புரட்சித் தமிழர்கள்

29
புரட்சித் தமிழர்கள்

மோடி பதவியேற்பு விழாவிற்கு SAARC (South Asian Association for Regional Cooperation) (தெற்காசிய) நாடுகளின் உறுப்பினரான இலங்கையை அழைத்ததில் கோபம் கொண்டு நம்ம புரட்சித் தமிழர்கள் தமிழ் அமைப்புகள் உணர்ச்சிகரமாக பொங்கி இருந்தார்கள். Image Credit

புரட்சித் தமிழர்கள்

இதை முதலில் வைகோ அவர்கள் ஆரம்பித்ததும் தங்கள் பங்குக்கு ஊடகங்கள் கொளுத்திப் போட மற்ற அரசியல் தலைவர்களும் “ஜெ” உட்பட இதை எதிர்க்க ஆரம்பித்தார்கள்.

இது போதாது என்று தமிழ் அமைப்புகள், திரைப்படத் துறையினர், மாணவர் அமைப்பினர் தங்கள் பங்கிற்கு “தமிழ் தமிழ்” என்று முழங்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதிலும் பாரதிராஜா அறிக்கை விட்ட மூன்று வரியில் முப்பது எழுத்துப் பிழைகள்.

என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதைக் கூடப் பார்க்காமல் கையெழுத்து போட்டு ஊடகங்களுக்கு கொடுத்தாச்சு!

தமிழ் மாணவர் அமைப்பு அதற்கு மேல்! நாலு வரியில் அத்தனை எழுத்துப் பிழைகள். இவர்கள் தான் தமிழை தூக்கி நிறுத்தப் போகிறார்களாம்.

ஏன்யா! தெரியாமத் தான் கேட்கிறேன்… உங்களுக்கெல்லாம் மட்டும் தான் தமிழன் என்ற உணர்வு இருக்கிறதா! மற்றவர்களுக்கெல்லாம் இல்லையா!

சும்மா ஆ ஊன்னா தமிழ் தமிழ் ன்னு கூட்டம் கூட்டமாகக் கிளம்பிடுறீங்க! என்னத்தை இப்ப சாதிச்சீங்க!

வைகோ

எனக்கு இன்றும் வைகோ மீது மிகுந்த மரியாதை இருக்கிறது ஆனால், இவரின் அளவுக்கு மீறிய உணர்ச்சிகரமான நடவடிக்கைகளால் எந்த நன்மையையும் யாருக்கும் ஏற்படப்போவதில்லை.

இது அவர் மீதான மரியாதையைக் குறைக்கிறது.

ஒரு பொறுப்பான தலைவராக நடந்து கொள்ளாமல், உணர்ச்சி மிகு தலைவராகத் தான் காட்சி அளிக்கிறார். இது குறித்து ஏற்கனவே விளக்கமாகக் கூறி இருக்கிறேன்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள்

இந்தியா தெற்காசிய நாடுகளை அழைத்ததால் நட்பு வேண்டி / நல்லெண்ண அடிப்படையில் பாக் 150 மீனவர்களையும், இலங்கை சில தமிழ் மீனவர்களையும் விடுவித்து இருக்கிறது.

தற்போது இது நடந்தது எதனால்?

உங்க வீட்டுல நாலு பேரை இலங்கையோ பாகிஸ்தானோ பிடித்து முட்டிக்கு முட்டி தட்டி சிறையில் தள்ளி இருந்து, இது போல விடுவித்தால் சந்தோசப் படுவீர்களா மாட்டீர்களா?

விடுதலை ஆகி வந்தவர்களின் குடும்பத்தினரை சென்று கேளுங்கள்.. இவர்களை (இலங்கை பாக்) அழைத்தது சரியா தவறா என்று கூறுவார்கள்.

ராஜபக்சே ஈழத் தமிழர்களுக்கு இழைத்த அநீதி கொஞ்ச நஞ்சமல்ல. இதை யாரும் யாருக்கும் விளக்க வேண்டிய அவசியமில்லை, அனைவருக்குமே தெரிந்த ஒன்று.

சார்க் நாடுகள்

இந்தப் பதவியேற்பு விழா நடப்பது தமிழ்நாட்டில் அல்ல.

இந்திய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒன்று, அனைவரையும் அனுசரித்து போக வேண்டியுள்ளது.

