குக்கூ [2014]

10
குக்கூ

த்திரிகையாளராக இருந்து இயக்குனராகி இருக்கும் ராஜு முருகன் இயக்கத்தில் வந்து இருக்கும் படம் “குக்கூ”. இவருடைய வட்டியும் முதலும் புத்தகம் படித்ததிலிருந்து ஆர்வம் அதிகம் ஆகி இருந்தது.

குக்கூ 

இரு பார்வையில்லாதவர்கள் சந்திக்கிறார்கள். மோதலில் துவங்கி காதலில் முடிகிறது. இறுதியில் இருவரும் இணைகிறார்களா?! என்ன ஆனது என்பது தான் குக்கூ.

படத்தின் இயக்குனர் ராஜு முருகன் பார்வையில் தான் படமே துவங்குகிறது. அவர் கதை கூறுவதில் தொடர்ந்து ப்ளாஷ் பேக்காக விரிகிறது. Image Credit

அட்டகத்தி தினேஷ் கலைக் குழுவில் பாடகராக இருப்பவர், மாளவிகாவை சந்திக்க நேருகிறது.

இயல்பிலேயே அனைவரையும் கலாயிக்கும் தினேஷ் மாளவிகாவையும் கலாயிக்க அவர் கோபித்துக்கொள்ள அப்படியே காதலும் வளருகிறது.

தினேஷ்

காசி படத்தில் விக்ரம் கண் தெரியாதவராக மிகச் சிறப்பாக நடித்து இருந்தார். அதற்கு கடும் சவால் கொடுக்கும் வகையில் தினேஷ் நடிப்பு உள்ளது.

மனுஷன் நடிப்பில் பின்னி இருக்கிறார். இதில் அவர் மாறு கண் இருப்பது போலக் கண்களை வைத்து நடித்து இருக்கிறார்.

ரொம்ப சிரமமான வேலை, கண்கள் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது.

“அவன் இவன்” படத்தில் விஷால் நடித்தது போல. கண்களை மட்டுமல்ல பார்வையற்றவர்களின் உடல் மொழியிலும் பின்னிப் பெடலெடுத்து இருக்கிறார்.

இவர்கள் இருக்கும் கலைக் குழுவில் நடிகர்களை போல உருவமுடையவர்கள் இருப்பார்கள். அதில் எம்ஜிஆர் விஜய் அஜித் மூவரும் இருக்கிறார்கள்.

“நான் கடவுள்” படத்தில் நயன்தாரா ஒரு டேன்ஸ் போடு என்று கூறுவதைப் போல இதில் அஜித்தையும் விஜயையும் செமையாக கலாயித்து இருக்கிறார்கள் 🙂 .

ரஜினி கமலைக் காணோம். விஜய் அஜித்தை பிடிக்காதவர்கள் இந்தக் காட்சிகளுக்கு குஷியாகி விடுவார்கள். இந்தக் காட்சிகளுக்கு திரையரங்கில் பலத்த சிரிப்பலை உறுதி.

பார்வையற்றவர்கள் உலகம்

பார்வையற்றவர்கள் உலகம் தனி உலகம். அதை இதில் கூடுமானவரை விரிவாகக் காட்டியிருக்கிறார்கள்.

அவர்களின் கிண்டல், கேலி, சிறப்புத் திறமை, அவர்களின் பழக்க வழக்கங்கள், சந்திப்புகள், குழுக்கள், தங்களை பரிதாபமாகப் பார்ப்பதை விரும்ப மாட்டார்கள் என்று பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளது.

சில நேரங்களில் படம் பார்ப்பது “ஒவ்வொரு பூக்களுமே” பாடல் போன்று ரொம்ப சென்டிமென்ட்டாக போவது கொஞ்சம் அலுப்பை தருகிறது.

சில காட்சிகளின் நீளத்தை நிச்சயம் குறைத்து இருக்க வேண்டும்.

மாளவிகா

மாளவிகா நடிப்பு தினேஷ் நடிப்போடு ஒப்பிட்டால் குறைவு தான்.

அவர் வீட்டில் சிரமப்படுபவர்கள் போலக் காட்டியிருக்கிறார்கள் ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் உடைகளில் அவ்வாறு தெரியவில்லை.

ஒரு வழக்கமான கதாநாயகிக்கு உண்டான உடையில் வருவது அவர் மீதான் ஒரு இயல்புத் தன்மையைக் குறைக்கிறது.

