நடுவண் அரசும், மாநில அரசுகளும் வெளிநாட்டு வங்கிகளில் கடனையும், பத்திரங்களை வைத்தும் கடனைப் பெறுகின்றன. இது சரியா என்பதைப்பார்ப்போம்.
கடன்
ஒரு நிறுவனம் வளர்ச்சியைப் பெற, தொழிலை விரிவுபடுத்தக் கடன் எவ்வளவு அவசியமோ அதே போல அரசுகளும் கடன் வாங்குவது. Image Credit
போதுமான நிதி இல்லாத போது கடனை வாங்கி வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அப்போது தான் வளர்ச்சியை அடைய முடியும்.
எப்படி வாங்க வேண்டும்?
ஒரு செலவைச் செய்கிறார்கள், முதலீட்டைப் போடுகிறார்கள் என்றால் அதிலிருந்து இலாபம் வரும் என்ற நோக்கத்திலேயே செயல்படுகிறார்கள்.
நிறுவனம் மட்டுமல்ல ஒரு சாதாரண விவசாயி கூடக் கடன் பெற்றே பயிர் விளைவிக்கிறார். பின்னர் அதிலிருந்து கிடைக்கும் இலாபத்தில் கடனைச் செலுத்தி, மீதியுள்ளதை இலாபமாக அடைகிறார்.
எனவே, கடன் என்பது பெரும்பாலான நேரங்களில் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
கடன் எப்போது வாங்க வேண்டும்?
கடன் வாங்குபவரால் கடனை முழுமையாகச் செலுத்த முடியும், கடனை வாங்கி செயல்படுத்தும் திட்டத்தால் இலாபம் கிடைக்கும் என்று உறுதியாக தெரிந்தால்.
இல்லையென்றால், கடனட்டையைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள் கடனட்டையை வாங்கினால் என்ன நிலையாகுமோ அது தான் நடக்கும்.
எப்படிக் கடன் கொடுப்பார்கள்?
வங்கியில் கடன் கேட்டால், வங்கி என்ன செய்யும் ?
முதலில் CIBIL Score, வருமானம் எவ்வாறு உள்ளது? சம்பளம் கடந்த வருடங்களில் எப்படியுள்ளது? நிறுவனம் என்றால், இலாப கணக்கைப் பரிசோதிப்பார்கள்.
திருப்திகரமாக இருந்தால், நமது வருமானம், CIBIL Score க்கு ஏற்பக் கடனை வழங்குவார்கள்.
இதே தான் அரசுக்கும்.
மத்திய அரசு என்றால், உலகளவில் நிதி மேலாண்மையில் இந்தியா மதிப்பு (Rating) எப்படியுள்ளது? GDP எப்படியுள்ளது? அந்நிய செலாவணி எவ்வளவு உள்ளது? உள்நாட்டு கடன் எவ்வளவு உள்ளது?
செயல்படுத்தப்போகும் திட்டத்தால் இலாபம் கிடைக்குமா? இவர்களால் திரும்பக் கொடுக்க முடியுமா? என்பதைக் கணக்கிட்டு கடனை வழங்குகிறார்கள்.
எனவே, அரசின் பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் கடன் வாங்குவதில் தவறில்லை.
எங்கே தவறு செய்கிறார்கள்?
தொடர்ந்து கடனை மட்டும் வாங்கிக்கொண்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தாமல், செலவை மட்டும் செய்து கொண்டு இருந்தால், சிக்கலில் சென்றே முடியும்.
மாநிலத்துக்கும், மத்திய அரசுக்கும் கடன் வாங்குவதற்கு கட்டுப்பாடு உள்ளது. அதைத்தாண்டி செல்லக் கூடாது, சென்றால் கிடைக்காது.
இது போன்ற ஒரு நிலை கேரள அரசுக்கு ஏற்பட்டு அவர்களின் கடன் வாங்கும் எல்லையைத்தாண்டி சென்றதால், நடுவண் அரசு கடன் கொடுக்க மறுத்து விட்டது.
