குசேலன் (2008)

37
குசேலன்

நான் குசேலன் வியாழக்கிழமையே பார்த்து விட்டேன். விமர்சனம் எழுதலாம் என்று பார்த்தால், அதற்குள் ரஜினி மன்னிப்பு கேட்டார் என்று சர்ச்சையாகி விட்டது.

அதனால் கோபம் அடைந்து அனைவரும் தாறு மாறாக விமர்சனம் செய்து கொண்டு இருந்தார்கள் (ரஜினியையும் படத்தையும்). Image Credit

அந்த நேரத்தில் விமர்சனம் என்று செய்தால் அதை விமர்சனமாக யாரும் நினைக்க மாட்டார்கள் என்று கருதி எதுவும் கூறவில்லை.

குசேலன்

படம் எந்த ஒரு ரஜினி பிரம்மாண்டமும் இல்லாமல் எளிமையான படம்.

பசுபதி ஒரு நாவிதர் மிகவும் ஏழ்மை நிலைமையில் உள்ளவர் ஆனால், நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்பவர்.

அதனாலேயே வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்தித்துப் பெரிதாகச் சம்பாதிக்க முடியாத நிலையில் இருப்பவர்.

அவர்கள் ஊருக்கு ரஜினி நடிக்கும் படப்பிடிப்பிற்காக அனைவரும் வருகிறார்கள்.

ரஜினி தன்னுடைய சிறுவயது நண்பன் என்பதைத் மனைவி மீனாவிடம் கூற அது அப்படியே அனைவருக்கும் தெரிந்து விடுகிறது.

பெரிய நடிகரின் நண்பன் என்பதால் பசுபதியின் மீது அனைவருக்கும் திடீர் பாசம் வந்து விடுகிறது.

அனைவரும் அவரைக் கொண்டாட, அவருக்கோ தர்மசங்கடமாகி விடுகிறது.

அனைவரும் ரஜினியிடம் தன்னை அறிமுகப்படுத்தக் கூற, பசுபதிக்கோ தன்னை அவர் இன்னும் நினைவு வைத்து இருப்பாரா என்று சந்தேகம்.

அதுவும் இல்லாமல் நாவிதரான தன்னை ரஜினி இத்தனை காலம் கடந்தும் ஏற்றுக் கொள்வாரா? தன்னை நண்பன் என்று கருதுவாரா? என்ற குழப்பத்திலும் தாழ்வு மனப்பான்மையாலும் ரஜினியை சந்திக்காமல் இருந்து விடுகிறார்.

கடைசியில் ரஜினியை சந்தித்தாரா? அவர்கள் நட்பு என்ன ஆனது என்பதே குசேலன்.

பசுபதி

பசுபதி ஏக்கமான முகத்தை வைத்து அருமையாக நடித்து உள்ளார். ரஜினியை பார்க்க அவர் முயற்சிக்கும் போதெல்லாம் நடிப்பில் மின்னுகிறார்.

அனைவரும் ரஜினியை சந்திக்க ஏற்பாடு செய்யச் சொல்லி அவரை நெருக்கும் போதெல்லாம் தர்ம சங்கடமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

படம் முழுவதும் பசுபதியே வருகிறார். ரஜினி இடையிடையே வரும் படி காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

ரஜினிக்கு பிடித்த கடலை மிட்டாயை எடுத்துச் சென்று கொடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைவது, தன் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் ரஜினியை தங்கள் பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக ரஜினியை அழைத்து வரும் படி நெருக்கடி கொடுக்கும் போது செய்வது அறியாது விழிக்கும் போதும், பசுபதியின் குழந்தைகள் ஏமாற்றம் அடைந்து அவரை வெறுக்கும் போதும் ஒரு எதார்த்த நடிகராக மிளிர்கிறார்.

