திருவின் குரல் (2023) | மருத்துவமனை ஆபத்துகள்

4
திருவின் குரல்

ருள்நிதி, பாரதிராஜா நடிப்பில் ஒரு த்ரில்லர் படம் திருவின் குரல். Image Credit

திருவின் குரல்

அருள்நிதியின் அப்பா பாரதிராஜா கட்டிட விபத்தில் அடிபட்டதால், மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.

அங்கே பணிபுரிபவர்களுக்கும் அருள்நிதிக்கும் பிரச்சனையாகிறது. இறுதியில் என்ன ஆனது என்பதே திருவின் குரல்.

அருள்நிதி

வாய் பேசாதவராகவும், காது கேட்கும் திறன் குறைவாக உள்ளவராக வரும் அருள்நிதியை துவக்கத்திலேயே அடிதடியான ஆள், அநியாயத்தைக் கண்டு பொங்குபவராகக் காட்டி விட்டார்கள்.

அருள்நிதி இயல்பாக நடிப்பார் ஆனால், கோபப்பட்டால் நெற்றியை, கண்ணைச் சுருக்கி முறைப்பதை அவர் மாற்றிக்கொண்டால் நல்லது.

ரொம்பச் செயற்கையாக உள்ளது.

படம் முழுக்க வாய்ப் பேசாமல் சைகையின் மூலமே பேசுவது என்றால், எப்படி முழுப்படத்தையும் பார்ப்பது என்ற குழப்பம் வந்தது.

ஒருவேளை கொஞ்ச நேரம் கழித்து அதிர்ச்சியில் குரல் வந்து விடுமோ என்றெல்லாம் நினைத்தேன் ஆனால், அப்படியெதுவும் நடக்கவில்லை 🙂 .

ஆனால், இக்குறை தெரியாதபடி படம் முழுக்கப் பரபரப்பாகவே கொண்டு சென்றுள்ளார்கள். இப்படியொரு எண்ணமே வராத அளவுக்குத் திரைக்கதை உள்ளது.

அருள்நிதி ஜோடியாக ஆத்மிகா, இவருக்குக் குறிப்பிட்டு கூற எதுவுமில்லை. அருள்நிதி குடும்பத்துடன் ஒருவராக வந்து செல்கிறார்.

மருத்துவனை வில்லன்கள்

மருத்துவமனையில் காவலராக, கம்பௌண்டராக, லிப்ட் ஆப்பரேட்டராக உள்ளவர்கள் குற்றச்செயல்களில் குழுவாக ஈடுபடுவார்கள்.

இக்குழுவில் லிப்ட் ஆப்பரேட்டராக வரும் பெரியவர் தான் முதன்மை வில்லன். அவரிடம் ‘நீங்க தான் மெயின் வில்லன்‘ என்று இயக்குநர் கூறும் போது ‘நம்மைக் கலாயிக்கிறானுகளா!‘ என்று நினைத்து இருப்பார்.

வயது ஒரு பெரிய விஷயம் இல்லையென்றாலும், ஆள் குச்சிக்குச் சட்டை போட்ட மாதிரி இருக்கார். மருத்துவனை டேபிள் ஃபேனை இவர் பக்கம் திருப்பினாலே பறந்து விடுவார் போல 🙂 . இவர் மிரட்டுவதும், அடிப்பதும் நம்புகிற மாதிரியில்லை.

அடுத்த சில நாட்களுக்கு மருத்துவமனை சென்றால், இப்படமே நினைவுக்கு வரும் அளவுக்குப் பாதிப்பைக் கொடுத்துள்ளார்கள் என்றால் மிகையில்லை.

குற்றச்செயல்களை மறைக்க மருத்துவமனை சார்ந்து இருப்பதும் குறிப்பாக மருத்துவரல்லாத ஊழியர்களாக இருப்பதும் பார்க்க நம்பும்படி உள்ளது.

எதார்த்தம்

ஒரு குற்ற சம்பவத்தில் அருள்நிதி திடீரென்று வந்து நிற்பார், அங்குள்ளவர் ‘இவன் எப்படிடா இங்க வந்தான்‘ என்று கேட்பார், அதே சந்தேகம் எனக்கும் இருந்தது 🙂 .

