நண்பர்கள் கொடுத்த இரண்டு படங்கள் Udta Punjab & Sarbjit.
Udta Punjab
பஞ்சாப்பில் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வரும் இளைஞர்களைப் பற்றிய படம். இப்படம் கடும் சர்ச்சைக்குப் பிறகு வெளி வந்தது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம்.
பஞ்சாப் முழுக்கவே போதை பழக்கம் கடுமையாகப் பாதித்து இருப்பதாகவும், இதற்குக் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் துணை போவதாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
இவர்கள் கூறிய அளவுக்கு மோசமாக இருக்கிறதா இல்லையா என்பதைச் சம்பந்தப்பட்ட மாநிலத்தார் தான் கூற வேண்டும். பார்க்கும் நமக்குத் திக்கென்று தான் இருக்கிறது.
ஷாகித் கபூர் Rockstar ஆக நடித்து இருக்கிறார். செம்மையா நடித்து இருக்கிறார். எனக்கு இவரை ஏனோ பிடிப்பதில்லை, ஏன் என்ற காரணம் எனக்குப் புரியவில்லை.
Padmavat படத்தில் கூட அப்படியொன்றும் என்னைக் கவரவில்லை ஆனால், இதில் அந்தக் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்.
மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு மிகப் பிடித்தது. அந்தக்கதாப்பாத்திரமாக அவரைக் கருதாமல் பார்த்தால், அவர் நடிப்புப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம்.
கரீனா கபூர் மருத்துவராக வந்து கொஞ்சம் சமூகச் சேவைகள் எல்லாம் செய்கிறார்.
Alia Bhatt கிராமத்து பெண்ணாக வந்து போதை கும்பலிடம் எதிர்பாராமல் சிக்கி படாதபாடு படுகிறார்.
இவரை ஒரு வழியாக்கி விட்டார்கள். சிறப்பான நடிப்பு குறிப்பாக ஷாகித் கபூரை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் காட்சியில் தெறிக்கவிட்டு இருக்கிறார்.
பஞ்சாப் பற்றித் தெரிந்தவர்கள் இப்படத்தில் உள்ளது போலப் போதை பழக்கம் அவ்வளவு மோசமாக உள்ளதா! என்பதைத் தெரியப்படுத்தினால் ஒரு செய்தியாகத் தெரிந்து கொள்வேன்.
Sarbjit
இதுவும் நம் எல்லோருக்கும் தெரிந்த கதை (உண்மை சம்பவம்) தான்.
பல வருடங்களுக்கு முன்பு (1990) பாகிஸ்தான் எல்லையில் தவறுதலாகச் சென்றவரை (Sarbjit) குண்டு வைத்த இந்திய உளவுத்துறை நபராகப் பாக் இராணுவம் கைது செய்தது.
பின் அவரைச் சித்திரவதை செய்து பெயரையே மாற்றி, குண்டு வைத்தவன் பெயர் தான் தன்னுடையது என்று ஒப்புக்கொள்ள வைப்பார்கள்.
அடி தாங்க முடியாமல் வேறு வழியில்லாமல் தன் பெயரை “ரஞ்சித் சிங்” என்று ஒத்துக்கொள்வார்.
இவர் காணாமல் போனதாகக் குடும்பத்தினர் நினைத்து இருக்க, பல மாதங்களுக்குப் பிறகு தான் இவர் பாக் சிறையில் இருக்கும் தகவல் தெரியும்.
இவருடைய சகோதரியாக ஐஸ்வர்யா ராய்.
தவறே செய்யாமல் 22 வருடங்களாகத் தன்னுடைய இளமை காலங்களைத் தொலைத்து கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து இருப்பார்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பின் தன்னுடைய குடும்பத்தைச் சந்திக்க அனுமதிக்கப்படுவார். இதற்கும் பாக்கில் உள்ள வழக்கறிஞரே உதவுவார்.
இக்காட்சிகள் எல்லாம் எவரையும் கலங்கடித்து விடும்.
தான் அனுபவித்த சிரமங்களில் ஒன்றாக 22 வருடங்களில் 11 முறை மட்டுமே குளிக்க அனுமதித்ததாகக் கூறும் போது கொடுமையாக இருக்கும். இவர் ரஞ்சித்சிங் அல்ல என்று நிரூபித்தும் வெளிவர முடியாதது பரிதாபம்.
Randeep Hooda
Sarbjit ஆக நடித்த Randeep Hooda ஆகச்சிறந்த நடிப்பு குறிப்பாக இரண்டாம் பாதியில்.
ஆளே உருமாறி நம்பிக்கையிழந்து இருப்பார். ஐஸ்வர்யா ராய் இவரின் விடுதலைக்காகப் போராடுவது எல்லாம் செமையாக உள்ளது. எதார்த்தத்தை மீறாமல் உள்ளது.