கடைசியில் ரஜினி பசுபதியின் நண்பர் என்று அனைவருக்கும் தெரிந்த பிறகு மீனா! ஏங்க நீங்க பல விசயங்களைக் கூறவில்லை என்று கேட்கும் போது, “நண்பன் என்று சொன்னதுக்கே என்னை இந்த அளவுக்குக் கொண்டு வந்துட்டீங்க” என்று கூறும் போது நம் மனதை தொடுகிறார்.

வடிவேல்

முதலில் பசுபதியிடம் உதவியாளராக இருக்கும் வடிவேல் தொழில் கற்றுக் கொள்ள யாரிடமாவது முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று கூற, அதற்கு பசுபதி ஒரு பலூனைக் கட்டி அதில் சேவிங் கிரீம் தடவி இதை உடைக்காமல் கத்தியால் எடு அப்புறம் பார்க்கலாம் என்று கூறுவார்.

அதற்கு வடிவேல் சேவிங் செய்யும் போது பலூன் கிரீமுடன் வெடிக்கத் திரை அரங்கமும் வெடி சிரிப்பால் அதிர்கிறது.

பிறகு தனியாகக் கடை ஆரம்பித்து ஆள் வைத்து எல்லோரையும் தூக்கி வந்து கட்டிங் செய்து அனைவரையும் கலகலப்பூட்டுகிறார்.

ரஜினியை பார்க்க அவர் செய்யும் முயற்சிகள் ஒவ்வொரு முறையும் பசுபதி போலத் தடங்கலாகி விடக் கடைசியாக அவர் ரஜினியை சந்திக்கும் போது அவர் செய்யும் கலாட்டா உம்மனா மூஞ்சியையும் சிரிக்க வைத்து விடும்.

லிவிங்ஸ்டன் & பிரபு

லிவிங்ஸ்டன் அந்த ஊரில் பெரிய ஆள், தான் தயாரிப்பாளராக வேண்டும் என்பது அவருக்கு நீண்ட நாள் விருப்பம்.

இதற்காக அவர் ரஜினியிடம் கால்ஷீட் வாங்க பசுபதியிடம் நட்பு பாராட்டுவது செம காமெடி. சந்தானம் காமெடி வரவைக்க முயன்றுள்ளார்.

பிரபு ரஜினிக்குப் பாதுகாப்பு கொடுக்கும் அதிகாரியாக வருகிறார், அவர் வந்ததும் ரசிகர்கள் “என்ன கொடுமை சார் இது” என்று கூறி கலகலப்பாகி விட்டார்கள்.

இனி பிரபு என்றாலே இந்த வசனம் தான் போல இருக்கு. நட்புக்காக வருவதால் அவருக்கு “பெரிய காட்சி” அமைப்பு இல்லை அவர் “பெரிதாக” இருப்பதைத் தவிர 🙂 .

படத்தில் ரஜினி படம் துவங்கி 30 நிமிடம் கழித்தே வருகிறார். படத்தில் கொஞ்சம் பகுதி ரஜினி வசனங்கள் ரஜினி படத்திற்காக இருப்பது போல இல்லாமல் இயல்பாக இருக்கிறது.

சாதாரணமாகப் பேட்டியின் போது எப்படிப் பேசுவாரோ அது போல இருக்கிறது.

ரஜினி படப்பிடிப்பில் இருக்கும் போது படப்பிடிப்பை பார்க்க வரும் ரசிகர் கூட்டங்களிலிருந்து ஒரு குறும்புக்கார ரசிகர் ஒருவர்..

தலைவா! நயன்தாராவையே பார்த்துட்டு இருக்கியே எங்க பக்கமும் கொஞ்சம் திரும்பு என்று சொல்ல அதற்கு ரஜினி வெட்கப்பட்டுத் திரும்பிச் சிரித்து அட! ஏம்பா கம்முனு இருங்கப்பா என்று கூறும் போது இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

இன்னும் இளமையாகவே தெரிகிறார் [குறிப்பாகத் தொப்பை இல்லாமல் 😉 ], கடைசிக் காட்சியில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி எத்தனை மசாலா படங்களிலும் நடித்தாலும் இன்னும் பழைய நடிப்பை மறக்கவில்லை என்று அனைவரையும் நெகிழ வைத்து விடுகிறார்.