இந்த அழைப்பு ராஜபக்சே என்ற தனி மனிதனுக்கோ அல்லது இலங்கை என்ற தனி நாட்டிற்கோ அனுப்பப்பட்டது இல்லை.

சார்க் நாடுகள் என்ற பங்களாதேஷ், பூட்டான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பாக், நேபால், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் நாம் என்ன சாதித்து விடப்போகிறோம்.

இழப்பு யாருக்கு?

ஈழத் தமிழ் மக்களை 2009 ல் சொல்லி வைத்து ராஜபக்சே அழித்த போது வாயில் விரல் வைத்து சூப்பிக்கொண்டு, அமைதியாக இருந்து விட்டு தற்போது ஒன்றுமில்லாத பிரச்னைக்கு வானத்திற்கும் பூமிக்கும் ஆளாளுக்கு குதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் இழப்பு யாருக்கு? இந்த அழைப்பால் இரு நாட்டில் இருந்தும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

உங்களது தமிழ் முறுக்கால் மீனவர்கள் சிறையிலேயே இருந்து சாக வேண்டும் என்கிறீர்களா! இது தான் உங்கள் விருப்பமா!

ஒருவேளை இவர்கள் அழைக்கப்படாமல் இருந்து இருந்தால், மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இருப்பார்களா!

தமிழர்களுக்காக போராட வேண்டாம் என்பதல்ல என்னுடைய கருத்து. கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல், எதற்கு கொந்தளிக்கனுமோ அதற்கு போராட வேண்டும் என்பதே நான் கூற வருவது.

மதிப்பு இருக்காது

இது போலப் பொதுவான அழைப்பிற்கெல்லாம் கொந்தளித்தால், போராட்டங்களுக்கே மதிப்பு இல்லாமல் போய் விடும்.

“ஆமாய்யா! இவனுகளுக்கு வேற வேலையே இல்லை.. சும்மா எல்லாவற்றிக்கும் போராட்டம் செய்து கொண்டு இருப்பார்கள்” என்ற மன நிலை அனைவருக்கும் வந்தும் விடும்.

பின் போராட்டக் காரணம் உண்மையிலேயே நியாயமானதாக இருந்தாலும் அது கவனிப்பின்றி சென்று விடும்.

இவை எல்லாவற்றையும் விட தற்போது மத்தியில் ஆளும் பாஜக, தமிழ்நாட்டில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. நம் மாநிலத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், மத்திய அரசை அனுசரித்து சென்றால் தான் நமக்கு நல்லது.

இதற்கு அர்த்தம் மத்திய அரசு செய்யும் அனைத்திற்கும் ஜிங்சாக் போட வேண்டும் என்பதல்ல.

இது போன்ற பொதுவான நிகழ்ச்சிகளுக்கு, நம் ஒரு மாநிலத்தை மட்டும் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.

அப்படிப் பார்த்தால், பாகிஸ்தானை எந்தக் காலத்திலும் இந்தியா அழைக்கவே முடியாது.

காலாகாலத்திற்கும் அடித்துக் கொண்டு இரு தரப்பிலும் அனைவரும் செத்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்!

அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு வழக்கம் போல ஏதேனும் சம்பவம் நடக்கிறதா..! அப்போது போராட்டம் செய்யலாம்.. அது நியாயம்!

பிரதமர் இது குறித்து கண்டுக்காமல் இருக்கிறாரா..! தாராளமாகக் கேள்வி கேளுங்கள்.. யார் வேண்டாம் என்று கூறினார்கள்.

மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்புடன் இருந்தால் மட்டுமே நம் நாடு வளர்ச்சி பெறும்.

இதன் அர்த்தம் காங் அரசு போல அடி வாங்கிக்கொண்டு, எது நடந்தாலும் வாயை இறுக மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதல்ல.

நாம் நம் கடமையைச் செய்து விட வேண்டும். இதன் பிறகு பிரச்சனை என்றால், போராட வேண்டும் / கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தான் ஒரு நல்ல அரசாங்கத்திற்கு அழகு. தொட்டதுக்கெல்லாம் சண்டைப் போட்டுக்கொண்டு / போராட்டம் செய்து கொண்டு இருந்தால் என்ன ஆவது!

