மக்கள் எதற்கு திமுக அரசை திட்டுகிறார்கள் என்பதே புரியாத புதிராக உள்ளது.
2021 ல் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தார்கள் அதன் பிறகு மழை, வெள்ளம் உட்படப் பல பிரச்சனைகளுக்கு எந்தத்தீர்வும் கொடுக்கப்படவில்லையென்றாலும், 39 தொகுதியிலும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி கொடுத்தார்கள்.
தற்போதும் அதே மழை, அதே வெள்ளம், அதே பிரச்சனை! என்ன மாறியது என்று கோபப்படுகிறார்கள்?! Image Credit
என்ன மாறி விட்டது?
- ₹4000 கோடி செலவு செய்தார்கள் 95% பணி முடிந்தது என்று அறிவித்தார்கள் ஆனால், அதே பிரச்சனை. கோபம் வரலை!
- ரேஷன் அரிசி வீணானதில் ₹1900 கோடி கணக்கு காட்டினார்கள். கோபம் வரலை.
- சாலையில் செல்பவர்களைப் போதையில் தொல்லை செய்கிறார்கள், அடிக்கிறார்கள். கோபம் வரலை.
- வீட்டில் கொள்ளையடித்ததோடு கொலையும் செய்கிறார்கள். கோபம் வரலை.
- நிவாரணத்துக்கு உடனே உதவி செய்யாமல், மத்திய அரசுடன் அரசியல் செய்கிறார்கள். கோபம் வரலை.
- மாதமொருமுறை மின்சாரக் கட்டணம் என்றார்கள், செய்யவில்லை. கோபம் வரலை.
- தமிழகம் குடிகாரர்கள், போதை மாநிலமாகி வருகிறது. கோபம் வரலை.
- பழைய பேருந்துக்கு முன்னால் அதன் சக்கரம் ஓடுகிறது, பேருந்து டாப் பறக்கிறது, படிக்கட்டு உடைந்து விழுகிறது. கோபம் வரலை
- சென்னை சாலை மேடு பள்ளமாக உள்ளது, கோபம் வரலை.
- குடிநீர் சீராக வருவதில்லை. கோபம் வரலை.
- புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடம் முதல் நாளே கழிவறை உடைந்துள்ளது, சுவர் உடைகிறது. கோபம் வரலை.
- ₹100 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூலகம் முதல் மழைக்கே ஒழுகுகிறது. கோபம் வரலை.
- சாலையமைத்த அடுத்த நாளில் சாலை சேதமாகிறது. கோபம் வரலை.
- சிவகாசியில் உழைத்து விபத்தில் இறந்தால் ₹2 லட்சம் ஆனால், குடித்து இறந்தால் ₹10 லட்சம். கோபம் வரலை.
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தற்போது வரை விழாக்காலங்களில் போதுமான பேருந்து இல்லையென்று சண்டை. கோபம் வரலை.
- பேருந்துகள் எண்ணிக்கை குறைந்து, பேருந்துகள் கூட்டம் ஆகி விட்டது. கோபம் வரலை.
- கட்சி நன்கொடை கொடுக்கவில்லையென்று கடையில் தாக்குதல். கோபம் வரலை.
- பல வருடங்களுக்குப் பிறகு அமைத்த சாலையில் ஒரே மாதத்தில் பாதாள சாக்கடை என்று குழி தோண்டுகிறார்கள். கோபம் வரலை.
- ஓய்வூதியம் கொடுக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. கோபம் வரலை.
- மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் அனைத்துக் கட்டிடங்களுக்கும் கலைஞர் பெயர் வைக்கப்படுகிறது. கோபம் வரலை.
- சாலை ஓரத்தில் குழி தோண்டிச் சரியாக மூடாததால், குழிக்குள் விழுந்து இறக்கிறார்கள். கோபம் வரலை.
- கேரளாவிலிருந்து இறைச்சி, மருத்துவக் கழிவுகளைத் தமிழகத்தில் கொட்டுகிறார்கள் ஆனால், நடவடிக்கை இல்லை. கோபம் வரலை.
- தெருக்கு ஒரு டாஸ்மாக் திறந்து வருகிறார்கள். கோபம் வரலை.
- கடையில் மாமூல் கேட்டுக் கத்தியைக் காட்டி மிரட்டுகிறார்கள். கோபம் வரலை.
- நன்றாக உள்ள சாலையைத் தோண்டி மோசமான சாலையை அமைக்கிறார்கள். கோபம் வரலை.
- நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசு கட்டிடங்கள் கட்டப்படுகிறது. கோபம் வரலை.
