Adaminte Makan Abu [2011] “ஹஜ்” பயண போராட்டம்

11
Adaminte Makan Abu

யதான ஏழ்மை முஸ்லிம் தம்பதியினர், முஸ்லிம்களின் புனிதப் பயணமான “ஹஜ்” செல்ல முடிவு செய்து பணம் சேர்க்க முயற்சிக்கின்றனர். இறுதியில் அவர்கள் “ஹஜ்” பயணம் செல்ல முடிந்ததா? என்பது தான் Adaminte Makan Abu கதை.

Adaminte Makan Abu

இந்துக்களில் எப்படி தங்கள் வாழ்க்கையின் இறுதியில் ஒரு முறையாவது இந்துக்களின் புண்ணியத் தலமான “காசி” சென்று வந்து விட வேண்டும் என்று நினைப்பார்களோ அது போல முஸ்லிம்களுக்கு “ஹஜ்”.

காசி செல்வது விருப்பம், ஹஜ் செல்வது கடமை. Image Credit

“ஹஜ்” பயணம் என்பது என்ன?

ஹஜ் (Hajj) என்பது முஸ்லிம்கள் ஆண்டுதோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது இறைவனை வணங்குவதற்கான ஓர் தனி முறையாகும்.

உடல் நலமும் பணவசதியும் உள்ள இஸ்லாமியர் ஓவ்வொரும் தன் ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் செய்ய வெண்டும்.

ஹஜ் புனிதப் பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் (அல்லாஹ்) அர்ப்பணிப்பதாகக் கருதப்படுகிறது.

துல்ஹஜ் மாதத்தின் 8-ஆம் நாள் முதல் 12 ஆம் நாள் வரை சவூதி அரேபியாவில் உள்ள மினா, அறஃபாத், முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் தங்குவது.

அந்நாட்களில் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவது, மக்கா நகரில் உள்ள திருக் கஃபாவைத் தவாஃப் செய்வது ஆகியவை ஹஜ்ஜின் முக்கிய அம்சங்களாகும்.

இந்தப் புனிதப் பயணமானது ஹிஜ்ரி நாட்காட்டியின் படி 12 வது மாதமான துல் ஹிஜ்ஜாவின் 8 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் தேதி வரை நடைபெறும்.

ஹிஜ்ரி நாட்காட்டி சந்திர நாட்காட்டி என்பதால் ஆங்கில நாட்காட்டியை விட இது பதினொரு நாட்கள் குறைவாக இருக்கும்.

எனவே ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில நாட்காட்டியில் இந்த நாட்கள் மாறி வரும். இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொரு இஸ்லாமியரும் இஹ்றாம் என்னும் புனித நிலையில் இருக்க வேண்டும். Source – http://ta.wikipedia.org

அபு, அத்தர் போன்ற நறுமண பொருட்கள், மத புத்தகங்கள் மற்றும் உனானி மருந்துகளை விற்பனை செய்து வருபவர்.

இதெல்லாம் விற்பனை ஒன்றுமே இருக்காது என்று படிக்கும் உங்களுக்குப் புரிந்து இருக்கும்.

இவரும் வேறு வழி இல்லாததால் தனக்குத் தெரிந்த இந்தத் தொழிலையே செய்து, மனைவியுடன் காலத்தை ஓட்டிக்கொண்டு இருப்பார்.

இவரது மனைவி ஐஷு மாடு, கோழிகளை வளர்த்துச் சிறிய அளவில் கணவருக்கு உதவியாக இருப்பார்.

அனைத்து முஸ்லிம்களுக்கும் இருக்கும் ஆசையான ஹஜ் செல்ல வேண்டும் என்பது அபுவின் நீண்ட கால கனவு.

அதற்குண்டான பொருளாதார வசதி இல்லாததால், என்ன செய்வது என்று குழப்பத்தில் ஆழ்கிறார்.

பலா மரம்

தங்கள் வீட்டின் முன்பு உள்ள பெரிய பலா மரத்தை விற்று அதன் மூலம் பணம் பெறலாம் என்று முடிவு செய்து மர வியாபாரியான கலாபவன் மணியைச் சென்று பார்த்து விலை பேசி முடிப்பார்கள்.

கிறித்துவரான கலாபவன் மணி கதாப்பாத்திரம் உதவும் மனப்பான்மை கொண்ட கதாப்பாத்திரமாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

நீங்கள் கேரளா சென்றால் கவனித்து இருக்கலாம், மரங்கள் அதிகம் இருக்கும் அதில் பலா மரங்கள் பெரும்பாலான வீடுகளில் இருக்கும்.

