தமிழில் அபூர்வமாக “Commercial” ஆக இல்லாத படங்கள் வருவதுண்டு, அதில் ஒன்று தான் மேற்குத் தொடர்ச்சி மலை. Image Credit
மேற்குத் தொடர்ச்சி மலை
மலைப்பகுதியில் வாழும் ரங்கசாமி என்ற கதாப்பாத்திரம், எப்படியாவது ஒரு நிலத்தை வாங்க வேண்டும் என்று விரும்புகிறார். வாங்கினாரா? என்பது தான் கதை.
இதைக் கதை என்று சொல்வதை விடப் படம் முழுக்க மலைப்பகுதி மக்களின் வாழ்வியலை கூறி இருக்கிறார்கள் என்பது தான் சரி.
அவர்கள் எப்படிச் சிரமப்படுகிறார்கள், அவர்கள் ஒற்றுமை, வாழ்வியல் என்ன? என்பது பற்றிக் கூறி இருக்கிறார் இயக்குநர் லெனின்.
இந்தப்பகுதியில் வசித்த, பழகிய அனுபவம் இயக்குநருக்கு இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இல்லையென்றால், இவ்வளவு தத்ரூபமாகக் கூற முடியாது.
ரங்கசாமி
ரங்கசாமி கதாப்பாத்திரம் துவக்கத்தில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி “சிவக்குமார்” கதாப்பாத்திரம் போல.
மலைப்பகுதியில் போக்குவரத்து இல்லையென்பதால் யார் யாருக்கு என்ன வேண்டுமோ அதை நடைப்பயணமாகச் சென்று கொடுத்து வருவது.
அது கடிதமா, பணமா, பொருளாக இருக்கலாம்.
தமிழகக் கேரள எல்லைப்பகுதி (இடுக்கி) என்பதால், மலையாளமும் வருகிறது. கேரள மக்களின் பங்கும் படத்தில் உள்ளது.
அவர்களுடைய கம்யூனிச கொள்கைகள், சங்கம் போன்றவையும் கதையோடு ஒட்டி வருகிறது.
எவ்வளவு தான் சிரமப்பட்டாலும் கடன் வாங்காமல், யாரையும் ஏமாற்றாமல் வாழ்க்கையை நடத்தும் ரங்கசாமி கதாப்பாத்திரம் என்னை மிகக் கவர்ந்தது.
வெள்ளந்தியான கதாப்பாத்திரம், அதற்காக விவரமில்லாதவராக அல்ல.
மலைப் பகுதி
படம் முழுக்க மலைப் பகுதி என்பதால், பசுமையான காட்சிகள், பல்வேறு வகையான மனிதர்கள். இதில் வீராப்பாக இருக்கும் ஒரு கதாப்பாத்திரம் மனதில் நிற்கிறார்.
இப்பகுதியில் வேலைக்கு ஆள் சேர்க்கும் கங்காணி என்று ஒருவர் இருப்பார், இயல்பான கதாப்பாத்திரம்.
கங்காணி என்றால், என்னவென்று அறிமுகம் இல்லாதவர்கள் பின்வரும் “எரியும் பனிக்காடு” புத்தக விமர்சனம் படியுங்கள்.
Read: எரியும் பனிக்காடு – உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு
ஒளிப்பதிவு நன்றாக உள்ளது, பல இடங்களில் Drone Camera வைத்து எடுத்துள்ளார்கள்.
இசை இளையராஜா, கதைக்கேற்ற அமைதியான பின்னணி இசையை வழங்கியுள்ளார். கதைப்போக்கில் வரும் இரு இயல்பான பாடல்களும் உண்டு.
இறுதியில் நகரமயமாக்கல் காட்சிகள் வரும் போது என்னவோ வெறுப்பாக இருந்தது. பசுமை குறைந்து கட்டிடங்கள் அதிகமாகி இருக்கும்.
ஆவணப்படம்
படம் ஒரு ஆவணப்படம் போல உள்ளது. மலைப்பகுதி மக்களிடையே உள்ள கிண்டல்களை இன்னும் கூடுதலாகச் சேர்த்து இருந்தால், இறுக்கத்தை குறைத்து இருக்கலாம்.
சில கதாபாத்திரங்கள் நடிகர்கள் அல்லாது அங்கேயே உள்ளவர்கள் என்று நினைக்கிறேன். சிலரின் நடிப்பில் கொஞ்சம் இயல்புத்தன்மை இல்லையென்றாலும் உறுத்தவில்லை.
என்ன தான் இயல்பான படங்களைக் கொடுக்க நினைத்தாலும், திரைக்கதையில் சுவாரசியம் இல்லையென்றால், பெரும்பான்மையோரை சென்றடையாது, இயக்குநரின் நோக்கமும் நிறைவேறாது.
எனவே, அதில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
இயல்பான திரைப்படங்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திரையரங்கில் பார்த்தேன்.
விஜய் சேதுபதி இது போல ஒரு படத்தைத் தயாரிக்க மனசு வேண்டும், வாழ்த்துகள்.
கொசுறு
படம் பார்க்கும் போது மூன்று சனியனுக பக்கத்துல உட்கார்ந்து லொட லொடன்னு பேசியே சாவடிச்சாங்க. எனக்குன்னு எங்கே இருந்து கிளம்பி வாறாங்கன்னே தெரியல!
நன்றி கிரி அவர்களே…
நீங்க கேட்டுள்ள அணைத்து கேள்விக்கும் பதில் வேணும்னா, இந்த YOUTUBE பாருங்க…
https://www.youtube.com/watch?v=Ad1A81FjlNk
– Babu
இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் முன்பே உண்டு.. காரணம் கண்டிப்பாக மசாலா இல்லாத படமாக இருக்கும்… இன்னொன்று பெரிய நடிகர்கள் இல்லாதது.. ஒரு நல்ல படம் பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது.. இந்த வாரத்தில் பார்க்க முயற்சி செய்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.. கொசுறு.. (ரொம்ப வருத்தமான விஷியம்… ஒரு அமைதியான, ரசனையான படத்தை பார்க்கும் பொது சத்திய சோதனை)..
@பாபு ஜி பார்த்துட்டேன் 🙂
@யாசின் சத்திய சோதனை 😀