சூரரைப் போற்று (2020) | விமானப் பயணக் கனவு

8
சூரரைப் போற்று soorarai pottru

சாமானியனும் விமானத்தில் பறக்க வேண்டும் என்று நினைக்கும் சூர்யாக்கு எதிராக அவரது போட்டியாளர் நெருக்கடி கொடுக்கிறார். இதைக் கடந்து சூர்யா வெற்றி பெற்றாரா இல்லையா? என்பதே சூரரைப் போற்று.

சூரரைப் போற்று

இந்தியாவில் என்ன ஆரம்பிப்பது என்றாலும், அதிலும் முதல் முறையாக என்றால், கடுமையான எதிர்ப்புகள். இவற்றையெல்லாம் தாண்டி வருவதே பெரும் சவால்.

கதை டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் கோபிநாத் வாழ்க்கையின் சில சம்பவங்களைப் பயன்படுத்தியுள்ளது. Image Credit

மதுரை சோழவந்தான் கிராமத்து நபரான சூர்யா தன் கனவை அடையும் போராட்டத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தியுள்ளார். பல இடங்களில் கண் கலங்க வைத்து விட்டது. உறுத்தாமல் கதை நகர்கிறது.

சூர்யா எதனால் குறைந்த கட்டண விமான நிறுவனம் துவங்க வேண்டும் என்பதற்கு நியாயமான காரணத்தைக் கூறியுள்ளார்கள்.

சூர்யா ஜோடியாக வரும் அபர்ணா செம்ம பொருத்தம்.

இருவருமே அடாவடி பேர்வழிகள் என்பதால், காட்சிகள் நம்பும்படியும், அதே சமயம் கதையோடு தொடர்புடையதாகவும் உள்ளது.

அபர்ணா கதாப்பாத்திரத்துக்கு ஏற்ற உடல்மொழி. தூள் கிளப்பியுள்ளார்.

சூர்யாக்கு செக்

இரண்டு நிமிஷம் தான் பார்த்தாரு கால் அமுக்கி விடச் சொல்லிட்டாரு‘ன்னு வடிவேல் சொல்ற மாதிரி, பெரிய விமான நிறுவன முதலாளி Paresh Rawal பத்து நிமிஷம் யோசித்துச் சூர்யாக்குச் செமையா செக் வைத்து விடுவார்.

Paresh Rawal பெரிய நிறுவன முதலாளி கதாப்பாத்திரத்துக்கு நன்கு பொருந்துகிறார். கூடவே விஜய் மல்லையாவையும் இழுத்துள்ளார்கள். கோபிநாத் இவரிடம் தான் டெக்கானை பின்னர் கொடுத்தாரென நினைக்கிறேன்.

குறைந்த கட்டணம்

தேவையற்ற செலவுகளைக் குறைத்து குறைவான கட்டணத்தில் விமானத்தை ஏன் இயக்க முடியாது? என்பதே சூர்யா கேள்வி. இதையே பலமுறை யோசித்துள்ளேன்.

பெரிய வசதிகளோ, இலவச உணவுகளோ வேண்டாம், ஓரமா உட்கார சொன்னால் கூட உட்கார்ந்துட்டுப் போய்டலாம். நமக்குத் தேவை விரைவான பயணம் அவ்வளவே!

சென்னையில் இருந்து சிங்கப்பூர் போகவே 4.20 மணி நேரங்கள் தான். இதில் எப்படிப்போனால் என்ன? எதற்குச் சொகுசு? தேவைப்படுபவர்கள் சொகுசு விமானத்தில் போகட்டும், மற்றவர்கள் பட்ஜெட் விமானத்தில் போகலாமே!

இன்னமும் கூட விமானப்பயணம் பலருக்குக் கனவு தான்.

சூர்யா கனவுக்கு உதவும் நண்பர்களாகப் பிரசன்னா, காளி வெங்கட், கிருஷ்ணகுமார்.

அம்மாவாகச் சென்டிமென்ட்டாக ஊர்வசி. அபர்ணா சித்தப்பாவாக வரும் கருணாஸ் பணம் கொடுக்க உதவும் காட்சியில் அப்பாவித்தனத்தால் மனத்தைத் தொடுகிறார்.

ஒளிப்பதிவும் இசையும்

நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு அட்டகாசம். 1995 – 2005 இடைப்பட்ட காலத்தை உறுத்தாமல் காட்சிப்படுத்தியுள்ளார்.

இதற்குக் கலை இயக்குனரின் பங்கும் முக்கியமானது.

ஜி வி பிரகாஷ் இசை செமையாக உள்ளது. முக்கியமாகப் பாடல்கள் வரும் இடங்கள் திணிக்கப்பட்டதாக இல்லாமல் இருப்பது இசைக்குக் கூடுதல் பலம்.

சில காட்சிகள் சூர்யாக்கு எப்படிச் சாத்தியமானது என்று கேள்விகள் வந்தாலும் குறிப்பாகப் பணப் பிரச்சனையைக் கையாளும் விதம், திரைக்கதை சிறப்பாக இருந்ததால், உறுத்தாமல் கடந்து விடுகிறோம்.

சூர்யா அனைத்துப் படங்களிலும் விரைப்பாகவே இருக்கிறார். இதை மட்டும் குறைத்துக் கொஞ்சம் இயல்பு காட்டினால் சிறப்பாக இருக்கும்.

