படம் தான் இந்த பிரச்சினையை தீவிரப் படுத்திடுச்சி. நம்ம ஊருலேயும் சின்னத் திரை அல்லது பெரிய திரை ஊடகத்தை சேர்ந்தவங்க யாராவது அதே மாதிரி கிராபிக்ஸை உபயோகப்படுத்தி அணையின் உண்மையான நிலவரத்தை படம் எடுத்து எல்லா டிவி சானல்லேயும் ஒளிப்பரப்பி, கேரளாவின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கலாம்.
@காத்தவராயன் நீங்கள் கூறியது போல தென் மாவட்டம் என்பதால் கூட இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்கலாம். காங்கிரஸ் நோ கமெண்ட்ஸ்.
@பாமரன் உச்ச நீதி மன்ற தீர்ப்பை இவர்கள் மட்டுமா கர்நாடகா கூட மதிக்கவில்லையே. வட மாநில ஊடகங்கள் ஏனோ நமக்கு எப்போதும் ஆதரவு தருவதில்லை.. அதுவுமில்லாமல் இந்த ராசா கனிமொழி விவகாரத்தில் இருக்கிற கொஞ்சமும் போய் விட்டது.
அணை கட்டும் போதே சரியா இடத்தை பிரித்து இருந்தா இந்தப் பிரச்சனையே இல்லை..என்ன செய்வது? இனி இது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒன்று.
பாமரன் நீங்க எந்த காலத்துல இருக்கீங்க.. இப்படி எல்லாம் சொன்னால் கேட்பார்கள் என்று நினைக்கிறீர்களா! இவ்வாறு கூறுவது இரண்டு மாநிலத்திலேயுமே நடக்காத ஒன்று. யாரும் யாருக்கும் நிலைமையை புரிய வைக்க முடியாது.. இருக்கிற சூழ்நிலையை பார்த்து அவர்களே புரிந்து கொள்ளாத போது புரிய வைக்க முயற்சிப்பதெல்லாம் கனவில் கூட நடக்காத ஒன்று.
அந்த DAM 999 இயக்குனரை….. நல்லா வாயில வருது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி கதையா..எவ்வளவு பெரிய பிரச்சனை ஆக்கிட்டார் இவர். நாம காணொளி எடுத்தெல்லாம் போட்டால் இனி வேலைக்காகாது பாமரன்.. காரணம் தவறே செய்து இருந்தாலும் யார் வந்து முதல்ல புகார் கொடுக்கிறார்களோ அவர்களே நல்லவர் என்கிற மாதிரி இவங்க சொல்றது இந்தியாக்கு உண்மை என்கிற படி ஆகி விட்டது.
கடுப்பு தான் ஆகுது .. என்னமோ போங்க! இரு மாநிலமும் பகைத்துக்கொண்டு நீண்ட நாட்கள் இருக்க முடியாது. ஒருவரையொருவர் சார்ந்தே இருக்கிறார்கள் அதனால் கொஞ்ச நாளில் சரியாகி விடும் அதாவது தற்காலிகமாக என்றே நினைக்கிறேன்.
” இன்னும் கொஞ்ச நாளில் ஏதாவது நடக்கும் பின் அப்படியே இந்தப் பிரச்சனை தற்காலிகமாக அமுங்கி விடும்.”
– நீங்க ஒரு தீர்க்க தரிஷி தல .. இப்ப தான் சொன்னீங்க அதுக்குள்ள நம்ம முதல்வர் ஆரம்பிச்சுட்டாங்க சசி விவகாரம்
– அருண்