முடிந்தும் பேசுவது ஏன்?

2
முடிந்தும் பேசுவது ஏன்?

சிலர் சொல்ல வந்ததைக் கூறிய பிறகும் கூட அதையே பேசிக்கொண்டு இருப்பார்கள் 🙂 . அது ஏன்? Image Credit

சம்பவங்கள்

நாம் ஒவ்வொருவரும் இந்நிலையைக் கடந்து வந்து இருப்போம் அல்லது அதையே செய்து கொண்டு இருப்போம், எதனால் என்று புரியவில்லை.

இருப்பினும் என்னவாக இருக்கும் என்று பகிர்வதே இக்கட்டுரை.

சிலர் பேசும் போது அவர்கள் பேச நினைத்ததைப் பேசி இருப்பார்கள் ஆனாலும், கூறியதையே திரும்பக் கூறுவார்கள்.

எதனால் திரும்பக் கூறுகிறார்கள்?

தாங்கள் கூற வந்ததை அழுத்தமாகக் கூற நினைக்கிறார்களா? மனதில் பதிய வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? அல்லது அவ்வாறு கூறுவது அவர்களுக்கு திருப்தியை அளிக்கிறதா?

சிலர் என்ன கூற வருகிறார்கள் என்று கேட்கும் நமக்குப் புரிந்து விடும் ஆனால், அதற்கு கிளைக்கதைகள் கூறி தான் முதன்மை கதைக்கு வருவார்கள்.

பொறுமை இல்லாதவர்கள், ‘அட புரிஞ்சுதுப்பா! என்ன விசயம்ன்னு சொல்லு!‘ என்று நேரடியாகக் கேட்டு விடுவார்கள் 🙂 .

இது போன்று நானும் கேட்டுள்ளேன்.

குறிப்பாகச் சில பெண்கள் பேசும் போது ஒரே விஷயத்தையே அரை மணிநேரமாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் பேசியதே பல முறை திரும்ப வரும்.

அரை மணி நேரம் பேசுவது கூடப் பிரச்சனையில்லை ஆனால், கூறிய சம்பவத்தையே பல முறை திரும்பத்திரும்ப கூறுவார்கள்.

ஆண்களும் இது போலப் பேசுவார்கள் ஆனால், ஒப்பீட்டளவில் குறைவு.

கட்டுரை

ஒரு கட்டுரை எழுதும் போது அக்கட்டுரை குறித்த சிறு விளக்கம் தேவைப்படும். அதைச் சில நேரங்களில் பெரிதாகக் கூற வேண்டியதாகி விடும்.

ஆனால், அதைப் பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.

எதுவாக இருந்தாலும் உடனே கூற எதிர்பார்ப்பார்கள். துவக்கத்தில் இது போல எழுதிக்கொண்டு இருந்தேன். பின்னர் சுட்டிக்காட்டிய பின்பு தவிர்த்து விட்டேன்.

இணையத்தில் செய்திகளைப் படிக்கும் போது கவனித்து இருக்கலாம்,

ஒரு கட்டுரையில் நான்கு பாரா உள்ளது என்றால், மூன்று பாரா வேறு எதையோ எழுதி இருப்பார்கள், கடைசி பாராவில் உள்ள இரண்டு வரி செய்திக்காக 15 வரிகள் படிப்பது போல இருக்கும்.

Google Search Engine க்காக இவ்வாறு எழுதுகிறார்கள் என்றும் தோன்றுகிறது.

SKIM Reading

தற்போதெல்லாம் பலர் நேரடியாகச் செய்தியின் கடைசி பாராக்கு வந்து விடுகிறார்கள். தற்போது SKIM Reading வழக்கமாக உள்ளது.

சுருக்கமாகக் கூற வேண்டும் என்று மாற்றிக்கொண்ட பிறகு, தற்போது பேச்சிலும் அதுவே வருகிறது.

மிக நீண்ட விளக்கம் கொடுத்தால், பொறுமை போய் விடுகிறது 🙂 . ‘விஷயம் என்ன? அதைச் சொல்லுங்க‘ என்று கேட்க ஆரம்பித்து விடுகிறேன்.

ஆனால், அதே சமயம் சில நேரங்களில் சிலர் கூறுவது பெரியதாக இருந்தாலும் பொறுமையாக, ஆர்வமாகக் கேட்க, படிக்க வைக்கிறது.

தெரிந்த விஷயங்கள் திரும்பக் கூறுவதைக் கேட்க அலுப்புத் தட்டுவதாகவும், தெரியாத, சுவாரசியமான விஷயங்கள் கேட்க விருப்பமாகவும் இருக்கிறதோ!

உங்களுக்கு இந்த அனுபவம் உள்ளதா?!

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. கிரி.. பள்ளி, கல்லூரியில் படிக்கின்ற போது என்னுடைய பேச்சு தான் எனக்கு பல நண்பர்கள் கிடைக்க காரணமாக இருந்தது.. குறிப்பாக நகைச்சுவை உணர்வு கொஞ்சம் அதிகம், அதனால் நான் பேசுவதை நண்பர்கள் ரசித்து கேட்பார்கள்.. personality குறைவு என்பதால் கல்லுரி பருவத்தில் என்னை அவர்களுடைய நட்பு வட்டத்தில் சேர்த்து கொள்ள என்னுடைய பேச்சு உதவியது..

    குறிப்பாக படிக்காமல் அடிதடி, ரௌடிசம் என்று உள்ள நண்பர்கள் வட்டத்தில் நானும் இணைய வேண்டும் என்று ஒரு வருடம் முயற்சித்து இரண்டாம் வருடம் தான் இந்த நண்பர்கள் குழுவில் என்னை சேர்த்தார்கள்.. ஒன்றுமே படிக்காத குழுவில் சுமாராக படிக்கும் நானும் அவர்கள் குழுவில் இணைந்ததால், என் மூலம் அவர்களுக்கு கொஞ்சம் பயனும் இருந்தது..

