அரவிந்தசாமியுடனான கோபியின் நேர்முகத்தில், அரவிந்தசாமி கூறிய சுதந்திரம் குறித்த கட்டுரையே இது. Image Credit
சுதந்திரம்
சுதந்திரத்துக்கான அளவுகோல் கிடையாது, நபருக்கு நபர் மாறுபடும்.
பணம் இருந்தால், பெரிய வீடு, விலையுயர்ந்த தொலைப்பேசி, வாகனம் இருந்தால், வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செய்தால், கடன் இல்லையென்றால் என்று ஒவ்வொருவருக்கான அளவுகோல் மாறிக்கொண்டே இருக்கும்.
இவையல்லாமல், மற்றவர்களைப் பார்த்து அதே போல இருக்க, வாழ நினைப்பவர்களுக்கு அதுவொரு சுதந்திரம்.
நினைத்ததை வாங்குவது, எந்தச் செலவு செய்ய வேண்டும் என்றாலும் பணம் தயாராக இருப்பது, நினைத்ததைச் செய்ய முடிவது சுதந்திரம் என்கிறார்கள்.
அரவிந்தசாமி
அரவிந்தசாமி இதுகுறித்த அவருடைய எண்ணத்தைக் கூறியது சிறப்பாக இருந்தது.
மற்றவர்கள் தன்னை பற்றி உயர்வாக நினைப்பதற்காகச் செலவுகளைச் செய்வது சுதந்திரம் அல்ல மாறாகத் தேவையுள்ளது, பொருளாதார ரீதியாக அதைச் செய்ய முடியும் என்றால் செய்யலாம்.
சுருக்கமாக, விலை உயர்ந்தது மற்றும் மற்றவர்கள் நம்மை உயர்வாக எண்ண வேண்டும் என்பது என்றும் சுதந்திரமாகாது என்பதைக்கூறினார்.
இவர் கூறியது ஏற்புடையதாக இருந்ததாலே இக்கட்டுரை.
ஆசைகள்
என் 20’s வயதுகளில் விலையுயர்ந்த சட்டை எடுத்துள்ளேன், அதே போலப் பாண்டிபஜாரில் உள்ள தெருவோர கடையிலும் எடுத்துள்ளேன்.
ஆனால், எதுவுமே மற்றவர்களுக்காக இல்லை, எனக்குப்பிடித்தது வாங்கினேன் என்பதாகவே இருந்தது, என் நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும்.
தற்போது எதற்கு விலையுயர்ந்த உடை எடுக்க வேண்டும்? வீண் தானே என்று தோன்றி தவிர்த்து விடுகிறேன், காரணம், அனுபவம். இதுவும் மற்றவர்களுக்காக எடுத்த முடிவல்ல, எனக்கே தோன்றி மாற்றிக்கொண்டது.
பலருக்கும் பல்வேறு கனவுகள், விருப்பங்கள் இருக்கும், தவறில்லை.
எனக்குப் பெரியளவில் ஆசைகளே இல்லை. அரவிந்தசாமி கூறிய பிறகே யோசித்துப்பார்த்தேன், ஆமா! எனக்கு என்ன ஆசை என்று! 🙂 .
ஊருக்கு (கோபி) செல்ல வேண்டும், அங்கேயே வாழ்க்கையைத் தொடர வேண்டும். எனக்கு இருக்கும் ஒரே மிகப்பெரிய ஆசை இது மட்டும் தான்.
மற்றபடி மற்ற பாடல் கேட்பது, நண்பர்களுடன் பேசுவது, பெரிய தொலைக்காட்சியில் திரைப்படம் பார்ப்பது, வடமாநிலங்கள் பயணிப்பது என்ற ஆசைகள் தான்.
மேற்கூறியவை பல தற்போதே நடந்து கொண்டு இருப்பது தான். எனவே, இவை பிரச்சனைகள் இல்லாமல் தொடர்ந்தாலே மிகப்பெரிய சுதந்திரமாகக் கருதுவேன்.
எல்லை இல்லை
பலரும் சுதந்திரமாக இருக்க எண்ணி ஆசையைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அரவிந்தசாமி கூறியது போல, அவர்கள் வைத்த பொறியில் (TRAP) அவர்களே மாட்டிக்கொள்கிறார்கள்.
இறுதியில் என்ன சாதித்தார்கள் என்று பார்த்தால், நினைத்ததை அடைய வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டு இருந்து இருப்பார்கள்.
பொறியில் சிக்கி இழந்ததை, இழக்கப்போவதை அறியாமல் சுதந்திரமாக இருப்பதாகக் கற்பனையில் இருப்பார்கள். இதன் பெயர் சுதந்திரம் அல்ல.
இறுதியில் அனுபவிக்கவும் முடியாமல், சுதந்திரத்தையும் தொலைத்து இருப்பார்கள்.
சுதந்திரம் என்பது மற்றவர்களுக்காகத் தன்னை மாற்றிக்கொள்ளாமல், தனக்கு எது சரி, பொருத்தம், தேவை, முடியும் என்பதைப் பொறுத்துத் தொடர்வதாகும்.
வாய்ப்புக்கிடைத்தால் அரவிந்தசாமி நேர்முகம் பாருங்கள். இதோடு பல்வேறு கருத்துகளையும் கூறி இருந்தார், எதார்த்தமாக இருந்தது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, இந்த நேர்காணலை நானும் பார்த்தேன். சுதந்திரம் என்பது அவரவர் பார்வையில் மாறு படக்கூடியது.. நீங்கள் குறிப்பிட்டது போல் நமக்கு சரி என்பது தான் சரி.. அடுத்தவர் பார்வைக்காக அதை மாற்றவேண்டிய அவசியம் இல்லை..