- கட்டப்படும் தடுப்பணைகள் இடிந்து விழுகிறது. கோபம் வரலை.
- மழையால் எவ்வளவு கால்நடைகள் இறந்தது என்று பாராளுமன்றத்தில் கூறிய திமுக, எவ்வளவு மனிதர்கள் இறந்தார்கள் என்று கூறவில்லை. கோபம் வரலை.
- எதிர்க்கட்சியாக இருந்த போது கருத்து சுதந்திரம் பேசியவர்கள், தற்போது அதற்கு முற்றிலும் எதிராக நடக்கிறார்கள். கோபம் வரலை.
- மழை பெய்து கொண்டு இருக்கும் நிலையில் தண்ணீரில் சாலை அமைக்கிறார்கள். கோபம் வரலை.
- போதைப்பொருட்கள் புழக்காட்டம் அதிகரித்து வருகிறது, குறிப்பாகப் பள்ளி, கல்லூரிகளில் என்று செய்திகள். கோபம் வரலை.
- ₹16 கோடி செலவழித்துக் கட்டிய ஆற்றுப்பாலம், இந்த மழையில் 3 மாதங்களில் ஆற்றோடு அடித்துச்சென்று விட்டது. கோபம் வரலை.
- சாலையில் உள்ள பள்ளத்தால், தவறி கனரக வாகனத்தில் விழுந்து விபத்தில் தொடர்ந்து இறக்கிறார்கள். கோபம் வரலை.
- மாமூல் தரவில்லையென்று போதையில் கொலையே செய்கிறார்கள். கோபம் வரலை.
- ஆம்னி பேருந்துக் கட்டணம் போலப் பண்டிகை காலங்களில் கோவில்களில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கோபம் வரலை.
- கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக டைடல் பார்க் பாலத்தைக் கட்டுகிறார்கள். கோபம் வரலை.
- கட்டி முடித்த ஒரு பகுதி பாலத்தை 3 மாதங்களாகியும் திறக்கவில்லை. கோபம் வரலை.
- தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மிக மோசமாகி வருகிறது. கோபம் வரலை.
- தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களின் சாலைகள் பள்ளங்களுடன் உள்ளது. கோபம் வரலை.
- 2021 ல் 4+ லட்சம் கோடியிலிருந்த தமிழகக் கடனை 8+ லட்சம் கோடிக்கு நான்கு வருடத்தில் கொண்டு வந்துள்ளார்கள். கோபம் வரலை.
- வருமானத்தை உயர்த்த வழி செய்யாமல், வரியையும், கடனையும் உயர்த்திக் கொண்டுள்ளார்கள். கோபம் வரலை.
- கவுன்சிலர் உட்பட அனைவரும் மக்களை மிரட்டுகிறார்கள். கோபம் வரலை.
- சாலையின் உயரத்தை உயர்த்திக்கொண்டே செல்கிறார்கள், கோபம் வரலை.
- மழை நீர் வடிகாலை ஒவ்வொரு முறையும் இடித்துத் திரும்பக் கட்டுகிறார்கள் ஆனாலும், தண்ணீர் தேங்குகிறது. கோபம் வரலை
- மழையால் பாதிப்பில்லை எடப்பாடிக்குப் பதில் ஆனால், மழை பாதிப்புக்கு ₹2000 கோடி மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். கோபம் வரலை.
- சாலைகளில் தேங்கும் மணலால் வாகனம் ஓட்டச் சிரமம் ஏற்படுகிறது. கோபம் வரலை.
- ஏரியைத் தூர் வாராமலே, முடிந்து விட்டதாகக் கணக்கு காட்டுகிறார்கள். கோபம் வரலை.
- அத்தியாவசியத் தேவைகளுக்குச் செலவிடாமல், சிலை உட்படப் பல தேவையற்றவைக்கு கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. கோபம் வரலை.
- புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி குழந்தைகள் பள்ளி மேற்பகுதி உடைந்து விழுகிறது. கோபம் வரலை.
என்ன நியாயம் உள்ளது?!
மேற்கூறிய எதற்குமே கோபம் வராமல் பாராளுமன்றத்தேர்தலிலும் வாக்களித்து 39 / 39 வழங்கி விட்டு, தற்போது மழைக்கு எதற்குக் கோபப்பட வேண்டும்?!
அதிலும் பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தவர்கள் எதற்குக் கோபப்படுகிறார்கள்?!
எதுவும் நடக்காது என்று தெரிந்து தானே வாக்களித்தார்கள்! அப்படியிருக்கையில் திமுகவைத் திட்டுவதில் என்ன நியாயம் உள்ளது?!