இயக்குநர் சுதா கொங்காரா இறுதிச் சுற்றுப் படத்திலேயே அசத்தி இருந்தார். இதிலும் தன் திறமையை நிரூபித்துள்ளார். கதைக்கு ஏற்றப் பொருத்தமான தலைப்பு!

சூரரைப் போற்று தரமான படம். அனைவரும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். திரையரங்கில் பார்த்து இருந்தால் இன்னும் செமையாக இருந்து இருக்கும்.

Directed by Sudha Kongara
Produced by Suriya, Guneet Monga
Written by Vijay Kumar (dialogues)
Screenplay by Sudha Kongara, Shalini Ushadevi, Aalif Surti, Ganesha
Story by Sudha Kongara
Starring Suriya, Paresh Rawal, Aparna Balamurali, Urvashi, Mohan Babu
Music by G. V. Prakash Kumar
Cinematography Niketh Bommireddy
Edited by Sathish Suriya
Release date 11 / 12 November 2020
Amazon Prime Video
Running time 149 minutes
Country India
Language Tamil

கொசுறு

இப்படம் பார்த்தவர்கள் பின்வரும் என் முதல் விமானப் பயண அனுபவத்தைப் படித்துப்பாருங்கள். சூரரைப் போற்று இறுதிக் காட்சி உங்களுக்கு நினைவுக்கு வரும்.

இதே டெக்கான் பட்ஜெட் விமானப் பயணம் தான் என்னுடையதும் 🙂 .

முதல் விமானப் பயண அனுபவம்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. திரையரங்கில் பார்த்து இருந்தால் ஆயிரம் ரூபாய் காணாமல் போய் இருக்குமே? என் ஆசை விநியோகஸ்தர்கள் திரையரங்க லாபி வட்டம் அடுத்த சில வருடங்களில் உடைத்து நொறுக்க வேண்டும். ரசிகர்கள் என்ற பெயரில் பெருங்கூட்டமுள்ள இளையர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்கள் கைக்காசை எவன் எவனுக்கோ செலவளித்து தங்கள் வாழ்க்கையை இழந்தவர்களை பலரையும் நான் பார்த்துக் கொண்டு வருகிறேன். அவர்கள் வாழ்க்கையில் ஓடிடி வரம். மற்றபடி நல்லபடம் என்பதோடு தமிழ்ச் சமூகம் கடந்து செல்ல வேண்டும். நடிகர்களை கொண்டாடும் மனோநிலையில் இருந்து வெளி வர வேண்டும். கொரானா உருவாக்கிய பாக்கியமிது.

  2. கிரி, சூரரைப் போற்று படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.. சூர்யாவோட படங்கள் அதிகம் பார்த்தது இல்லை.. ஆனால் கடந்த 20 வருசமாக சூர்யாவை பிடிக்கும்.. ஒரு திரைப்பட நடிகர் என்பதை தாண்டி அவர் மேல் மரியாதை உண்டு.. இந்த வெற்றி சூர்யாவுக்கு நிச்சயம் தேவையான ஒன்று.. சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.. அதனால் இந்த வெற்றி சூர்யாவுக்கு இரு மடங்கு உற்சாகத்தை கொடுக்கும்.. உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.. இன்று இரவு நண்பர்களுடன் படத்தை பார்க்க திட்டம் வைத்துள்ளேன்..

    நேற்று சுபியும் , சுஜாதாவும் (Sufiyum Sujatayum) மலையாள படம் Prime ல பார்த்தேன்.. எப்பா!!! என்ன!!! படம் கிரி.. கேமரா ஒர்க் பார்த்து மிரண்டு விட்டேன்..இசையும் அருமை.. (சூபிகளை பற்றி அதிகம் எனக்கு தெரியாது.. ஏதோ வரலாற்று புத்தகத்தில் படித்து இருக்கிறேன்.. அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது..) கேரளாவின் அழகு, செம்மையா காட்டி இருக்காங்க.. படம் ஆரம்பிச்சி மெதுவா போகும் போது விருப்பம் இல்லாமல் படத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்கும் போது, இயற்கை காட்சிகள், பறவையின் ஒலிகள், ஆற்றின் ஓசை என்னை படத்தை மேலும் பார்க்க வைத்தது..

    மீண்டும் ஒரு முறை அமைதியான சூழலில் படத்தை பார்க்க வேண்டும்.. படத்தின் நாயகி அதிதி ராவின் படிப்பும் மிக அருமை..நாயகனின் நடிப்பும் மிகை இல்லாமல் நன்றாக இருந்து.. காதலை மிக, மிக நளினமாக ஒரு முத்தம் கூட பரிமாறாமல் மிக சரியான அளவில் இயக்குனர் காண்பித்து இருப்பார்.. இது போல காதல் அமைந்து விட்டால்.. சொல்ல வார்த்தை இல்லை .. (பழைய காதலி பிரான்ஸ் தேசத்திலிருந்து நினைவில் வந்து விட்டு போகிறார்) நேரம் இருக்கும் போது நிச்சயம் படத்தை பார்க்கவும்.. படம் என்னை விட உங்களுக்கு மிகவும் பிடிக்கும்..