அதே போலக் கண்களை மேல் நோக்கிப் பார்த்து வலது இடது திருப்பி மாற்றிப் பார்வை தெரியாததை நமக்கு உணர்த்தினாலும் உடல்மொழியில் இன்னும் கூடுதல் கவனம் எடுத்து இருக்கணும்.

சில இடங்களில் அவர் நடப்பது பார்வையுள்ளவர்கள் நடப்பது போல இருக்கிறது. இவரது தோழியாக வருபவரின் நடிப்பு ரொம்ப நன்றாக இருந்தது.

இவர் உண்மையாகவே கண் தெரியாதவரா?!

கலகலப்பு

நிஜ பார்வையற்றவர்கள் இதில் நிறைய நடித்து இருக்கிறார்கள். இதில் தினேஷ் நண்பராக வரும் ஒருவர் அடிக்கடி ஏதாவது கிண்டல் அடித்துப் படத்தைக் கலகலப்பாக வைத்து இருக்கிறார்.

பார்வையற்றவர்கள் என்றால் ஒரே சோக கீதம் பாடுபவர்கள் அல்ல அவர்களும் நம்மைப் போலத்தான் என்று காட்டியிருக்கிறார்கள்.

இவர்கள் அடிக்கும் நக்கலைப் பார்த்தால் நாமே கொஞ்சம் தள்ளித்தான் நிற்க வேண்டும் போல, செமையாக கலாயிக்கிறார்கள்.

ராஜு முருகன் இதற்காக தகவல்களை திரட்ட நிறைய உழைத்து இருக்க வேண்டும்.

இவர்களுக்கு அவ்வப்போது உதவியாக “ஆடுகளம்” படத்தில் தனுஷ் நண்பராக வந்த முருகதாஸ் வருகிறார்.

இளையராஜா

பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டது. இதில் ஒவ்வொரு பாடல்களும் ரொம்பப் பிடித்தது. படத்தில் இளையராஜா பாடல்கள் அவ்வப்போது வருகிறது.

இளையராஜா பழைய பாடல்களைக் கேட்கும் போது நமக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது.

பழைய படங்களை இந்தத் திரையரங்குகளில் பார்க்க நமக்கு வாய்ப்புக் கிடைக்காது எனவே, இளையராஜா இசையை நல்ல ஒலி தரத்தில் கேட்கும் போது அவை தொடராதா என்று எண்ண வைக்கிறது.

அந்தக் காலக்கட்ட இளையராஜா இசையை மிஞ்ச இனி ஒருத்தர் பிறந்து தான் வரணும். ஒளிப்பதிவும், ஆர்ப்பாட்டம் இல்லாமல் கதைக்கு ஏற்ற அளவில் அழகாக உள்ளது.

ரயில் பயணம்

ரயில் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைய வருகிறது. இதெல்லாம் எப்படி எடுத்தார்கள் என்று தெரியவில்லை.

அதில் வழக்கமாக வரும் நபர்களின் வழக்கமான நடவடிக்கைகள் என்று இருக்கும். அது பற்றியும் வருகிறது.

இதில் ஒருவர் எப்போதும் ஒரே இடம், ஒரே சாப்பாடு, யாரிடமும் பேச மாட்டார் என்று காட்டப்பட்டு இருக்கிறது கடைசியில் இவரை வைத்து ஒரு ட்விஸ்ட்டும் இருக்கிறது.

ரயிலில் தினமும் அலுவலகம், கல்லூரி சென்று வருபவர்களுக்கு இந்தக் காட்சிகள் பல நினைவுகளைக் கொண்டு வரும்.

மாளவிகா கிறித்துவர் என்பதால், கிறித்துவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடிக்கடி வருகிறது.

சமீப வருடங்களில் இவ்வளவு காட்சிகளை நான் பார்த்தது இந்தப் படத்தில் தான். இந்தப் படத்தில் ராஜு முருகன் அவராகவே வருகிறார்.

“வட்டியும் முதலும்” புத்தகத்தில் வருவது போல அவ்வப்போது நக்கல் வசனங்களும் உண்டு. பலரை வாரி இருக்கிறார்கள். நான் இன்னும் அதிகம் கிண்டல்களை எதிர்பார்த்தேன்.

ஒரு காட்சியில் பெண்ணை தவறாகக் கூறியதாக ஒரு அரசியல்வாதி கோபப்படுவார் (ட்ரைலரில் கூட வந்தது), இது திணிக்கப்பட்ட காட்சியாகத் தான் தெரிந்தது.

