ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் கூறி இருந்த பணிகளை எல்லாம் ஆரம்பித்து விட்டார். அதில் ஒன்று கள்ளக்குடியேறிகளை வெளியேற்றுவது. Image Credit
கள்ளக்குடியேறிகள்
எந்தவொரு நாட்டுக்கும் கள்ளக்குடியேறிகள் என்பது பிரச்சனையான ஒரு விஷயம்.
அவர்கள் இருக்கும் நாட்டில் பிரச்சனை என்பதால், மேம்பட்ட வாழ்க்கை தேடி அகதிகளாக அல்லது திருட்டுத்தனமாக இன்னொரு நாட்டுக்குச் செல்கிறார்கள்.
பிரச்சனை இவர்கள் இன்னொரு நாட்டுக்கு வருவது என்றாலும், உண்மையான பிரச்சனை இவர்களால் ஏற்படும் சட்ட ஒழுங்குச் சீர்கேடு தான்.
அதோடு இன்னொரு நாட்டிலிருந்து வருபவர்கள் அவர்களுடைய சட்ட திட்டங்கள், வாழ்க்கை முறைகள், பழகும் முறை, பேசுவது, பொது இடங்களில் நடந்து கொள்வது என்று அனைத்துமே மாறி இருக்கும்.
எனவே, வந்த நாட்டு மக்களுடன் இணைந்து செல்ல முடியாது.
தற்போது இப்பிரச்சனை தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் உள்ளது.
ட்ரம்ப்
ட்ரம்ப் ஒரு தேசியவாதி. நாட்டை நேசிக்கும் வலது சாரி நபர்.
வலது சாரி நபர் என்றாலே அவர்கள் நாட்டை நேசிப்பவர்களாகவும், நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்களாகவும் இருப்பார்கள்.
எனவே, நாட்டுக்கு, வளர்ச்சிக்கு எதிராக நடைபெறும் செயல்களின் மீது இயல்பாகவே கோபம் இருக்கும், ஆட்சிக்கு வந்தால் இவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைப்பது இயல்பு.
ஆகவே, ஆட்சிக்கு வந்தவுடன் நேரத்தை வீணாக்காமல் 80+ ஆவணங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார்.
அதில் முக்கியமானதாக ட்ரம்ப் கூறி வந்தது கள்ளக்குடியேறிகளை வெளியேற்றுவது.
ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் ஆரம்பிப்பார் என்று தெரியும் ஆனால், இவ்வளவு வேகமாக, தீவிரமாக செயல்படுத்துவார் என்பது தெரியாது.
எதிர்ப்பு தெரிவித்த கொலம்பியாக்கு நிதியை நிறுத்துவேன், வரியைக் கூட்டுவேன் என்றதும் வழிக்கு வந்து விட்டார்கள்.
இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாகச் சென்ற 18,000 பேரை இந்தியா திரும்பப்பெற்றுக்கொள்வதாக அறிவித்து விட்டது.
18,000 குறைவு என்று கருதுகிறேன், பின்னர் கூடுதலாகலாம்.
நாடு கடத்தும் செயல் எளிதானதல்ல, பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் அது பற்றி ட்ரம்ப் கவலைப்பட்டது போலத் தெரியவில்லை.
குற்றவாளிகள்
இவ்வாறு வந்தவர்கள் பலர் குற்றப்பின்னணி கொண்டவர்கள், குற்றத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவர்கள்.
இவர்களோடு காசா பிரச்சனையில் அமெரிக்காவுக்கு எதிராக, அமெரிக்கக் கொடியை எரித்துப் போராட்டம் செய்தவர்கள், அமெரிக்காவுக்கு எதிராகப் பேசிய அனைத்து மாணவர்களையும் வெளியேற்றுகிறார்கள்.
படிக்க வந்த நாட்டில் எப்படி இது போல நடக்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது!
பிழைக்க வந்த நாட்டிலும், படிக்க வந்த நாட்டிலும் வந்த வேலை என்னவோ அதை மட்டும் பார்த்துச்செல்வது நல்லது. அதைச் செய்யாமல், மேற்கூறிய செயல்களில் ஈடுபடுபவர்கள் இப்பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது தான்.
தற்போது அழுது ஒன்றும் ஆகப்போவதில்லை.
ஒன்று பிறந்த நாட்டுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் அல்லது சென்ற நாட்டுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். இவர்கள் எங்குமே நேர்மையாக இருக்க மாட்டார்கள்.