    உங்களின் முதல் விமானப் பயண அனுபவம், இரண்டு கட்டுரைகளையும் படித்து பார்த்தேன்.. நகைச்சுவையாக இருந்தது.. என் முதல் விமான அனுபவத்தையும் பின்னுட்டத்தில் சேர்க்க நினைத்தேன்.. ரொம்ப பெரியதாகி விடும் என்று விட்டு விட்டேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @ஜோதிஜி நீங்க தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    நான் சூர்யாவை ரசிகனாக கொண்டாட திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று கூறவில்லை.

    இப்படத்தின் கதை அப்படி. பாகுபலி எப்படி திரையரங்கில் பார்த்தால் தான் நன்றாக இருக்குமோ. அது போல சில படங்கள் திரையரங்கில் பிரம்மாண்டமாக பார்த்தால் தான் நன்றாக இருக்கும்.

    இதில் விமானக் காட்சிகள் அதிகம் வருகிறது. எனவே, திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன்.

    நான் திரையரங்கில் பார்ப்பதை எப்பவோ நிறுத்தி விட்டேன்.. வெகு சில படங்களே செல்கிறேன்.

    நீங்கள் கூறிய மையகருத்தில் ஏற்கனவே கட்டுரை எழுதி விட்டேன், அதை வெளியிட நினைத்த நேரத்தில் தான் சூரரைப் போற்று வந்து விட்டது.

    தற்போது வெளியிட்டால், தவறாகப் புரிந்து கொள்ளப்படும் என்பதால், சிறிது தள்ளி வைத்து விட்டேன்.

    அதில் நீங்கள் கூறிய விவரங்களும் இருக்கும்.

    @யாசின் நீங்கள் கூறுவது சரி. சூர்யாக்கு சமீப படங்கள் சரியாகப் போகவில்லை, இந்த வெற்றி அவசியமானது.

    Sufiyum Sujatayum இன்னும் பார்க்கவில்லை. அவசியம் பார்க்கிறேன்.

    உங்கள் விமானப் பயணம் பெரியதாக இருந்தால் என்ன யாசின். படிக்க நான் இருக்கிறேன் 🙂 .

    எவ்வளவு பெரிய விமர்சனம் / அனுபவமாக இருந்தால் என்ன?! தாராளமாக பதிவிடுங்கள். தயங்க வேண்டாம்.

  4. என்னுடைய விமான பயண அனுபவத்துக்கு முன் நான் எப்படி வெளிநாடு வந்தேன் என்ற கதையிலிருந்து ஆரம்பிக்கிறேன்.. 2004 ல் கல்லூரி முடித்து விட்டு வேலை ஏதும் கிடைக்காமல் 7/8 நண்பர்கள் ஒன்றாகச் சுற்றிக் கொண்டிருந்த தருணத்தில், தினமும் நாங்கள் காலை 6 மணி முதல் வேப்ப மரத்தடியில், பேப்பர் படித்துக் கொண்டே உலக விஷியங்களை அலசி ஆராய்வோம்.. அதில் என் பங்கு கூடுதலாக இருக்கும்.. பின்பு காலை உணவு, நூலகம், மதிய உணவு, இடையில் தூக்கம், மாலை கிரிக்கெட், இரவு திண்ணை பேச்சு, தூக்கம் .. என இது போலத் தான் நாட்கள் நகர்ந்தது.. நான் மட்டும் எல்லா செய்தித்தாள்களையும் பார்த்து வேலைக்காக விண்ணப்பித்துக் கொண்டே இருக்கும்.. அனுபவம் இல்லை என்பதால் நேர்காணல் கடிதம் வரவே இல்லை.. மற்ற நண்பர்கள் நல்ல backround இருந்ததால் பெரிதாக வேலைக்காக முயற்சிக்கவில்லை..

    நானும் முயற்சித்து கொண்டே இருந்தேன்..இந்த நேரத்தில் என் நண்பனின் (கல்லூரியில் எனக்கு ஜூனியர்) மைத்துனர் துபையிலுருந்து (தையல் வேலை அவருக்கு) விடுமுறையில் வந்திருக்கிறார்.. எனக்கு அவர் பழக்கம் இல்லை.. நண்பர்கள் எல்லோரும் ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள்.. தினமும் எங்கள் மீட்டிங் போது அவரும் வந்து விடுவார்.. அதிகம் பேச மாட்டார்.. சில தினங்களில் என்னை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.. (நான் ஏதோ பொறுப்பாக இருக்கிறேன், நல்ல பையன், வேலை கிடைக்கவில்லை, வெளிநாடு வேலை கிடைச்சா அம்பானிக்கே போட்டியா வந்து விடுவான் என்று என் Junior நண்பனிடம் கூறி இருக்கிறார்..) இதை Junior நண்பன் என்னிடம் கூற நான் இதைப் பொருட்படுத்த வில்லை.. சும்மா TIME PASSKU பேசுகிறார் என்று விட்டு விட்டேன்..

