8000 மீட்டர் உயரம் கொண்ட 14 பனி சிகரங்களைக் குறைந்த நாட்களில் ஏறி இறங்கிய Nirmal Purja சாதனைகளைக் கூறும் ஆவணப்படமே 14 Peaks: Nothing Is Impossible. Image Credit
14 Peaks: Nothing Is Impossible
உலகம் முழுக்க உள்ள உயரமான சிகரங்கள் பெரும்பாலானவை நேபாள், பாகிஸ்தான், சைனா ஒட்டியே உள்ளது.
அனைவருக்கும் தெரிந்தது உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ட் என்பது. இதே போல 8000 மீட்டரைத் தாண்டிய சிகரங்கள் 13 உள்ளன.
முதன் முதலில் Reinhold Messner என்ற இத்தாலி நாட்டைச் சார்ந்தவர் 16 வருடங்களில் (1970 – 1986) 14 சிகரங்களையும் கூடுதல் ஆக்சிஜன் உதவி இல்லாமல் ஏறி இறங்கி உள்ளார்.
இதன் பிறகு தென் கொரியா Kim Chang என்பவர் கூடுதல் ஆக்சிஜன் இல்லாமல் 2013 ல் இருந்து 7 வருடங்கள் 310 நாட்களில் ஏறி இறங்கியுள்ளார்.
பிறகு நேபாள நாட்டைச் சார்ந்த Nirmal Purja 7500 மீட்டருக்குப் பிறகு ஆக்சிஜன் பயன்படுத்தி 6 மாதங்கள் 6 நாட்களில் (2019) 14 சிகரங்களையும் ஏறி இறங்கி சாதனை செய்துள்ளார்.
இதற்கு Project Possible என்று பெயரிட்டு இச்சாதனையைச் செய்துள்ளார்.
Nirmal Purja
உயிரைப் பணயம் வைத்து ஏறி இறங்குவதைப் பார்த்தாலே வயிற்றைக் கலக்குகிறது. பனிச்சரிவு, பனி புயல் என்று பல சோதனைகளைக் கடந்தே இச்சாதனையைச் செய்துள்ளார்.
பல இடங்களில் பிரிட்ஜில் உள்ள Freeze ஆன ஐஸ் போலக் கெட்டியாக உள்ளது.
புதை பனியை மட்டுமே அதிகம் பார்த்து இதில் கடினமான பனியை பார்க்கும் போது திகிலாக உள்ளது.
இவரின் கடின உழைப்பு என்றாலும், அதிர்ஷ்டம் இல்லையென்றால் தப்பிப் பிழைக்க வாய்ப்புக்குறைவே.
இச்சாதனையை நிறைவேற்றப் பணத்தேவை, அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, சீனாவில் மலையேறத் தடை என்று ஏராளமான நெருக்கடிகள்.
ஆனால், இவ்வளவையும் தாண்டி 14 சிகரங்களைக் குறுகிய காலத்தில் ஏறி இறங்கியுள்ளார்.
இறுதியில் ‘இதே ஐரோப்பா நபராக இருந்தால், உலகம் முழுக்கப் பெரியளவில் கவனிக்கப்பட்டு இருப்பேன்‘ என்ற மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது உண்மையே!
பலருக்கு இவர் செய்த சாதனையே தெரியாது. தன் வாழ்க்கை முழுக்க இது போன்ற சாதனைகளைச் செய்வதையே விருப்பமாகக் கொண்டுள்ளார்.
இவருக்கு இவர் மனைவி உறுதுணையாகவும், உற்சாகம் அளிப்பவராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சாதனையைப் பற்றிக் கூறும் போது ட்விட்டரில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
ஒரு செய்தியில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விழிப்புணர்வு பயணமாக ஒருவர் பைக்கில் செல்வது பற்றி வந்தது.
அதற்குக் கருத்துரை பகுதியில் ஒருவர்.. ‘இதனால் யாருக்கு என்ன இலாபம்?‘ என்று கேட்டு இருந்தார்.
திங்க வேண்டியது, தூங்க வேண்டியது, கதை அடிக்க வேண்டியதுன்னு தின வாழக்கையை நடத்துபவர்களால் இவர்களின் உணர்வை, சாதனையைப் புரிந்து கொள்ள முடியாது.
ஒப்பீடு
நிர்மல் குறைந்த காலத்தில் இச்சாதனையைச் செய்து இருந்தாலும், இதற்கு முன் செய்தவர்கள் சாதனை எந்த விதத்திலும் குறைந்ததல்ல குறிப்பாக முதன் முதலில் சென்ற Reinhold Messner.
எந்தத் தொழில்நுட்ப வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் இல்லாத காலத்தில் இச்சாதனையைச் செய்துள்ளார்.
எனவே, ஒவ்வொரு காலக் கட்டத்திலும் செய்யப்படும் சாதனைகளை அடுத்து வருவதோடு ஒப்பிடுவது சரியாகாது.
பழைய திரைப்படங்களின் வசூல் சாதனையை எப்படித் தற்போதைய வசூலுடன் ஒப்பிட முடியாதோ அதே போல ஒவ்வொரு காலக் கட்டத்திலும் உள்ள சூழ்நிலைகளை வைத்தே சாதனைகள் அளவிடப்பட வேண்டும்.
நிர்மல் செய்தது ஒரு சாதனையென்றால், இதற்கு முன் செய்தவர்கள் செய்தது அக்காலகட்ட சாதனைகள்.
NETFLIX
இந்த ஆவணப்படம் NETFLIX ல் வெளியாகியுள்ளது. பல காட்சிகள் மிக Professional ஆக உள்ளது, நிர்மலே அனைத்தையும் எடுத்தாரா? என்று தெரியவில்லை.
இதற்கென்று குழு உள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முழுக்கப் பனியை பார்ப்பது பரவசமாகவும், சில நேரங்களில் திகிலாகவும் உள்ளது.
பின்னணி இசை ஆவணப்படத்தை வேறு கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. தரமான ஒலிபெருக்கியில் கேட்டால் செமையா இருக்கும்.
யார் பார்க்கலாம்?
அனைவரையும் 14 Peaks: Nothing Is Impossible பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
பனி மலை ஏறுவது எவ்வளவு கடினமானது, என்னென்ன சவால்கள், ஆபத்துகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
வழக்கமான திரைப்பட அம்சங்களை எதிர்பார்ப்பவர்கள் தவிர்த்து விடலாம்.
பரிந்துரைத்தது பிரதீப் ஸ்ரீனிவாசன்.
Directed by Torquil Jones
Written by Gabriel Clarke, Torquil Jones
Produced by John McKenna, Barry Smith, Drew Masters, Catherine Quantschnigg, Mark Webber
Starring Nirmal Purja
Edited by Ian Grech
Music by Nainita Desai
Distributed by Netflix
Release date 29 November 2021
Running time 101 minutes
Languages Nepali, English
தொடர்புடைய திரை விமர்சனம்
14 Peaks: Nothing Is Impossible ஆவணப்படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் The Climb திரைப்படத்தையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
சிகரம் ஏறுவது எப்படி? என்னென்ன முன்னேற்பாடுகள்? யார் உதவி தேவை? என்ற அனைத்து விவரங்களும் இதில் உள்ளது.
The Climb (2017 French) | எவரெஸ்டுக்கு செல்லலாமா?!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.