திரைப்படங்களின் மீதான விமர்சனங்களால் வசூல் பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு திரைத்துறையினரால் முன்வைக்கப்படுகிறது. Image Credit
அது எதனால் என்று பார்ப்போம்
விமர்சனங்கள்
முன்பு குமுதம், விகடன், தினத்தந்தி போன்ற அச்சு ஊடகங்களில் வரும் விமர்சனங்களைப் பார்த்தும், மற்றவர்கள் கூறுவதை வைத்தும் படம் பார்த்தார்கள்.
அப்போதைய திரைப்படங்கள் கூற வரும் கருத்துகள் இலைமறை காயாக இருக்கும், சொல்ல வரும் கருத்து மற்றவர்களைக் காயப்படுத்தாமல் கூறப்படும்.
அல்லது நகைச்சுவையையும் இணைப்பதால், மாற்றுக்கருத்து இருந்தாலும் பெரியளவில் சர்ச்சை ஆகவில்லை.
அதை விட எந்த நடிகரும் திரைத்துறை சாராத விஷயங்களில் கருத்தைத் தெரிவிக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், பெரியளவில் கவனிக்கப்படவில்லை.
எனவே, ஒரே நேரத்தில் 7 நாயகர்களின் படம் வெளியானாலும் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் ஓடியது.
நடிகர்களின் கருத்து
தற்போது நடிகர்கள் அரசியல் ரீதியாகக் கருத்து கூறுவதை அதிகரித்து விட்டனர். இதற்குச் சமூகத்தளங்கள் முக்கியக்காரணமாக உள்ளது.
முன்பு ஊடகங்கள் கேட்டாலே கருத்து கூற முடியும். எனவே, வாய்ப்புகள் குறைவாக இருந்தது ஆனால், தற்போது நினைத்தவுடன் மொபைலில் எதையும் பகிர முடியும்
முன்பு திராவிடக் கட்சிகள் மட்டுமே இருந்தது ஆனால், தற்போது வலது சாரி ஆதரவாளர்களின் ஆதிக்கமும் அதிகரித்து விட்டது.
எனவே, திராவிட ஆதரவாளர், இடது சாரி ஆதரவாளர், தேசிய ஆதரவாளர் என்று நிலை எடுக்கப்படுகிறது.
நடுநிலையாக இருந்தாலோ, எதிலும் கருத்து கூறாமல் இருந்தாலோ அவர்கள் படங்கள் பாதிக்கப்படுவதில்லை ஆனால், ஒரு சார்பாகக் கூறினால் அதற்கான விளைவுகள் உள்ளது.
திராவிடச் சித்தாந்தம்
விரும்பியோ விரும்பாமலோ தமிழ் திரையுலகில் பலரும் திராவிடச் சித்தாந்தம் அல்லது திமுக ஆதரவு நிலையில் இருக்கிறார்கள்.
அவர்களுக்குக் கிடைக்கும் ஆதாயத்துக்காக ஆதரவாக இருக்கலாம் அல்லது உண்மையிலேயே அவர்கள் சித்தாந்தம் பிடித்து ஆதரவாக இருக்கலாம்.
இவர்கள் பிடித்து இருப்பதோடு நிறுத்தி இருந்தால் பிரச்சனையில்லை ஆனால், கருத்தும் கூறி விடுகிறார்கள்.
இது சமூகவலைத்தளக் காலம். எனவே, அதற்குண்டான எதிர்வினைகள் கடுமையாக இருக்கிறது. எனவே, இவை அவர்களின் படங்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.
யார் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்?
சூர்யா
அதிமுக ஆட்சியின் போது கடுமையாக அதிமுக அரசை விமர்சித்த சூர்யா, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அப்படியே அமைதியாகி விட்டார்.
இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு அவர் பசங்களை CBSE பள்ளியில் சேர்க்கிறார், இவரும் மும்பைக்குக் குடிபெயர்ந்து விட்டார். NEET க்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
சூரரைப் போற்று படத்தில் கதை நாயகனே பிராமணர் ஆனால், பிராமணர்களை இழிவுபடுத்தி காட்சியிருக்கும். இதனால் பிராமணர்கள் கடுப்பில் உள்ளார்கள்.
திருப்பதியை பற்றி சர்ச்சையாக கருத்துக்கூறி சூர்யா அப்பா சிவக்குமார் விமர்சனத்துக்குள்ளனார்.