    அவர் விடுமுறை முடிந்து போகும் முன் என்னை பாஸ்போர்ட் எடுக்க சொன்னார்.. என் சூழலைப் புரிந்து கொண்டு பணமும் கொடுத்தார் .. நான் வாங்கவில்லை, பாஸ்போர்ட் அப்ளை பண்ணவும் இல்லை.. அவர் ஊருக்குப் போகும் முன் என்னிடம் பாஸ்போர்ட் வந்தவுடன், பயோ டேட்டாவும் சேர்த்து எனக்கு அனுப்பவும் என்று அவரின் விலாசமும், அலைப்பேசி நம்பரையும் கொடுத்தார்.. இரண்டு மாதத்திற்குப் பின் எனக்குக் கடிதம் வந்தது.. ஒரு வேலை உனக்காகக் கேட்டு இருக்கிறேன்.. பாஸ்போர்ட் , பயோ டேட்டா அனுப்பு என்றார்.. நான் அவருக்கு போன் செய்து கோபப்படாதிங்க.. நான் பாஸ்போர்ட் அப்ளை பண்ணல.. வெளிநாடு போக எண்ணம் இல்லை என்றதும் அதிர்ந்து விட்டார்.. சாரி என்று சொல்லி தொலைப்பேசியைத் துண்டித்து விட்டேன்..

    அடுத்த வருடம் விடுமுறையில் வருகிறார்.. அதே வேப்ப மரத்தடி, அதே நண்பர்கள் கூட்டம். நான் மட்டும் மிஸ்ஸிங்.. அப்போது நான் கோவையில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.. வார விடுமுறையில் ஊருக்கு வரும் போது அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டு விட்டு, நான் ஏன் உங்கள் உதவியை நிராகரித்தேன் என்ற காரணத்தையும் சொன்னேன்.. அவர் சிரித்து விட்டு தற்போதாவது பாஸ்போர்ட் எடுத்து விட்டாயா என்றார் “கெத்தா இல்லை” என்றேன்.. சரி உன் விருப்பம்.. நல்ல படியாக இரு என்று கூறி விட்டு சென்று விட்டார்..

    பின்பு நான் கோவை, திண்டுக்கல் என இரண்டு வருடங்கள் ஓடி விட்டது.. திண்டுக்கல்லில் வேலையை விட்டதற்கான காரணமே வெளிநாடு செல்ல வேண்டும் என்பதினால்தான்.. ஆனால் வேலையை விட்டு 2 மாதம் அலைந்து திரிந்த போது தான் புரிந்தது வெளிநாட்டு வேலை என்பது குதிரைக்கொம்பு.. (அந்த நேரத்தில் என் நண்பன் வெளிநாடு செல்ல 175,000 பணம் ஆகும் என்ற போது இடிந்து விட்டேன்). நான் வெளிநாடு செல்ல ஒரே காரணம் என் தாத்தா / அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும் போது நிறைய பணம் சம்பாரித்து அவர்கள் கையில் கொடுக்க வேண்டும் என்ற ஒற்றை ஆசை மட்டும் தான் காரணம்.. கிறுக்கு பிடித்தது போல் திரிந்து கொண்டிருந்த நேரத்தில்…… ட்விஸ்ட்.. மற்ற நிகழ்வுகளை அடுத்த பதிவில் எழுதுகிறேன்… தொடரும்..

  5. உங்களுக்காக இவ்வளோ முறை கேட்டு இருக்காரே.. பெரிய விஷயம் தான் 🙂

    வெளிநாடு செல்வது பலருக்கு கனவு . அதை அடைய பல முயற்சிகளைச் செய்து பெரும்பாலானோர் வெற்றி பெற்று விடுகிறார்கள். சில தவறான வழி நடுத்ததுலால் ஏமாந்து விடுகிறார்கள்.

    “என் தாத்தா / அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும் போது நிறைய பணம் சம்பாரித்து அவர்கள் கையில் கொடுக்க வேண்டும் என்ற ஒற்றை ஆசை மட்டும் ”

    சூப்பர் 🙂

  6. கிறுக்கு பிடித்தது போல் திரிந்து கொண்டிருந்த நேரத்தில் பழைய நண்பரிடம் (துபையில் இருப்பவர்) வெளிநாடு செல்ல உதவி கேட்கலாமா என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, என் சூழலை ஜூனியர் நண்பன் மூலம் தெரிந்து கொண்டு எனக்கு போன் செய்தார்.. பழைய கதைகள் எதுவும் பேசவில்லை.. இரண்டு மாதம் செல்லட்டும் நான் விசா எடுக்கிறேன்.. செலவை பார்த்து கொள்கிறேன்..தங்குவதற்கு இருப்பிடமும் பார்த்து வைக்கிறேன்.. நீ வேலையை மட்டும் தேடி கொள் என்றார். இடையில் நண்பர்களிடமும் வேலைக்காக சொல்லி வைக்கிறேன்.. பார்ப்போம் என்றார்.. எனக்கு நிம்மதியாக இருந்தது.. இருந்தாலும் பயமாகவும் இருந்தது.. வெளிநாடு சென்ற பின் வேலை கிடைக்க வில்லை என்றால் பணத்தை திருப்பி கொடுக்க என்ன செய்வது?? (அவர் கேட்கவில்லை) இருந்தாலும் எப்படி கொடுப்பது என்று பல குழப்பம்.. இருந்தாலும் கிட்டத்திட்ட 3 வருடம் அனுபவம் இருந்ததால் கொஞ்சம் நம்பிக்கையும் இருந்து..