சில விசயங்களில் நம் விருப்பம் மட்டுமல்லாது மற்ற பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

ஜெ

எடுத்துக்காட்டுக்கு நம்ம “ஜெ” வை எடுத்துக்கொள்ளுங்கள். எந்த மாநிலத்துடனாவது சுமூக உறவு இருக்கிறதா! அனைவருடனும் சண்டை.

கொஞ்சமும் இறங்கி வராத குணம் இவருடையது! இதனால் யாருக்கு நட்டம்.. நமக்கா மற்ற மாநிலங்களுக்கா!

நாம் இன்றைய தேதி வரை தண்ணீருக்காக மற்ற மாநிலங்களையே நம்பி இருக்கிறோம்.

இருப்பதிலேயே ஆந்திரா மட்டும் தான் ஓரளவு பிரச்சனை செய்யாமல், தண்ணீரை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

இனி அதற்கும் தெலுங்கானா வந்து விட்டது. மற்ற மாநிலங்களுடன் பிரச்சனை இருந்தாலும் ஒரு சில விசயங்களில் அனுசரித்தே செல்ல வேண்டும்.

அது போலத்தான் மற்ற நாடுகளும்.

இலங்கை, பாகிஸ்தானுடன் பிரச்சனை இருந்தாலும் இது போன்ற பொதுவான அழைப்புகளைத் தவிர்க்க முடியாது, கூடாது. ஒரேடியாக முறுக்கிக் கொண்டு இருக்க முடியாது.

ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்துத் தான் ஆக வேண்டும். ஏதாவது பிரச்சனை என்றால் போராடுவது வேறு… அனைத்திற்கும் கண் மூடித்தனமாகப் போராடுவது வேறு.

இதில் இரண்டாவது எந்தக் காலத்திலும் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தராது.

நம் மாநிலத்துக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், நாம் மத்திய அரசுடன் இணக்கமாக சென்று தான் ஆக வேண்டும்.

மோடியும் ஜெ வும் தேர்தல் இறுதி நேரத்தில் சண்டை போட்டுக்கொண்டாலும் அவர்கள் நண்பர்கள் தான் என்று அனைவரும் அறிவார்கள்.

மோடியும் “கருத்து வேறுபாடு இருந்தாலும் ஜெ வும் நானும் நல்ல நண்பர்களே!” என்று கூறி இருந்தார்.

மோடி அரசிற்கு நம் மாநிலத்தால் ஒரு லாபமும் இல்லை (ஒரே ஒரு இடம் தான் வெற்றி பெற்றார்கள்) என்று அவர்களும் வேண்டும் என்றே நம்மைப் புறக்கணித்தால் யாருக்கு நட்டம்!

மோடியின் துவக்க நடவடிக்கைகளைப் பார்த்தால் (தற்போதைக்கு) அனைவரையும் அரவணைத்தே செல்பவர் போலவே தெரிகிறார்.

எனவே, இது போலப் பிரச்சனைகள் இருந்தாலும், பொறுப்பான பிரதமராக தமிழகத்திற்கும் சரியான கவனத்தை கொடுப்பார் என்று நம்புகிறேன்.

இதற்கு நம்ம “ஜெ” முதல்ல பிடி கொடுக்க வேண்டும். “நான்” “என் அரசு” என்று வழக்கம் போல முழங்கிக் கொண்டு இருந்தால், இழப்பு தமிழ்நாட்டிற்குத் தான்.

ஈழத் தமிழர் போராட்டம்

இது வரை தமிழகத்தில் எத்தனை ஈழத் தமிழர் போராட்டம் செய்து இருக்கிறார்கள்…!

இந்தப் போராட்டத்தால் ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது குறிப்பிடும்படியான நன்மை கிடைத்து இருக்கிறதா! இவற்றால் அவர்களுக்கு மேலும் மேலும் சிக்கல் தான் நேர்ந்து வருகிறது.

தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழன் பெயரைக் கூறி பிழைப்பு நடத்துபவர்களால் தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் ஒரு புண்ணாக்கு நன்மையையும் கிடைத்ததில்லை.

இவர்கள் போராட்டத்தால் அனைவருக்கும் பிரச்சனை தான் நேர்ந்து கொண்டு இருக்கிறது.