ஜோதிகா
ஜோதிகா சம்பந்தமே இல்லாமல், ‘கோவிலுக்குச் செலவு செய்யாதீர்கள், மருத்துவமனைக்கு உதவி செய்யுங்கள்‘ என்றார்.
ஆனால், உண்மையில் அரசு தான் கோவில் பணத்தை எடுத்துச் செலவு செய்துகொண்டுள்ளது.
சூர்யா ஜோதிகா செய்யும் செலவுகளுக்கு ஏன் இதை மருத்துவமனைக்குக் கொடுக்கலாமே என்று கேட்டு வலது சாரி ஆதரவாளர்கள் வருகிறார்கள்.
ஜோதிகா மன்னிப்பு கேட்டாலும் இப்பிரச்சனை நிற்காது. சூர்யா எதிர்காலப்படங்கள் சிக்கலையே சந்திக்கும்.
தங்களால் தான் கங்குவா படம் ஓடவில்லை என்று வலது சாரி ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள், அது உண்மையல்ல.
படமே சரியில்லை அதே போல சூர்யா, ஞானவேல் ராஜா போன்றோரின் அவசியமற்ற பேச்சுகள். எனவே, மற்றவர்களோடு இவர்களும் சேர்ந்து கொண்டார்கள் அவ்வளவே!
படம் நன்றாக இருந்தால், யார் படமாக இருந்தாலும் ஓடும், பேசியதால் வசூலில் கொஞ்சம் பாதிப்பு இருக்கலாம்.
RJ பாலாஜி
RJ வாக இருந்ததாலோ என்னவோ வாய்க்கு வந்ததை பேசுவார்.
இவர் மூக்குத்தி அம்மன் படத்தில் இந்து கடவுளைக் கிண்டல் செய்து விட்டு, கிறித்துவ மதமாற்றக் காட்சிகளை எதிர்ப்பு காரணமாக நீக்கி விட்டார்.
ரஜினியை கிண்டல் செய்ததால், ரஜினி ரசிகர்களும் இவர் மேல் காண்டில் உள்ளார்கள். இவர் மன்னிப்பு கேட்டுவிட்டாலும், ரசிகர்கள் விடுவதாக இல்லை.
வலது சாரி ஆதரவாளர்களும் இந்து கடவுளைக் கிண்டல் செய்தார் என்று குறி வைக்கிறார்கள்.
RJ வாக இருந்த போது படத்தைக் கண்டபடி விமர்சித்து விட்டு, தற்போது படத்தை அப்படி விமர்சிக்காதீர்கள் என்று கூறுகிறார்.
ஏற்றுக்கொள்வார்களா?! இவர் பேசிய பழைய காணொளியைப் போட்டு டரியல் ஆக்குகிறார்கள்.
இவர் சொர்க்கவாசல் படம் நன்றாக உள்ளது என்று சிலர் கூறினாலும், மழை காரணமாக கூட்டமில்லை. இதை வைத்தே மீதிப்படத்தையும் முடித்து விட்டார்கள்.
RJ பாலாஜி அவரது வாய்க்குப் பூட்டு போட வேண்டும், இல்லையேல் சிக்கலே.
இயக்குநர்கள்
ரஞ்சித், மாரி செல்வராஜ், மோகன்
ரஞ்சித், மாரி சாதிப்படங்களை எடுப்பதால், ஆதிக்க சாதியினரிடம் எதிர்ப்பு அதோடு திராவிடச் சிந்தனையில் படம் எடுப்பதால், வலது சாரி ஆதரவாளர்கள் எதிர்ப்பு.
ஆதிக்க சாதி ஆதரவாக மோகன் எடுப்பதால், திராவிட, ரஞ்சித், மாரி ஆதரவாளர்கள் எதிர்ப்பு.
வெற்றிமாறன்
இந்த மனுசன் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் அற்புதமான படங்களை எடுத்துக்கொண்டு இருந்தார், யார் கண் பட்டதோ இடது சாரி ஆதரவாளர்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டார்.
இதன் பிறகு இவரது பேச்சும் மாறியது, படம் கூற வரும் கருத்தும் மாறி விட்டது. விடுதலைக்கு முன் விடுதலைக்குப் பின் என்று இவரைப் பிரிக்கலாம்.