ஏகப்பட்ட பலா பழம் கேட்பாரற்று தொங்கிக் கொண்டு இருக்கும்.

இதில் வருகிறவர்கள் பலர் நல்ல எண்ணம் கொண்டவர்களாக உதவி செய்பவர்களாக இருக்கிறார்கள். ஆசிரியரான இந்து மதத்தை சார்ந்த நெடுமுடி வேணு, அபு வீடு அருகே வசிப்பார்.

“ஹஜ்” செல்ல பணத்திற்காக அபு சிரமப்படுவதை அறிந்து பண உதவி செய்ய முயல்வார்.

அதற்கு அபு “சகோதரன், ரத்த சொந்தத்தில் மட்டுமே ஹஜ் செல்ல உதவி பெற முடியும்” என்று கூறியதும், “என்னை உன்னோட சகோதரன் என்று சொன்னியே அபுக்கா” என்று நெடுமுடி வேணு கூறுவது அருமையான காட்சி.

முகேஷ்

நடிகர் முகேஷ் ட்ராவல்ஸ் நடத்துபவராகவும் “ஹஜ்” பயண முகவராகவும் வருவார். 

முஸ்லிமான முகேஷ் அபுக்கு உதவி செய்ய முன்வருவார், உடன் அதற்கு இவர் கூறும் காரணம் மனதை தொடும் படி இருக்கும்.

முகேஷ் நடந்து கொள்ளும் முறையைக் கண்டு தம் மகன் போலவே இருப்பதாக அபு மனைவி கூறியதும் அதற்கு அபு, “இவர் நல்லவர்” என்று கோபத்துடன் கூறுவார்.

அதாவது இவர் மகன் சரியில்லை அதனால் தம் மகனுடன் இவரை ஒப்பிட வேண்டாம் என்பதை மறைமுகமாகக் கூறுவார்.

சலீம் குமார் மனைவியாக வரும் ஜரினா (இவர் உண்மையில் முஸ்லிம்) அப்படியொரு பொருத்தம்.

இவரின் கதைக்குப் பொருத்தமான தன்னுடைய அமைதியான நடிப்பால், படம் பார்ப்பவர்களை நம் குடும்பத்தில் ஒருவர் போலவே நினைக்க வைக்கிறார்.

படம் பார்ப்பவர்கள் தங்களின் “அம்மா” போலவே இவர் இருப்பதாக நினைத்தால், எந்த வியப்பும் இல்லை.

சலீம் குமார்

சலீம் குமாரின் நடிப்பு அசத்தலாக இருக்கிறது. இவரின் 42 வயதில் இந்தப் படத்தில் நடித்து இருக்கிறார் ஆனால், பார்த்தால் 70 வயது நபர் போலவே இருக்கிறார்.

நான் நிஜமாகவே இவர் ரொம்ப வயதானவர் என்று நினைத்து இருந்தேன்.

விக்கிபீடியாவில் படித்த பிறகு தான் இவரின் வயதே தெரியும்.

களைப்படைந்த உடல், சோகமான முகம், நடக்குமா என்று எதிர்பார்ப்பில் உள்ள மனது, எப்படி பணத்தை தயார் செய்யப் போகிறோம் என்ற கவலை, பணம் கிடைத்து விடுமா என்று எதிர்பார்ப்பு என்று மனுசன் நடிப்பில் பின்னி எடுத்து இருக்கிறார்.

இந்தப் படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

அபுவே ஏற்கனவே சிரமத்தில் இருப்பார், இருந்தும் போகும் போது வெறும் கையோடு எப்படி போவது என்று பழங்கள், பிஸ்கட் வாங்கிச் செல்வார்.

அங்கு இவர் சந்திக்கும் நபர் கூறும் சில விஷயங்கள் / புரிதல்கள் கேட்டு நான் கண்கலங்கி விட்டேன்.

அசத்தலான திரைக்கதை

தெளிந்த நீரோடை போல திரைக்கதை, ஆர்ப்பாட்டமில்லாத இசை, கதைக்கும் இயக்கத்திற்கும் ஏற்ப ஒளிப்பதிவு என அனைத்துமே அருமையாக அமைந்து உள்ளது.

ஒளிப்பதிவு பல இடங்களில் ரசிக்க வைக்கிறது, இதை திரையரங்கில் பார்க்க முடியாமல் போய் விட்டதே என்று எனக்கு ஏமாற்றம்.

