அர்த்தம் பெற்ற பத்ம விருதுகள்

0
பத்ம விருதுகள்

2020 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்து விட்டது. 100 க்கும் மேற்பட்டவர்கள் என்பதால், இரு நாட்கள் விழா நடந்தது. Image Credit

பத்ம விருதுகள்

சாதனை புரிந்தவர்களுக்காகப் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதுவரை சம்பிரதாயமாக விளையாட்டு வீரர்களுக்கு, Elite மக்களுக்கு, தொழிலதிபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், 2020 ஆண்டுக்கான விருது இந்தாண்டு (2021) வழங்கப்பட்டதில் முற்றிலும் மாறுபட்ட உணர்வை அனைவருக்கும் வழங்கியது.

விருதுகள் பெரும்பாலும் அரசியல் சார்பாக மாறி, உண்மையான சாதனையாளர்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது.

குற்றச்சாட்டு என்றாலும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுக்குச் சாதகமானவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த 2020 வருடத்தில் இதில் மாற்றம் ஏற்பட்டு 2021 வருடம் உச்சத்தை அடைந்தது.

உள்ளூரில் உள்ளவர்களுக்கே யார் என்று தெரியாதவர்கள் கூட அடையாளம் காணப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது வியப்பை அளித்தது.

இவர் எங்க ஊர் தான் ஆனால், எனக்குத் தெரியாது‘ என்று சிலர் கருத்திட்டது குறிப்பிடத்தக்கது ஆனால், அவர்கள் செய்த சாதனை அளப்பரியது.

வித்யாசமான நிகழ்வுகள்

மிகவும் அடிமட்டத்திலிருந்து வந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது ஆனால், விழாக்காக எந்த மாற்றமும், அலங்காரமும் இல்லாமல் பலர் அவர்கள் இயல்பான நிலையிலே வந்து இருந்தனர்.

சிலர் செருப்பு கூட இல்லாமல் வெறும் காலில் வந்து விருதைப் பெற்றுக்கொண்டனர். பார்வையாளர்கள் பலர் கைத்தட்டுவதையும் அனிச்சையாகி நிறுத்தி மெய் மறந்து இருந்தனர்.

திருநங்கை ஒருவர் அவரது பாணியில் குடியரசுத்தலைவருக்குச் சுற்றிப்போட்டது பலரையும் கவர்ந்து ட்ரெண்ட் ஆனது.

இந்தவொரு அதிரடியை எவருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் 🙂 .

விருது கொடுத்த குடியரசு தலைவருக்கே ஆசி வழங்கிப் பலர் பிரம்மிக்க வைத்தார்கள்.

தமிழகம்

தமிழகத்திலிருந்து கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம், SPB, பாப்பம்மாள், சாலமன் பாப்பையா, ஸ்ரீதர் வேம்பு (ZOHO) உட்படப் பலர் விருது பெற்றனர்.

தமிழகம் வந்து இருந்த போது இயற்கை விவசாயி பாப்பம்மாள் அவர்களைப் பிரதமர் சந்தித்து ஆசி பெற்று இருந்தார்.

சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் எந்த விருதுகளையும் ஏற்றுக்கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவர் காலமான பிறகு இவ்விருது கொடுக்கப்ட்டுள்ளது.

கோவையில் இவரின் சேவைகளால் தினம் பலன் பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். குறைந்த கட்டணத்தில் பல சேவைகளை வழங்கினார்.

குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு இவ்விருது வழங்கும் விழா மிகுந்த நெகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுத்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தேசிய விருதுகள் வழங்கப்பட்ட போது குடியரசுத்தலைவருக்கு உடல் நிலை சரியில்லாததால் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார்.

இன்னொருவர் சார்பில் வழங்கியதாலோ என்னவோ வெங்கையா நாயுடு ஒரு கடமையாக விருதை வழங்கியது போல இருந்தது.

ஆனால், ராம்நாத் கோவிந்த் அனைவரிடமும் சிரித்த முகத்துடன், குறிப்பாக அடிமட்ட மக்களின் மரியாதையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது மிகச்சிறப்பு.

கவனம் ஈர்த்த நிகழ்வு

இந்திய வரலாற்றிலேயே இது போல ஒரு விருது நிகழ்வு நடந்து இருக்காது என்று கூறும் அளவுக்கு அனைவர் பாராட்டையும் பெற்ற நிகழ்வாகப் பத்ம விருதுகள் 2020 (2021) மாறியுள்ளது.

விருது பெற்ற தொழிலதிபர் ‘ஆனந்த் மஹிந்திரா‘ ட்விட்டரில் கூறும் போது..

விருது பெற்ற சாமானியர்களின் சாதனைகளை ஒப்பிடும் போது நான் இவ்விருதுக்குத் தகுதியில்லையோ எனத் தோன்றுகிறது‘ என்று தன்னடக்கமாகக் கூறியதே இவ்விழாவுக்கான சிறப்பைக் கூறும்.

இனியும் விருதுகள் என்பது Elite மக்களுக்கானதாக இல்லாமல் அனைவருக்குமான விருதுகளாக இருக்க வேண்டும் என்பதே அனைவர் விருப்பம்.

விருதுக்கான நபர்களைத் தேர்வு செய்தவர்களுக்கும், அவர்களுக்கு ஒப்புதல் வழங்கியவர்களுக்கும் பாராட்டுகள்.

எதையும் எதிர்பார்க்காமல் சாதனை புரிந்து விருதைப் பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!