போராட்டம் நடத்த வேண்டிய 2009 ல் கொட்டாவி விட்டுத் தூங்கி விட்டு எல்லாம் முடிந்து அனைவருக்கும் பாடை கட்டி விட்டு தற்போது தமிழே என் பேச்சு! தமிழே என் வாட்ச்சு!! என்று முழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழனுக்கு எதிரி

“தமிழன் என்பதில் பெருமை கொள்ளுங்கள்” தவறில்லை ஆனால், அதையே  அரசியலாக்கி அனைவரும் தமிழர்களை வெறுக்கும்படி செய்யாதீர்கள்.

இணையத்தில் இருப்பவர்களும் அரசியல்வாதிகளும் மட்டுமே “தமிழ் தமிழ்” என்று குதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு வெளியே வந்து பாருங்கள்.. அவனவன் தன் வேலையைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கிறான்.

இங்கே நடக்கும் எதுவும் பொது மக்களைப் பாதிப்பதில்லை ஆனால், இவர்கள் தமிழன் / தமிழ் என்று அலறிக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழனுக்கு எதிரி வேறு எங்கேயும் கிடையாது…..!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

29 COMMENTS

 1. Very good article. You wrote exactly what many matured Tamilians think. The dry frogs can not move anything except barking.

 2. ரொம்ப கரெக்ட்டான பதிவு கிரி.
  மோடியின் ஐடியாவே வேறு. இந்திய உலக அரங்கில் முன்னிலை பெறவேண்டும் என்றால் முதலில் சார்க் நாடுகளில் (அண்டை நாடுகளில்) முன்னிலை பெற வேண்டும். பின்பு Rupee trading இந்த நாடுகளில் கொண்டு வர வேண்டும் (இப்போது டாலர் trading தான் உள்ளது). இதற்க்கு சார்க் நாடுகளிடம் இருக்கும் பிரச்சனைகை தீர்க்க வேண்டும். இது தான் இந்தியாவிற்கு நல்லது. இதைதான் மோடி செய்ய துவங்கி உள்ளார். இது நடக்க குறைந்தது 4 அல்லது 5 வருடங்களாவது ஆகும் (இதில் US பிரச்சனை செய்யாமல் இருந்தால்). சரியான பாதையில்தான் மோடி அடியெடுத்து வைத்துள்ளார்.

 3. மிகவும் நேர்த்தியாக விவரித்து எழுதி உள்ளீர்கள். இந்த போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் எந்த விதத்தில் பாமர மக்களுக்கு பலன் அளிக்கும் என தெரியவில்லை..

  ‘விதவிதமாக மீசை வைத்தோம்… ஆனால், வீரத்தை எங்கோ தொலைத்துவிட்டோம்’ என்ற வரிகள் தான் எனக்கு நியாபகம் வருகிறது.

  பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி…

 4. சரியான பதிவு…ஆனா என்ன தான் சொன்னாலும் ஒரு சிலரை திருத்த முடியாது . போராட வேண்டிய விஷயங்களுக்கு எல்லாம் வேடிக்கை பார்த்துட்டு பாராட்ட வேண்டிய விஷயங்களுக்கு எல்லாம் போராட்ம் நடத்துவாங்க…

 5. சரியாத்தான் சொல்லியிருக்கீங்க.. இலங்கையில் மக்கள் அடக்குமுறைக்கு உட்பட்டு சகித்துக்கொண்டு வாழ பழகிவிட்டாலும் தமிழக அரசியல்வாதிகளுக்கு அவ்வப்போது விளம்பரம் செய்ய கையிலெடுப்பது இந்த விவகாரம் தான்… ராஜபக்ஷே மன்னிப்பு கேட்கக்கூட உள்ள வரக்கூடாதுன்னு சொல்வாங்க போலருக்கு (நான் அவர் ஆதரவாளரும் அல்ல) அரசியல்வாதிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் மக்கள் யாரும் இந்த விஷயங்களை கண்டுகொள்வதில்லை… மக்களுக்கு மறதி ஜாஸ்தி.. அரசியல்வாதிகளுக்குள் ஒற்றுமை (தமிழனின் அடிப்படை போராட்டங்களுக்கு) இல்லை.
  – இலங்கை பற்றி எரிந்தபோது பதவிக்காக முதுமையிலும் பறந்தவர், ரெண்டுமணிநேரம் உண்ணாவிரதம், அவ்வப்போது உள்ளேன் ஐய்யா என்று டெசொவை நடத்தியவரும் தமிழகத்தில் தான் இருக்கிறார்..
  – பொடா சட்டத்தில் வைகோவை உள்ளே தள்ளியவரும் தமிழகத்தில் தான் இருக்கிறார்..
  – அவ்வப்போது ஆதரவு இன்றி தனித்து கூக்குரல் இடும் வைகோவும் தமிழகத்தில் தான் இருக்கிறார்..
  – இலங்கைக்கு சென்று பரிசுப்பொருள் பெற்றவரும் தமிழகத்தில் தான் இருக்கிறார்.
  மக்கள் மறந்து சகித்துக்கொண்டு வாழ பழகிவிட்டனர்.

