எங்கேயும் எப்போதும் | Bedevilled 2010

6
engeyum eppodhum movie poster எங்கேயும் எப்போதும்

ர்ப்பாட்டம் இல்லாமல் வந்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டு விட்டது எங்கேயும் எப்போதும். 

தயாரிப்பாளராகக் களம் இறங்கி இருக்கும் முருகதாஸுக்கு முதல்ப் படமே வெற்றிப்படமாகி இருக்கிறது.

எங்கேயும் எப்போதும்

திருச்சியில் ஒரு காதல் சென்னையில் ஒரு காதல் இதோடு ஒரு பேருந்து விபத்து, இது தான் கதை. கலகலப்பாகக் கொண்டு சென்று இறுதியில் கண்கலங்க வைத்து விட்டார்கள்.

விபத்தின் கொடூரத்தை எத்தனையோ படங்கள் கூறி இருந்தாலும் இந்தப்படம் அதில் முதல் இடம் வகிக்கிறது என்பது என்னுடைய கருத்து.

திருச்சி ஜெய் அஞ்சலி காதல் ரொம்ப சுவாரசியமாகக் கூறப்பட்டு இருக்கிறது. ஜெய்க்கு அவருடைய கதாப்பாத்திரம் அட்டகாசமாகப் பொருந்துகிறது அதே போல அஞ்சலிக்கும். இருவருமே சிறப்பான தேர்வு.

ஜெய் காஃபி குடிக்கும் போது செய்யும் ரகளை அஞ்சலிக்கு முத்தம் கொடுக்கும் போது அவர் செய்யும் சேட்டைகள் என்று அனைவரது மனதையும் கவர்ந்து இருக்கிறார்.

அஞ்சலிக்கு நல்ல துடுக்குத்தனமான கதாப்பாத்திரம்.

ஜெய்க்கு எப்படியோ சீரான இடைவெளியில் ஒரு படம் ஹிட் ஆகி விடுகிறது.

அஞ்சலி நடந்து கொள்வது சில நேரங்களில் கொஞ்சம் மிகைப்படுத்தலோ என்று எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

அனன்யா சரவ்

சென்னை அனன்யா சரவ் காதல் சுவாராசியம். காதலிக்கவே இல்லாமல் காதலாகி கசிந்துருகி… ரொம்ப ரசிக்க வைத்த காதல்.

இதைப்போல ஒரு நாள் பார்த்துக் காதல் கொண்ட அனுபவம் பலருக்கு இருக்கும் என்று நினைக்கிறேன் 🙂 .

அந்த ஒரு நாள் அவர்களுடன் இன்னும் கொஞ்ச நேரம் சுற்றிக்கொண்டு இருக்க மாட்டோமா என்று இருந்தது.

அனன்யா இவரைச் சந்தேகப்பட்டு ஒவ்வொருமுறையும் ஏடாகூடமாக ஏதாவது செய்ய அதற்குச் சரவ் தரும் முகபாவனைகள் அசத்தல்.

அனன்யா சென்னை சரவண பவன்ல சாப்பிடும் பெண்களைப் பார்த்து இவர்கள் எல்லாம் வீட்டுல சமைக்க மாட்டார்களா என்று கேட்பது ரொம்ப ஓவராக இருக்கிறது.

இவர் திருச்சில இருந்து தானே வராரு என்னமோ நகரவாசனையே தெரியாத ஊரில் இருந்து வருகிற மாதிரி ரொம்ப அப்பாவியாகக் காட்டி இருப்பது நெருடலாக இருந்தது.

இதனுடன் வரும் ஒரு குட்டி பஸ் காதல் கூடச் சுவாரசியம் தான்.

பேருந்தில் நம்ம பக்கத்துல ஒரு ஃபிகர் வந்து உட்காரப்போகிறது என்றால் கொடுக்கும் உடல் மொழிகளை இந்தப்பையன் செமையா செய்து இருக்கிறான்.

பாடல்கள் அனைத்தும் அருமை அதே போல எடுக்கப்பட்ட விதம் கூட. படத்திற்கும் பேருக்கும் தான் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை.

கேமரா

பேருந்தினுள் எப்படி கேமரா வைத்து எடுத்தார்களோ! ரொம்ப சிரமம் என்று நினைக்கிறேன்.