அசுரன் படத்திலேயே சாதி பிரச்சனையைக் கொண்டு வந்தாலும், அதில் திணிப்பாக இல்லை. இயல்பான காட்சிகளாக இருந்தது.
ஆனால், விடுதலையில் இடது சாரி கருத்துகளுக்காகவே படம் எடுத்தது போல இருந்தது. அதை விடுதலை 2 ல் உறுதிப்படுத்தி விட்டார்.
‘நாங்க தண்டவாளத்தில் தலையை வைக்கவில்லையென்றால், நீங்க படித்து இருக்க முடியாது‘ என்று வசனம் வைக்க, அதை வைத்துப் பலரும் மீம் போட்டு வருகிறார்கள்.
சிறந்த இயக்குநர் இப்படி மாறி விட்டாரே என்று மிக வருத்தமாக உள்ளது.
ரஜினி, கமல், அஜித்
அரசியல் கருத்தை அரசியலுக்கு வருவதாக இருந்த போது அதிமுக ஆட்சியில் ரஜினி கூறி வந்தார், திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் அரசியலிலிருந்து விலகிக்கொண்டார்.
ஆனால், தற்போது திமுக ஆட்சியில் ஏன் கூறவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டு வந்தது ஆனால், நாளடைவில் அதன் தாக்கம் குறைந்து விட்டது.
தற்போது எந்தக்கருத்தையும் தெரிவிப்பதில்லை, No comments கூறி தவிர்த்து விடுகிறார்.
ஆனால், ரஞ்சித், ஞானவேல் போன்ற இடது சாரி ஆதரவாளர்களின் இயக்கங்களில் நடிப்பது, சன் தயாரிப்பில் நடிப்பது வலது சாரி ஆதரவாளர்களைக் கோப்படுத்துகிறது.
தலைவர் ரசிகன் என்பதால் கடந்து செல்கிறேன் ஆனால், மற்றவர்கள் கடந்து செல்ல மாட்டார்களே! எனவே, விமர்சனங்களும் தவிர்க்க முடியாதது.
இதோடு விஜய் ரசிகர்களின் எதிர்ப்பு. இவை கமல் படங்களுக்கும் பொருந்தும்.
அஜித் எதுவும் பேசுவதில்லை ஆனால், அஜித் விஜய் ரசிகர்களுக்கு இடையே உள்ள பிரச்சனையால் அஜித் படங்களுக்குச் சிக்கல் வருகிறது
விஜய்
விஜய் மிகப்பெரிய மாஃபியா வைத்துள்ளார். எனவே, இவர்களால் பாதிக்கப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் விஜய் படங்கள் வரும் போது திருப்பிக்கொடுக்கிறார்கள்.
அதோடு இவர் படங்களில் பேசும் கருத்துகள் வலது சாரி ஆதரவாளர்களைக் கடுப்படிகிறது.
தற்போது அரசியலுக்கும் வந்து விட்டதால், இதுவரை திரையுலகில் விமர்சித்து வந்தவர்கள் இனி அரசியலில் அவரை விமர்சிப்பார்கள்.
ஏற்கனவே ஆரம்பித்து விட்டார்கள்.
இவர்களோடு விஜய் சேதுபதி, சித்தார்த் உட்படச் சிலரும் பட்டியலில் உள்ளனர்.
KnockOut
இவர்களை போன்றவர்களின் படங்கள் KnockOut போல விமர்சிக்க வாய்ப்பே கொடுக்காதபடி வெற்றி பெற வேண்டும். விக்ரம், ஜெயிலர், மகாராஜா போன்று.
இல்லையென்றால், நன்றாக ஓடினாலும் ஓடாத மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள். விமர்சிக்க வாய்ப்புக்கிடைத்தால் படத்தைக் காலி செய்து விடுவார்கள்.
மேற்கூறிய விக்ரம், ஜெயிலர், மகாராஜா படங்கள் எந்தச் சித்தாந்தத்தையும் முன்னிறுத்தி எடுக்கப்படாத இயல்பான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை நடிகர்கள் உணர வேண்டும். எனவே, நடிப்பதோடு நிறுத்திக்கொண்டால் அவர்களின் வாழ்க்கைக்கு நல்லது, இது சமூகவலைத்தளக் காலம்.