    தற்போதும் சில நண்பர்களுடன் பேசும் போது இதை அவர்கள் நினைவு கூறுவார்கள்.. ஒவ்வொரு முறை செமஸ்டர் ரிசல்ட் வரும் போது, நான் ஆல் பாஸ் ஆக, நண்பர்கள் அரியர் வைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கும்.. நீ மட்டும் எப்படி டா? எக்ஸாம்ல பாஸ் பண்ணுற என்று அவர்களும் கேட்பார்கள்..

    இப்படியெல்லாம் கல்லூரியில் இருந்த நான் திருமணத்துக்கு பின்பு, நான் உரையாடும் ஸ்டைல் முற்றிலும் மாறி போய் விட்டது.. தற்போது சில நேரம் என்ன பேசுறிங்கனே? புரியல என்கிறார் மனைவி.. ஆமாம் என்று கூட ஒத்து ஊதுகிறான் என் பையன்.. இவர்கள் சொல்வதை பார்க்கும் போது எனக்கே சந்தேகம் வருகிறது..

    உங்கள் பழைய கட்டுரைகளில் சில நேரம் சொல்ல வந்ததை நேரிடையாக சொல்லாமல், சுத்தி வளைத்து எழுதிய வெகு சில பதிவுகள் உண்டு.. ஆனால் நாட்கள் செல்ல செல்ல உங்கள் எழுத்தில் முதிர்ச்சி நன்றாக தெரிகிறது.. தற்போதைய பதிவுகள் எல்லாம் சும்மா நச்ன்னு இருக்குது…

  2. @யாசின்

    “படிக்காமல் அடிதடி, ரௌடிசம் என்று உள்ள நண்பர்கள் வட்டத்தில் நானும் இணைய வேண்டும் என்று ஒரு வருடம் முயற்சித்து இரண்டாம் வருடம் தான் இந்த நண்பர்கள் குழுவில் என்னை சேர்த்தார்கள்.”

    அப்போது நம்ம லட்சியம் வேறு லெவலில் இருக்கும் 😀 .

    “நீ மட்டும் எப்படி டா? எக்ஸாம்ல பாஸ் பண்ணுற என்று அவர்களும் கேட்பார்கள்..”

    எல்லோரும் தோல்வி என்றால், சமாதானம் ஆகி விடுவார்கள் ஆனால், யாராவது இது போல தேர்வாகி விட்டால், கடுப்பாகி விடும் 🙂 .

    “தற்போது சில நேரம் என்ன பேசுறிங்கனே? புரியல என்கிறார் மனைவி.. ஆமாம் என்று கூட ஒத்து ஊதுகிறான் என் பையன்.. இவர்கள் சொல்வதை பார்க்கும் போது எனக்கே சந்தேகம் வருகிறது.”

    எதை சொல்றாங்கன்னு கேட்டு, அதை மாற்றிக்கொள்ள முயற்சித்து பாருங்கள். பையனும் சொல்கிறான் என்றால், எதோ இருக்கலாம் 🙂 .

    “உங்கள் பழைய கட்டுரைகளில் சில நேரம் சொல்ல வந்ததை நேரிடையாக சொல்லாமல், சுத்தி வளைத்து எழுதிய வெகு சில பதிவுகள் உண்டு.”

    நிறைய உள்ளது.

    அதற்கு காரணம், அனைவரையும் திருப்தி செய்ய நினைத்து எழுதியது என்று நினைக்கிறேன்.

    தற்போது மனசாட்சிக்கு சரி என்று படுவதை, மற்றவர்களைத் திருப்தி செய்ய நினைத்து எழுதாமல் நேரடியாக கூறுகிறேன்.

    இது சிலருக்கு மன வருத்தத்தை, கோபத்தை ஏற்படுத்தினாலும், எனக்கு கூற வந்ததை தெளிவாக கூறினோம் என்ற திருப்தி உள்ளது.

    தவறு இருந்தால், அடுத்த முறை திருத்திக் கொள்கிறேன் என்பதால், நெருக்கடியில்லை.

    துவக்கத்தில் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க வேண்டும் என்று நினைத்து, என் சுயத்தை இழந்து விட்டேன். தற்போது அதைச் சரி செய்துள்ளேன்.

    “நாட்கள் செல்ல செல்ல உங்கள் எழுத்தில் முதிர்ச்சி நன்றாக தெரிகிறது.”

    பலரும் சுட்டிக்காட்டும் தவறுகளைத் திருத்திக்கொண்டு வருவதால், அது போலத் தோன்றுகிறது என்று நினைக்கிறேன்.

    நானும் முடிந்தவரை பல இடங்களில் கிடைத்த அனுபவத்தில் எப்படி கூறினால் எளிதாக, விருப்பமாக படிப்பார்கள் என்பதை சோதனை செய்து கொண்டே இருக்கிறேன்.

    முக்கியமாக அவசியமான கட்டுரைகள் தவிர முடிந்தவரை கட்டுரையின் அளவை குறைத்து வருகிறேன்.

    கட்டுரையில் தேவையில்லாததை எழுதாமல் தவிர்த்து வருகிறேன். இது தான் கடினமாக உள்ளது.

    ஆனால், ஒவ்வொரு கட்டுரைக்கும் உண்மையான உழைப்பை கொடுக்கிறேன். ஏனோ தானோ என்று எதையும் எழுத மாட்டேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!