Drishyam 2 (2021 மலையாளம்) | Secret Means Secret

2
Drishyam 2

Drishyam மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, முன்னரே திட்டமிடாத இரண்டாம் பாகம் Drishyam 2 வெளிவந்துள்ளது. Image Credit

முதல் பாகத்தில், நடந்த கொலையை எப்படித் திட்டமிட்டு குடும்பத்துடன் மறைக்கிறார்கள் என்பதே கதை.

Drishyam 2

இரண்டாம் பாகத்தில், ஆறு வருடங்களைக் கடந்தும் காவல்துறை தன்மான இழுக்காகக் கருதி, இந்த வழக்கைத் திரும்ப விசாரிக்கிறது.

இறுதியில் மோகன்லால் குடும்பம் என்ன ஆனது என்பதே கதை.

என்ன தான் நிரபராதி என்று நீதிமன்றத்தால் கூறப்பட்டாலும், ஊரில் உள்ளவர்கள் மோகன்லால் தான் கொலையைச் செய்து இருப்பதாக நம்புகிறார்கள்.

ஆறு வருடங்களுக்குப் பிறகும் என்னவோ ஆறு நாட்களுக்கு முன்பு நடந்தது போல ஆளாளுக்குப் பேசிக்கொள்வது நெருடலாக உள்ளது.

இதனால், மோகனால் குடும்பம் நிம்மதியற்று இருப்பது இயல்பாக உள்ளது.

கொலை செய்து தப்பித்தாலும், அதன் பின் விளைவுகள், உளவியல் ரீதியான பிரச்சனைகளை இப்பாகம் வெளிக்கொண்டு வந்துள்ளது. உண்மையும் கூட.

என்ன நடந்தாலும் பயம், சந்தேகம் என்று வாழ்நாள் முழுக்கத் தொடரும். ‘ஒருவேளை’ என்ற எண்ணம் வந்துகொண்டே இருக்கும்.

இரகசியம்

இரகசியம் என்றால் இரகசியமாகவே இருக்க வேண்டும் என்பதற்கு மோகன்லால் சிறந்த எடுத்துக்காட்டு. இரகசியம் ஒருவருக்கு மட்டுமே தெரிந்து இருக்க வேண்டும்.

இன்னொருவருக்குச் சென்றால், அது எப்படியும், ஏதாவது ஒரு சூழ்நிலையில் அனைவருக்கும் தெரியும் நிலை வரும் என்பது புரிகிறது.

மோகன்லாலுக்கு மிகை நடிப்பென்றால், என்னவென்றே தெரியாதோ என்று சந்தேகமாக உள்ளது. ஒரு நடிகராகவே தோன்றவில்லை.

ஜார்ஜ்குட்டி கதாப்பாத்திரமாகவே உள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் மிக இயல்பாக நடித்துள்ளார்.

இப்பிரச்சனை காரணமாக நிம்மதியின்றித் தவிக்கும் மீனா கதாப்பாத்திரம் சிறப்பு.

மகள்கள் குறித்த அக்கறை, எதிர்காலம் குறித்த கவலை என்று சராசரி அம்மா, மனைவியாக எதார்த்தமாக நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் கேபிள் டிவி வைத்துள்ளவராக வரும் மோகன்லால், இதில் உடன் திரையரங்கு உரிமையாளராகவும் வந்து அதை வைத்து இன்னொரு திட்டத்தை முன்னெடுப்பது சிறப்பு.

திரைக்கதை

பெரும்பான்மையான காட்சிகளை ஊகிக்க முடியவில்லை, நடக்கப்போகும் முன்பு தான் இதனால் நடக்கப்போகிறது என்று தெரிய வருகிறது. சிறப்பான திரைக்கதை.

முதல் பாகம் போலப் பரபரப்பான திரைக்கதையாகவோ திருப்பங்கள் நிறைந்ததாகவோ இல்லை.