கருத்து கூறுவேன் என்று ஒரு பக்கமாக பேச ஆரம்பித்தால், அதற்குண்டான விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. தனிப்பட்ட முறையில் விமர்சனங்களால் ஒரு படம் ஓடுவது தடை படுகிறது என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.. காரணம் அதே விமர்சனங்கள் தான் சில படத்தின் ஓட்டத்திற்கும் காரணமாகிறது..
இது போன்ற சமயங்களில் தயாரிப்பாளரோ / இயக்குனரோ / திரையரங்கு உரிமையாளர்களோ / நடிகரோ வாயை திறப்பதில்லை.. நிறைய உதாரணம் சொல்லலாம். நடிகர்களின் வேலை நடிப்பது.. அவர்களின் வேலையை சரியாக செய்தால் யார்க்கும் எந்த பிரச்சனையும் இல்லை..
300 / 400 கோடியில் படம் எடுத்துவிட்டு, படம் சரியாக போகாத போது கூப்பாடு போடுவது நியாயமா?? எந்த படமெடுத்தாலும் ஒரு நடிகருக்கான சந்தை மதிப்பு என்ன என்று தெரிந்து தானே தயாரிப்பாளர்கள் படத்தை எடுக்கிறார்கள்.. அதையும் மீறி பணத்தை முதலீடு செய்து விட்டு, படம் சரியாக போகாத போது தேவையில்லாத காரணங்களை கூறுவது எவ்வகையில் நியாயம்.
தற்போதைய சூழலில் படங்கள் சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்யப்படும் போது, உண்மையில் படத்தில் விஷியம் இருந்தால் படத்தை திரையில் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.. இது தான் உண்மை.. திரைத்துறையில் உள்ளவர்கள் இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்..
நான் முன்பு நினைத்தது, கொரோன காலகட்டத்திற்கு பின் திரைத்துறை கடினம் என்று, ஆனால் திரைத்துறை மிக பெரிய வளர்ச்சியை தற்போது அடைந்து உள்ளது என்பது தான் நிஜம்.. விமர்ச்சிப்பவர்களை கண்டு கொள்ளாமல் நல்ல படங்களை இயக்குனர்கள் எடுத்தால், மக்கள் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் படத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்கள்..
@யாசின்
“விமர்சனங்களால் ஒரு படம் ஓடுவது தடை படுகிறது என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.. காரணம் அதே விமர்சனங்கள் தான் சில படத்தின் ஓட்டத்திற்கும் காரணமாகிறது..”
ஏற்றுக்கொள்கிறேன் யாசின்.
ஒரு படம் நன்றாக இருந்தால் விமர்சனங்கள் இருந்தாலும் ஓடும், அதே போல ஓடாத படம் கூடச் சர்ச்சையால் விளம்பரம் கிடைத்து ஓடி விடும்.
“நடிகர்களின் வேலை நடிப்பது.. அவர்களின் வேலையை சரியாக செய்தால் யார்க்கும் எந்த பிரச்சனையும் இல்லை.”
அதோட நிறுத்திக்கணும்.
“எந்த படமெடுத்தாலும் ஒரு நடிகருக்கான சந்தை மதிப்பு என்ன என்று தெரிந்து தானே தயாரிப்பாளர்கள் படத்தை எடுக்கிறார்கள்.. அதையும் மீறி பணத்தை முதலீடு செய்து விட்டு, படம் சரியாக போகாத போது தேவையில்லாத காரணங்களை கூறுவது எவ்வகையில் நியாயம்.”
பலரும் அதிக முதலீடு, செலவு செய்கிறார்கள் பின்னர் புலம்புகிறார்கள்.
தயாரிப்பாளர்களின் பேராசையே தமிழ் திரையுலகம் மோசமானதுக்கு காரணம்.
“படத்தில் விஷியம் இருந்தால் படத்தை திரையில் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.”
மகாராஜா நல்ல எடுத்துக்காட்டு.
“கொரோன காலகட்டத்திற்கு பின் திரைத்துறை கடினம் என்று”
நானும் நினைத்துள்ளேன். OTT காலம் என்று நினைத்தேன் ஆனால், இரண்டுக்குமே வரவேற்பு உள்ளது.
“நல்ல படங்களை இயக்குனர்கள் எடுத்தால், மக்கள் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் படத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்கள்’
உண்மையே . திரைக்கதை சிறப்பாக இருந்தால், உறுதியாக வெற்றி பெறும்.