நயன்தாரா

நயன்தாரா மிக அழகாக உள்ளார், நடிக்க வழக்கம் போல வாய்ப்பில்லை.

ரசிகர்களும் அதை எதிர்பார்ப்பதில்லை.அனைத்து ரசிகர்களும் தன்னை ஏன் கொண்டாடுகிறார்கள் என்று நிரூபித்து உள்ளார் 😉 .

படத்தில் பஞ்ச் வசனங்கள் இல்லை, பிரம்மாண்ட செட்கள் இல்லை, வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பாடல்கள் இல்லை, முக்கியமாகச் சண்டை காட்சி இல்லை.

வடிவேல் ஸ்டண்ட் நடிகர்களிடம் அடி வாங்குவதைத் தவிர 🙂 ரஜினிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்.

படத்தில் குறைகளாக எனக்குத் தெரிவது, வடிவேல் நயன்தாராவை பார்க்கும் போதும் ப்ளோராவை பார்க்கும் போதும் லிவிங்ஸ்டன் செய்யும் ஒரு காமெடியும்!!காம நெடி வீசுகிறது.

இவை எல்லாம் அவசியம் இல்லாதது, குறிப்பாக ரஜினி படத்திற்குத் தேவையே இல்லை.

இது வழக்கமான வாசுவின் டச்!

ஒப்பனை

பசுபதி குடும்பம் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டாலும் மீனா ஒப்பனையுடன் இருப்பது, புடவையின் தரம் ஆகியவை காட்சி அமைப்போடு ஒட்டவில்லை.

சினிமா சினிமா பாடல் சாதாரண ரசிகனை சந்தோசப்படுத்தினாலும் அதற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அளவுக்குக் காட்சி அமைப்புஇல்லை.

படத்தை நண்பர்கள் படம் என்றாலும் நண்பர்கள் கடைசியில் தான் சந்திப்பது ஒரு பெரிய குறை.

நயன்தாரா பாடலும் ஓம் சாராரே பாடலும் தெலுங்கு படம் பாடல் போலச் சம்பந்தம் இல்லாமல் வருகிறது.

ரஜினி நடிகராகவே வருவதால் அவரைத் துதி பாடி இருக்கும் சில காட்சிகள்.

இணையத்தில் குஷ்பூ, சினேகா போன்றவர்கள் இருந்ததாகப் படங்கள் வந்தன ஆனால், அவர்களைப் படத்தில் காணவில்லை.

இவை தவிர்த்துக் குசேலன் ஒரு பொழுது போக்குப் படம். தமிழ் திரை உலகை உலகத் தரத்திற்கு உயர்த்தும் படம் அல்ல.

மேலே நான் கூறியவைகளில் எதுவும் மிகை படுத்திக் கூறவில்லை. தமிழ் படங்களை உலகத் தரத்தில் எதிர்ப்பார்ப்பவர்களுக்கான படமல்ல இது.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

37 COMMENTS

  1. சரியாக சொன்னீர்கள் கிரி…! தாமதமாக எழுதினாலும் தரமாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்களுடன் வாழ்த்துகள்…!

  2. //இவை தவிர்த்து குசேலன் ஒரு பொழுது போக்கு படம்,//

    ப்ரொஜக்டருக்கும், வெண்திரைக்கும், நாற்காலிகளுக்கும் மட்டும் தானே ?

    🙂

  3. சரியாக சொன்னீர்கள் கிரி…! தாமதமாக எழுதினாலும் தரமாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்களுடன் வாழ்த்துகள்…!

  4. மிகவும் அற்புதமான விமர்சனம். குசேலன் வெள்ளி விழா காண்பது உறுதி.

  5. ரஜினிகிரியே நடுநிலையாக எழுத வேண்டிய அளவுக்குத்தானிருக்கிறது படமென்பதுதான் உண்மை.