இவ்வளவு அருமையான படத்தை எடுத்து சிறந்த படம், நடிகர், பின்னணி இசை [BGM], ஒளிப்பதிவு என்ற நான்கு தேசிய விருதும் பெற வைத்த இயக்குனருக்கு இது முதல் படம் என்பது வியப்பளிக்கும் அளிக்கும் விஷயம்.

தயாரிப்பிலும் இவர் இருக்கிறார். தேசிய விருது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட மற்ற விருதுகளை இப்படம் அள்ளியுள்ளது.

இது ஒரு உலகப்படம் தான். உலகில் உள்ள எவராலும் புரிந்து கொள்ளக் கூடிய கதை / நடிப்பு. சலீம் குமாருடன், தனுஷ் “ஆடுகளம்” படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

எல்லோரும் “ஹஜ்” பற்றிச் சொல்றாங்களே அப்படி என்ன தான் அங்கே இருக்கு! ஒரு முறை நாமும் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

பின்னர் தான் தெரிந்தது அங்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே அனுமதி என்று.

இந்தப் படம் பார்க்கும் போது இந்த வயதான தம்பதியினர் பணத்திற்காகச் சிரமப்படுவதையும், அந்தச் சிரமத்திலும் அங்கு ஒரு முறையாவது சென்று வந்து விட வேண்டும் என்ற இவர்களின் ஏக்கத்தையும் பார்த்துக் கலங்கி விட்டேன்.

சொந்த உழைப்பில், ரத்த உறவுகளில் கொடுக்கப்படும் உதவி மட்டுமே ஹஜ் பயணத்திற்கு ஏற்கப்படும் என்று இஸ்லாம் கூறுகிறது.

இந்தப் படத்தை அனைத்து முஸ்லிம்களுக்கும் மற்றும் நல்ல படத்தைக் காண நினைக்கும் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.

Directed by Salim Ahamed
Produced by Salim Ahamed, Ashraf Bedi
Written by Salim Ahamed
Starring Salim Kumar, Zarina Wahab
Music by Background score: Isaac Thomas Kottukapally,
Cinematography Madhu Ambat
Editing by Vijay Shankar
Studio Allens Media
Release dates June 24, 2011
Running time 101 minutes
Country India
Language Malayalam

முஸ்லிம் நண்பர்கள்

அப்துல்லா

என்னுடைய தளத்தை பல முஸ்லிம் நண்பர்கள் படித்து வந்தாலும், எனக்கு நெருங்கிய பழக்கம் என்றால் அது அப்துல்லா மற்றும் யாசின் தான்.

புதுகை அப்துல்லா” பற்றி அறிமுகம் தேவையில்லை. இணையம் பயன்படுத்தும் குறிப்பாக வலைப்பதிவில் உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்கும்.

திமுகவில் உள்ளவர். கலைஞர், ஸ்டாலின் போன்றவர்களுக்கு மிக நெருக்கமானவர்.

திமுக என்ற கட்சி அடையாளம் இருந்தும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்படுபவர்.

இவர் அனைவரையும் “அண்ணன்” என்று தான் அழைப்பார். என்னோட பையன் வினய் பிறந்த போது “தம்பி அண்ணன் எப்படி இருக்காரு?” ன்னு கேட்டு என்னை கிறுகிறுக்க வைத்தவர் 🙂 .

சென்னை வந்த போது சந்தித்தேன். முதன் முதலாக சந்தித்த Blogger அப்துல்லா தான், அவர் சந்தித்த முதல் Blogger ம் நான் தான்.

தற்போதைய பிரபலம் அளவிற்கு 2008 துவக்கத்தில் இவரில்லை, தற்போது அபரிமிதமான வளர்ச்சி. அன்றில் இருந்து இன்று வரை நல்ல நண்பர்.

இவருக்கும் எனக்கும் கட்சி / மதம் சார்ந்த பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மனதிற்கு ரொம்ப பிடித்தமானவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஒரு முறை ரஜினி குறித்த ஒரு பதிவில் ஒருவர் “ரஜினிக்காக ஏன் இப்படி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?” என்கிற ரீதியில் கருத்துக் கூறிய போது, எனக்காக அப்துல்லா கூறியதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

அது “பொதுவில் வந்துவிட்ட எவரையும் விமர்சிக்க நமக்கு உரிமை உண்டு.