இதில் கிட்டத்தட்ட வில்லன் போல இருக்கும் ஒருவர் “நான் எமோசனல் ஆகிடுவேன்” என்று கூறுவது செம ரகளையாக இருக்கும். சீரியஸ் காட்சியில் “நான் எமோசனல் ஆகிடுவேன்” என்று கூறுவது செம காமெடி.

இறுதிக் காட்சி விரைவாக முடிந்தது போல இருந்தது. மற்ற காட்சிகளில் கத்திரி போட்டு இதில் கொஞ்சம் கூட்டி இருக்கலாம்.

இந்தப் படம் பார்த்த பிறகு இவ்வளவு நாள் நாம் பார்வையில்லாதவர்களைப் பார்த்ததற்கும் தற்போது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசத்தைக் கொண்டு வரும்.

தமிழில் ஒரு சிறந்த படம் என்று நாம் பெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவில் குக்கூ உள்ளது.

படம் சென்டிமென்ட்டான படம் தான் எனவே, இந்தப் படத்திற்குண்டான மனநிலையுடன் செல்லுங்கள்.

Directed by Raju Murugan
Starring Dinesh, Malavika
Music by Santhosh Narayanan
Cinematography P. K. Varma
Editing by Shanmugam Velusamy
Studio Fox Star Studios ,The Next Big Film Productions
Release dates March 21, 2014
Country India
Language Tamil

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

 1. சென்டிமென்ட்டான படம் பார்த்தால் “நான் எமோசனல் ஆகிடுவேன்”

 2. கிரி.. குக்கூ படத்தின் வேறு விமர்சனங்களை படிக்கவில்லை. உங்கள் விமர்சனத்தை மட்டும் தான் படித்தேன். பார்க்க தூண்டும் அருமையான விமர்சனம்.. இது நிச்சயம் பார்வை உள்ளவர்கள் உணர வேண்டிய பார்வையற்ற மனிதர்களின் வாழ்க்கை பக்கங்கள் என்பது தெளிவாகிறது.

 3. கிரி.. உங்கள் வரிகளை பார்க்கும் போது படத்தை பார்க்க வேண்டிய ஆர்வம் அதிகமாக இருக்கிறது..

  கல்லூரி நாட்களில் இறுதி ஆண்டில், எங்கள் துறை சார்பாக எங்கள் மாவட்டத்தில் ஏதாவது நிகழ்ச்சியை ஒரு நாள் நடத்த வேண்டும் என்பது கல்லூரியின் வேண்டுகோள். எங்கள் துறை மாணவர்கள் நிறைய ஆலோசனை வழங்கினாலும் நான் மாணவ தலைவனாக எடுத்த முடிவு, அரசு ஊனமுற்ற & பார்வையற்ற பள்ளிக்கு சென்று ஒரு நாள் முழுவதும் துப்புரவு செய்து, அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து, அவர்களுடன் உணவு உண்பது (ஆசிரியர்கள் உட்பட).

  மதிய நேரத்தில் அவர்களுடன் விளையாட்டுகளிலும், கதைகள் பேசியும் ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் செலவிட்டோம்.. கல்லூரியில் எங்கள் துறைக்கு நல்ல பெயரும் கிடைத்தது… அதைவிட, அந்த ஒரு நாள் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது…

  அவர்களின் உலகம் நிச்சயம் தனிமையான, அமைதியான, வன்முறையில்லா, “அழகான உலகம்” என்பதை மறுக்க முடியாது…

  அந்தக் காலக்கட்ட இளையராஜா இசையை மிஞ்ச இனி ஒருத்தர் பிறந்து தான் வரணும் :- நிறைய சோகங்களை, வலிகளை, நாங்கள் மறந்து என்னை போல் நிறைய நண்பர்களை சுவாசிக்க வைப்பது இளையராஜாவின் இசை மட்டுமே… கம்பங்கூழையும், பழைய சோறையும் சாப்பிட்டு வளர்ந்த எனக்கு, பர்கர், பீட்ச, KFC சாப்பிட்ட மனம் விரும்பவில்லை.. இதை சாப்பிட்டு விட்டு இதன் சுவை நாவில் ஒட்டிவிட போகிறது என்று புதிய பாடல்களை கேட்பதில்லை.. (சிலவற்றை தவிர) என்றுமே, இளையராஜா தான் எனக்கு…

