Escape to Nowhere என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதே Khufiya.
Khufiya
அமெரிக்க CIA, பாகிஸ்தான் ISI, இந்திய RAW உளவுத்துறை இடையே நடைபெறும் சம்பவங்களின் கதையே Khufiya. Image Credit
Heena என்ற RAW உளவுத்துறை பெண் கொல்லப்பட்டதால், RAW ல் யாரோ தகவல்களைக் கசிய விடுகிறார்கள் என்று தேடி, வரவுக்கு மீறி செலவு செய்யும் ரவி என்பவரைச் சந்தேகிக்கிறார்கள்.
சந்தேகிக்கப்படும் ரவி வீட்டில் ரகசிய படக்கருவிகளை வைத்து அவரைக் கண்காணிக்கிறார்கள். இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.
உளவுத்துறை
உளவுத்துறை கதை என்றாலே திகிலுக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லை. ஒவ்வொரு காட்சியும் என்ன ஆகப்போகிறதோ என்ற படபடப்பு ஏற்படுத்துகிறது.
ஒவ்வொருவரும் வெளியே எப்படி இருந்தாலும், தனியாக வீட்டில் இருக்கும் போது நடவடிக்கைகள் வேறாக இருக்கும். அதை ரகசிய கேமராக்கள் காண்பிக்கிறது.
தபுவின் உயரதிகாரியாக ஆஷிஷ் வித்தியார்த்தி. தபு இக்கதாபாத்திரத்துக்கு அம்சமாகப் பொருந்துகிறார்.
ஒருவர் கொல்லப்பட்டதால், ரவியின் மனைவி சாரு ஒரு சராசரி பெண்ணாக ஆவேசமடைந்து பேசும் போது தபு கொடுக்கும் விளக்கம் அருமை.
உளவுத்துறையில் நியாயம், தர்மம் பார்க்க முடியாது, நாட்டின் நலனே முன்னிறுத்தப்படும். எனவே, அப்பாவிகள் கூடப் பாதிக்கப்பட வாய்ப்பு.
எனவே, உணர்ச்சிவயத்துக்கு இடம் கொடுக்காமல், செயல்களைச் செய்ய வேண்டும். மனசாட்சியைக் கழட்டி வைத்துவிட்டு தான் பணியில் இணைய வேண்டும்.
கார்கில் சண்டைக்குப் பிறகு
கார்கில் சண்டைக்குப் பிறகான காலத்து கதையாகக் காண்பிக்கப்படுகிறது. எனவே, அக்காலத்தையொட்டிய சாதனங்கள், இடங்கள், உடைகள், ஒப்பனைகள் என்று உள்ளது. குறிப்பாக அமெரிக்கக் காட்சிகள் சிறப்பு.
இதற்காக நிறையவே மெனக்கெட்டுள்ளார்கள். குறைந்த முதலீட்டுப் படமே ஆனால், இதற்காக அமைத்ததைப் பார்த்தால், வியப்பாக உள்ளது.
அமெரிக்காவில் தான் எடுத்தார்களா என்பது தெரியவில்லை ஆனால், வாகனம், வீடு, இடம் என்று எல்லாமே பழைய காலத்தைப் பிரதிபலிக்கிறது.
எப்படி இக்காட்சிகளை எடுத்தார்கள் என்று வியக்காமல் இருக்க முடியாது.
ரவி அம்மா
பலரைக் குறிப்பிட முடிந்தாலும், தவிர்க்க முடியாதவர் ரவியின் அம்மாவாக வருபவர்.
ரவிக்குப் பணத்தாசையை ஏற்படுத்தி உளவாளியாக மாற்றுவதும், அதன் பிறகு பல அதிரடிகளைச் செய்வதும் என்று கவர்கிறார்.
நம்பும்படி பேசுவது இவர் பலம், நானும் இறுதியில் ஏமாந்து விட்டேன். அட! இதற்குத் தான் இவ்வளவு அக்கறையான்னு! 🙂 .
ரவியாக நடித்துள்ள Ali Fazal, Mirzapur சீரீஸில் சாதுவாக வந்து, இறுதியில் மிரட்டலாக நடித்தவர்.
தொழில்நுட்பம்
பாடல்கள் நன்றாக உள்ளது, அதோடு பின்னணி இசையைக் குறிப்பிட வேண்டியது அவசியம். தரமான ஒலிப்பெருக்கி இருந்தால், கேட்கவும்.
படம் பார்க்க என்னவோ சாதாரணமாக உள்ளது ஆனால், பின்னணி இசை இதற்குச் சம்பந்தமே இல்லாதது போலச் செமையாக உள்ளது.