இதனாலே மற்ற வரிகளை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்குச் செல்கிறார்கள்.
நடுவண் அரசு
எடுத்துக்காட்டுக்கு நடுவண் அரசையும், தமிழக அரசையும் எடுத்துக்கொள்ளலாம்.
நடுவண் அரசுக் கடன் வாங்கிய தொகையின் மூலம் இந்திய உட்கட்டமைப்பை மிகப்பெரிய அளவில் செயல்படுத்தி வருகிறார்கள்.
உட்கட்டமைப்பு என்பது, தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, நிதி மேலாண்மை, மின்னணு இந்தியா, துறைமுகம், விமான நிலையங்கள், சீர்மிகு நகரம் (Smart City), இணையம் போன்றவை.
இவை நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றன.
போக்குவரத்து சிறப்பாக இருந்தால், பொருட்களை, சேவைகளை மக்கள் உடனே கொண்டு செல்ல முடிகிறது. இவை நாட்டின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவுகிறது.
தமிழக அரசு
ஆனால், தமிழக அரசு வாங்கும் பெரும்பாலான கடன் இலவசத்துக்கே சென்று கொண்டுள்ளது. இதுவரை உருப்படியான உட்கட்டமைப்பைச் செயல்படுத்தவில்லை.
ஏற்கனவே பல காலமாகச் சிறப்பாக இருக்கும் சிறு நகரம், கிராம சாலைகள் மட்டுமே பாராட்டும்படியுள்ளன.
உட்கட்டமைப்பில் புதிதாக எதுவுமே செயல்படுத்தப்படவில்லை. வருடாவருடம் கடன் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தமிழகத்தின் பெருமையாக இருக்கும் தலைநகர் சென்னையின் உட்கட்டமைப்பு மிகப்பரிதாபமான நிலையில் உள்ளது. சாலைகள் மோசமாக உள்ளது, கழிவு மேலாண்மை சொல்லவே வேண்டியதில்லை.
தமிழக வளர்ச்சி
தமிழகத்துக்கும் கடன் கொடுக்கப்படக் காரணம், தமிழகத்தின் பொருளாதாரமே! உட்கட்டமைப்பில் விமர்சனங்கள் இருந்தாலும், நிறுவனங்களின் மூலம் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது.
ஆனால், அதே உட்கட்டமைப்பில் தமிழகம் கவனம் செலுத்தினால், மற்ற மாநிலங்கள் கிட்டே கூட வர முடியாது.
திமுக அரசியல் செய்யாமல் இருந்து எட்டு வழிச்சாலை வந்து இருந்தால், இன்று மிகப்பெரிய அளவில் போக்குவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும்.
நம் திட்டத்தோடு துவங்கப்பட்ட மஹாராஷ்டிரா சாலை முடிவடைந்து அவர்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள், பலனை அனுபவித்துக்கொண்டுள்ளார்கள்.
கடன் அவசியம்
எனவே, கடன் என்பது நிறுவனத்துக்கு, அரசுக்கு மிக முக்கியமானது.
ஆனால், வாங்கிய கடனை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? கடனை வைத்து எவ்வாறு மேம்படுத்துகிறார்கள்? இலாபத்தைப் பெறுகிறார்கள்? வளர்ச்சி அடைகிறார்கள்? என்பதே முக்கியம்.
திட்டமிட்டுச் சிறப்பாகச் செயல்படுபவர்கள் வெற்றி அடைகிறார்கள், சொதப்புபவர்கள் கடனை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள், உட்கட்டமைப்பு வளர்ச்சியிலும் பின் தங்குகிறார்கள்.