    மேலும அவரது அறிக்கை, பாதகமாக அமைந்துவிட்டது.

    ரஜினி படம் நல்ல பொழுதுபோகு அம்சங்களுடனமையும் என்பதுதான் என்போன்ற நடுத்த்ர வயதினரின் எதிர்பார்ப்பு. சமீபத்தில் வந்த அவரது படங்கள் இதிலிருந்து விலகிசென்றே இருக்கிறன.

    அவரப்போல ஒரு முதியவர் இரட்டை அர்த்தம் தரும் வசனங்களைப் பேசித்தான் படத்தை ஓட வைக்க வேண்டும் என்பது கொடுமை மற்றும் நேர்மையின்மை.

    பில்லா, தாய்வீடு, தங்க மகன், கடைசியாக பாட்ஷா எல்லாமே மசாலாப் படங்கள் என்றபோதும் அவை ஒரு போதும் இந்த அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்றி விட்டதில்லை.

    எதிர்பார்ப்பு அதிகமாகும் போது ஏமாற்றத்தினளவு மிக அதிகமாகத் தெரிவதியல்பு.

    அதிலும் தசாவதாரம் போல ஒரு படம் வந்து வெற்றியடைந்திருக்கும் போது, இவ்வளவு சாதாரணப் படத்தில் நாம் நடிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க முடியவில்லை.

    இதற்கு அவர் வெறும் கெஸ்ட் ரோல் செய்கிறேன் என்று பெருந்தன்மையாக பசுபதிக்கு வாழ்வளித்திருக்கலாம். என்போன்றவர்களுக்கு அவர் மீது மதிப்பும் மரியாதையும் உயர்ந்திருக்கும்.

    10 வேடமே பைத்தியக்காரத்தனமென்று எல்லோரும் கிழித்துக் கொண்டிருக்கையில் 14 வேடமென்று விளமபரப்படுத்தியது, முட்டாள்தனமல்லவா.

    தனிப்பட்ட முறையில் நல்ல மனிதராக இருக்கலாம். ஆனல் ஒரு நடிகரா அவர்மீதிருக்கும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறாரா என்றால், மன்னிக்கவும், இல்லை.

    அவரது தகுதிக்கு அதிகமான கிரீடங்களை அவர் சுமப்பதுதான் காரணம். அவருக்கு வேண்டுமானால் அது சுகமான சுமையாக இருக்கலாம். நமக்கு அது சோகமான சுமை.

  6. //ரசிகர் ஒருவர் தலைவா! நயன்தாராவையே பார்த்துட்டு இருக்கியே எங்க பக்கமும் கொஞ்சம் திரும்பு என்று சொல்ல அதற்க்கு ரஜினி வெட்கப்பட்டு திரும்பி சிரித்து அட! ஏம்பா கம்முனு இருங்கப்பா என்று கூறும் போது தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். //:-) //கடைசி காட்சியில் தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தி எத்தனை மசாலா படங்களிலும் நடித்தாலும் இன்னும் பழைய நடிப்பை மறக்கவில்லை என்று அனைவரையும் நெகிழ வைத்து விடுகிறார்.//சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

  7. ரஜினியும், பசுபதியும் கதைக்கு ஏற்றதுபோல் நடித்திருந்தாலும், திரைக்கதை ரொம்ப கேவலமா இருந்துச்சு…. ரஜினி படம் என்கிற போது ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் சிறிது கவனம் செலுத்தி இருக்கலாம். ரஜினி என்பதற்காக எப்படி எடுத்தாலும் ஓடும்னு ஒரு நல்ல கதையை ஏனோ தானோன்னு எடுத்திருக்காரு வாசு…வடிவேலு காமெடி நீங்க சொல்ற அளவுக்கோ, அல்லது அவரது முந்தைய படங்களின் அளவுக்கோ இல்லைனுதான் எனக்கு தோனுது. எனக்கு மட்டும் இல்ல.. நான் பாத்த தியேட்டர்ல மக்களோட ரியாக்ஷனும் அப்படித்தான் இருந்தது. :))

  8. கவனமாக எழுதப்பட்ட நடுநிலை விமரிசனம்.