  • இலங்கைக்குச் சென்று பரிசுப் பொருள் பெற்றவரும் (இல்லை.. பெற்றவர்கள்). கனிமொழி, திருமாவளவன். இங்கே இருந்துகொண்டு ‘கொலைகாரன் ராஜபட்சே’ என்று கூக்குரல் போடுபவர்கள், அவரைப் பார்த்தபோது எப்படி பம்மி பல்லிளித்து அதுக்கு ஒரு காரணமும் கற்பித்து பரிசை வாங்கிவந்தார்கள் என்பது தெரியும் (ஆமா. அந்த யூ டியூப் காணொளி இன்னும் இருக்கின்றதா?)

   வைகோ நல்லவர். ஆனால் தமிழ்னாட்டையோ தமிழர்களைப் பற்றியோ அவர் கவலைப் பட்டதைவிட, இலங்கையைப் பற்றியே அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அதனைத் தமிழக தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை, அவரின் தேர்தல் தோல்விகளும், அவர்கூட இருந்தவர்கள் விலகிச்செல்வதிலிருந்தும் அவர் தெரிந்துகொள்ளலாம்.

 6. இந்த ஈழ பிழைப்புவாதிங்க தமிழகத்தில் உள்ள முகாம்களில் இலங்கை தமிழ் அகதிகளின் துயரநிலையை கண்டு கொள்வதில்லை.ராஜபக்சே, ஈழம் என்று கூச்சல் போட்டே தமிழகத்திற்கு ஏதும் செய்யாம தங்கள் அரசியலை வெற்றிகரமா ஓட்டிடலாம் என்ற நம்பிக்கை தமிழக அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. மாணவர்களுக்கு ராஜபக்சே,ஈழம் என்றாலே ஒரே ஜாலி தான்:) நண்பர் ஒருவர் ஒரு பெயரை சொல்லி இப்படியும் ஒரு மாணவர் அமைப்பு வைத்திருக்கிறாங்க என்றார் என்ன அது என்றேன் பிரபாகரனின் மகனின் பெயராம்! இலங்கையை வைத்து இங்கே வாரிசு அரசியலும் தொடங்கிட்டாங்க.

 7. இது கிரி எழுதியதுதானா என்று பலமுறை பார்த்தேன்.
  …
  …இந்தியா என்பது தமிழ்நாட்டையும் தமிழர்களையும் சேர்த்துதான். அந்த மக்களின் உணர்வுகளை ஒதுக்கிவிட்டு இந்தியா என்ற நாடு இருக்குமா? அப்போது இந்திய நாட்டில் தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை இந்திய நாடு மதிக்கவில்லையென்றால் அந்த நாட்டுடன் இருக்கவேண்டுமா என்ற எண்ணம் தமிழர்களுக்கு வரும். நீங்கள் மட்டும் தமிழரில்லை.
  …
  …அன்று நேரு இந்திரா முதற்கொண்டு..இன்று மோடி வரையிலும் இப்படித்தான் உள்ளது. அந்த கும்பலை ஆதரிக்கும் மனநிலையில் இருக்கும் ரஜினி கூட விரட்டியடிக்கப்படுவார்.
  …
  …இந்தியாவில் மோடி வென்றால்…தமிழ்நாட்டில் ஜெயா வெற்றி . அது தமிழக மக்களின் ஒருமித்த கருத்து. மோடியின் வெற்றி மட்டுமே முக்கியம் என்றால் தமிழர்களுக்கு இந்தியா தேவையா என்ற எண்ணம் வருமே?
  …
  …உங்கள் குழந்தைகளை அல்லது உங்கள் சகோதரியின் குழந்தைகளை உங்கள் கண் முன்னால் யாராவது படுகொலை செய்தால் அவர்களுடன் நீங்கள் நட்பு பாராட்டினால் இந்தப் பதிவை வரவேற்கலாம்.

