பேய் படத்திலேயே காஞ்சனா மூலம் நகைச்சுவை கலந்த ஹாரரை லாரன்ஸ் கொண்டு வந்து விட்டார்.
காஞ்சனா
கதை வழக்கமான பேய்க்கதை தான் பேய் ஒருவர் உடலில் புகுந்து தன்னை கொன்றவர்களைப் பழி வாங்குகிறது.
கதையை அரை வரியில் கூறி விட்டாலும் அதை கொடுத்த விதத்தில் தான் படத்தின் வெற்றி இருக்கிறது.
பேய்ப்படம் என்றாலே நம்ம ஊரில் காமெடி ஆக்கி விடுவார்கள் ஆனால் பேய்ப் படத்தையே காமெடியாக எடுத்தால்!
காஞ்சனா படத்தில் மூன்று பேர் நடிப்பு டாப்பாக உள்ளது கோவை சரளா சரத்குமார் லாரன்ஸ்.
கோவை சரளா
நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவை சரளா காமெடியில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
சிரித்து ஒரு வழி ஆகிட்டேன் 🙂 என் முன்னாடி அமர்ந்து இருந்தவர் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் எகிறி எகிறி சிரித்துக்கொண்டு இருந்தார்.
அநேகமாக சதிலீலாவதிக்கு பிறகு நல்ல வாய்ப்பு அதைச் சரியாக என்பது சாதாரண வார்த்தை மிக மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்.
அட! அட!! என்ன நடிப்பு… சும்மா சொல்லக்கூடாதுங்க பின்னிப் பெடலெடுத்து இருக்கிறார்.
ராகவா லாரன்ஸ்க்கு பேய்ப் பிடித்து எல்லோரையும் அடிப்பார். சிரித்தால் அடிக்காமல் இருக்கிறார் என்பதால் கோவை சரளா லாரன்சை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பது செம ரகளை.
அதை விடக் கோவை சரளா நீச்சல் உடையில் வந்தால் எப்படி இருப்பேன் என்று கற்பனை செய்வது அதகளம் ஹா ஹா ஹா தூள் கிளப்பி இருக்கிறார்.
பேயைத் துரத்த ஒரு பூசாரியிடம் வரும் கோவை சரளா அவரையே கலாய்ப்பது… என்ன சொல்றது போங்க! படத்தைப் பாருங்க உங்களுக்கு வயிற்று வலி நிச்சயம் 🙂 .
கோவை சரளா The best movie என்றால் அது “காஞ்சனா” தான்.
இது வரை கவுண்டர் மனைவி வடிவேல் மனைவி செந்தில் மனைவி SS சந்திரன் மனைவி என்று இரண்டாவதாகவே வந்து அவருடைய திறமை அமுக்கப்பட்டு விட்டது.
இதில் முக்கிய கதாப்பாத்திரமாக வருவதால் தனது முழுத் திறமையையும் வெளிக்காட்டி இருக்கிறார் யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல்.
கோவை சரளா ரொம்ப ரொம்ப சூப்பரா நடித்து இருந்தீங்க! மனமார்ந்த வாழ்த்துக்கள்.
லாரன்ஸ் + சரத் குமார்
சரத் அரவாணியாக நடித்து இருக்கிறார். நடிக்க அதிகளவில் வாய்ப்பில்லை என்றாலும் வரும் காட்சி கொஞ்சம் என்றாலும் நிறைவாகவே செய்து இருக்கிறார்.
அதுவும் மேடையில் அரவாணிகளுக்காக பேசுவது படத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் நமக்கும் சேர்த்தே சொல்லி இருக்கிறார்கள்.
சண்டைக் காட்சிகளில் நொறுக்குவது செம.
சரத்திற்கு எப்படிப்பட்ட உடம்பு என்று நம் அனைவருக்கும் தெரியும் அப்படிப்பட்டவர் புடவை கட்டி சண்டை போட்டால் எப்படி இருக்கும்! அடி தூள் தான்.
லாரன்ஸ் க்கு பேய் பிடித்த பிறகு அவர் நடிப்பு நன்றாக இருந்தது. இதில் ஒரு பேய் இல்லாமல் மூன்று பேய் இருப்பதை மாற்றி மாற்றி காட்டி இருப்பது நன்றாகவே இருந்தது.