    உண்மையில் மலையாளத்தில் இது வந்தபோது ஸ்ரீனிவாசனின் படம்தான்.
    மம்முட்டியின் படம் அல்ல!

  9. பின்னூட்டம் இட்டு பாராட்டியவர்களுக்கும் கலாய்த்தவர்களுக்கும் 😉 நன்றி.

  10. வடகரை வேலன் உங்கள் கேள்விகள் மற்றும் பின்னூட்டத்திற்கு என்னால் விளக்கம் கூற முடியும், நான் அவ்வாறு கூறினால் அதற்க்கு நீங்கள் பதில் கூறவேண்டும், பிறகு நான், இது ஒரு தொடர்கதை.

    நீங்கள் எவ்வளோ தூரம் கமல் மீது மதிப்பு வைத்துள்ளீர்களோ அதை விட அதிகமாக நான் ரஜினி மீது வைத்து இருக்கிறேன். அதே போல உங்கள் மீதும் நட்பும் மரியாதையும் வைத்துள்ளேன்.

    தேவை இல்லாமல் இந்த விசயத்திற்காக உங்களிடம் விவாதம் செய்து மனகசப்பை வரவழைத்துகொண்டு உங்கள் நட்பை இழக்க நான் தயாராக இல்லை. எனென்றால் இந்த விசயத்தில் நாம் இருவரமே விட்டு கொடுக்கபோவதில்லை. முடிவு தெரியாத ஒன்றுக்காக எதற்கு விவாதம் செய்து நம் நட்பை இழக்க வேண்டும்.

    எனவே நீயா! நானா! மாதிரி மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் வேறு விசயத்தில் (ரஜினி விஷயம் அல்ல) விவாதம் கலந்துரையாடல் செய்வோம் :-))

    புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் 🙂

  11. //பரிசல்காரன் said…
    கிரி.. உங்களிடமிருந்த இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை!//

    உங்களிடம் இருந்து நான் கூட எதிர்ப்பார்க்கவில்லை 🙂

    //ஆமா.. படம் சரியாப் பார்த்தீங்களா? எல்லாரும் திட்டீட்டிருக்காங்க’ங்கற டென்ஷனோடயே பாத்திருக்கீங்கன்னு தெரியுது! //

    தவறா புரிந்து கொண்டீர்கள் திரும்பவும் அவசரப்பட்டு 🙂 நான் ரஜினி அறிக்கை விடும் முன்பே பார்த்து விட்டேன்..

    //சினிமா சினிமா’ பாட்டுல குஷ்பு, ஸ்னேகா, சூர்யா எல்லாருமே வர்றாங்க தலைவா!//

    நான் அதை கூறவில்லை, இவர்கள் பாடல் தவிர்த்து காட்சியில் இருப்பது போல (என் முந்தைய பதிவை பாருங்கள்) படங்கள் வந்தது அவ்வாறு காணோம், ஒருவேளை நான் பார்த்த காட்சியில் கட் செய்து விட்டார்களோ என்னவோ!

    உங்க வருகைக்கு நன்றி. உங்கள் பரிசை கொடுத்து விட்டேன் கோவி கண்ணன் ஐயாவிடம்.

  12. குசேலன் முதல் நாள் முதல் காட்சி பாத்தேன் .ஒரு நல்ல படத்த இப்பிடியெல்லாம் நாசமாக்க முடியுமா ?இன்னொரு பாபா . பாபாவைக்கூடஇன்னொருதரம் பாக்கலாம் ஆனாகுசேலன் படத்த ஒருதரம் முழுசா பாத்ததே பெரிய விடயம் .

