Jul 14, 2009

இதுக்கெல்லாம் நான் டென்ஷன் ஆக மாட்டேன் !!

விஜய் டிவி ஜூனியர் சூப்பர் சிங்கர் 2 ல இந்த பொடுசுக பண்ணுற ரவுசு கலக்கல். ஒவ்வொருவரும் பாடும் அழகும் அவர்கள் செய்யும் சேட்டையும் ரசிக்கும் படி இருக்கிறது. குழந்தைகள் என்பதால் அவர்களின் சந்தோசத்திலும் வருத்தத்திலும் நம்மால் சம பங்கு எடுத்துக்கொள்ள முடிகிறது.

பல்வேறு குழந்தைகள் எதிர்பார்ப்புகள் சந்தோசங்கள் அதிர்ஷ்டங்கள்! வருத்தங்கள் ஏமாற்றங்கள் என்று கலவையாக இருக்கிறது. குழந்தைகள் என்றாலே அவர்களது செயல்கள் அனைவரையும் கவரும் என்றாலும் ஒரு சில குழந்தைகள் அதிகப்படியாக தங்கள் சுட்டித்தனத்தின் மூலம் நம்மை ஈர்ப்பதுண்டு.

சிங்கையில் எப்போதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தாமதமாக தான் ஒளிப்பரப்பாகும் அந்த வகையில் இந்த வாரம் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் ஷங்கர் என்ற ஒரு பொடியனை பாட்டு பாட போகும் முன்பு பேட்டி எடுத்தார்கள்..

ரொம்ப கூலாக உட்கார்ந்து கொண்டு பேசிய வசனம் தான் மேலே உள்ள தலைப்பு

 


தான் ப்ராக்டீஸ் செய்த பாடலை பற்றி கூறி விட்டு

நான் செலக்ட் ஆக போறேனோ!...........இல்லைனா யாருக்கு தெரியும்னு எனக்கு தெரியாது

உள்ளே எப்படி பாடப்போறேனோ தெரியல எனக்கு ...

Actuala பெருசா ஏதாவது கடிக்கறாங்க இந்த மாதிரி டைம் ல தான் எனக்கு டென்ஷன் ஆகும், இந்த மாதிரி பாட்!(டு) பண்றது!!! செலக்ட் பண்றது இதெல்லாம் அவ்வளவு பெரிய விஷயம் இல்ல(அது சரி!). இதெல்லாம்.... இதுக்கெல்லாம் நான் டென்ஷன் ஆக மாட்டேன்.

அதன் பிறகு பாட வந்து சிறப்பாக பாடவில்லை என்றாலும் அவனோட attitude நன்றாக இருந்தது என்பதற்காக அவனை காத்திருப்பு பட்டியலில் வைத்தார்கள்.

பல குழந்தைகள் (அல்லது அவர்களது பெற்றோர்கள்) பாட தேர்வு செய்வது இளைய தளபதி பாடலை தான், ஆனால் அவரது பாடல்கள் பல ஏடாகூடமாகவே உள்ளது அல்லது குழந்தைகள் பாடுகின்ற அளவிற்கு ஏற்றதாக இல்லை. செல்ல பேரு ஆப்பிள் சைசா கடிச்சுக்கோ, டாடி மம்மி வீட்டில் இல்ல, மொழு மொழுன்னு யம்மா! யம்மா! போன்ற பாடல்களை பாடும் போது கஷ்டமாக உள்ளது. குழந்தை ரசிகர்கள் அதிகம் கொண்டுள்ள விஜய் இதற்காகவது பாடல் வரிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர்களும் நல்ல பாடல்கள் எத்தனையோ இருக்க இதை போன்ற பாடல்களை குழந்தைகளுக்கு பாட தேர்வு செய்து தருவது அல்லது துணை போவது கஷ்டமாக உள்ளது.

பல குழந்தைகள் சரியாக பாடவில்லை என்றாலும் அவர்களின் துடுக்கு தனத்தால் தேர்வு பெற்றார்கள். சிறியவர்கள் என்றாலும் பெரியவர்கள் என்றாலும் திறமை மட்டும் பத்தாது ஸ்மார்ட்டாக இருந்தால் மட்டுமே பலரை கவர முடியும் என்று சொல்லாமல் சொல்கிறது.

நல்ல விதமாக நிகழ்ச்சிகளை கொடுத்துக்கொண்டு இருந்த விஜய் டிவி, சூப்பர் சிங்கர் மற்றும் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சிகளை ஜவ்வோ ஜவ்வாக இழு இழு என்று இழுத்ததை பார்த்து நொந்து போகாதவர்களே இருக்க முடியாது. கிடைக்கும் விளம்பர பணத்திற்காக பார்வையாளர்களை கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள், இதே வேலையை ஜூனியர் சூப்பர் சிங்கரிலும் காட்டாமல் இருந்தால் நல்லது, நிகழ்ச்சிகளை இழுக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் மனதில் ஆசைகள் எதிர்பார்ப்புகளை ஏகத்திற்கு ஏற்றி விட்டு கடைசியில் அவர்களின் பிஞ்சு மனதை காயப்படுத்தாமல் இருந்தால் சரி.

