96 [2018]

6
96 movie-poster

1996 வருட பள்ளி நண்பர்கள் அனைவரும் திடீர் என்று WhatsApp மூலமாகத் திட்டமிடப்பட்டுச் சந்திக்க ஏற்பாடாகிறது. Image Credit

அதில் பள்ளிக் காதலர்களான, சூழ்நிலையால் பிரிந்த விஜய் சேதுபதி, த்ரிஷா சந்திக்கிறார்கள்.

இறுதியில் என்ன ஆகிறது? அவர்கள் முன்னாள் காதல் என்ன ஆகிறது? என்பதை மிக நாகரீகமாக எந்தச் சமரசமும் இல்லாமல் ரசிக்கும்படி அழகாகக் கொடுத்து இருக்கிறார்கள்.

96

இது போல எங்கள் பள்ளி மாணவர் விடுதி மாணவர்கள் நூற்றாண்டு விழாக்காக WhatsApp குழுமம் துவங்கி துவக்கத்தில் பரபரப்பாக இருந்து வழக்கம் போல அமைதியாகி விட்டது 🙂 .

இவர்கள் போல எங்களுக்கு அமையவில்லை.

துவக்கத்தில் நகைச்சுவைக்காகக் கதையோடு வரும் நபர்கள் இருந்தாலும், சேதுபதி அவ்வப்போது புன்னகைக்க வைக்கிறார், முக்கியமாக எரிச்சலூட்டாமல்.

சேதுபதி பற்றிப் பல படங்களில் ஏற்கனவே திறமையானவராகப் பார்த்து இருந்தாலும் இதில் எந்த அலட்டலும் இல்லாமல், அமைதியாக, ரசிக்கும்படி நடித்து இருக்கிறார்.

பள்ளிக் காதல்

பள்ளிக் காதல் அதுசம்பந்தப்பட்ட காட்சிகள் என்றாலே, பொதுவா அதிகப்பிரசங்கித்தனமான காட்சிகள், அலப்பறைகள் இருக்கும்.

நகைச்சுவைக்கு என்று ஒரு கதாப்பாத்திரம் திணிக்கப்பட்டு இருக்கும், வயதுக்கு மீறிய காட்சிகளை வைத்து எரிச்சலூட்டுவார்கள்.

இதில் அப்படி எதுவுமே இல்லை என்பது மிகப்பெரிய ஆறுதல். பசங்களுடைய கேலி கிண்டல்கள் இருந்தாலும், எல்லை மீறாத காட்சிகள். பார்க்கவே நிறைவாக இருந்தது.

சேதுபதி சிறுவயது கதாப்பாத்திரமாக MS பாஸ்கர் மகன் ஆதித்யா. செம்ம பொருத்தம். பயம், கூச்சம், கோபம், பரிதவிப்பு, ஏக்கம் என்று அசத்தி இருக்கிறார்.

சிறு வயது த்ரிஷாவாகக் கௌரி, பாந்தமாக நடித்து இருக்கிறார். இவர் நல்ல குரல் வளம் கொண்டவர் என்பதால், பள்ளியில் தமிழ்த்தாய் வாழ்த்து உட்பட இவர் தான் பாடுவார், வகுப்பில் திரைப்பாடல்களும்.

இதில் இளையராஜா பாடல்களை இசையில்லாமல் பாடும் போது அவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது. திரும்ப இளையராஜா பாடல்களைக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தது. என்ன தான் சொல்லுங்க ராஜா.. ராஜா தான்.

தேவதர்ஷினி சிறு வயது கதாப்பாத்திரமாக அவரது மகளே (நியதி கடம்பி) நடித்துள்ளார்.

நான் பார்த்துட்டு “செம்ம பொருத்தங்க, தேவதர்ஷினி மாதிரியே இருக்கிறார்” என்று நண்பரிடம் கூறியதும், “அது அவரோட பொண்ணு தாங்க” என்று அதிர்ச்சி கொடுத்தார்.