கடைசி அரை மணி நேரம் லாரன்ஸ் கலக்கி உள்ளார் குறிப்பாக க்ளைமாக்ஸ் பாடல். பார்ப்பது தமிழ் மசாலாப் படம் என்ற அளவில் பார்த்தீர்கள் என்றால் ரொம்ப ரசிப்பீர்கள்.
இவர்கள் இருவருக்குமே வித்யாசமாக நடிக்க வாய்ப்பு அதிகம் அதனால் மற்றவர்களைக் கவர்ந்ததில் எந்த வியப்பும் இல்லை.
ஆனால் இவர்களைப் போல எந்த வித்யாசமான நடிப்பும் இல்லாமல் தனது இயல்பான நடிப்பிலேயே அனைவரையும் அசத்துவது என்பது சிரமம்.
அதனாலே கூறினேன் கோவைசரளா தான் டாப் என்று 🙂 .
தேவதர்ஷினி
லாரன்ஸ் ஜோடியாக லக்ஷ்மி ராய் ஒரு பாட்டுக்கு வந்து ஆடியதைத் தவிர இவருக்கு வேறு வேலை இல்லை.
இவர்களுடன் இன்னொருவரை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும் அது தேவதர்ஷினி.
இவர் வரும் அனைத்து சீரியல்களிலும் அழுது கொண்டே இருக்கும் கதாப்பாத்திரம் இதில் அதற்க்கு கோவை சரளாவுடன் சேர்ந்து வட்டியும் முதலுமாக காமெடியில் கலக்கி இருக்கிறார்.
கோவை சரளாக்கு இரண்டு பையன் முதல் பையன் ஸ்ரீமன் இவரது மனைவி தான் தேவதர்ஷினி இரண்டாவது பையன் லாரன்ஸ். ஸ்ரீமனும் நன்றாகவே காமெடி செய்துள்ளார்.
பேய் வந்துடுச்சுன்னு தூங்கிட்டு இருக்கும் ஸ்ரீமனை தேவதர்ஷினி எழுப்பத் தூக்கக்கலக்கத்தில் அவரது வேலையில் உள்ள பிரச்சனையைக் கூறி விட்டுத் தூங்கி விடுவது இயல்பான நகைச்சுவை.
கோவை சரளாவும் தேவதர்ஷினியும் சேர்ந்து படம் பார்க்கும் அனைவரையும் ஒரு வழி ஆக்கி விட்டார்கள். இவர்கள் காமெடிக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.
அதுவும் தேவதர்ஷினி பேய் பயத்தில் கோவை சரளாவை அடித்து இழுத்துட்டு போவது செம காமெடி 🙂 .
எல்லோருக்குள்ளும் திறமை இருந்து கொண்டு தான் இருக்கிறது அதை வெளிப்படுத்தத் தான் பலருக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை என்பது கோவை சரளா தேவதர்ஷினி நடிப்பைப் பார்த்தால் புரிகிறது.
தேவதர்ஷினி நடிப்பு மட்டும் ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் மிகைப்பட்டதாக இருந்தது.
தேவர்ஷினி பேசுவது பிராமண பாஷையாக இருக்கும் ஆனால், அவர்கள் வீட்டில் வேறு யாரும் அப்படி பேசுவது போல தெரியவில்லை.
அதோடு அசைவமும் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள் ஒருவேளை காதல் கல்யாணமோ என்னவோ!
கொலை வெறி ஆட்டம்
லாரன்ஸ் ஒரே மாதிரி அனைத்துப் பாடல்களிலும் ஆடுவது சலிப்பாக இருக்கிறது அதோடு இந்த விரல் சேட்டையையும் கொஞ்சம் நிறுத்தலாம்.
கடைசிப்பாடலில் லாரன்ஸ் ஒரு கொலை வெறி ஆட்டம் போட்டு இருக்கிறார், பிடித்து இருந்தது.
வில்லனாக தேவன். அரவாணி சரத்குமார் கஷ்டப்பட்டு வாங்கிய இடத்தைத் தற்போது பரபரப்பாக பேசப்படும் நில ஆக்கிரமிப்பு பிரச்சனை மாதிரி தேவன் ஸ்வாகா செய்து விடுகிறார்.