இயக்குநருக்கு எப்படிப் படத்தைக்கொடுப்பது என்பதில் குழப்பம் இருந்துள்ளது. அதாவது ரியலிஸ்டிக் படமாகவா, மசாலா படமாகவா என்று.

எனவே, இரண்டையும் கலந்து ஒரு படமாகக் கொடுத்து விட்டார்.

பெரும்பான்மை படம் மருத்துவமனையிலேயே நடப்பது சலிப்பைக் கொடுத்தாலும், தொடர்ந்து பரபரப்பு இருப்பதால் படத்தைத் தொடர்ந்து நகர்த்துகிறது.

பாரதிராஜாவை இப்படத்தில் சிரமப்படுத்தி, அவரை உலுக்கி எடுத்துக் கந்தல் துணி போல ஆக்கி விட்டார்கள், பார்க்கவே பாவமாக உள்ளது.

படத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம், பின்னணி இசை. துவக்கத்திலிருந்து இறுதி வரை மிகச்சிறப்பான பின்னணி இசை.

தொடர்ந்து பரபரப்பாக வைத்து இருக்க உதவுகிறது.

கதையின் முடிவு முழுமை பெறாத மனநிலையைக் கொடுக்கிறது, இன்னும் எதோ மிச்சம் இருப்பது போன்ற உணர்வு.

யார் பார்க்கலாம்?

அனைவருமே பார்க்கலாம் குறிப்பாக த்ரில்லர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள்.

இளகிய மனதுள்ளவர்களுக்குச் சில காட்சிகள் நெருடலை கொடுக்கலாம்.

NETFLIX ல் காணலாம்.

Directed by Harish Prabhu
Written by Harish Prabhu
Starring Arulnithi, Bharathiraja, Aathmika
Cinematography Sinto Poduthas
Edited by Ganesh Siva
Music by Sam C. S.
Production company Lyca Productions
Distributed by Lyca Productions
Release date 14 April 2023
Running time 119 minutes
Country India
Language Tamil

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. அருள்நிதியின் பிருந்தாவனம் படம் பாருங்க. அதிலும் வாய் பேசாதவராகவே நடித்திருப்பார். ஆனால் அது இடைவேளை வரை மட்டுமே. செமையா இருக்கும் படம். ஊட்டியில் எடுத்த படம் விவேக் நடித்திருப்பார். படத்தில் அவர் நடிகர் விவேக்காகவே வருவார். நல்ல ஜாலியான ஃபீல் குட் மூவி. Sun Nxt OTT இல் இருக்கிறது

 2. @ஹரிஷ்

  “அருள்நிதியின் பிருந்தாவனம் படம் பாருங்க.”

  பரிந்துரைக்கு நன்றி பார்க்கிறேன் 🙂 .

 3. அருள்நிதியின் முதல் படமான வம்சம் படத்திலிருந்தே எனக்கு அவரது நடிப்பு மிகவும் பிடிக்கும்.. குறிப்பாக அவரது அலட்டல் இல்லாத உடல்மொழி + தனிப்பட்ட குரல். களத்தில் சந்திப்போம் படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது..

  விஜய் சேதுபதி போல் எல்லா படங்களிலும் நடிக்காமல் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். குறிப்பாக இவர் நடிக்கும் படங்கள் பிரமாண்டமாக இல்லாமல் இருந்தாலும், அட்லீஸ்ட் படத்திற்கு மினிமம் கியாரண்டி உண்டு. இந்த படத்தை பார்க்க வில்லை.. நேரம் கிடைக்கும் போது பார்க்க முயற்சி செய்கிறேன். பகிர்வுக்கு நன்றி கிரி.

 4. @யாசின் இவர் ஒரு தனிப்பாதையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பயணிக்கிறார் 🙂 .

  இவரது டிமாண்ட்டி காலனி எனக்கு ரொம்ப பிடித்த படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here