செம நடிப்பு, எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புள்ளது.

ஒரு காட்சியில் ஆதித்யா, கௌரி விவரங்களைக் கேட்டு நியதி கடம்பியிடம் முறைக்க, அதற்கு நியதி கடம்பி திரும்பிப் பார்த்து, “ஆத்தி..” என்று கூறி அதிர்ச்சியாவதற்குத் திரையரங்கில் பலத்த சிரிப்பலை.

த்ரிஷா

த்ரிஷா நடிப்பில் மிகச்சிறந்த படம் 96. எனக்கு த்ரிஷாவை சுத்தமா பிடிக்காது. எப்போதுமே இவருக்குக் கிறுக்கு நாயகி வேடம் தான் கொடுப்பார்கள், பார்க்கவே எரிச்சலாக இருக்கும்.

இவர் நடிப்பில் எனக்குப் பிடித்த படமென்றால், “விண்ணைத்தாண்டி வருவாயா” மட்டுமே! “என்னை அறிந்தால்” கூட நன்றாக இருக்கும்.

அதனால் இப்படம் கூட எந்த எதிர்பார்ப்புமில்லை ஆனால், இவர் பெயர் போடும் போது பலத்த கரகோஷம், நானே அசந்து விட்டேன்.

த்ரிஷாவிடம் மானசீக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன், அவரைக் குறைத்து எடைபோட்டதற்கு. நடிப்பில் கலக்கி இருக்கிறார். மிகைநடிப்புக் கொஞ்சம் கூட இல்லை. எப்படிங்க?!

சிலரை நாம் குறைத்து எடைபோட்டு விடுகிறோம் ஆனால் அவர்கள் திருப்பி இது போலக் கொடுத்து நம்மை வாயடைக்க வைத்து விடுகிறார்கள் .

தமிழ் இயக்குநர்களே! மனசாட்சியே இல்லாமல் ஒரு நடிகையின் திறமையை இவ்வளவு காலமாக வீணடித்து விட்டீர்களே!” 🙁 .

குறிப்பாக இருவரும் சேர வாய்ப்புக்கிடைத்தும், சூழ்நிலைகளால் அது நிறைவேறவில்லையென்று தெரிய வரும் போது, ஏமாற்றம் கலந்த ஏக்கத்தை, த்ரிஷா வெளிப்படுத்துவது அசத்தலான நடிப்பு.

நமக்கே அக்காட்சியைப் பார்க்கும் போது ரொம்ப ஏமாற்றமாக இருக்கும், அக்காட்சியில் ஏமாற்ற உணர்வை நம்முள் அப்படியே கடத்தி இருப்பார்.

இயக்குநருக்கு வாழ்த்துகள்.

விஜய் சேதுபதி

த்ரிஷாவின் எண்ண ஓட்டத்தை, இயக்குநரின் பட இயக்கத்தை கெடுத்து விடாத சேதுபதி நடிப்பு, எத்தனை பாராட்டினாலும் தகும்.

ஒரு காட்சியில் த்ரிஷா கூறும் “ரம்பை மேனகா ஊர்வசி” உதாரணத்தை நியாயப்படுத்தும் விதமாக சேதுபதி நடித்து இருக்கிறார்.

த்ரிஷா, சேதுபதி சந்தித்த பிறகு, இடைவேளைக்குப் பிறகு பெரும்பாலும் படத்தில் இவர்கள் இருவர் மட்டுமே! கொஞ்சமாவது படம் சலிப்பு வரணுமே… ம்ஹீம்.

படத்தை எப்படி எப்படியோ கொண்டு சென்று இருக்க வாய்ப்பிருந்தும், சொல்ல வந்த கதையில் இருந்து மாறாமல் அப்படியே படம் சென்று கொண்டு இருக்கிறது.