முதல் பாதி முன்பு நடந்த சம்பவங்களால், இவர்கள் குடும்பத்துக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களைக் காட்டுவதாக வருகிறது.

இப்பகுதியை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

என்ன தான் முதல் பாகத்தில் இருந்தே, மோகன்லால் அசாதாரண நபராகக் காட்டப்பட்டு, முன்கூட்டியே திட்டமிடுவதை ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், அதற்காகப் பலரை ஏற்பாடு செய்வது சாத்தியமில்லாததாக உள்ளது.

இதற்கு அதிர்ஷ்டம் என்பதைப் பதிலாக வைத்துள்ளார்கள்.

பின்னணி இசை, ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. பின்னணி இசைக்கு அதிக வாய்ப்பில்லை.

இறுதிப்பகுதி ரொம்ப விரைவாக முடிந்து, கிட்டத்தட்ட எல்லாமே மோகன்லாலுக்குச் சாதகமாக நடப்பது விறுவிறுப்பைக் குறைக்கிறது.

இரண்டாம் பாகம் முன்பே திட்டமிடாத கதை ஆனால், அக்குறை எங்கும் தெரியாதபடி மிகச்சிறப்பாகத் திரைக்கதை அமைத்துக் கொண்டு சென்றுள்ளார்கள்.

இப்பாகத்துடன் Drishyam முற்றுப்பெற்றதாக உள்ளது, மறுபடியும் வருமா என்பது இயக்குநர் முடிவு 🙂 .

Drishyam 2 அனைவரும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். Amazon Prime ல் உள்ளது.

Directed by Jeethu Joseph
Produced by Antony Perumbavoor
Written by Jeethu Joseph
Starring Mohanlal, Meena
Music by Anil Johnson
Cinematography Satheesh Kurup
Edited by V. S. Vinayak
Distributed by Prime Video
Release date 19 February 2021
Running time 153 minutes
Country India
Language Malayalam

கொசுறு

கொரோனா காரணமாகத் திரையரங்கில் வெளியிட முடியாது என்று அமேசானுக்கு முன்பே படத்தை விற்று விட்டார்கள்.

ஆனால், OTT யில் முதலில் வெளிவருவதால், திரையரங்கில் வெளியிட அங்குள்ள சங்கம் மறுத்து விட்டது.

மோகன்லால் போன்ற பெரிய நடிகர் படம் வந்தால், மக்கள் திரையரங்குக்கு வருவார்கள் என்று திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆனால், சூழ்நிலை வேறாக உள்ளது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. ஆரம்பத்தில் மோகன்லால் நடிப்பு எனக்கு அந்த அளவிற்கு பிடிக்காது.. ஆனால் இருவர் படம் பார்த்த பின் என் நிலையை மாற்றி கொண்டேன்.. தற்போது மோகன்லால் மிகவும் உச்சத்தில் இருக்கிறார்.. படங்களுக்கும் நன்றாக ஓடுகிறது..சமீபத்தில் லூசிபர் படம் பார்த்தேன்.. மோகன்லால் நடிப்பு அருமை.. முதிர்ச்சியான கதாபாத்திரம்.. நன்றாக செய்து இருப்பார்.. திரிஷ்யம் 2 இன்னும் பார்க்கவில்லை.. குடும்பம் வந்த பின் படம் பார்க்கவே முடியவில்லை.. பார்க்க வேண்டிய படங்களின் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது.. பாபநாசம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. திரிஷ்யம் பார்த்த பின் பாபநாசம் பார்த்தது காரணமாக இருக்கலாம்.. கவுதமி பாத்திரம் எனக்கு உடன்பாடு இல்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. மோகன்லால் நடிப்பு மிக இயல்பாக இருக்கும். அதுவே அவருடைய பலம்.

    லூசிபர் நல்ல ஒரு மாஸ் படம். மோகன்லாலுக்கு பிரித்விராஜ் Tribute போல அட்டகாசமா கொடுத்து இருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here