அதற்காக அவர் செய்யும் கொலைகளே அவரை பேயாக துரத்துகிறது.
ஒரு பேய்ப்படத்தில் காமெடி வைத்துப் படத்தை வெற்றி பெற வைப்பது சாதாரண விசயமில்லை.
காமெடியைப் பற்றி அதிகம் கூறியதால் த்ரில்லாக இருக்காது என்று நினைத்து விட வேண்டாம். பயம் வரும்படியும் எடுத்து இருக்கிறார்கள்.
ஒரு சிலர் நன்றாகவே பயந்து விட்டார்கள். சிங்கப்பூர் ல் இது NC16 சான்றிதல் எனவே குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
குழந்தைகள் இந்தப்படத்தைப் பார்த்தால் நிச்சயம் ரொம்ப பயந்து விடுவார்கள். படத்தின் இறுதியில் ரத்தக் காட்சிகள் அதிகம்.
நான் பார்த்தது ஒரு மொக்கை திரையரங்காக இருந்தது நல்ல திரையரங்காக இருந்து இருந்தால் இன்னும் கூடுதலாக ரசித்து இருப்பேன்.
இது நிச்சயம் ஈரம், யாவரும் நலம் படம் போல ப்ரோஃபசலான படமல்ல பக்கா மசாலா தமிழ்ப் படம்.
இதை எல்லாம் உணர்ந்து பார்த்தால் இரண்டை மணி நேர சிரிப்புக்கு (கடைசி சீரியஸ் இருபது நிமிடம் தவிர்த்து) நான் உத்தரவாதம்.
மூன்றாவது பாகமும் வரப்போவதாக கூறி இருக்கிறார்கள். முனி 1, முனி 2 (காஞ்சனா) இனி அடுத்தது முனி 3. வாழ்த்துக்கள்.
Directed by Raghavendra Lawrence
Produced by Raghavendra Lawrence
Written by Raghavendra Lawrence
Starring Raghavendra Lawrence, Kovai Sarala, Sarath Kumar, Thevatharshini, Sriman, Lakshmirai, Devan, Babu Antony
Music by Thaman S
Cinematography Vetri
Stunt Super subrayan
Distributed by Sri Thenandal Films
Release date(s) July 22 2011
Budget 8.5 crores including publicity cost of 1.5 crores
Country India
கொசுறு
படத்தின் தயாரிப்பாளரான ராதா அவர்கள் கடந்த 14 ம் தேதி காலமாகி விட்டார். இவருக்கு வயது 51 இவர் இயக்குனர் ராம நாராயணன் அவர்களின் மனைவி ஆவார்.
கடைசியாக ஒரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த மன நிறைவுடன் சென்று இருப்பார் என்று நம்புகிறேன்.
இவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
நல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்.
இப்பல்லாம் நான் விகடன், குமுதம் புத்தகங்களில் விமரிசனம் படிப்பதை விட, கிரி விமரிசனம் படிக்கிறதைதான் ரொம்ப விரும்பறேனுங்க ..படம் பார்த்த பிறகு கூட கிரி என்ன சொல்லியிருக்காருன்னு பார்க்க தோணுது…..
வணக்கம் கிரு அவர்களே
நான் இன்னும் காஞ்சனா திரைப்படம் பார்க்கவில்லை.காரணம் பல இருக்கிறது.இருந்தாலும் உங்கள் விமர்சனம் படித்த பிறகு நகைச்சுவைக்காக காஞ்சனா திரைப்படம் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.நன்றி
நல்ல விமர்சனம்… சரளா மேடம் பத்தி நாங்க நெனச்சதை அப்டியே நீங்க சொல்லிடீங்க கிரி…
நல்ல கலக்கல் படம் தான்..
Latta vandhalum unga vimarchanam nallave irudhathu. Sreemanum nalla panniyirundhar. Avarai patri innum konjam solli irukkalam.
//தேவதர்ஷினி நடிப்பு மட்டும் ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் மிகைப்பட்டதாக இருந்தது.//
நிஜம்தான்…
ஆனால் கோவை சரளாவை தலையில் அடித்து வெளியில் இழுத்துக்கொண்டு செல்லும் நடிப்பு மட்டும் சூப்பர்..