  13. நல்ல, நடுநிலையான விமர்சனம்…

    (இதை என் மீ த பர்ஸ்ட் பின்னூட்டமாக ஏற்றுக்கொள்ளவும்)

  14. எனது நண்பர் ஒருவரும் படத்தை பார்த்துவிட்டு ஏறத்தாழ இதே கருத்தை தான் கூறினார் .
    அனால் நான் படம் இருபத்து ரூபாய் டிக்கட் வந்தபிறகு தான் பார்க்க வேண்டும் என்று சபதம் மேற்க்கொண்டுள்ளேன் !

  15. கிரி.. உங்களிடமிருந்த இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை!

    நல்ல, ஆணித்தரமான விமர்சனம்!

    ஆமா.. படம் சரியாப் பார்த்தீங்களா? எல்லாரும் திட்டீட்டிருக்காங்க’ங்கற டென்ஷனோடயே பாத்திருக்கீங்கன்னு தெரியுது! `சினிமா சினிமா’ பாட்டுல குஷ்பு, ஸ்னேகா, சூர்யா எல்லாருமே வர்றாங்க தலைவா!

  16. நீங்க ரஜினி ரசிகரா? சொல்லவே இல்லை…

    சிங்கை பதிவர் சந்திப்பில் உங்கள்படத்தை பார்த்தேன்…

    பு.கோட்டை சரவணன் தனுஷ் போல உள்ளீர்கள்

    சரியா?

  17. இது, தங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்க நினைக்கும் சாதாரண மக்களுக்கான படம்.

    pasupati in kuselan, nice review. rajini kiri best of luck

  18. கிரி!மீண்டும் வந்தால் பின்னூட்டம் ஒண்ணு குறையுதே?

  19. பின்னூட்டம் இட்டவர்களுக்கு என் நன்றிகள்

    //ராஜ நடராஜன் said…
    கிரி!மீண்டும் வந்தால் பின்னூட்டம் ஒண்ணு குறையுதே?//

    கும்மி பின்னூட்டமாக இருந்ததால் ஒரு நல்ல பதிவில் வேண்டாம் என்று வெளியிடவில்லை, வேறு ஒன்றும் இல்லை. உங்கள் வருகைக்கு நன்றி.

  20. Hi Giri,

    Excellant review, Ennkku tamil la eppadi ezhuthuvathu enru theriyavillai in the website. But i really liked your comments so wanted say my hearty congrats to you. Continue writing you have a tremendous capability

    Ungal entrum nanban
    Dinesh (thiag.tem@gmail.com)

  21. //குறைகள் இல்லாத மனிதர்கள் இல்லை, குறைகள் காண்பது மட்டுமே வாழ்க்கை இல்லை.//

    அருமை கிரி. இந்த கடைசி இரண்டு வரிகளுக்கேற்ப படத்தின் அத்தனை நிறைகளையும் அழகுறச் சொல்லி விட்டு குறைகளை “நெற்றிக் கண்” திறக்காமல் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். விமர்சனம் என்று வந்து விட்டால் குறைகளைச் சொல்வதென்பது அவர்கள் தம்மை மேம்படுத்திக் கொள்ளத்தானே![‘ஆகா இது நம்ம பாலிஸி அல்லவா’ என நீங்கள் சொல்வது கேட்கிறது:). ‘நம்ம’வில் என்னையும் சேர்த்துக் கொள்ளலாம்:)!]

    மொத்தத்தில் ஜெகதீசன் சொல்லியிருப்பது போல இது
    //நல்ல, நடுநிலையான விமர்சனம்…//

    பரிசல்காரர் சொல்லியிருப்பது போல
    //நல்ல, ஆணித்தரமான விமர்சனம்!//

  22. //SINGAM said…
    என்ன கொடும சார் இது//

    சிங்கம் டி ராஜேந்தர் பதிவுல போடுற பின்னூட்டத்தை இங்கே போட்டு விட்டீர்களா :-)))

  23. //thiag said…
    Hi Giri,
    Excellant review,//

    நன்றி தியாக்.