அதே நேரத்தில் நம்மால் விமர்சிக்கப்படும் நபரைப் பற்றி விமர்சிக்கும் முன் முழுமையாக அறிந்து கொள்ளும் கடமையும் நமக்குண்டு.” என்று கூறி இருந்தார்.

அந்த சமயத்தில் இது ரொம்ப டச்சிங்காக இருந்தது. இது நடந்து ஐந்து வருடம் ஆகி விட்டாலும் இன்றும் எனக்கு மறக்கவில்லை.

இது எனக்காக கூறியது என்பதால் மட்டுமல்ல, இது அனைவருக்கும் பொருத்தமான ஒன்று.

யாசின்

என் தளத்தில் சமீப வருடங்களில் கருத்திட்டு இருந்தால், நிச்சயம் யாசின் கமெண்ட் பார்க்காமல் இருந்து இருக்க முடியாது. எந்தப் பதிவிலும் இவர் கமெண்ட் இருக்கும்.

இவர் போடும் கமெண்ட் டெம்ப்ளேட் கமெண்ட் ஆக இருக்காது. ஒவ்வொரு பதிவிற்கும் விளக்கமாக ஆர்வமாக ஏதாவது கூறுவார்.

உண்மையில் இது போன்று கூறுவது தான் என்னைப் போன்று எழுதுபவர்களுக்கு ஒரு ஊக்கம்.

எனவே தான், எனக்கு தொடர்ந்து ஊக்கம் தருபவர்களை நான் என்றும் மறப்பதில்லை அதோடு, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் தவறுவதில்லை.

யாசின் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர் என்றாலும் இந்துப் பண்டிகைகள், தீபாவளி பற்றிய அனுபவங்கள், அவருடைய நெருங்கிய நண்பர் சக்தி என்பவரைப் பற்றிக் கூறும் போதெல்லாம் எனக்கு ரொம்ப வியப்பாக இருக்கும்.

மதம் பற்றிய சர்ச்சையான பதிவுகளில் கருத்து கூறாமல் தவிர்த்து விடுவார் 🙂 .

இவர் எப்படிப்பட்டவர் என்பதற்கு கடந்த வாரம் எழுதிய தைப்பூச பதிவில் இவரின் பின்னூட்டம் பார்த்தால் புரியும்.

இந்தப் பதிவை அப்துல்லா, யாசின் மற்றும் என்  தளத்தைப் படிக்கும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் சமர்பிக்கிறேன்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

11 COMMENTS

  1. “அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் சமர்பிக்கிறேன்”

    — அப்போ இந்து நண்பர்களுக்கு எப்போ பாஸ் பதிவ சமர்பிக்க போறீங்க? (ஒரு தமாசுக்காக பாஸ்)

  2. கிரி. நீங்கள் சொல்லவது 100% சரி தான். உண்மையில் மதம் சம்மந்தமான & சர்ச்சையான பதிவுகளில் என்றுமே என் கருத்தை தெரிவிப்பது இல்லை. அதே போல் யாருடனும் விவாதிப்பதும் இல்லை. (அப்படி விவாதிப்பது என் பார்வையில் சரி என்றும் தோன்றவில்லை).

    நான் முன்பே குறிப்பிட்டது போல சில கோவில்களுக்கு என் நண்பன் சக்தியுடன் சென்று வந்து உள்ளேன். என்னை பொறுத்தவரை கோயில் ஒரு சிற்பக் கூடம்… சிற்பங்கள், கட்டிடங்கள், கோவிலை சுற்றியுள்ள குளங்கள், தீபங்கள், பாடல்கள், ஓவியங்கள், மணியோசைகள், பூக்கள், எனக்கு விருப்பமனவைகள் இவைகள். பழைய கோவில்களும், கோட்டைகளும் எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்று. இந்தியாவை சுற்றி உள்ள வழிபாட்டு தளங்களையும், கோட்டைகளையும், மலைகளையும் நண்பன் சக்தியுடன் காண வேண்டும் என்பது எதிர்கால கனவு திட்டம்.

    நீங்கள் குறிப்பிட்ட மலையாள படத்தை நான் பார்க்கவில்லை கிரி. படம் பார்த்த பின் என் கருத்தை நான் கூறுகிறேன். நீங்க இந்த படத்தை அதிகம் விரும்பி பார்த்து இருப்பதால் கிட்டதட்ட இதே கதை அம்சம் கொண்ட Le Grand Voyage என்ற இந்த பிரெஞ்சு படத்தை பார்த்துவிட்டு உங்களின் கருத்தை பரிமாறவும். நிச்சயம் இந்த படம் உங்களுக்கு விருப்பமானதாக இருக்கும் என நம்புகிறேன்.