    10 நாட்கள் பின்பு அவர் அழைத்து, நண்பர் மூலம் பயோ டேட்டா ஒரு நிறுவனத்தில் கொடுத்துள்ளேன்.. தொலைப்பேசி மூலம் இண்டர்வீயூ வரும்.. நன்றாக பண்ணவும் என்றார்.. எனக்கு ஆச்சரியமாகவும், கொஞ்சம் நடுக்கமாகவும் இருந்தது.. இன்டெர்வியூ முடிந்து ஒரு வாரத்தில் வேலைக்கான விசா வந்து விட்டது.. சக்தியிடம் போன் செய்து கூறினேன்..மகிழ்ச்சியாக இருந்தாலும் பயணத்தை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருந்தது.. விசா காப்பியை எடுத்து கொண்டு டிக்கெட் போட ட்ராவேல்ஸ் சென்றேன்.. என்னை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு ஒரிஜினல் பாஸ்போர்ட் கொடு என்றார்.. கொடுத்தேன்.. பின்பு அரை மணி நேர தேடலுக்கு பின் கணிப்பொறியில் எல்லா FLIGHT உம் FULL.. அது ரம்ஜான் பண்டிகை நேரம் வேறு..(துபையில் இருந்து இந்தியாவுக்கு தான் வருவார்கள், ஆனால் இவர் மாற்றி சொன்னார்) கார்கோ பிளையிட் இருந்தாலும் எனக்கு ஓகே என்றேன்.. கொஞ்சம் கோவத்துடன் அதில் போக முடியாது.. வேண்டுமென்றால் VIA பிளைட் பார்க்கிறேன்.. சென்னை, ஸ்ரீ லங்கா, துபாய் ஓகே வா என்றார்?? என்னடா இது சோதனை .. ஸ்ரீலங்காவில் அப்போது பிரச்சனை வேறு நடந்து கொண்டிருந்தது).. வேண்டாம் என்றேன்.. சரி, தாய் ஏர்வேஸ்ல பாக்கிறேன்.. என்று கணிப்பொறியை தட்ட அவர் மூஞ்சே சரியில்லை.. இடையில் ஒன்று / இரண்டு போன் கால் வேறு..

    சரி நீ ரம்ஜான் முடிந்து போயேன் .. டிக்கெட் அப்ப ஈஸியா கிடைக்கும் என்றார்.. நான் இல்ல உடனே போகணும்.. அதுவும் இல்லாம ரம்ஜான் முடிஞ்சா டிக்கெட் விலை ஏறிடும், நிறைய பேர் போவாங்க இல்ல என்றேன்.. அவர் கடுப்பா “எல்லா விவர மயிXXXX தெரிஞ்சிட்டு வந்திருக்கையா என்றார்.. நான் எதுவும் பேசவில்லை.. சரி ஒரிஜினல் பாஸ்ப்போர்ட்டும், 500 அட்வான்சும் கொடுத்து விட்டு போய் , ஈவினிங் வா என்றார்.. நான் ஈவினிங் டிக்கெட் கிடைத்து விடும் தானே என்றேன்.. ரொம்ப கடுப்பா பாக்கலாம் பாக்கலாம்.. மதிய இடைவெளியில் நான் துபாய் நண்பருக்கு போன் செய்து விவரத்தை சொன்னேன்.. அவர் ஈவினிங் போய் பாஸ்போர்ட் வாங்கிடு.. நான் இங்கிருந்தே டிக்கெட் போட்டு உனக்கு மெயிலில் அனுப்புகிறேன் என்றார்.. நான் சரி சரி சொல்லி விட்டு குழப்பத்துடன் டிக்கெட் ஒரு கவரில் தானே இருக்கும்.. எங்க மாமா போகும் போது பார்த்திருக்கிறேன்.. இவர் என்ன??? ஈமெயிலில் அனுப்புகிறேன் என்கிறார்.. ஈமெயில் டிக்கெட் செல்லுமா?? செல்லாதா??? ஒரே குழப்பம்.. சரி ட்ராவல்கார் கிட்ட கேட்போம் என்று, ஈவினிங் போனேன்..

    அவர் ரொம்ப பிஸி.. இல்ல நடிப்பானு தெரியில .. பத்து பேருக்கு மேல WAITING.. இடையில் போன் வேற (சூரியன் கவுண்டமணி சார் தான் நியாபகத்துக்கு வந்தார்) என் முறை வந்ததும் டிக்கெட் இவ்வளவு தொகை ஆகும் என்றார்.. நான் டிக்கெட் போட வேண்டாம் என் நண்பர் துபாய்லிருந்து டிக்கெட் போடுறேன் என்று சொல்லி இருக்கார், எனவே பாஸ்ப்போர்ட்டும் / அட்வான்ஸ் 500 கொடுங்க என்றேன்.. கோபத்தின் உச்சியில் உனக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன்.. இப்ப கேன்சல் பண்ண 2000 ஆகும் என்று கத்தினார்.. நான் பொறுமையாக டிக்கெட் ஈவினிங் நான் வந்த பின் தான் போட சொன்னேன்..

    அவர் ஒழுங்கா 2000 கொடுத்து விட்டு பாஸ்போர்ட் வாங்கி கொண்டு போ என்று மிரட்டினார்.. நானும் கல்லுரி முடித்து இருந்ததால் அந்த பகுதியில் இவரை தெரியும், அவரை தெரியும் (ஆனால் என்ன யார்க்கும் தெரியாது) என்று சொல்லி 200 மட்டும் கொடுத்து விட்டு பாஸ்போர்ட் வாங்கி சென்றேன்.. எனக்கு தலை கிறுகிறுத்து விட்டது.. வெளியில நிக்கிற 10 / 15 பேர நினைச்ச பாவமா இருந்தது.. படிச்ச எனக்கே நிறைய விஷியம் புரியல??? LABOUR வேலைக்கு போறவங்க நிலைமை ரொம்ப பாவம் தான்..