உண்மைச் சம்பவம் என்பதால் முடிந்தவரை மிகைப்படுத்தாமல் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நீண்ட போராட்டம், பல முறை விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டு எதோ காரணத்தால், தள்ளிப்போகிறது. ஐஸ்வர்யா ராய் குடும்பத்தை விட நமக்கு மிகக் கவலையாக இருக்கும்.
தூக்கில் போடுவது கடைசி நேரத்தில் மாறுவதும், பின் திரும்ப முடிவாவதும், பின் திரும்பவில்லையென்பதும் என்று நம்மை விரக்தியின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
படம் பார்க்கும் நமக்கே இப்படி உள்ளது, உண்மையில் இதை அனுபவித்த Sarbjit மற்றும் அவரது குடும்பத்தினரை நினைத்தால், பாவமாக உள்ளது.
சோகமான படத்தை விரும்பவில்லையென்றால், இப்படத்தை நான் உங்களுக்குப் பரிந்துரைக்கவில்லை, தவிர்த்து விடுங்கள்.
இதையெல்லாம் பார்க்கும் போது நமக்கெல்லாம் எந்தக் கஷ்டமும் இல்லாத வாழ்க்கை வாழ்கிறோம் என்று தோன்றியது.
“நமக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்பது தான் நினைவுக்கு வந்தது.
மேற்கூறிய இரண்டு படங்களுமே லாபம் கொடுத்தவையே! இவையல்லாமல் இன்னும் சில இந்திப் படங்களை பார்த்து வருகிறேன். விரைவில் அவை பற்றியும் எழுதுகிறேன்.
தற்போது தான் Subtitle உடன் பார்க்க வாய்ப்புக்கிடைத்தது 🙂 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
ஜி,
Pls watch the following movies also.
– The Invisible Guest – Spanish movie
– Newton – Hindi
– Hichki – Hindi
கிரி, நான் தற்போது படங்கள் பார்ப்பதை மிகவும் குறைத்து விட்டேன்.. அதிலும் ஹிந்தி படங்கள் பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது.. (பத்மாவதி தவிர்த்து). நான் ஹிந்தி படங்கள் பார்க்க ஆரம்பித்த நாட்களில் ஷாஹித் கபூர் ரொம்ப பிடிக்கும்.. ஜப் வி மீட், கிஸ்மத் கணேக்ஷன் போன்ற படங்களை விரும்பி பார்த்து இருக்கிறேன்.. சமீபத்தில் பார்த்த படமாவதி படத்தில் ஷாஹித் கபூரின் நடிப்பு என்னை கவர வில்லை.. நான் அடுத்து அமீர் கானின் தங்ஸ் ஆப் ஹிந்துஸ்த்தான் படத்திற்காக காத்திருக்கிறேன்… நீங்கள் குறிப்பிட படங்களை நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்… பகிர்வுக்கு நன்றி கிரி..
@பாபு ஜி சொல்லிடீங்கள்ல .. பார்த்துடுவோம் 🙂
@யாசின் நானும் நீங்க குறிப்பிட்ட படங்களை பார்க்கணும்.. நீங்க சொன்ன ஒருபடம் தான் பார்த்து இருக்கிறேன். பெயர் மறந்து விட்டது.
Excel ல பார்க்க வேண்டிய படங்களை அப்பப்ப எழுதி வைக்கணும்.
கிரி, நான் குறிப்பிட்ட இரண்டு படங்களும் உங்களுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை.. ஜப் வி மீட் படம் கிளாசிக்கா இருக்கும்.. பாடல்கள் மிகவும் அருமையா இருக்கும்.. லொகேஷன் அருமையா இருக்கும் (இந்த படத்தை தமிழில் கண்டேன் காதலை என்று எடுத்து இருந்தார்கள், எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..) கிஸ்மத் கணேக்ஷன் ஒரு விதமான காதல் கதை.. வித்யா பாலனின் நடிப்பு யதார்த்தமாக இருக்கும்.. பாடல்கள் நன்றாக இருக்கும்…
எனக்கு ஹிந்தியில் மிகவும் பிடித்த படம் ரங் தே பசந்தி.. அமீர் கான், மாதவன், சிதார்த் நடித்தது.. படம் பட்டாசாக இருக்கும்.. இதுவரை பார்க்கவில்லை என்றால் பார்க்கவும்.. கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.. ஹிந்தியில் அர்த்தம் தெரிந்து பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்… பார்த்து விட்டு சொல்லவும்..
யாசின் நீங்க சொன்ன கிஸ்மத் படத்தை கிஸ்மத் கணேசன் என்று தேடி பார்த்தேன் 😀 இந்தி பட பெயரை தமிழில் கூறாமல் ஆங்கிலத்திலேயே கூறுவது நல்லது.
கூகுள் தான் சரியான பெயரை காட்டியது 🙂 . பார்க்க முயற்சிக்கிறேன்.
ரங் தே பசந்தி படம் பார்த்துட்டேன், ரொம்ப நல்ல படம். எனக்கும் பிடித்தது. இறுதியில் கொஞ்சம் சோகமாக இருக்கும்.