    என்னை பற்றி நீங்கள் குறிபிட்டதை படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களோட எழுத்தை ரசிக்கிற ஒரு சாதாரண வாசகன் தான் நான். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கடலில் கலந்த ஒரு துளி போல. பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி.

  3. அண்ணா எனக்கு படம் பாக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு . ஆனா எனக்கு மலையாளம் தெரியாது .. இந்த படத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் எங்காவது கண்டா அந்த லிங்கை பகிரவும் அண்ணா …

    அதுவரை நானும் இதை தேடிக்கொண்டு இருப்பேன் அண்ணா …..

    உண்மையிலே எனக்கு தெரிந்து இஸ்லாமியர்கள் தான் இறை நம்பிக்கையில் முதல் இடத்தில் உள்ளனர் அண்ணா … நாம என்ன தான் படையையும் நாமத்தையும் போட்டுக்கிட்டு கடவுள் கடவுள் நு கூப்பாடு போட்டாலும் தினமும் அந்த கடவுளை வழிபடுபவர்கள் நம்மில் மிகவும் குறைவு … ஆனால் இஸ்லாமியர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுகிறார்கள் .. அதுவும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சின்ன குழந்தைங்க கூட லுங்கி கட்டி கொண்டு மசூதி செல்வது பார்த்தால் பொறாமையாக இருப்பதை ஒத்துக் கொள்ள தான் வேணும் .

    இந்த பதிவை என் நண்பன் ஜாபர் அலிக்காக பிரின்ட் எடுத்துக்குறேன் அண்ணா .. கோவிச்சுக்காதிங்க

  4. கிரிண்ணே, இன்றைக்கும் உங்களது ஒவ்வொரு இடுகைக்கும் வந்துகொண்டுதான் இருக்கிறேன். என்ன முன்போல் அனைத்து இடுகைகளுக்கும் பின்னூடமிடுவதில்லை. நீங்கள் சொன்ன்படி 2008 பார்த்த அப்துல்லாவிற்கும் இன்று இருக்கும் அப்துல்லாவிற்கும் உயரம் மிக அதிகமாகிவிட்டது. நேரமின்மை. நேரம்தான் இல்லை. நட்பும்,அன்பும் அப்படியேதான் இருக்கிறது 🙂

  5. அருமையான விமர்சனம் கிரி, படம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்.

  6. /உண்மையிலேயே முஸ்லிமாக
    இருப்பதால், இந்தக்
    கதாப்பாத்திரத்தை ரொம்ப
    ரசித்து செய்து இருப்பார்
    என்றே நினைக்கிறேன். / கிரி அவர்களே.. சலீம் குமார் முஸ்லிம் பெயர் போன்று இருந்தாலும் உண்மையில் அவர் இந்து ஆவார். அவருடைய பேட்டியின் வழியாகவே இதை அறிந்திருக்கிறேன்.

  7. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @கௌரி ஷங்கர் விரைவில் நீங்கள் எதிர்பார்க்கும் கட்டுரை வரும் 🙂

    @யாசின் அப்துல்லா ரைட்டு 🙂

    @கார்த்திகேயன் இதை எளிதா torrent ல் இருந்து தரவிறக்கம் செய்யலாம். எனக்கும் மலையாளம் தெரியாது சப்டைட்டில் தான் 🙂

    @சரத் நன்றி மாற்றி விடுகிறேன். இவர் இந்து என்று முன்பே தெரிந்து இருந்தால், இன்னும் கொஞ்சம் எழுதி இருப்பேன்.

  8. ிரி அவர்களுக்கு ,உண்மையில் இந்த படம் பார்த்து மனம் கலங்கி விட்டது .சூப்பர் படம் .

  9. கிரி சார் நீண்ட நாட்களாகவே இந்த படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன் அதற்க்கான சந்தர்ப்பங்கள் சரியாக அமையவில்லை இந்த திரைவிமர்சனம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. எனக்கும் வாழ்நாளில் ஒருநாள் ஹஜ் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் இப்பொழுது தான் முஸ்லிம் இல்லாத ஒருவர் அங்கு செல்ல முடியாது என்பது தெரிந்தது அது மிகவும் வருத்தமாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here