எனவே, அரசு, கடன் வாங்குவது தவறான செயல் அல்ல ஆனால், அதை எப்படி, எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதே முக்கியம்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. பதிவை படிச்ச உடன் தெளிவா என்ன?? விஷியம் என்பது பாமரருக்கும் புரியும் படி நன்றாக, விளக்கமாக, அழகா எழுதி இருங்கீங்க.. வாழ்த்துக்கள்.. இதை விட எளிமையா இந்த தகவலை கூற இயலாது.. அரசாங்க கடனை பற்றி முற்றிலும் புரிதல் இல்லாதவர்களும் இந்த பதிவை படித்தால் எளிதில் விளங்கி கொள்வார்கள்.
நிதி மேலாண்மை என்பது எவ்வளவு முக்கியம் என்பது பொறுப்பில் உள்ள அனைவர்க்கும் தெரியும். ஆனால் இந்த கடனை கொண்டு தான் வளர்ச்சி முற்றிலும் உடன்பாடு இல்லை.. கடனை வாங்கினாலும் அதை கொண்டு வளர்ச்சியடைந்து, மீண்டும் கடன் வாங்காமல் இருப்பதை தான் விரும்புகிறேன்.. உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்காக தான் கடனை வாங்குகிறோம் .. ஆனால் அவை முறைப்படி அந்த நோக்கத்திக்காக தான் செலவு செய்யபட வேண்டும்..
தேர்தல் நேரத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் செய்யவே இயலாத வாக்குறுதிகளையும் / இலவசங்களையும் அள்ளி தெளித்து விட்டு ஆட்சியை பிடித்தவுடன் அரசாங்க கஜானவில் பணமில்லை.. முந்தைய ஆட்சியாளர்கள் பணத்தை காலி செய்து விட்டார்கள் என அவர்கள் மீது பழி போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை..
அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன் இலவசத்தை அறிவித்தால் (பணமாகவோ / பொருளாகவோ) அதை கட்சி பணத்திலிருந்து மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும்.. இல்லையென்றால் இலவசம் என்ற ஒன்றை தேர்தல் வாக்குறுதியில் அரசியல் கட்சிகள் கொடுப்பதாக அறிவித்தால், அந்த குறிப்பிட்ட கட்சியை டிஸ்மிஸ் செய்வதாக சட்டம் இயற்ற வேண்டும்..
கடந்த 20 வருடங்களில் தமிழக அரசின் கடன் பலமடங்கு அதிகரித்து விட்டது.. இதில் இலவசத்தின் பங்கு மிக மிக அதிகம். இன்று இருக்கும் பொருளாதார சூழல், நாளையும் இருக்கும் என்று கூற முடியாது.. ஒரு கொரோனவை தாண்டுவதற்குள்ளே போதும் போதும் என்று ஆகி விட்டது.. அரசாங்கம் தேவையில்லாமல் கடன் மேல் கடன் வாங்கி விட்டு அதை வரிகள் என்ற பெயரில் மக்கள் மீது திணிப்பது எந்த வகையில் நியாயம்??
சாதாரணமாக ஒரு நடுத்தர குடும்பத்தில் தன் சக்திக்கு உட்பட்டு தான் கடன் வாங்க முடியும்.. அதை விட்டு கடன் கொடுக்க ஆள் இருக்கிறார்கள் என்பதால் தொடர்ந்து கடனை வாங்கி கொண்டே இருந்தால், முடிவில் கடன் தொல்லை தாங்க முடியாமல் வாங்கியவன் தற்கொலை செய்து சாக வேண்டும்.. இல்லையென்றால் கடன் கொடுத்தவன் முன் மண்டியிட்டு பிச்சை கேட்க வேண்டும்..
இலங்கையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் இது தான் நடந்தது.. சீனா அதிக அளவில் கடனை கொடுத்து வந்தது.. முடிவில் ராஜபக்சே குடும்பம் தான் இஷ்டம் போல கடன் பணத்தை சொந்த செலவு செய்தது.. முடிவில் அரசு கஜானா காலி.. சர்வதேச சந்தையில் எரிபொருள் வாங்க பணமில்லாமல் போனது.. அங்கு நடந்தது என்றாவது இங்கு நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது..
