விமர்சன ரீதியாகப் பலரிடையே பாராட்டைப் பெற்ற படம் Gangs Of Wasseypur. Image Credit
Gangs of wasseypur
சுதந்திரம் பெறும் முன்பு இருந்தே பல்வேறு காரணங்களுக்காக நிலக்கரியின் தேவை அதிகம் இருந்தது. எனவே, இதையொட்டி அரசியலும் இருந்தது.
இதில் ஆரம்பிக்கும் சண்டைகள் கால மாற்றத்தில் தலைமுறை தலைமுறையாக நிலக்கரியில் இருந்து காலத்திற்கேற்ப மாறுகிறது. Image Credit
குழு மோதல்களும், ஒரு குழு மற்றவரின் குடும்பத்தை அழிப்பது, அவர்கள் இவர்களை அழிக்கத் துடிப்பது என்று தலைமுறை கடந்தும் பகை தொடர்கிறது.
இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் கதை.
இயக்குநர் அனுராக் காஷ்யப் விமர்சன ரீதியாகப் பல படைப்புகளைக் கொடுத்து இருக்கிறார்.
Gangs Of Wasseypur பெரும் புகழை கொடுத்தது. இந்தியில் எப்போதும் தவிர்க்க முடியாத படங்களில் ஒன்றாக இப்படம் மாறி விட்டது.
பீகார் | ஜாகர்கண்ட்
இந்தி படங்கள் என்றாலே மும்பை டெல்லி தான் என்று பார்த்துப் பழகிய நமக்குப் பீகார், ஜாகர்கண்ட் போன்ற மாநில அரசியல், சமூகம், மக்கள், வாழ்வியல் போன்றவற்றைப் பார்க்க வியப்பாகவும் திகிலாகவும் இருக்கிறது.
பீகார் குறித்துச் செய்திகளில் படித்து இருக்கிறோம் ஆனால், திரைப்படமாகப் பார்க்கும் போது இந்தியாவா அல்லது வேறு நாடா என்று திகிலடிக்க வைக்கிறது.
இப்படியெல்லாமா நம்ம நாட்டில் நடந்து கொண்டு இருக்கு என்று பீதியாக இருக்கிறது.
அனைவர் கைகளிலும் துப்பாக்கி, எளிதாகச் சுடுகிறார்கள், செய்யப்படும் கொலைகள் கணக்கில் எடுக்கப்படுவதே இல்லை.
எப்படி இதெல்லாம் நடக்கும்? எவ்வாறு மக்கள் இதைச் சகித்துக் கொள்கிறார்கள்? எப்படி அவர்களையே தேர்தலில் தேர்ந்து எடுக்கிறார்கள்?
ஒன்றும் புரியவில்லை.
தமிழகம் சொர்க்கம்
இதையெல்லாம் பார்த்த போது தமிழகம் சொர்க்கம் என்று தோன்றியது. நாம் எவ்வளவு நிம்மதியாக வாழ்கிறோம் என்று இந்தப் படம் பார்த்தால் தான் தெரிகிறது.
Manoj Bajpayee “சத்யா” இந்தி படத்துக்குப் பிறகு மனதில் நிற்கும் கதாப்பாத்திரம். ஊரையே நடுங்க வைக்கும் இவர், மனைவியிடம் பம்முவது செம்ம.
மனைவியாக நடித்த Richa Chadda, சக்கைப்போடு போடுகிறார். அந்தப்பகுதி ரணகளத்துக்குப் பொருத்தமான கதாப்பாத்திரம்.
ரீமா சென் இரு மனைவிகளில் ஒருவராக வருகிறார்.
ஒளிப்பதிவு
படம் முழுக்கச் சினிமாத்தனமாக இல்லாமல், இயல்பாக அந்தந்த இடங்களிலேயே எடுத்து இருக்கிறார்கள். பீகாரில் சுற்றிக்கொண்டு இருப்பது போலவேஉள்ளது.
ஒளிப்பதிவு பீகாரை அப்படியே கொண்டு வந்துள்ளது. ஒரு இடம் விடாம அனைத்து இடங்களிலும், போக்குவரத்து நெரிசலிலும் எடுத்து இருக்கிறார்கள்.