    //Ennkku tamil la eppadi ezhuthuvathu enru theriyavillai in the website//

    https://www.google.com/intl/ta/inputtools/try/ இங்கே போய் எழுதுங்க,

    // really liked your comments so wanted say my hearty congrats to you. Continue writing you have a tremendous capability //

    நீங்கள் கூறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நாமும் ஒரு சிலரை கவரும் வகையில் எழுதுகிறோம் என்று நினைக்கும் போது.

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி தொடர்ந்து வாங்க.

  24. //ராமலக்ஷ்மி said…
    படத்தின் அத்தனை நிறைகளையும் அழகுறச் சொல்லி விட்டு குறைகளை “நெற்றிக் கண்” திறக்காமல் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.//

    உண்மை தான் ராமலக்ஷ்மி. ஆனால் வலை பதிவில் பலர் ஒரு தலை பட்சமாக படு கேவலமாக விமர்சித்து இருந்தார்கள். அதை எல்லாம் நீங்க படித்தீர்களா என்று தெரியவில்லை (உங்களை கொஞ்ச நாளா ஆளை காணோம் அதனால் கூறினேன்) அதை எல்லாம் நீங்கள் படிக்காமல் இருப்பதே நல்லது. விமர்சனம் என்கிற பெயரில் பலர் தங்கள் உள்ளத்து அழுக்கை எல்லாம் கொட்டி இருந்தார்கள்.

    உங்கள் வருகைக்கு நன்றி. நீண்ட நாட்கள் ஆகி விட்டது உங்கள் பின்னூட்டங்களை கண்டு 🙂 புது பதிவு இப்போதைக்கு போடாதீங்க..ஒரு வாரம் கழித்து போடுங்க. இப்போது போட வேண்டும் என்றால் அது நீங்கள் குசேலனை திட்டி தான் போட வேண்டும் 🙂 இல்லை என்றால் உங்கள் நல்ல பதிவு இதில் காணாமல் போய் விடும்.

  25. //உங்களை கொஞ்ச நாளா ஆளை காணோம்//

    சரியாகத்தான் கவனித்திருக்கிறீர்கள். ஒரு வாரம் தமிழ் மணம் பக்கம் வர நேரமில்லாது போயிற்று. நீங்கள் சொன்ன பதிவுகள் எதுவும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டாம்னுதான் சொல்லிட்டீங்கள்ளே:).நன்றி, ஏன்னா நான் வழக்கமா வாசிக்கும் வலைப்பூக்களெல்லாம் புதிய பதிவுகளால் நிரம்பி வழிகிறது(உங்களதும் சேர்த்துதான்:)).ஒவ்வொன்றாக அவற்றைப் படிக்கவே நேரம் சரியா இருக்குது போங்க:)!

  26. //ராமலக்ஷ்மி said…
    சரியாகத்தான் கவனித்திருக்கிறீர்கள். ஒரு வாரம் தமிழ் மணம் பக்கம் வர நேரமில்லாது போயிற்று//

    நல்ல வேளை தப்பித்தீங்க ஹா ஹா ஹா

    //புதிய பதிவுகளால் நிரம்பி வழிகிறது(உங்களதும் சேர்த்துதான்:)).//

    குசேலன் விமர்சனம் தவிர ஒரு நல்ல பதிவும் போடல :-))

  27. //Vidhya said…
    கிரி குசேலன் படத்தை பற்றி பல விமர்சனங்கள் வந்து விட்டன… ஆனால் உங்களுடைய விமர்சனத்தை படித்துவிட்டு கண்டிப்பாக பார்க்க ஆசை வந்துவிட்டது…//

    நன்றி வித்யா.

  28. கிரி குசேலன் படத்தை பற்றி பல விமர்சனங்கள் வந்து விட்டன… ஆனால் உங்களுடைய விமர்சனத்தை படித்துவிட்டு கண்டிப்பாக பார்க்க ஆசை வந்துவிட்டது…

  29. ஒருவாறாக குசேலன் இன்றுதான் பார்க்க வாய்த்தது:)! ரசித்துப் பார்த்தேன். நல்ல கதை. நல்ல நடிப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!