அதனால் கடனை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. வளச்சிக்காக வாங்கினால் அந்த பணத்தை அதற்காக மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.. கள்ளச்சாராயம் குடித்து விட்டு செத்தவனுக்கு 10 லட்ச ரூபாய் அரசாங்க பணத்தை கொடுத்தால், இன்னும் 100 / 1000 / 10000 பேர் தைரியமா குடிச்சிட்டு செத்து போவான்.. செத்து போனவன் என்ன தியாகியா???
@யாசின்
நன்றி யாசின் 🙂 .
உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. எழுதுவதற்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறது.
“கடனை வாங்கினாலும் அதை கொண்டு வளர்ச்சியடைந்து, மீண்டும் கடன் வாங்காமல் இருப்பதை தான் விரும்புகிறேன்.”
சரியானது யாசின் ஆனால், ஒரு நாட்டின் அரசாங்கம் முற்றிலும் கடன் வாங்குவதை நிறுத்துவது நடைமுறையில் கடினம் என்றே கருதுகிறேன்.
ஆனால், கடனைக் குறைக்க முடியும்.
“தேர்தல் நேரத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் செய்யவே இயலாத வாக்குறுதிகளையும் / இலவசங்களையும் அள்ளி தெளித்து விட்டு ஆட்சியை பிடித்தவுடன் அரசாங்க கஜானவில் பணமில்லை.”
இந்தக் கொடுமையைத் தான் பொருளாதாரத்தைச் சீரழிப்பது யார்? கட்டுரையில் கூறி இருந்தேன்.
“கடந்த 20 வருடங்களில் தமிழக அரசின் கடன் பலமடங்கு அதிகரித்து விட்டது..”
7+ லட்சம் கோடி.
“அரசாங்கம் தேவையில்லாமல் கடன் மேல் கடன் வாங்கி விட்டு அதை வரிகள் என்ற பெயரில் மக்கள் மீது திணிப்பது எந்த வகையில் நியாயம்??”
இதற்கு மக்கள் தான் காரணம். இலவசத்துக்கும், உரிமை தொகைக்கும் ஆசைப்பட்டு அனைவரையும் சிக்கலில் நிறுத்துகிறார்கள்.
வெறுப்பாக உள்ளது.
“சீனா அதிக அளவில் கடனை கொடுத்து வந்தது.. முடிவில் ராஜபக்சே குடும்பம் தான் இஷ்டம் போல கடன் பணத்தை சொந்த செலவு செய்தது.. முடிவில் அரசு கஜானா காலி.. சர்வதேச சந்தையில் எரிபொருள் வாங்க பணமில்லாமல் போனது.”
இதோடு இன்னொரு முக்கியக்காரணம், அங்கு திடீரென்று இயற்கை விவசாயம் என்று கூறி செயற்கை உரத்துக்குத் தடை விதித்தது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக மாற வேண்டியது, திடீரென்று நடந்ததால் சிக்கலாகி விட்டது.
“கள்ளச்சாராயம் குடித்து விட்டு செத்தவனுக்கு 10 லட்ச ரூபாய் அரசாங்க பணத்தை கொடுத்தால், இன்னும் 100 / 1000 / 10000 பேர் தைரியமா குடிச்சிட்டு செத்து போவான்.. செத்து போனவன் என்ன தியாகியா???”
இதையெல்லாம் சகிக்க வேண்டியதாக உள்ளது.
இவர்களே வெட்டி வைத்துத் திறந்து வைத்த குழியில் விழுந்து இறந்த குழந்தைக்கு அரசு 5 லட்சம் பணம் கொடுக்கிறது.
இது போதாது என்று அக்குழந்தை பெற்றோர் அரசு வேலை கேட்கிறார்கள்.
தற்போதெல்லாம் பொறுமையாக இருப்பதை அதிகம் கற்று வருகிறேன். இல்லையென்றால் இதையெல்லாம் பார்த்து, படித்து மன உளைச்சலில் ஏதாவது ஆகிடும்.