தமிழில் இதுபோலக் காதலை அழகாக, மென்மையாக, ஆபாசமில்லாமல், ரசிக்கும்படி, சலிக்காமல் சொன்ன படங்கள் உள்ளது ஆனால், அவற்றிலும் இது தனித்துத் தான் தெரியும்.

காதல் என்றாலே, அடிதடி, சாதி பிரச்னை, ஒருதலைக் காதல், வன்முறை காதல், ஒப்பாரிக் காதல் என்று பல வகைகளில் பார்த்தாச்சு.

இதுவும் புதிய கதை ஒன்றுமில்லை இதிலும் அழுகை, நெகிழ்ச்சி என்றுள்ளது ஆனால், படம் முடிந்து வரும் போது திருப்தி மனசெல்லாம் உள்ளது.

எதோ நாமே நேரில் பார்த்து, அதில் நாமும் பங்கு கொண்டது போல அவ்வளவு அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது.

சேதுபதியோட கூச்ச சுபாவம், அவசரம் அவருக்கு வில்லனாக மாறி இருக்கிறது. எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் ஏன் நடக்கவில்லை என்று படம் பார்க்கும் அனைவருக்கும் தோன்றும்.

இயக்குநர் கூறாமல் கூறும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது ஒருவேளை நடந்து இருந்தால், இப்படம் இல்லையென்பதால் இருக்கலாமோ!

தேவதர்ஷினிக்கு செம கதாபாத்திரம், அவரும் பகவதி பெருமாளும் தங்களுக்குண்டான கதாப்பாத்திரத்தை நியாயப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜனகராஜ் பல வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ளார். சிறப்பாக ஒன்றுமில்லையென்றாலும் அவரைத் திரும்பப் பார்த்ததில் மகிழ்ச்சி.

பின்னணி இசை

இப்படத்தின் பாடல்களைப் படத்தில் தான் முதன் முதலாகக் கேட்கிறேன்.

எனவே, பெரிதாகக் கூற என்னிடம் எதுவுமில்லை, கேட்க அமைதியாக இருந்தது என்ற ஒன்றைத் தவிர ஆனால், நண்பர்கள் பாடல்கள் செம்ம என்று கூறி இருந்தார்கள்.

இதில் நான் குறிப்பிட வேண்டியது பின்னணி இசை. இப்படத்தை மேலும் அழகுபடுத்தியது என்றால், அதில் பின்னணி இசைக்கு மிக முக்கியத்துவம் உள்ளது.

தேவையான இடங்களில் மட்டுமே பின்னணி இசை, மற்ற இடங்களில் அமைதியாக உள்ளது சூழ்நிலைக்கு ஏற்றபடி.

இரைச்சல் இல்லாமல், காட்சியோட நம்மை ஒன்றவைக்கப் பெருந்துணை புரிந்துள்ளது. சுருக்கமாக இரண்டாம் பாதிப் பின்னணி இசைக்காகவே படத்தை இன்னொருமுறை ரசிக்கலாம்.

இரண்டாம் பாதியில் சேதுபதி த்ரிஷா காட்சிகள் அதிகம், அதாவது அவர்கள் இருவர் மட்டுமே!

அவை பெரும்பாலும் மனதோடு பேசும் காட்சிகளே! அவற்றைக் கெடுக்காத மாதிரியான பின்னணி இசை.

என்னுடையது ஒரு தலைக் காதல் தான் என்றாலும், இரண்டாம் பாதியில் இவர்கள் இடையே நடக்கும் சம்பவங்கள், பேச்சுகள் எல்லாம் அவ்வளவு ரசிக்கும்படி இருந்தது.

ச்சே! என்னமா ரசனையா எடுத்து இருக்காங்கயா..!” என்று தோன்றியது. தமிழ்ல இப்படியெல்லாம் படம் வருவதே மகிழ்ச்சியைத் தருகிறது.