 4. நான் இது வரை இந்த படத்தை பார்க்காமல் ஏன் தவிர்த்தேன் என்று நினைக்கும் போது வருத்தமா இருக்கு அண்ணா . இதுவரை இந்த படத்தை பார்க்க எனக்கு இரண்டு வாய்ப்பு வந்தது அண்ணா ஒன்று வெள்ளி காலை காட்சிக்கு , மற்றொன்று சனிகிழமை இரவு கட்சிக்கு . ஆனால் நான் இரண்டையுமே தவிர்த்து விட்டேன் அண்ணா , எனக்கு உடல் ஊனமுற்றவர்கள், இயலாதவர்கள் , விழி ஒளி இழந்தவர்கள் என இவர்கள் போன்றவார்களை நேரிலோ அல்லது திரையிலோ கஷ்டப்படும்படி பார்க்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். சில நேரங்களில் அழுதது கூட உண்டு(நான் கடவுள் படத்தில் )..
  இந்த படம் முழுக்க முழுக்க விழி ஒளி இழந்தவர்கள் பற்றிய கதை என்பதால் நான் இதுவரை படத்தை பார்க்காமல் தள்ளி போட்டுக்கொண்டே வந்தேன் .

  தங்களின் ராஜி முருகன் அவர்களின் வட்டியும் முதலும் புத்தக விமர்சனத்தை படித்த பின்பு கூட எனக்கு படத்தை பார்க்க மனதில் தைரியம் வரவில்லை .. வருகின்ற விமர்சனம் எல்லாம் நல்ல படியாக வருவதால் பார்க்கலாம் என்று இருக்கிறேன் . எனவே இப்படத்தில் ஹீரோ ஹீரோயினை கண் இருக்கும் கொடூரர்கள் கொடுமை படுத்தும் காட்சி இருக்கிறதா என சொல்லவும் அண்ணா . அப்படி ஏதாவது ஒரு காட்சி இருந்தாலும் நிச்சயம் நான் இதை பார்க்க மாட்டேன் .. எனக்கு அதிகமான பலகீனமான மனசு … அதான் கேட்கிறேன் அண்ணா

  ##வட்டியும் முதலும் புத்தகம் திருவண்ணாமலையில் இருக்கும் புத்தக கடைகளில் கிடைக்கவில்லை அண்ணா . ஆன்லைனில் கிடைக்குமா என்று சொல்லவும்

 5. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ராஜா ரைட்டு 🙂

  @சரத் பாருங்க.. உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

  @யாசின் வாங்க ஒருவாரமா ஆளைக் காணோம். ஊருக்கு போயிட்டீங்களா!

  நீங்க அப்ப இருந்தே ரொம்ம்ம்ம்ப நல்லவரா இருந்து இருக்கீங்க போல 🙂

  இளையராஜா தீவிர ரசிகரா இருப்பீங்க போல இருக்கே! ரைட்டு. எனக்கு 2000 வரைக்கும் வந்த பாடல்களே பிடித்தது. தற்போது நான் கடவுள் கமல் படங்களுக்கு இசை அமைத்தது போன்ற சில படங்களின் பாடல்கள் தான் பிடித்தது.

  @ராஜசேகரன் அப்ப பார்த்துட்டீங்க 🙂

  @கார்த்தி ஆஹா! கார்த்தி நீ அநியாயத்திற்கு இளகிய மனசு கொண்டவனா இருக்கியே! 🙂

  கொடுமைப் படுத்தும் காட்சி என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவு இருக்கு.. இதில் இரு காட்சிகளில் இருவருக்கும் அடி விழும் ஆனால், அது கொடுமைப் படுத்துவது போல இல்லை.. முரட்டுத்தனமாக நடந்து கொள்வது போல இருக்கும்.

  இவ்வளவு பலகீனமான மனசா இருக்கக் கூடாது.. கொஞ்சம் டெவலப் பண்ணிக்க கார்த்தி.. இதை விட பல விசயங்களை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டி வரும். நல்லவனா இருக்கலாம்.. ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது 🙂

  வட்டியும் முதலும் ஆன்லைனில் வாங்கலாம் http://books.vikatan.com/index.php?bid=2062

 6. கிரி.. நேற்று இரவு தான் குக்கூ படம், இல்லை (காவிய)த்தை பார்த்தேன்.. மிகவும் தரமான படம் என்பதில் எந்த மறுப்பும் இல்லை.. சுதந்திர கொடி தோழியின் நடிப்பு அற்புதமாக இருந்தது..உங்கள் விமர்சனமும், படமும் ஒரே மாதிரியாக இருந்தது மகிழ்வாக இருந்தது… நண்பன் சக்தியிடம் பார்க்குமாறு கூறினேன்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here