ஒரு சில காட்சி என்றால் பரவாயில்லை படம் முழுவதும் பேருந்து பெரும் பங்கு வகிக்கிறது.

அங்காடித்தெரு படத்தில் இவர்கள் எப்படி யாருமே கவனிக்காமல் இவ்வளவு கூட்டத்தில் படம் எடுத்தார்கள் என்று வியப்படைந்து இருந்தேன் இதிலும் அதே போல 90 % பேர் கேமரா பார்க்கவில்லை.

எப்படித்தான் எடுத்தார்களோ!! அதிலும் விபத்து நடந்த இடம் எல்லாம் நிஜமான விபத்து போலவே எடுக்கப்பட்டு இருந்தது. விபத்து மிகவும் கொடுமையானது.

எப்படி படம் எடுத்தாலும் படம் ஓட மாட்டேங்குது என்று பலர் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒழுங்கா படம் எடுத்தால் நிச்சயம் ஓடும் என்பதை அழுத்தம் திருத்தமாக அனைவருக்கும் உணர்த்தி இருக்கிறது எங்கேயும் எப்போதும்.

Bedevilled 2010

இந்தப்படம் பார்க்க ஆரம்பித்துக் கொஞ்ச நேரம் கழித்து இது கொரிய இயக்குனர் கிம் கி டுக் படம் போல இருக்கிறதே என்று விக்கியில் தேடினால், இயக்குனர் அவரிடம் உதவியாளராக இருந்தாராம்.

படம் கொரியப்படமாக இருந்தாலும் கதை மற்றும் அதில் நடைபெறும் சம்பவங்கள் எல்லாம் நம்ம ஊரைப் போலவே இருந்ததது.

ஒரு தீவு. இங்கே மிகைக்குறைவான அளவிலே மக்கள், குறைவு என்றால் ஒன்பது பேர் இருப்பார்கள் அவ்வளோ தான். வெளி உலகத்தோடு அதிகம் தொடர்பு இல்லாமல் இருப்பவர்கள் அதற்காகக் காட்டுவாசி போல அல்ல.

இங்கு விளையும் பயிர்கள் கிழங்குகள் தேன் போன்றவற்றை வெளியே விற்று அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வருகிறவர்கள்.

இங்கே உள்ள (வயதான) பெண்கள் மற்றும் கணவன் மற்றும் மற்ற ஆண்களால் ஒரு பெண் (Seo Yeong-hee) துன்பப்படுத்தப்படுவார் பாலியல் ரீதியாகவும்.

இங்கே அவர் வாழ்க்கையில் எந்த வித பிடிப்பும் இல்லாமல் இருப்பார் இவருக்கும் இருக்கும் ஒரே ஆறுதல் இவரது பெண் குழந்தை.

திருப்பம்

இந்நிலையில் இவருடைய சிறு வயதுத் தோழி அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தத் தீவுக்கு ஓய்வு எடுக்க வருவார்.

அவரிடம் தன்னை சியோல் (தென் கொரியா தலைநகர்) அழைத்துச் சென்று விடும்படியும் இந்த நரகத்திலிருந்து தன்னை காப்பாற்றும் படியும் கேட்பார்.

இந்நிலையில் இவர்களின் கொடுமை எல்லை மீறிப் போய் விடுகிறது. இவருடைய கணவனால் Seo Yeong-hee தன்னுடைய குழந்தையையே இழக்க நேரிடுகிறது.

இதன் பிறகு பொறுமை இழந்து என்ன செய்கிறார் என்பதை ரணகளமாகக் காட்டி இருக்கிறார்கள்.

வயதானவர்கள் சிலர் எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பாகக் கூறி இருக்கிறார்கள்.

ஒரு தாத்தா படம் முழுக்க வருகிறார் ஒரு வார்த்தை கூட பேசாமல் இறுதியில் எவ்வளவோ விசயங்களை கூறாமல் கூறி விடுகிறார். அருமை!

இங்கே இருக்கும் வயதான ஆண்களில் இவர் ஒருவர் மட்டுமே இருப்பார் மற்றவர்கள் அனைவரும் முன்பு ஏற்பட்ட புயலில் இறந்து இறப்பார்கள்.

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருத்தரும் அவர்கள் கதாப்பாத்திரமாகவே மாறியுள்ளார்கள்.