ஒளிப்பதிவு

படத்தின் துவக்கத்தில் வரும் பாடல் காட்சிகளை வைத்து நான் “மயக்கம் என்ன” தனுஷ் கதாப்பாத்திரம் அளவுக்குச் சேதுபதியை நினைத்தேன்.

ஆனால், அப்படியில்லை ஆனால், முதல் பாடல் மிக மிக ரசனையான காட்சியமைப்புகள்.

இது போலச் சில நாட்கள் பயணம் செல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால விருப்பம். இப்பாடலில் ஒளிப்பதிவு அசத்தலாக இருந்தது.

இதில் மட்டுமல்ல, இவர்கள் இரவு நேரப்பயணம், அதையொட்டிய நெரிசல் இல்லாத, அழகான சென்னை சாலைகள், அதில் பரபரப்பில்லாத அமைதியான இவர்கள் காட்சிகள் என்று இன்னும் கொஞ்சம் நீளாதா என்று ஏங்க வைத்து விட்டது.

சென்னையின் அழகு இரவில் தான் தெரியும். அது இப்படத்தின் காட்சிக்கும் சூழ்நிலைக்கும் மன ஓட்டத்துக்கும் அட்டகாசமாகப் பொருந்தியுள்ளது.

படத்தின் கதை சுட்ட கதை என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. உண்மையோ பொய்யோ ஆனால், பார்க்க அசத்தலாகவுள்ளது. படமாக்கிய விதம் ரசனைக்குரியதாக இருந்தது.

குறிப்பாக இறுதிக்காட்சிகள் எல்லாம் ப்ப்ப்பா… பட்டாசு. படம் முடிந்த விதம் நீட்டி முழக்காமல் “மயக்கம் என்ன” போலக் கவிதைத்தனமாக இருந்தது.

ஒட்டு மொத்தமாக, தவற விடக்கூடாத படம். அனைவரையும் பார்க்க பரிந்துரைக்கிறேன்.

தனியாகச் செல்லாதீர்கள், நண்பர்கள், காதலி/லன், வாழ்க்கைத்துணை என்று யாருடனாவது செல்லுங்கள் அப்போது தான் கூடுதலாக ரசிக்க முடியும்.

சொல்ல மறந்து விட்டேன்.. படம் முடிந்ததும் பலரும் கை தட்டினார்கள், நாங்களும் 🙂 .

கொசுறு 1

இயக்குநர் பிரேம்குமார் “நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்” படத்தின் ஒளிப்பதிவாளராம்!

கொசுறு 2

“பரியேறும் பெருமாள்” படம் பார்க்க முன்பதிவு செய்து, வேறு வேலை காரணமாகச் செல்ல முடியவில்லை. மனைவி மற்றும் பசங்க மட்டும் சென்று வந்தார்கள். இணையத்தில் பார்த்துக்கொள்ள வேண்டியது தான்.

கொசுறு 3

“செக்கச் சிவந்த வானம்” படம் பார்த்தேன். அனைவரும் இஷ்டத்துக்குக் கொல்கிறார்கள் ஆனால், அதனால் எந்தப் பிரச்சனையும் காவல்துறையிடம் வந்ததாகத் தெரியவில்லை.

இவை மற்றும் சில “எப்படி இது?” என்ற கேள்விகள் தவிர்த்துப் படம் சுவாரசியமாகச் சென்றது.