இந்த வீடியோ சூப்பர் சிங்கர் ஜூனியர் 1 ல் ஒரு சுட்டி செய்த மறக்க முடியாத காமெடி..

Jul 10, 2009

அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்!

புக்மார்க் என்பது கணினி பயன்படுத்துவர்களின் தவிர்க்க முடியாத ஒரு செயலாகி விட்டது, நமக்கு பயனுள்ளவற்றை, பிடித்தவற்றை, சந்தேகங்களை திரும்ப சென்று பார்க்க என்று பல்வேறு வகையில் இவை பயன்படுகின்றன. தேடி அலையாமல் நேராக நமக்கு தேவையான இடத்தை இதன் மூலம் அடைய முடிகிறது.

நம்மில் பலர் (பெரும்பாலனவர்கள்) அலுவலக கணினி மற்றும் வீட்டு கணினி என்று இரு வேறு கணினிகளை பயன்படுத்துவோம். இதில் நாம் இணையத்தில் உலவும் போது மேற்கூறிய காரணங்களுக்காக புக்மார்க் செய்வோம் ஆனால் நமக்கு தேவை படும் நேரம் நம் கணினியில் இல்லாமல் வேறு கணினியில் அந்த புக்மார்க் இருக்கும், இதனால் நடைமுறை சிக்கல் ஏற்படும்.

இந்த பிரச்சனைகளை தவிர்க்க நமக்கு உதவ உள்ளதே புக்மார்க் தளங்கள். நாம் நம் கணினியில் புக்மார்க் செய்வதோடு இந்த தளங்களிலும் புக்மார்க் செய்து விட்டால் நாம் வேறு எந்த கணினியாக இருந்தாலும் அதை நாம் பயன்படுத்த முடியும் இணைய இணைப்பு இருந்தால் போதுமானது. நமது கணினி டேட்டா அழிந்து விட்டாலும் கூட நமக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இதை நாம் பயன்படுத்த முடியும். பிரௌசிங் சென்டர் சென்றால் கூட நம்மால் நம் புக்மார்க்குகளை பயன்படுத்த முடியும் என்பதால் நமக்கு அத்தியாவசிய தேவை ஏற்படும் போது இதன் பயன்பாடு நன்கு தெரியும்.

இந்த வசதிகளை பல தளங்கள் தற்போது வழங்கி வருகின்றன. இதில் எனக்கு பிடித்த தளங்கள் http://delicious.com மற்றும் http://faves.com

இதில் http://faves.com தளம் மிகவும் வண்ணமயமாக இருக்கும், உங்கள் புக்மார்க் செய்யும் தளத்தின் ஐக்கான்களை இதில் சேர்த்து எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும்படி இருக்கும். ஆனால் நான் பரிந்துரைப்பது http://delicious.com தளத்தை தான், இது வண்ணமயமாக இல்லாவிட்டாலும், பெரிய நிறுவனமாகவும் அதே சமயம் முன்னணியில் இருப்பதாலும் உங்களுக்கு தொழில்நுட்ப பிரச்சனைகள் எதுவும் வராது, மற்றும் பல தளங்களில் delicious தளத்திற்கு நேரடி சேமிப்பு தொடுப்பு இருக்கும்.

இந்த தளத்தில் உள்ள புக்மார்க் ஐக்கான்களை உங்கள் உலவியில் (பாரில்) நிறுவி கொண்டால் (கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள தமிழ் மாற்றி ஐக்கான் போல Drag and Drop) உங்களுக்கு தேவையான தளத்தை திறந்து இந்த ஐக்கானை அழுத்தினால் போதும் அதுவே நீங்கள் தற்போது உள்ள தளத்தை அவர்கள் தளத்தில் புக்மார்க் செய்துவிடும் அல்லது நேரடியாக புக்மார்க் தளம் சென்று அங்கேயும் இணைக்கலாம், இதில் நீங்கள் எந்த பிரிவு என்று முதல்கொண்டு தேர்வு செய்யலாம். மற்றவர்களுடன் எளிதில் பகிர்ந்து கொள்ளலாம், அதே போல அதை மற்றவர்கள் பார்க்க கூடாது என்று விரும்பினால் அதையும் தடை செய்ய முடியும். உங்கள் உலவியில் தற்போது உள்ள புக்மார்க்குகளையும் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம்.

மேற்கூறியவற்றை செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம், நமக்கு இதன் முக்கியத்துவம் நாம் புக்மார்க்கை தொலைத்து விட்டு மண்டைய சொறியும் போது நன்கு தெரியும்.