  7. ஒரு வழியா எல்லாம் நல்ல படியாக முடிந்தவுடன் அம்மாவிடம் / தாத்தாவிடம் நாளை மறுநாள் துபாய் செல்கிறேன் என்றேன்.. எல்லோரும் ஆச்சரியம் மெடிக்கல் போடவில்லை, டிக்கெட் போட காசு கேட்கவில்லை.. விசா ஏதோ xerox பேப்பர்ர காட்டுற?? இது உண்மையா?? யாராவது உன்னை ஏமாற்ற போறாங்க பாத்துக்கோ என்றதும் என்னுடைய எல்லா நம்பிக்கையும் உடைந்து போனது போல் இருந்தது. எல்லாத்துக்கும் அதிகம் குழம்பி கொள்ளாமல் கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு பயணத்திற்கு தயாரானேன்.. புது சட்டை, பேக் வாங்க வேண்டும் என்பதால் நண்பனிடம் 1200 ரூபாவை கடன் வாங்கி பொருட்களை வாங்கி கொண்டேன்.. வழியனுப்ப சக்தி, மற்ற இரண்டு நண்பர்கள் சென்னை வருவதாக திட்டம்..

    நேரம் செல்ல செல்ல சொந்த ஊரை விட்டு தூரம் போக போகிறோம் என்ற தவிப்பு.. ஒரு வித ஏக்கம்..நாங்க வசதியில்லாமல் இருந்ததால் நிறைய உறவுக்காரர்கள் எங்களை பல நிகழ்வுகளில் உதாசீனப்படுத்தி உள்ளார்கள், அவர்களின் வீடுகளை கடக்கும் போது என்னுடைய நடையில் ஒரு மிடுக்கு இருந்தது.. (ஊரிலே சூப்பர் பிகரா இருந்த பெண்ணோட வீட்டை கடக்கும் போது கொய்யால, எத்தனை முறை உன்ன பார்த்து இருப்பேன், ஒரு டைம் கூட திரும்பி பாக்கல!!! இருடி மாமன் பாரின்லேந்து வரும் போது உனக்கு போட்டியா ஒரு வெள்ளைக்காரிய தூக்கிட்டு வறேன்) அப்படி என்ற சபதத்துடன் பேருந்தை பிடித்தேன்.. ஒரு துளி கண்ணீர் இல்லை.. ஏதோ ஒரு லட்சிய பயணத்திற்கு செல்வது போல ஒரு உணர்வு..

    சக்தி மீண்டும் இரவே கோவை செல்ல வேண்டி இருப்பதால், விழுப்புரத்திலே இறங்கி கொண்டார்.. ரொம்ப நேரம் சக்தியையும், நட்பையும் குறித்து சிந்தித்து கொண்டே வந்தேன்.. எப்படி சக்தியின் உள்ளதை நான் கொள்ளை கொண்டேன்.. என் மீது அவர் எப்படி காதல் கொண்டார்.. கோவையில் சுற்றி திரிந்த நாட்களின் நினைவுகள் மீண்டும் வருமா??? வெளிநாடு சென்ற பின் சக்தியுடன் நட்பு தொடருமா??? விரிசல் விழுந்து விடுமா??? என பல கேள்விகள்.. எனக்கு விமானம் அதிகாலை 3.45 am.. சென்னைக்கு 11 pm விரைவாகவே சென்று விட்டோம்..

    விமான நிலைய வாசலில் நண்பர்களுடன் ரொம்ப நேரம் பேசி கொண்டிருந்தேன்.. அந்த நேரம் பக்கத்தில் இருந்த நபர் அவர் குவைத் செல்வதாக சொன்னார்.. என்ன??? பேகில் பெயர் எழுதவில்லை?? எழுதவில்லையென்றால் உள்ளே விட மாட்டார்கள் என்றார்.. இது என்னடா புது சோதனை என்று நினைத்து.. பேனாவை கொண்டு பெயர் எழுதி விட்டேன்.. அறிவிப்பு வந்ததும் கையில் இருந்த மீதி பணத்தை நண்பர்களிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றேன்..

    வரிசையில் நிற்கும் போது பக்கத்தில் இருந்தவர் விசா எங்கே என்றார்?? நான் காமித்த போது பாஸ்போர்ட்ல STAMP ஆக வில்லை.. அது எங்கே என்றார்?? நான் பதறி போய் என்கிட்டே copy மட்டும் தான் உள்ளது என்றேன்.. அவர் பாஸ்போர்ட் திறந்து ஸ்டாம்ப் பண்ண பக்கத்தை காமித்தார்.. இது போல இருக்க வேண்டும், இல்லை என்றால் பிரச்சனை என்றார்.. சூழலை புரிந்து கொண்டு இன்னொருவர் என்னுடைய விசாவை பார்த்து ஒன்னும் பிரச்சனை இல்லை.. ஒரிஜினல் துபாய் விமான நிலையத்தில் surrender செய்து இருக்க வேண்டும்.. நோ ப்ரோப்லேம் என்றார்..

