திரைப்படங்கள் என்றாலே பொழுதுபோக்கு, அவற்றில் பல மிகைப்படுத்தப்பட்டதாக, எதார்த்தத்தை மீறியதாக இன்றுவரை தொடர்கிறது. Image Credit
எண்ணிக்கையில் மட்டுமே மாற்றம் உள்ளதே தவிர, தின வாழ்க்கையோடு பொருந்தி எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவு.
சமூகத்தளங்கள்
சமூகத்தளங்களில் பழைய படங்களின் காட்சியைக் கிண்டலடித்து பலர் பதிவிட்டு வருகிறார்கள்.
அப்போது எப்படி இருந்துள்ளார்கள் என்று கூறுவது வேறு ஆனால், அதே சில காட்சிகளைத் தாங்கள் புத்திசாலியாக நினைத்துத் தற்போது கூறுவது நியாயமா?
அவ்வாறு காட்சிகளை எடுத்தவர்கள் முட்டாள்கள் என்றால், ரசித்தவர்களும் முட்டாள்கள் தானே!
அன்று ரசித்தவர்கள் தானே இன்றும் கிண்டலும் செய்கிறார்கள். சமூகத்தளங்கள் வந்ததால், புத்திசாலி ஆகி விட்டார்களா!
மாறும் காலகட்டம்
சமூகம், பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள், எண்ணங்கள், சிந்தனைகள், சரி தவறுகள் ஆகியவை காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
நேற்று சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவை இன்று தவறாக கூறப்படுகிறது!
5 வருடங்களுக்கு முன்பு எழுதியதை படித்தால், வேறு மாதிரி எழுதி இருக்கலாமோ! தவிர்த்து இருக்கலாமோ! என்று தோன்றுகிறது.
ஐந்து நிமிடங்களுக்கு முன் எழுதிய டீவீட்டை ஏன் நீக்கி, வேறு பதிய வேண்டும்? ஏதோ ஒன்று தவறு என்பதால் தானே!
ஐந்து நிமிடத்திலேயே ஒரு விஷயம் தவறு என்று தெரிய வரும் போது 10 / 20 வருடங்களுக்கு முன்பு கூறிய கருத்துகளை, காட்சிகளைக் கிண்டபடிப்பதில் என்ன புத்திசாலித்தனம் இருந்து விடப்போகிறது?!
கண்ணதாசன்
அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில் கண்ணதாசன் அந்தக்காலகட்டத்தில் இருந்த சமூக சூழ்நிலையை மனதில் வைத்துச் சிலதை எழுதி இருந்தார்.
அவற்றில் சில தற்போது ஏற்க முடியாததாக உள்ளதால், அவர் தவறு என்று ஆகி விடுவாரா? அக்கால கட்டத்தில் அவை சரியாக இருந்தது, ஏற்புடையதாக இருந்தது.
தற்போது காலம் மாறி வருகிறது அதையொட்டி எண்ணங்களும்.
அன்றைய காலகட்டத்து காட்சிகளைப் புத்திசாலியாக தற்போது விமர்சிப்பது செத்த பாம்பை அடிப்பது போலத்தான்.
இயக்குநர் மணிரத்னம் பேட்டியில், ‘தான் எடுத்த படத்தைத் திரும்பப் பார்ப்பதில்லை அதில் நான் செய்த தவறுகளே தெரியும்‘ என்று கூறினார்.
எவ்வளவோ இயக்குநர்கள் தாங்கள் அன்று எடுத்த காட்சியை இன்று எடுத்தால் மாற்றி எடுத்து இருப்பேன் என்று கூறிக்கேட்டதில்லையா?
அதே இயக்குநர் தானே! இன்று ஏன் மாற்றிக்கூற வேண்டும்! காரணம், அனுபவம்.
திரைப்படங்கள்
திரைப்படங்கள் ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே உள்ளது.
முன்பு சண்டைக்காட்சிகள் நம்ப முடியாததாக, சுடப்பட்டாலும் சாக மாட்டார்கள், அடிமைத்தனம் போன்ற காட்சிகள் அப்போது அதிகம் இருந்தன.
தற்போதும் உள்ளதே! எண்ணிக்கையே அளவில் குறைந்துள்ளது.
இன்று விமர்சிக்கப்படும் பல அப்போதைய படங்கள் பலராலும் ரசிக்கப்பட்டவையாக இருக்கும் ஆனால், இன்று சமூகத்தளங்கள் வந்ததால் ரசித்தவர்கள் கிண்டலடிக்கிறார்கள்.