கோவை சரளா சான்சே இல்ல.. செம செம
நல்ல விமர்சனம் நண்பரே…
என்ன படம் காக்கலாம்னு இருந்தேன்
பாத்துடுவோம் :-)))
யார் இவ்வளவு சுவராசியமா விமர்சனம் செய்றாங்கன்னு பதிவு யாருடையது என்ற நினைவில்லாமலே படித்துக்கொண்டு வந்தேன்.அது நீங்கதானா:)
படத்தை சுவராசியமா நடத்தி செல்வதில் கோவை சரளாவின் பங்கு மிக அதிகம்.
கோவை சரளாவின் சிறந்த நகைச்சுவைகளில் காஞ்சனா நிலைத்து நிற்கும்.
வில் சி
உண்மையில் படம் பட்டைய கெளப்புகிறது. ரொம்ப சிரிச்சு ரசிச்சு பார்த்தேன். கோவை சரளா பின்னிட்டாங்க.
//இவர்கள் இருவருக்குமே வித்யாசமாக நடிக்க வாய்ப்பு அதிகம் அதனால் மற்றவர்களை கவர்ந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை ஆனால் இவர்களைப்போல எந்த வித்யாசமான நடிப்பும் இல்லாமல் தனது இயல்பான நடிப்பிலேயே அனைவரையும் அசத்துவது என்பது சிரமம் அதனாலே கூறினேன் கோவைசரளா தான் டாப் என்று//
இந்த வித்தியாசத்தைதான் யாரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். தலைவர் விஷயத்திலும் இதேதான் நடக்கிறது. அதனால்தான் இன்னும் சிலர் ரஜினிக்கு நடிக்க தெரியாதுன்னு பழைய பல்லவியவே பாடிட்டு இருக்காங்க. சரியாக சொன்னீர்கள் கிரி இயல்பான நடிப்பின் மூலம் மக்களை கவர்வது என்பது எவ்வளவு கஷ்டம்.
உங்கள் விமர்சனம் சூப்பர் கிரி சார்.
விமர்சனத்திற்கு நன்றி கிரி கண்டிப்பாக பார்க்கிறேன்
வெகு நாட்களுக்கு பிறகு குடும்பங்களை தியேட்டரில் காண முடிகிறது. தேவதர்ஷினியின் நடிப்பு மிக அருமை. கோவை சரளா அட்டகாசமாக செய்திருக்கிறார். ரொம்ப மேதாவித்தனமாக படத்தை பார்க்காமல் இருந்தால் கண்டிப்பாக ரசிக்கலாம். மக்கள் இந்த மாதிரி படங்களைத்தான் பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களுக்குத்தேவை கருத்து இல்லை. கலகலப்புத்தான். உங்கள் விமர்சனம் அருமை நண்பரே.
பி, சி க்கு ஏத்த படம் சார்.. செம ஓட்டம்…
மத்த நடிகர்கள் என்ன செய்ய போறாங்க?
///படத்தின் தயாரிப்பாளரான ராதா அவர்கள் கடந்த 14 ம் தேதி காலமாகி விட்டார். ///
/// Produced by Raghavendra Lawrence ///
கிரி சரியாக கவனிக்கலையோ?
இந்த படத்தின் தயாரிப்பாளார் லாரன்ஸ்தான்.
ஆனால் இராமநாராயணன் தனது பேனரில் வாங்கி வெளியிட்டுள்ளார். படத்தின் லாபமெல்லாம் இராமநாராயணனுக்கே………
அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@ராஜன் சார் இது மிகைப்பட்ட பாராட்டாக இருக்கிறது இருப்பினும் உங்கள் அன்பிற்கு நன்றி.
@காத்தவராயன் கவனித்தேன் ஆனால் அனைத்து தளங்களிலும் தயாரிப்பாளர் என்று போட்டு இருந்தார்கள்..ஒருவேளை படத்தை வாங்கிவிட்டால் அப்படி கூற வேண்டுமோ என்னவோ என்று அப்படியே குறிப்பிட்டு விட்டேன்.
கிரி படம் பார்த்து விட்டேன் ரசித்து பார்த்தேன் அதன் விளைவாய் நானும் எனது தளத்தில் ஒரு பகிர்வாகவும் தந்து விட்டேன்