    எனக்கு ஒரே குழப்பம்.. ரெண்டு பேருக்கும் வார்த்தைகள் முற்றி பிரச்சனை வேறு விதமாக போயி விடும் போல் இருந்தது.. செக்யூரிட்டி வந்து இருவரையும் வரிசை மாற்றி நிற்க வைத்தார்.. ஒரு வழியா போர்டிங் முடிந்தவுடன் தான் நிம்மதி..இலவச தொலைபேசியில் நண்பர்களுக்கு தகவல் கொடுத்து விட்டு அவர்களை கிளம்ப சொன்னேன்.. பின்பு ஓய்வறை சென்று பார்த்த போது வித்தியாசமாக உணர்ந்தேன்.. இரவு சரியா சாப்பிடவில்லை.. மேலே ஹோட்டல்ல பார்த்த உடன் பசி வேறு.. சரி ரெண்டு இட்லி சாப்பிடலாம் என்று நினைத்து போன போது விலை 50 ஆக இருந்து..

    நண்பர்களிடம் கொடுத்தது போக கையில் 60 ரூபாய் இருந்தது.. ஆனால் 50 ரூபா கொடுத்து சாப்பிட மனசு வரல.. பேசாம வந்து விட்டேன்.. விமானத்தில் உணவு கொடுப்பார்கள் சாப்பிட்டு கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.. விமானத்தில் உள்ளே சென்ற போது ஒரு வித பரவசம்.. என் இருக்கையை தேடி பிடித்து உட்கார்ந்து கொண்டேன்.. ஜன்னலுக்கு பக்கத்தில் சீட் கிடைத்ததில் இன்னும் உற்சாகம்.. அதிகம் தமிழ் ஆட்கள் தான்.. சீட் பெல்ட் வேலை செய்கிறதா என்று சோதனை செய்து கொண்டேன்… விமானம் கிளம்ப தயாரான போது பிறந்த மண்ணை விட்டு போக போகிறோம் என்ற ஏக்கம் வந்தது.. (பீல் பண்ணா வெள்ளக்காரிய எப்படி கூட்டி கொண்டு வருவது என்று எண்ணி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்..)

    நடு நிசியில் களைப்பின் காரணமாக தூங்கி விட்டேன்.. தீடிரென முழித்து பார்க்கும் போது முக்காவாசி ஆட்கள் தூங்கி கொண்டு இருந்தார்கள்.. என்னடா இன்னும் சாப்பாடு வரல?? தூங்கியதால் சாப்பாடு தரலையா?? என்ற நினைப்போடு பக்கத்துல இருப்பவர் கிட்ட பேச்சுவாக்குல பிளைட்ல சாப்பாடு நல்ல இருக்குமா??? எப்படி என்றேன்?? அவர் நல்லா இருக்கும் ஆனால் இந்த பிளைட்ல சாப்பாடு தர மாட்டங்கனு இடியை தலையில் இறக்கினார்!!! ஏன் என்று கேட்க பட்ஜெட் ஏர்வேஸ் அதனால் சாப்பாடு இல்லை என்றார்..

    காசு கொடுத்தா வேறு ஏதாவது ஸ்னாக்ஸ் கிடைக்கும் என்றார்.. நல்ல எடுத்த பசி சூழ்நிலையை புரிந்து கொண்டு அடங்கி போனது..களைப்பில் தூங்கி விட்டேன்.. தூக்கத்தில் இருந்து கண் விழிக்கும் போது ஷர்ஜாஹ் விமான நிலையம் தொலைவில் தெரிந்தது..என் தாத்தா கடைசி 8 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழவும் /40 வருடம் மேல வாடகை வீட்டில் வாழ்ந்த என் அம்மாவை சொந்த வீட்டில் உட்கார வைத்தது இந்த பயணம் தான்.. இன்று வரை ஒரு ரூபாய் கூட வாங்காமல் எனக்கு உதவிய அந்த நண்பருக்கு காலம் முழுவதும் நானும், எங்கள் குடும்பமும் கடமைபட்டுள்ளோம்… எனக்கு THE REAL “சூரரை போற்று” அவர் தான்..

    (திருமணம் முடிந்து என் குடும்பம் இங்கு வந்த போது, ஒவ்வொரு பயணத்தின் போதும் என் பையன் டிக்கெட்ட எமிரேட்ஸ்ல போடுங்க!!! எமிரேட்ஸ் ல TOYSம் , கலர் புக்ம் கிடைக்கும்.. அது அவனோட உலகம்.. அவனோட விருப்பத்த சொல்லும் போது நான் என் முதல் பயண அனுபவத்தை நினைத்து பார்ப்பேன்)… இது வரை என் பையன்கிட்ட என் முதல் பயண கதையை சொல்லவில்லை.. இன்னும் கொஞ்சம் வளந்த உடன் அவன்கிட்ட சொல்ல வேண்டும்..

  8. ” ரம்ஜான் முடிஞ்சா டிக்கெட் விலை ஏறிடும், நிறைய பேர் போவாங்க இல்ல என்றேன்.. அவர் கடுப்பா “எல்லா விவர மயிXXXX தெரிஞ்சிட்டு வந்திருக்கையா என்றார்.”

    எப்படி இது போல பேசினார் என்று வியப்பாக உள்ளது. ஒரு வாடிக்கையாளரை எந்த தைரியத்தில் இப்படி கேட்டார்?