  • “…இந்தியா என்பது தமிழ்நாட்டையும் தமிழர்களையும் சேர்த்துதான்.”

   – அதே போல் இந்தியா என்பது தமிழ்நாட்டையும் தமிழர்களையும் வைத்து மட்டும் இல்லை. இந்தியாவிற்கு எது நல்லதோ, அதைதான் மோடி செய்ய நினைக்கிறார்.
   ராஜபக்ஷே தமிழர்களை பூண்டோடு ஒழிப்பதற்கு மத்திய அரசு உதவி செய்த போது எங்கு போனது உங்கள் தமிழ் உணர்வு.அதற்கு ஆதரவு கொடுத்த கருணாநிதிக்கு எதிராக எங்கு போனது உங்கள் போராட்ட குணம். அவர் அப்போது ஆதரவை வாபஸ் பெற்றிருந்தால் காங்கிரஸ் அரசே மத்தியில் இருந்துருக்காது. LTTE பூண்டோடு அழிந்திருக்க மாட்டார்கள். இந்த அவல நிலையும் வந்திருக்காது. “தும்ப விட்டு வால பிடிக்கும்” செயல்தானே இப்போது நடக்கிறது.
   அப்படி உங்களால் தமிழர்கள் அவலத்தை தாங்க முடியவில்லை என்றால், நீங்கள் ஏன் ஈழத்திற்கு சென்று உங்களால் முடிந்த உதவிகளை செய்யக்கூடாது. இங்கு இருந்து எத்தனை பேர் அப்படி தொன்றாட்ட / உதவி செய்ய சென்றிருக்கிறார்கள் என்று தெரியுமா? அப்படி சென்றவர்கள் யாரும் இப்படி கோசம் போடுவதில்லை.
   பாகிஸ்தான் காஷ்மீர் விவகங்காரங்களை கவனிப்பதற்கென்றே ஒரு அமைச்சரகம் வைத்திருக்கிறது தெரியுமா. அதற்கு ஒரு மந்திரியும் இருக்கிறார். தமிழக மக்களுக்கும், அரசுக்கு அப்படி ஈழத்தின் மேல் அக்கறை இருந்தால் ஒரு அமைச்சரகம் உருவாகட்டுமே. ஒரு மந்திரியை நியமித்து அவர்களுக்கு உதவி செய்யட்டுமே.
   இதெல்லாம் செய்வதற்கு, அவர்கள் மேல் உண்மையான அக்கறை தமிழ்கள் அரசுக்கு வேண்டும். அதெல்லாம் விட்டுவிட்டு ராஜபக்ஷே டெல்லிக்கு வந்தாராம், அதற்கு இங்கு எதிர்ப்பு தெரிவிக்கரார்கலாம்.
   போய் பசங்க புள்ளைங்கள படிக்க வைக்கிற வேலைய பாருங்கப்பா.

 8. ///இந்திய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒன்று///
  …
  …ஒரு மாநில மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டு இந்திய அரசு என்று சொல்லமுடியாது. நீங்கள் மட்டும் தமிழர் என்ற நினைப்பா? 37 இடங்கள் கொடுத்தவர்களும் தமிழர்கள்தான்.

 9. ////ஏன்யா! தெரியாமத் தான் கேட்கிறேன்… உங்களுக்கெல்லாம் மட்டும் தான் தமிழன் என்ற உணர்வு இருக்கிறதா! மற்றவர்களுக்கெல்லாம் இல்லையா! சும்மா ஆ ஊன்னா தமிழ் தமிழ் ன்னு கூட்டம் கூட்டமாகக் கிளம்பிடுறீங்க! இப்படி தையா தக்கான்னு குதிப்பதால் என்னத்தை இப்ப சாதிச்சீங்க!////
  …
  …ஆக கூட்டிக்கொடுத்தாவது எதையாவது சாதிக்க வேண்டும் ? வெல்டன் கிரி…