எப்படி எடுத்து இருப்பார்கள்? என்று குழப்பமாகவே இருந்தது. யாருமே “Camera” வை பார்க்கவில்லை. படத்தில் ஒன்றியதால், பின்னணி இசையைக் கவனிக்கவில்லை.
Manoj Bajpayee | Nawazuddin Siddiqui
Manoj Bajpayee மகன்களில் ஒருவராக Nawazuddin Siddiqui நடிப்பில் மிரட்டுகிறார்.
துவக்கத்தில் ஒன்றுக்கும் உதவாத மகனாக இருந்து பின்னர் தாதாவாக வளர்வது இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவரது மனைவியாக Huma Qureshi.
இதில் Huma Qureshi காலா படத்தில் ரஜினி காதலியாக நடித்தவர். Nawazuddin Siddiqui கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரஜினி படத்தில் நடிக்கிறார்.
இவர்கள் குடும்பங்களில் பெண்களும் வன்முறை வாழ்க்கைக்குப் பழகி இருக்கிறார்கள். அதாவது வாழ்க்கையில் ஒரு பகுதி போலக் கடந்து செல்கிறார்கள்.
தாதா குடும்பம்
தாதா குடும்பத்து பையன் எப்படிப் பொதுமக்களிடம் நடந்து கொள்வான், அவனுடைய திமிர், பொறுக்கித்தனம் ஆகியவற்றை தத்ரூபமாகச் சித்தரித்து இருக்கிறார்கள்.
ஒரு காட்சியில் பாலிவுட் நாயகர்களை ஒரு கதாப்பாத்திரம் விமர்சிப்பதாகக் காட்டி இருக்கிறார்கள் 🙂 . எப்படி தில்லாக இக்காட்சி இயக்குநர் வைத்தார் என்று வியப்பாக இருந்தது.
Nawazuddin Siddiqui எதற்குமே பயப்படாத கதாப்பாத்திரம், என்ன பிரச்சனை வந்தாலும் மிகத் தைரியமாக எதிர்கொள்வார். சாவை பற்றிக் கவலைப்படமாட்டார்.
இன்னொரு முக்கியக் கதாப்பாத்திரம் Pankaj Tripathi, காலாவில் மும்பை காவல் அதிகாரியாக வந்து இருப்பார்.
வாழ்க்கை முறை
பீகார், வட இந்தியாவின் ஒரு பகுதியில் இருக்கும் வாழ்க்கை முறை, அரசியல், வன்முறை போன்றவற்றைத் தெரிந்து கொள்ளவாவது இப்படத்தை பார்க்க வேண்டும்.
வன்முறை காட்சிகளும், வயது வந்தோருக்கான காட்சிகளும் உள்ளதால், குழந்தைகளுடன் பார்க்க ஏற்றப்படமல்ல.
கொசுறு
முதல் பாகம் 2012 ஜூன் மாதமும், இரண்டாவது பாகம் ஆகஸ்ட் மாதமும் வெளியானது. முதல் பாகம் துவக்கத்தில் நம்ம ஊர் பாலா, அமீர், சசிகுமாருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.
இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழ்ப் படங்கள் மீது காதல் கொண்டவர்.
தற்போது வந்துள்ள “இமைக்கா நொடிகள்” படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தனுஷின் “வட சென்னை” படத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, ஒரு காலத்தில் தொடர்ச்சியாக ஹிந்தி படங்களை பார்த்து வந்தேன்.. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக ஹிந்தி படங்கள் பார்ப்பது அரிது.. (ஆமீர் கான் படங்களை தவிர்த்து.. அடுத்து தங்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்.. படத்திற்காக காத்திருக்கிறேன்.. ) உங்கள் விமர்சனம் மிரட்டலாக இருக்கிறது.. அதனால் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க விரும்புகிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.
யாசின் பாருங்க நல்லா இருக்கும். பீகாரில் சுற்றிக்கொண்டு இருப்பது போலவே இருக்கும்.
கிரி உங்களுக்கு தெரிந்து ஏதாவது ghost படம் இருந்தா பரிந்துரை செய்யுங்கள் நான் நிறைய ghost படம் பார்த்திருக்கிறேன் ஆனால் ஆர்வம் குறைந்த பாடில்லை
any horror,thriller list plz