கமலி from நடுக்காவேரி (2021) | காதலும் IIT படிப்பும்

0
கமலி from நடுக்காவேரி

ரு தலை காதலுக்காக IIT படிக்கும் மாணவியின் கதையே கமலி from நடுக்காவேரி.

கமலி from நடுக்காவேரி

12 ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனின் பேட்டியைப் பார்த்த ஆனந்தி, அவர் மீது காதல் கொள்கிறார். அம்மாணவன் IIT செல்வது தான் குறிக்கோள் என்று பேட்டி கொடுக்கிறார். Image Credit

இதனால் தானும் IIT க்கு படித்தால், தான் விரும்பும் மாணவனைச் சந்திக்கலாம் என்பதற்காகவே நன்கு படித்து IIT செல்கிறார்.

IIT சென்றவர், எதிர்பார்த்தது போல தான் விரும்பியவரும் அங்கே இருப்பதைக் கண்டு மகிழ்கிறார். இறுதியில் என்ன ஆனது? என்பதே கதை.

இப்படியெல்லாமா காதலிப்பாங்க என்று எரிச்சல் வந்தாலும், திரைக்கதை சுவாரசியமாகவே உள்ளது.

மேற்படிப்பு

IIT க்குப் படிப்பது எளிதல்ல என்பதால், பரிந்துரையின் மூலம் ஓய்வு பெற்ற பிரதாப் போத்தனிடம் பயிற்சி பெறுகிறார்.

IIT பற்றிக் குறைத்து மதிப்பிடும் ஆனந்திக்கு ABCD படித்துவரக்கூறி அதிலேயே கிறுகிறுக்கும் கேள்விகளைக் கேட்டு IIT முக்கியத்துவத்தைப் புரியவைக்கிறார்.

ஆனந்தி தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளும் பக்குவம் ரசிக்க வைக்கிறது.

இப்பகுதி உண்மையிலேயே IIT அல்லது வேறு பெரிய படிப்பு படிப்பவர்களுக்குச் சிறப்பான அறிவுரையாகவும், படிப்பினையாகவும் இருக்கும்.

படிப்பது பெரிதல்ல! எப்படிப் படிப்பது? எதைப்படிப்பது? எப்படிப் புரிந்து படிப்பது? என்று ஏராளமான வழிமுறைகள் உள்ளன.

Indian Institute of Technology

IIT பற்றித் தெரியும், சென்னை கேன்சர் மருத்துவமனை அருகே உள்ளதை கடந்து போய் இருப்போம் ஆனால், வளாகம் உள்ளே எப்படி இருக்கும் என்று தெரியாது.

IIT யின் அனுமதி பெற்று அங்கேயே எடுத்தார்களா அல்லது இது போல வளாகத்தைத் தேர்வு செய்து எடுத்தார்களா என்று தெரியலை ஆனால், அம்சமாக எடுத்துள்ளார்கள்.

தமிழ்த் திரைப்படங்களில் பேராசிரியரை கோமாளி மாதிரி தான் காட்டுவார்கள். சிவப்பதிகாரம் போன்ற வெகு சில படங்களே விதிவிலக்காக வந்துள்ளன.

இதிலும் சிறப்பான முறையில் பேராசிரியரை, வகுப்புகளைக் காட்டியுள்ளார்கள். தமிழுக்காக சமரசம் செய்யாமல் ஆங்கிலத்தில் பேசுவதையே காட்டுகிறார்கள்.

இங்கே மாணவர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கைமுறை, பொழுதுபோக்குகள் என்ன? வளாகம் எப்படியுள்ளது? எப்படி உள்ளே பயணிக்கிறார்கள்? என்பதை ஓரளவு தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

திரைக்கதை

அதிக மதிப்பெண் பெற்றும் தான் படித்த காரணம் வேறு என்பதால், படிப்பதில் கோட்டை விட்டு ஆனந்தி அவமானப்படும் காட்சிகள் இயல்பானதாக உள்ளது.

ஆனந்திக்கு இக்கதாப்பாத்திரம் நன்கு பொருந்தியுள்ளது.

இந்தியா முழுக்க IIT மாணவர்கள் கலந்து கொள்ளும் வினா விடை நிகழ்ச்சியை மிகச்சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

ஒரு DD நிகழ்ச்சியைப் பார்ப்பது போன்றே இருந்தது.

படிப்பு, மாணவர்கள் என்று பெரும்பகுதி சென்றாலும் இடையிடையே நட்பு, குடும்ப பாசம், அன்பும் உள்ளது.

பாசமான அப்பாவாக அழகம்பெருமாள் வருகிறார்.

இப்படத்தின் மையக்கருத்து அழுத்தம் இல்லாமல் சப்பையாக இருந்தாலும், திரைக்கதையால் சுவராசியமாக உள்ளது.

எந்த ஆடம்பர பூச்சும் இல்லாத மிக எளிமையான கதை. எளிமையான கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவும் அழகாக இருந்தது.

இறுதியில் உறுதியான முடிவைக் கூறி இருந்தால், நிறைவாக முடிந்து இருக்கும்.

யார் பார்க்கலாம்?

அனைவைரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன் குறிப்பாக மாணவர்களை, அதிலும் குறிப்பாக IIT, IAS, IPS, GRE, TOEFL படிப்பவர்கள்.

Zee 5 ல் உள்ளது. Amazon Prime ல் US க்கு மட்டும் உள்ளது.

பரிந்துரைத்தது ஸ்ரீனிவாசன்.

Directed by Rajasekar Duraisamy
Starring Anandhi, Rohit Suresh Saraf, Azhagam Perumal
Cinematography Jegadeesan Logayan
Music by Eazhisaivendhan
Release date 19 February 2021
Running time 159 minutes
Country India
Language Tamil

தொடர்புடைய திரைவிமர்சனம்

பொறியாளன் [2014]

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here