அதிலும் திமுகவை தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் சென்னை மக்கள் கோபப்படுவதையெல்லாம் பார்க்கையில் நகைச்சுவையாக உள்ளது.
மறைமுகமாக ₹5000 கூடுதலாக வரி, கட்டணத்தை சாராசரியாகக் கொடுத்து விட்டு மாதம் ₹1000 பணம் வருகிறது என்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்
திமுகவை திட்டாதீர்கள், அவர்களிடம் தவறு கிடையாது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, உங்கள் ஆதங்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் பட்டியல் இட்ட அனைத்து பிரச்சினையும் அனைவருக்கும் ஆனது அல்ல. பெரும்பான்மையான பொது மக்களின் பிரச்சினைகள் வெவ்வேறு.
அது ஒவ்வொரு பகுதிக்கும், கிராமத்துக்கும், நகரத்துக்கும் மாறுபடும். சென்னை வெள்ள பிரச்சினை கொங்கு, திருநெல்வேலி மக்களுக்கு வெறும் செய்தியே.
அது மட்டும் இல்லாமல் மக்கள் அனைத்து பிரச்சினையும் நினைவில் வைத்து கொள்ள மாட்டார்கள், முக்கியமாக அது அவர்களை பாதிக்காமல் இருந்தால் கடந்து சென்று விடுவார்கள்.
அதனால் தான் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று பொய் வாக்குறுதி சொல்லி அரசியல்வாதிகள் ஓட்டு கேட்கிறார்கள், வென்ற பின் அதே நிலைமை தான் இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் கொள்ளை அடித்த பணத்தில் பங்கு கொடுத்து, கேள்வி கேட்கும் அடிப்படை உரிமையை இழக்கிறார்கள். எங்கள் ஊர் கவுன்சிலர் குடிநீர் குழாய் போடுவதற்காக லஞ்சம் வாங்குகிறார், மக்கள் கேட்டால் தேர்தலுக்குகாக செலவு செய்ததாகவும் அந்த பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று கேட்கிறார்.
காசு வாங்கிக்கிட்டு தானே ஓட்டு போடு கிறீர்கள் என்கிறார். கேள்வி கேட்கும் தார்மீகமும் பறிபோகிறது.
கள எதார்த்தம் வேறாக இருக்கிறது. திமுக மாதம் 1000 திட்டத்தின் கீழ் ஓட்டு அரசியல் செய்து , தமிழ்நாட்டின் கடனை அதிகம் படுத்தியும் வளர்ச்சி திட்டங்கள் விரிவு படுத்தாமல் தமிழ்நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கிறார்கள்.
இதன் பாதிப்பு இன்னும் 10 ஆண்டுகளில் தெரியும் என்று நினைக்கிறேன். சொல்வதிற்கு ஒன்றும் இல்லை.
கிரி.. அரசியல் என்றாலே??? இப்படித் தானோ?? அரசியல்வாதிகள் என்றாலே?? இது போல தானோ??? என்ற கோபம் உள்ளூற எழுகிறது.. பெரும்பாலும் அரசியல்வாதிகளின் எண்ணம், மக்களுக்கு இவர்கள் சேவை செய்வது என்பது ஏதோ இவர்கள் பாவம் பார்த்து மக்களுக்கு வேறு வழியே இல்லை..
நாங்கள் மட்டும் தான் இவர்களுக்கு உதவ முடியும் என்பது போல BUILD UP கொடுப்பதை பார்க்கும் போது எரிச்சல் வருகிறது. அரசியல்வாதிகள் ஏதோ கடவுளுக்கு இணையான ஒரு தோற்றத்தை காண்பிக்கின்றனர்..
மீண்டும் மீண்டும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தலுக்கு முன் இலவசங்களை (முடியாது) என்று தெரிந்தும் அள்ளி தெளிக்கின்றனர்..
ஆட்சிக்கு வந்த பிறகு 3 / 4 வருடம் முந்தைய ஆட்சியின் மீது குறை சொல்லி இவர்கள் காலம் கடந்துகின்றனர்.. இலவசத்தை யார் இவர்களிடம் கேட்டார்கள்?? இலவசத்தை கொடுப்பதாக இருந்தால் கட்சி பணத்திலிருந்து கொடுக்கட்டும்..