கல்லூரி பருவத்தில் ரப் & டப் ஜீன்ஸ் மீதும், ஸீரோ ஷர்ட் மீதும் அதீத ஆர்வம், எப்படியாவது வாங்கி உடுத்திவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. 5 ஆண்டுகள் கல்லூரியில் படித்தும் கடைசிவரை என்னுடைய ஆசை நிறைவேறாமல் போனது.. அதன் பிறகு வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கும் போது அந்த ஆசை மீண்டும் வரவே இல்லை.. ஆனால் இன்றும் எப்போதாவது துணி வாங்க கடைக்கு செல்லும் போது ஸீரோ பிராண்ட் ஷர்ட் ஐ தொட்டு பார்ப்பதுண்டு..
மனைவிக்கும் எனக்குமான உரையாடலில் பெரும்பாலும், எனக்கென்று எதுவும் நான் விருப்பமாக செய்து கொள்ள மட்டுகிறேன் என்ற குற்றச்சாட்டு திருமணம் முடிந்த நாள் முதல் இன்று வரை இருக்கிறது.. அதற்கு என்னுடைய பதில் ஒன்றே ஒன்று தான்.. முன்பு விருப்பம் இருந்தது, ஆனால் பணம் இல்லை.. தற்போது அதை வாங்கும் அளவிற்கு பணம் இருக்கிறது.. ஆனால் விருப்பம் இல்லை. இது தான் உண்மை.
சொல்லாததும் உண்மை புத்தகத்தில் ஒரு நிகழ்வு வரும்.. சில நாட்களில் இரவு நேரம் தெருவோர கடைகள் இருக்கும், வீதியில் நடந்து செல்லும் போது வயிறு முழுக்க பசி இருக்கும்.. உணவின் வாசம் பசியை இன்னும் அதிகம் தூண்டும்.. ஆனால் பாக்கெட்டில் பத்து பைசா பணம் இருக்காது.. பசியின் வலியை பொறுத்து கொண்டு வீதியை கடந்து செல்வேன்..
அதே சமயம் சில நாட்களில் பின்னிரவில் அதே வீதியில் நடக்கும் போது, பாக்கெட் முழுவதும் பணமிருக்கும், இரவு நேரமாகி போனதால் ஒரு கடையும் திறந்து இருக்காது.. அதே பசி மீதும் வயிறு முழுவதும் நிரம்பி இருக்கும்.. இந்த நிகழ்வை ஒரு சாதாரண நிகழ்வாக என்னால் கடந்து போக முடியவில்லை.. காரணம் இந்த சூழலை நான் தனிப்பட்ட முறையில் என் வாழ்நாளில் அனுபவித்து இருக்கிறேன்..
@யாசின்
“கல்லூரி பருவத்தில் ரப் & டப் ஜீன்ஸ் மீதும், ஸீரோ ஷர்ட் மீதும் அதீத ஆர்வம், எப்படியாவது வாங்கி உடுத்திவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது.”
🙂 ஆமாம் அப்போது இந்த ஜீன்ஸ் பிரபலமானது.
“முன்பு விருப்பம் இருந்தது, ஆனால் பணம் இல்லை.. தற்போது அதை வாங்கும் அளவிற்கு பணம் இருக்கிறது.. ஆனால் விருப்பம் இல்லை.”
சரியா கூறினீங்க . . இது போன்று எனக்கும் தோன்றியுள்ளது . இன்னொன்று தற்போது அனாவசியம் அல்லது வீண் என்று தோன்றுகிறது.
“சொல்லாததும் உண்மை புத்தகத்தில் ஒரு நிகழ்வு வரும்.”
நீங்க இதைச் சொன்னதும் சொல்லாததும் உண்மை பற்றி என் தளத்தில் தேடிப்பார்த்தால் பல இடங்களில் இப்புத்தகத்தை குறிப்பிட்டு இருக்கீங்க!
எப்படி நினைவு வைத்து இருக்கீங்க . . எனக்கு படித்த புத்தகம் சில மட்டுமே (அதுவும் அனைத்தும் அல்ல) நினைவு இருக்கும்.
நீங்கள் பலவற்றை நினைவு வைத்துக் கூறுவதை கேட்கும் போது பொறாமையாக உள்ளது. கூகுள் அல்லது மொபைல் பயன்பட்டால் நினைவுத்திறன் எனக்கு குறைந்து விட்டது.
சில நேரங்களில் பலர் பெயரே நினைவுக்கு வர மாட்டேங்குது.
“இந்த சூழலை நான் தனிப்பட்ட முறையில் என் வாழ்நாளில் அனுபவித்து இருக்கிறேன்..”
70/80 களில் பிறந்தவர்களுக்கு இது போன்ற அனுபவம் இருக்க வாய்ப்புள்ளது. இதே போன்று இல்லையென்றாலும், இதையொத்த நிகழ்வுகள்.
கிரி லப்பர் பந்து படம் பாருங்க ரொம்ப சூப்பரா இருக்கு. இந்த வருஷம் வந்ததுலயே இது ஒரு பெஸ்ட் மூவி. 2.30 மணி நேரம் போவதே தெரியாது. அவ்வளவு சூப்பரா திரைக்கதை எழுதி எடுத்து இருக்காங்க. ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷ் மாமனார் மருமகன் ஈகோ தான் படமே. cricket விளையாட்ட வெச்சு சூப்பரா எடுத்து இருக்காங்க. குழந்தைகளோடு பார்க்கலாம். எல்லாருக்கும் பிடிக்கும்
சனிக்கிழமை செல்வதாக இருந்தது செல்ல முடியவில்லை. இந்த வாரம் செல்கிறேன்.