கொசுறு 4

ராட்சசன்” படமும் நன்றாக இருப்பதாகக் கூறினார்கள், செல்ல முடியவில்லை. வந்தால் எல்லாமே நல்ல படமாக வருகிறது இல்லையென்றால், குப்பைப் படங்களாக வருகிறது.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. நான் படித்தவரையில் நீங்கள் ஒருவர்தான் தன்னுடய பள்ளிக்காதலுடன் இணைத்து எழுதாமல் விமர்சனம் பண்ணியவர். மிகுதி எல்லாருமே ஏதோ தங்களின் பள்ளிக்காதலை ஒளிந்திருந்து படம்பிடித்த்து போலவே உணர்ந்துள்ளார்கள், ( நீங்களும் கூடத்தான் ஆனால் நீங்கள் உங்களின் விமர்சனத்தில் உள்ளடக்கவில்லை என்று நினைக்கிறேன்) காதலே காதலே பாடல் மிகவும் சிறப்பாக இருக்கும். யூடியூப்பில் பாடல் வரி வீடியோவாக இருக்கின்றது. மிகச்சிறப்பாக எடிட் செய்துள்ளார்கள். கேட்டால்/ பார்த்தால் நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்.

  2. கிரி, படத்தை இன்னும் பார்க்கவில்லை.. ஆனால் பார்ப்பதற்கு ஆர்வம் இருந்தாலும், உள்ள நிம்மதியா தூங்கி கொண்டு இருக்கிற பழைய நினைவுகளை எழுப்பி விட மனமில்லை.. ஒவ்வொரு படங்களை பார்க்கும் போதும் ஒருவிதமான எண்ணங்கள் தோன்றும்.. நிறைய படங்கள் பார்த்து இருந்தாலும் அழகி படம் பார்த்த பின் ஏற்பட்ட பிரமிப்பு.. இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை..

    உங்கள் விமர்சனத்தை படிக்கும் போது நிச்சயம் படம் பட்டாசாக இருக்கும் என நம்புகிறேன்.. அடுத்த மாதம் வெளியாக போகும் ஆமீர்கானின் thugs of hindostan படத்தை காண ஆர்வமாக இருக்கிறேன்.. நேரம் இருப்பின் நீங்களும் பார்க்கவும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @ப்ரியா நான் படித்தது மாணவர் பள்ளி அதனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை 🙂

    @யாசின் சமீபத்தில் அனைவரும் பாராட்டிய படம் என்றால் அது 96 மட்டுமே! அமீர்கான் படம் தமிழில் வருகிறது என்று நினைக்கிறேன். பார்ப்போம்.

  4. செம்ம #MeeToo கொடுமை என்னன்னா தமிழ் டப்பிங் வாய்ஸ் கொடுத்து திரிஷாவின் டப்பிங் வாய்ஸ் கேட்டாலே எரிச்சல் வரும்.

    //எப்போதுமே இவருக்குக் கிறுக்கு நாயகி வேடம் தான் கொடுப்பார்கள், பார்க்கவே எரிச்சலாக இருக்கும்.

  5. ஜி, நானும் பாத்துட்டேன் ஜி…செம்ம செம்ம…orre peeling thaan ponga…

    “மாற்றங்கள் வினா, மாற்றங்களே விடை”…Such a short and sensible sum of all our lives…

    – I was so glad, this movie did not remind of any other previous famous love stories+memory movies like Premam / Autograph / or whichever ones… Chumma fresh ah irunthuchu… 🙂 🙂
    – To watch Trisha and VijaySethupathi was such a treat…
    – The biggest strength of the movie is music and BGM. I rate this album as one of all time best Tamil movie albums…Vasanth G gave something entirely new to audience but yet the album stayed so close to script and loved the lyrics as well…My fav singer Pradeel sang 2 songs, so romba happy…

    Btw, few more info that I heard. 1) I understood ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ movie is based on directors Prem Kumar real life story. 🙂 . Also, when Prem approached him for this movie, Vijay Sethupathi was praying that the script should be good as he did not wanted to say No to Prem…In the end he loved that script and agreed for the movie… 2) The cinematographer of this movie is a student of Rajiv Menon and Ratchasan movie Cinematographer also is a student of Rajiv Menon School – MindScreen.

  6. அருமையான விமர்சனம் கிரி. உங்கள் கருத்துடன் நூற்றுக்கு நூறு உடன் படுகிறேன்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here