    “என் முறை வந்ததும் டிக்கெட் இவ்வளவு தொகை ஆகும் என்றார்.. நான் டிக்கெட் போட வேண்டாம் என் நண்பர் துபாய்லிருந்து டிக்கெட் போடுறேன் என்று சொல்லி இருக்கார், எனவே பாஸ்ப்போர்ட்டும் / அட்வான்ஸ் 500 கொடுங்க என்றேன்.. கோபத்தின் உச்சியில் உனக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன்.. இப்ப கேன்சல் பண்ண 2000 ஆகும் என்று கத்தினார்..”

    கட்டணம் அதிகமா இருக்கு.. அப்புறமா பார்க்கிறேன் என்று கூறி இருந்தால், வேறு மாதிரி கூறி இருப்பார் 🙂

    ” 200 மட்டும் கொடுத்து விட்டு பாஸ்போர்ட் வாங்கி சென்றேன்”

    இது ஓகே

    “விசா ஏதோ xerox பேப்பர்ர காட்டுற?? இது உண்மையா?? யாராவது உன்னை ஏமாற்ற போறாங்க பாத்துக்கோ என்றதும் என்னுடைய எல்லா நம்பிக்கையும் உடைந்து போனது போல் இருந்தது. ”

    நான் ஒரு கன்சல்டன்சி வழியாக தான் சென்றேன். எனவே, என் அப்பாக்கு சந்தேகமே தீரவில்லை.

    செய்திகளில் படித்து.. என்னை யாராவது ஏமாற்றி விடுவார்கள் என்ற பயத்திலேயே இருந்தார். நான் சிங்கப்பூர் கிளம்பும் வரை சமாதானம் ஆகவில்லை.

    “ஊரிலே சூப்பர் பிகரா இருந்த பெண்ணோட வீட்டை கடக்கும் போது கொய்யால, எத்தனை முறை உன்ன பார்த்து இருப்பேன், ஒரு டைம் கூட திரும்பி பாக்கல!!! இருடி மாமன் பாரின்லேந்து வரும் போது உனக்கு போட்டியா ஒரு வெள்ளைக்காரிய தூக்கிட்டு வறேன்”

    🙂 🙂

    ” ரொம்ப நேரம் சக்தியையும், நட்பையும் குறித்து சிந்தித்து கொண்டே வந்தேன்.. எப்படி சக்தியின் உள்ளதை நான் கொள்ளை கொண்டேன்.. என் மீது அவர் எப்படி காதல் கொண்டார்”

    இவ்வளவு வருடங்களை கடந்தும் இருவரும் அதே நட்பை தொடர்வது மகிழ்ச்சி.

    “வரிசையில் நிற்கும் போது பக்கத்தில் இருந்தவர் விசா எங்கே என்றார்?? நான் காமித்த போது பாஸ்போர்ட்ல STAMP ஆக வில்லை.. அது எங்கே என்றார்?? நான் பதறி போய் என்கிட்டே copy மட்டும் தான் உள்ளது என்றேன்”

    விமான நிலையம் சென்றதும் அங்கே முதன் முறை என்பதால், பல குழப்பங்கள், பயம் இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் சந்தேகம் வரும்.

    சொன்ன மாதிரி போர்டிங் பாஸ் போட்டு போன பிறகே நிம்மதியாகும்.

    அதன் பிறகு அங்கே சென்ற பிறகு எப்படி செல்வது? யார் இருப்பார்கள்? சொன்னவர் வருவாரா? இது போல பல கேள்விகள் துளைத்து எடுக்கும்.

    “பக்கத்துல இருப்பவர் கிட்ட பேச்சுவாக்குல பிளைட்ல சாப்பாடு நல்ல இருக்குமா??? எப்படி என்றேன்?? அவர் நல்லா இருக்கும் ஆனால் இந்த பிளைட்ல சாப்பாடு தர மாட்டங்கனு இடியை தலையில் இறக்கினார்!”

    🙂 🙂

    “என் தாத்தா கடைசி 8 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழவும் /40 வருடம் மேல வாடகை வீட்டில் வாழ்ந்த என் அம்மாவை சொந்த வீட்டில் உட்கார வைத்தது இந்த பயணம் தான்”

    சூப்பர். ஒரு தைரியமான தீர்க்கமான முடிவு, ரிஸ்க் தான் நம்மை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும்.

    ரிஸ்க் எடுக்க பயந்தால், வாழ்வில் முன்னேறவே முடியாது.

    “இன்று வரை ஒரு ரூபாய் கூட வாங்காமல் எனக்கு உதவிய அந்த நண்பருக்கு காலம் முழுவதும் நானும், எங்கள் குடும்பமும் கடமைபட்டுள்ளோம்… எனக்கு THE REAL “சூரரை போற்று” அவர் தான்..”

    உண்மையிலேயே பெரிய விஷயம் தான்.. இப்படியெல்லாம் உதவுவது அபூர்வமே!

    “இது வரை என் பையன்கிட்ட என் முதல் பயண கதையை சொல்லவில்லை.. இன்னும் கொஞ்சம் வளந்த உடன் அவன்கிட்ட சொல்ல வேண்டும்..”

    🙂 அவன் புரிந்து கொள்ளும் வயது வந்தவுடன் கூறுங்கள். இல்லையென்றால்.. அப்படியா.. சரின்னு ஒரு வார்த்தையில் கடந்து விடுவான் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!