நகைச்சுவைக்காக கிண்டலடிப்பது தவறில்லை ஆனால், தன்னை புத்திசாலியாக நினைத்துப் பேசுவது சரியானதாக இல்லை.
தற்போது ரசிக்கப்படுவையும் கூட இன்னும் 10 வருடங்கள் கழித்து நகைச்சுவையாக இருக்கும். அப்போதும் இதையே தான் செய்து கொண்டு இருப்பார்கள்.
நீங்கள் அன்று சரி என்று நினைத்த ஒன்று, இன்று தவறு என்று தெரிந்தால், வாழ்க்கையில் அனுபவம் பெற்றுக்கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. என்னை பொறுத்தவரை பழைய படங்களின் காட்சிகளை தற்போது கிண்டலடிப்பது தேவையற்ற ஒன்று.. காரணம் கால ஓட்டத்தில் உலகத்தில் உள்ள எல்லா விஷியங்களுமே குறிப்பிட்ட காலத்தில் மாற்றம் பெற கூடியது.. தனி மனித வாழ்வில் ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை விதமான மாற்றங்களை நாம் உணர முடியும்.. உணவில், உடையில், நடையில், சிகையாலங்காரத்தில், உரையாடலில், பழக்கவழக்கத்தில் எல்லோருக்குக்குள்ளும் நிச்சயம் கால ஓட்டத்தில் மாற்றம் வருவது தவிர்க்க இயலாதது..
அது போல் தான் திரைப்படங்களும்.. சிவாஜியின் நடிப்பு தற்போதைய தலைமுறைக்கு ஓவர் ஆக்டிங் என கருதுவர்.. ஆனால் சிவாஜி எப்படி பட்ட மாகா நடிகன் என்பது உலகிற்கே தெரியும்.. அன்றைய காலகட்டத்தில் ஹிந்தியில் கோலோச்சிய மிக பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜி நடித்த படத்தை ரீமேக் செய்ய தயங்குவார்களாம்.. அது தான் சிவாஜியின் தனித்துவம்..
நான் முன்பு எழுதிய பலவற்றை தற்போது படிப்பதுண்டு.. சிலவற்றை படிக்கும் போது சிரிப்பாகவும், சிலதை படிக்கும் போது கொஞ்சம் பெருமையாகவும் இருக்கும் (நானா எழுதி இருக்கிறேன் என்று) அந்த வகையில் கல்லுரி பருவத்தில் நான் எழுதி கல்லுரி ஆண்டு கல்வி மலரில் வந்த ஒரு சிறு ஹைக்கூ கவிதை தற்போதும் நினைவில் இருக்கிறது.. அவர்கள் கொடுத்த தலைப்பு : தொடரல்..
கல்லூரியில் உன்னை மட்டுமே
நான் தொடர்ந்து கொண்டிருப்பதால்
தான் என்னவோ!!! என்னவளே..!!!
மூன்று ஆண்டுகள் முடிந்தும் ,
என் பரிட்சைகள் மட்டும் என்னை
தொடர்ந்து கொண்டே வருகிறதோ!!!! ???
@யாசின்
“சிவாஜியின் நடிப்பு தற்போதைய தலைமுறைக்கு ஓவர் ஆக்டிங் என கருதுவர்”
சரியான எடுத்துக்காட்டு, நானே கூறி இருக்க வேண்டும்.
நடிகர் திலகம் நாடகத்தில் இருந்து வந்ததால், அங்கு நடித்த நடிப்பையே திரையிலும் சில படங்களில் காண்பித்ததால் இப்படியொரு தோற்றம் வந்து விட்டது.
அவரின் அற்புதமான நடிப்பை பல [படங்களில் காணலாம்.
தனிப்பட்ட முறையில் எனக்கு உயர்ந்த உள்ளம், முதல் மரியாதை, தேவர் மகன் ஆகிய படங்கள் மிகவும் பிடித்தவை.
இவையல்லாமல் சில படங்கள் உள்ளது.
“ன்றைய காலகட்டத்தில் ஹிந்தியில் கோலோச்சிய மிக பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜி நடித்த படத்தை ரீமேக் செய்ய தயங்குவார்களாம்.”
ஆமாம் YouTube நேர்முகத்தில் யாரோ கூறியதாக நினைவு.
“நான் எழுதி கல்லுரி ஆண்டு கல்வி மலரில் வந்த ஒரு சிறு ஹைக்கூ கவிதை தற்போதும் நினைவில் இருக்கிறது”
இதையெல்லாம் எப்படிங்க நினைவு வைத்து இருக்கீங்க 🙂 .