உலகம் ஒன்று தான் என்றாலும் அதில் வாழும் மக்களின் வாழ்க்கை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி அதில் இதைப்போல மிகக் கொடுமையானதும் கூட என்பதை அறிய வைத்து இருக்கிறார்கள்.

தனது ஆசை, எதிர்பார்ப்பு, விருப்பங்கள், உரிமை என்று எதற்குமே மதிப்பு தராமல் அடிமையை விட கேவலமாக நடத்தப்படும் மக்கள் இந்த உலகில் ஏராளம் அதைப் போல உள்ளவவர்களில் ஒருவரின் கதையே இது.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு படம்.

Seo Yeong-hee

Seo Yeong-hee எப்படித்தான் நடித்தார் என்றே தெரியவில்லை. ரொம்ப ரொம்ப சிரமப்பட்டு இருக்கிறார்.

நம்ம ஊர் கதாநாயகர்கள் வெறும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு என்னமோ கனமான பொருளைத் தூக்கியதைப் போலச் சீன் போடுவார்கள் அதே போல இல்லாமல் அந்தக் கதாப்பாத்திரமாக இவர் நடித்து இருப்பது வியப்பை அளித்தது.

இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதுகள் பல பெற்று இருக்கிறார்.

தன்னுடைய தோழியின் அழகையும் அவரது மிருதுவான உடலையும் தொட்டுப்பார்த்து வியப்படைவதும் அவரை அங்கே உள்ள ஆண்களிடம் இருந்து காப்பாற்ற இவர் எடுக்கும் முயற்சிகளும் என்று நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

இப்படம் பார்க்க சப் டைட்டில் தேவையில்லை காட்சிகளே முழுக்கதையையும் கூறி விடும் இருப்பினும் சப் டைட்டிலோடு பார்த்தால் படத்தோடு ஒன்றிப்பார்க்க முடியும்.

ஒவ்வொரு காதாப்பாத்திரத்தின் வசனங்களும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கூறுகிறது. இதைப்போல கதையில் வசனங்கள் முக்கியமாக உள்ளது.

இப்படம் நிச்சயம் மசாலாக்கதைகளையும் பன்ச் வசனங்களையும் எதிர்பார்ப்பவர்களுக்குண்டானது அல்ல.

நம்ம ஊர்ல இந்தப்படம் வந்தால் ஒருவாரம் கூட ஓடாது 🙂

Directed by Jang Chul-Soo
Written by Choi Kwang-young
Starring Seo Yeong-hee
Ji Seong-won
Music by Kim Tae-seong
Cinematography Kim Gi-tae
Release date(s) September 2, 2010
Running time 115 minutes
Country South Korea
Language Korean

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

 1. சிறந்த விமர்சனம் கிரி, படத்தை பார்த்துவிட்டேன்.

 2. எங்கேயும் எப்போதும்

  —————————————

  superb movie. In the year 2011, i liked the following movies

  1. ko (70/100)
  2. vanam (80/100)
  3 kanchana (60/100)
  4. எங்கேயும் எப்போதும் (80/100)

  out of nearly 75 movies released in 2011, i liked only four. Tamil cinema directors should try to give more good timepass movies.

  rajesh. v

 3. அருமையான படம் அப்படின்னு சொல்றாங்க எல்லாருமே பார்க்க தான் முடியல , எப்படியும் பார்த்தே ஆகனுன்னு இப்ப தோணுது கிரி நன்றி

 4. அன்புள்ள கிரி,

  நீங்கள் கூறியது போல், இந்தப் படம் அனைத்துத் தரப்பினரையும் மிகவும் கவர்ந்திருக்கிறது. படு சுவாரஸ்யமாய் திரைக்கதை அமைத்ததில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. இதுவரை ஒரு எதிர்மறை விமர்சனம் கூட நான் பார்க்கவில்லை.

  இயக்குநர் சரவணன் முருகதாஸ் தன் மீது வைத்த நம்பிக்கையைப் பொய்யாக்காமல் காப்பாற்றி விட்டார்.

  >>படத்திற்கும் பேருக்கும் தான் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை.
  எங்கேயும் எப்போதும் விபத்துக்கள் நேரலாம் என்று கூறுகிறார் என நினைக்கிறேன்…

  இந்த வருடத்தின் சிறந்த தமிழ் படங்களில் முதல் சில இடங்களுக்குள்.. எங்கேயும்.. எப்போதும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here