ஒளிப்பதிவும், கலையும் பழைய காலத்தைக் காட்ட பெரும் உதவி புரிந்துள்ளன.
இறுதிக்காட்சிகள் டக்குனு முடிந்தது போன்ற உணர்வு.
யார் பார்க்கலாம்?
வெளிப்படையாக இல்லாத ஒரு லெஸ்பியன் காட்சியும், ஒரு உடலுறவு காட்சியும் உள்ளதால், குடும்பத்துடன் பார்க்க ஏற்றதல்ல.
தற்போது லெஸ்பியன் காட்சிகள், கதாபாத்திரங்கள் இயல்பாகக் காட்டப்படுகிறது. ஈடுபாடு இல்லாதவர்களுக்குக் கூட இதுவொரு இயல்பான செயல் என்று மூளைச்சலவை செய்யப்படுகிறது.
ஆகச்சிறந்த படமில்லை ஆனால், அக்கால சூழ்நிலைக்கு நம்மைக் கொண்டு சென்றதற்காகவும், பரபரப்பைத் தொடர்ந்ததற்காகவும் பார்க்கலாம்.
NETFLIX ல் காணலாம். தமிழ் மொழி மாற்றத்தில் பார்த்தேன், மோசமில்லை.
Directed by Vishal Bhardwaj
Written by Rohan Narula, Vishal Bhardwaj
Based on Escape to Nowhere, by Amar Bhushan
Produced by Vishal Bhardwaj, Rekha Bhardwaj
Starring Tabu, Ali Fazal, Wamiqa Gabbi, Azmeri Haque Badhon
Cinematography Farhad Ahmed Dehlvi
Edited by A. Sreekar Prasad
Music by Vishal Bhardwaj
Distributed by Netflix
Release date 5 October 2023
Running time 157 minutes
Country India
Language Hindi
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. தற்போது சூழலால் கடந்த சில வருடங்களாக நான் ஹிந்தி படங்களை காண்பது மிகவும் அரிதாகி விட்டது.. ஆனால் 7/8 வருடங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக ஹிந்தி படங்களை மட்டும் தான் பார்த்து வந்தேன்.. தற்போது எந்த படம் வெளியாகுகிறது என்ற தகவலை கூட தெரிந்து கொள்வதில் ஆர்வம் குறைந்து விட்டது.. ஆனால் சில மட்டும் காண வேண்டும் என அவ்வப்போது குறித்து வைத்து கொள்வதுண்டு..
எனக்கு ஹிந்தி தெரியாத போது நான் ஹிந்தி படங்களை என்னை பார்க்க தூண்டியது ஒளிப்பதிவு மட்டும் இசை. சாதாரண படத்தை பார்க்கும் போதே ஒளிப்பதிவு சும்மா நச்சுன்னு இருக்கும். பின்பு பாடல்கள் நான் 2008/2009/2010/2011 காலகட்டத்தில் விரும்பி கேட்ட பாடல்களை தற்போதும் கேட்பதுண்டு. Sardar Udham படம் எனக்கு காட்சி அமைப்பில் ஒரு நிறைவை கொடுத்தது..
(அமெரிக்காவில் தான் எடுத்தார்களா என்பது தெரியவில்லை ஆனால், வாகனம், வீடு, இடம் என்று எல்லாமே பழைய காலத்தைப் பிரதிபலிக்கிறது.) Sardar Udham படத்தை UK & scotland இல் எடுத்து இருப்பார்கள்.. படம் நம்மை 70/80 காலம் பின்னோக்கி பயணிக்க வைக்கும்.
Mission Majnu படமும் எனக்கு பிடித்து இருந்தது.. குறிப்பாக படத்தின் ART ஒர்க் நன்றாக இருந்தது. Khufiya இதுவரை எந்த படத்தை பார்க்கவில்லை.. காண வேண்டிய பட்டியலில் இதை சேர்த்து விடுகிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.
@யாசின்
“தற்போது எந்த படம் வெளியாகுகிறது என்ற தகவலை கூட தெரிந்து கொள்வதில் ஆர்வம் குறைந்து விட்டது.”
எனக்கு யாராவது பரிந்துரைத்தால் அல்லது ரேண்டமாக பார்க்கும் போது வருவதை பார்ப்பேன்.
“Sardar Udham படத்தை UK & scotland இல் எடுத்து இருப்பார்கள்”
ஆமாம். என் விமர்சனத்திலும் குறிப்பிட்டு இருப்பேன்.
“Mission Majnu படமும் எனக்கு பிடித்து இருந்தது.. குறிப்பாக படத்தின் ART ஒர்க் நன்றாக இருந்தது”
பார்க்க வேண்டிய பட்டியலில் உள்ளது.