 10. ////அதிலும் இந்த பாரதிராஜா அறிக்கை விட்ட மூன்று வரியில் முப்பது எழுத்துப் பிழைகள். என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதைக் கூட பார்க்காமல் கையெழுத்து போட்டு ஊடகங்களுக்கு கொடுத்தாச்சு! தமிழ் மாணவர் அமைப்பு அதற்கு மேல்! நாலு வரியில் அத்தனை எழுத்துப் பிழைகள். இவர்கள் தான் தமிழை தூக்கி நிறுத்தப் போகிறார்களாம்.////
  …
  …சொற்குற்றம் மட்டுமே குற்றமா?

  • இப்படி அறிக்கை விடும் தமிழ் அமைப்புகள் குறிப்பாக திருமாவளவன் கனிமொழி பாலு அனைவரும் இலங்கை அதிபரை நேரில் சந்தித்த போது ஏன் அவர்கள் கோபத்தை காட்டவில்லை. அனைவரும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு போடோவுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது ராவனநானோ அல்லது வேறு தமிழ் அமைப்புகளோ ஏன் கேள்வி கேட்க வில்லை. இதிலிருந்து இந்த தமிழ் அமைப்புகள் எல்லாம் பணம் பன்னுவத்தர்கு தான் பிளான் பண்ணுகிறது. தில் இருந்தால் இந்த சீமான் திருமாவளவனை கேள்வி கேட்க முடியுமா?

 11. இன்னும் இருக்கு………..தனியாக பதிவே எழுதவேண்டும் ….

 12. தமிழனுக்கு எதிரி வேறு எங்கேயும் கிடையாது super

 13. தமிழனுக்கு எதிரி வேறு எங்கேயும் கிடையாது 100% true super

 14. நீங்கள் சினிமா விமர்சனம் ஏழுதும் வேலையை மட்டும் செய்தால் போடும். ஏதற்கு இந்த தேவை இல்லாட வேலை….

 15. //// தில் இருந்தால் இந்த சீமான் திருமாவளவனை கேள்வி கேட்க முடியுமா?/////

  நேற்றைய தவறை திருத்த முற்பட்டால் வரவேற்போம். அந்தத் தவறை மறைக்க நாட கம் ஆடினால் வேரறுப்போம்.
  …
  …இது இத்தாலி சோனியா..மற்றும் கருணாநிதிக்கு புரிந்திருக்கும்.இதில் வைகோ, சீமான், திருமாவளவன், ராமதாஸ், ஜெயலலிதா என்று யாரும் விதிவிலக்கல்ல…

  • இலங்கையில் தமிழர்களின் இன்றைய நிலைக்குக் காரணம் இலங்கைத் தமிழ் அமைப்புகளுக்குள் ஒற்றுமை இல்லாததே ஆகும். அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டால் தான் இலங்கைப் பிரச்சினை தீரும். இந்த ஒற்றுமையை உருவாக்க இங்குள்ள வீண் பேச்சாளர்கள் இதுவரை என்ன செய்தார்கள்? இலங்கைத் தமிழர்களை ஒன்றுபடுத்த இவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன? யாருக்கும் உருப்படியான சிந்தனை இல்லை. வீண் கூச்சல் கதைக்கு உதவாது.

 16. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @யாசின் “விதவிதமாக மீசை வைத்தோம்… ஆனால், வீரத்தை எங்கோ தொலைத்துவிட்டோம்’ ” செம.. 🙂 எங்கங்க பிடிக்கறீங்க இது மாதிரி எல்லாம்..

  @ராஜ்குமார் கலைஞர் 2009 ல் செய்ததை மட்டும் என்னால் எக்காலத்திலும் மறக்க முடியாது. அத்தனை மக்கள் கதறியும் கொல்லப்பட்டும்.. சுயநலத்திற்காக எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்தார்.

  @ராவணன் நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் இந்த பதிவிலேயே பதில் உள்ளது.

  @தமிழன் என்னுடைய தளத்தில் எதை எழுத வேண்டும் / கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டியது நான், நீங்களல்ல.