5 ஆண்டுகள் பதவியில் இருக்கும் ஒரு MLA / MP எவ்வளவு ஊதியம் / சலுகைகள் பெறுகிறார்கள் என்பது 95 % பேருக்கு தெரியாது.. இவற்றை மீறி பல வகையில் சம்பாத்தியம் மேற்கொள்கிறார்கள்.. தாங்கள் எதற்காக வந்தோம் என்பதையே பல அரசியல்வாதிகள் மறந்து விடுகின்றனர்..
தற்போது சட்டமன்றத்தில் நடந்த சில காணொளிகளை YOUTUBE இல் கண்ட போது நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வந்து போனது..
@மணிகண்டன்
“நீங்கள் பட்டியல் இட்ட அனைத்து பிரச்சினையும் அனைவருக்கும் ஆனது அல்ல. பெரும்பான்மையான பொது மக்களின் பிரச்சினைகள் வெவ்வேறு.”
நிச்சயம் அனைவருக்குமானது அல்ல ஆனால், வெள்ளத்தை தவிர மற்ற பிரச்சனைகள் அனைவரும் சந்திப்பது, கோபப்படுவது தான்.
சராசரி பொதுஜனத்தின் கோபமாக இருப்பது தான்.
“முக்கியமாக அது அவர்களை பாதிக்காமல் இருந்தால் கடந்து சென்று விடுவார்கள்.”
உண்மையே!
“சென்னையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று பொய் வாக்குறுதி சொல்லி அரசியல்வாதிகள் ஓட்டு கேட்கிறார்கள், வென்ற பின் அதே நிலைமை தான் இருக்கிறது.”
மக்கள் பொய்களுக்கு பழகி விட்டார்கள். எனவே, நடக்காது என்று தெரிந்து கொண்டார்கள்.
“காசு வாங்கிக்கிட்டு தானே ஓட்டு போடு கிறீர்கள் என்கிறார். கேள்வி கேட்கும் தார்மீகமும் பறிபோகிறது.”
பிரச்சனையே இது தான். பணத்தை வாங்கி விட்டால், கேள்வி கேட்கும் உரிமை தார்மீக ரீதியாக பறிபோய் விடுகிறது.
இதுவரை நான் பணம் வாங்கியதில்லை. வாங்கிவிட்டால் இங்கே எழுதக்கூட முடியாது, மனசாட்சி இடம் கொடுக்காது.
“திமுக மாதம் 1000 திட்டத்தின் கீழ் ஓட்டு அரசியல் செய்து , தமிழ்நாட்டின் கடனை அதிகம் படுத்தியும் வளர்ச்சி திட்டங்கள் விரிவு படுத்தாமல் தமிழ்நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கிறார்கள்.”
மிக மோசமாக கொண்டு சென்று கொண்டுள்ளார்கள். மக்களும் இதன் பாதிப்பை உணராமல் இருக்கிறார்கள்.
இது பற்றிக் கட்டுரையைப் பின்னர் எழுதுவேன்.
“இதன் பாதிப்பு இன்னும் 10 ஆண்டுகளில் தெரியும் என்று நினைக்கிறேன்.”
சரியாக கூறினீர்கள்.
கால அளவில் சிறு மாற்றங்கள் இருக்கலாம் ஆனால், பாதிப்பு 100% உறுதி.
@யாசின்
“அரசியல்வாதிகள் ஏதோ கடவுளுக்கு இணையான ஒரு தோற்றத்தை காண்பிக்கின்றனர்..”
அதற்கு மக்கள் கொடுக்கும் தைரியம் தான் காரணம்.
தேர்தலில் தோற்க வைத்து உட்கார வைத்தால், அடங்கி இருப்பார்கள் ஆனால், தொடர்ந்து வாக்களித்து வெற்றி பெற வைக்கும் போது யாராக இருந்தாலும் திமிர் வருவது இயல்பே.
எனவே, அவர்களைக் குறை கூறி எதுவும் நடக்காது. பிரச்சனை மக்கள் தான்.
“இலவசத்தை யார் இவர்களிடம் கேட்டார்கள்?”
இதை வைத்துத் தான் மக்களுக்கு ஆசையைக் காட்டுகிறார்கள். இதிலே வீழ்த்துகிறார்கள்.
இதன் பிறகு நேரடியாக, மறைமுகமாக வரி,கட்டணத்தை உயர்த்துகின்றனர் மக்கள் உணருவதில்லை.
“தற்போது சட்டமன்றத்தில் நடந்த சில காணொளிகளை YOUTUBE இல் கண்ட போது நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வந்து போனது.
எனக்கு தினமுமே சிலவற்றை பார்க்கும் போது அப்படித்தான் உள்ளது.
கடந்து செல்லப் பழகிக்கொண்டேன். வேறு என்ன செய்வது?