  உங்களை நான் ஒன்றும் கையை பிடித்து இழுத்து வந்து என்னுடைய கட்டுரையைப் படியுங்கள் என்று கூறவில்லை. கட்டுரையை படியுங்கள் மாற்றுக் கருத்து இருந்தால், தாராளமாக உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். அதற்கு முழு உரிமை இருக்கிறது. இங்கே கமெண்ட் மாடரேசன் கூட செய்யப் படவில்லை.

 17. இந்த பதிவை இட்டவருக்கு ஒரு வேண்டுகோள். தாங்கள் உணவில் சிறிது உப்பு காரம் எல்லாம் சேர்த்துக்கொள்வது சற்று நல்லது என்று எனக்கு தோன்றுகிறது. உணர்ச்சி மனிதனுக்கு மிக முக்கியம் நன்பரே. விவேகமாய் நடக்கிறேன் பேர்விழி என்று அம்மாஞ்சியாய் இருக்கக்கூடாது. அதிலும் அதை நியாயப்படுத்த வேறு முயல்கிறீர். என்ன சொன்னீர்? போராடி போராடி என்ன சாதித்தோமா? ஒரு காலத்தில் ஈழம் என்ற சொல்லே தமிழகத்தில் சொல்லக்கூடாதென்று சட்டம் இருந்தது தெரியுமா உமக்கு. இன்று அதை சட்டமன்றத்திலேயே ஒலிக்கச்செய்தது யார்? நீரா? அல்லது உம்மைப்போல் மிதவாதியா? வேறு என்ன? எங்கள் குடும்த்தில் யாராவது சிறைபிடிக்கப்பட்டிருந்தால் நாங்கள் அந்த ரத்தவெறிபிடித்தவனை வரவேற்றிருப்போமா என்றீர் அல்லவா? நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் உங்கள் சகோதரியோ தாயையோ அவன் கற்பழித்து கொலை செய்தவன் என்றால் அவனை சிகப்பு கம்பள வரவேற்பளித்து அமரவைத்து பேசுவீரோ? நீங்கள் ஈழமக்ககளை அன்டை நாட்டாராக பார்கிறீர். நாங்கள் அவர்களை உறவினராக பார்கிறோம் அவ்வளவே. யுத்தம் நடந்தபோது நாங்கள் சும்மா இருந்தது உன்மை தான். அதற்கு காரணம் நாங்கள் உம்மை போன்ற மிதவாதிகளை நம்பி ஏமாற்ந்ததே. அதற்காக நாங்கள் அப்பொழுது ஏமாற்ந்தோமே அதனால் எப்பொழுதும் ஏமாறவேண்டும் என்பது போல் இருக்கிறது உங்கள் கருத்து.

  • =நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் உங்கள் சகோதரியோ தாயையோ அவன் கற்பழித்து கொலை செய்தவன் என்றால் அவனை சிகப்பு கம்பள வரவேற்பளித்து அமரவைத்து பேசுவீரோ?=

   Logic அற்றது.உளுத்து போன கருத்து.

 18. நல்ல பதிவு கிரி. வாழ்த்துக்கள். என் மனதில் இருந்ததை அப்படியே எழுதி இருக்கிறீர்கள். ரஜினி எதிர்ப்பு அறிவு ஜீவிகளை விட்டு விட்டீர்களே?

 19. @விஜய குமார் தங்களின் ஆலோசனைப் படி இனி வாரத்திற்கு ஒரு முறையாவது ஆந்திரா மீல்ஸ் சாப்பிட முயற்சிக்கிறேன்.

  @ஆனந்த் அது பற்றி இந்தப் பதிவில் கூறினால், நான் அதற்காகத் தான் இந்தப் பதிவே எழுதினேன் என்று இந்த பதிவின் நோக்கத்தையே குலைத்து விடுவார்கள். எனவே அது பற்றி எழுதவில்லை.

 20. இணையத்தில் இருப்பவர்களும் அரசியல்வாதிகளும் மட்டுமே “தமிழ் தமிழ்” என்று குதித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வெளியே வந்து பாருங்கள்.. அவனவன் தன்னுடைய வேலையைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கிறான். இங்கே நடக்கும் எதுவும் பொது மக்களை பாதிப்பதில்லை ஆனால், இவர்கள் தமிழன் / தமிழ் என்று அலறிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழனுக்கு எதிரி வேறு எங்கேயும் கிடையாது…..!

  வரிக்கு வரி ஆமோதிக்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here