வேறு நாட்டிலிருந்து வந்து அமெரிக்காவில் போராடி, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்தவர்களை வெளியேற்றுவதை முழு மனதோடு ஆதரிக்கிறேன்.
மாற்றங்கள்
நாட்டைச் சீரழிக்கும் இடது சாரிகளின் WOKEISM க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
WOKEISM தடை செய்யப்பட வேண்டியது தான் என்றாலும், ஆண், பெண் இரு இனம் மட்டுமே அதிகாரப்பூர்வமான இனமாக அறிவித்ததால் திருநங்கைகள் பிரச்சனைக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களுக்கு ஒரு வழி செய்து இருக்க வேண்டும், இது நியாயமானது இல்லை.
அரசுப்பணிகளில் பிரச்சனை செய்தவர்கள், தேவையற்று இருப்பவர்கள் என்று பலரையும் விடுவிக்கப்போகிறார்கள்.
2025 பிப்ரவரி 6 முதல் அரசு ஊழியர்களுக்கு WFH கிடையாது, மீறுபவர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவர்.
இதுவரை பல்வேறு நாடுகளுக்கு வாரி வழங்கிய நிதி உதவியை உடனடியாக 6 மாதங்களுக்கு நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்களாதேஷ் நாடும் ஒன்றாகும்.
சீனாவின் கைப்பாவையான உலக சுகாதார அமைப்பில் (WHO) இருந்து அமெரிக்கா விலகி விட்டது. இதன் இன்னொரு அர்த்தம் நிதி உதவியும் நிறுத்தப்பட்டது.
இதுவரை அமெரிக்காவிடம் பணம் வாங்கி போரை வெட்டியாகத் தொடர்ந்து கொண்டு இருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிக்கு சிக்கலாகியுள்ளது.
பைடன் அரசு
பைடன் செய்த செயல்களைப்பார்த்தால், வேறு நாட்டினரான எனக்கே கோபம் வருகிறது. அங்குள்ள வலது சாரிகளுக்குக் கோபம் வராமல் இருந்தால் தான் வியப்பாக வேண்டும்.
அமெரிக்க மக்களின் பணத்தை எவ்வளவு வீணடிக்க முடியுமோ அவ்வளவையும் கண்மூடித்தனமாக பைடன் செய்து கொண்டு இருந்தார்.
தேவையற்று ஏராளமான நபர்களை அரசு பணியில் சேர்த்து, அதிக சம்பளம் கொடுத்து வந்துள்ளார்கள். பலருக்கு எந்த உருப்படியான வேலையும் இல்லை.
உக்ரைனுக்கு பைடன் நிதி கொடுத்து, அதில் குறிப்பிடத் தக்க பணத்தை ஜெலன்ஸ்கி திரும்பப் பைடன் மகன் Hunter க்கு அனுப்பியதாகக் குற்றச்சாட்டு உண்டு.
வீணடிக்கப்பட்ட நிதி
காஸா க்கு காண்டம் அனுப்ப ஒதுங்கியிருந்த தொகை $50 மில்லியன் நிறுத்தப்பட்டுள்ளது. காண்டம்க்கு இவ்வளவு நிதியா! என்று பலரும் திகைத்துள்ளனர்.
வட்டியில்லாத கடனாக, வீடு கட்ட $1,50,000 யைக் கள்ளக்குடியேறிகளுக்கு கலிபோர்னியா மாநிலம் கொடுத்தது என்றால் நம்ப முடிகிறதா?
வீடில்லாத அமெரிக்க மக்களுக்கு எதுவுமில்லை ஆனால், கள்ளக்குடியேறிகளுக்குச் செலவுக்குப் பணம், கடன், தங்க விடுதி என்று அள்ளிக்கொடுத்துள்ளார்கள்.
சில இடங்களில் வாக்களிக்க அடையாள அட்டை கூட இல்லை! எவரும் வாக்களிக்கலாம். கலிபோர்னியாவில் இடது சாரி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வரும் கள்ளக்குடியேறிகளை வாக்குக்காக பயன்படுத்துவதே திட்டம். மேற்குவங்க மமதா செய்ததற்கும் பைடன் செய்ததற்கும் பெரிய வித்தியாசமில்லை.
DOGE
இடது சாரிகள் கையில் நாடிருந்தால், எப்படி நாசமாகப்போகும் என்பதற்கு அமெரிக்கா சிறந்த எடுத்துக்காட்டு.
அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்ட அமைப்பு DOGE (Department of Government Efficiency).
‘நிர்வாக, நிதி சீர்திருத்தங்களால் ஒரு நாளைக்கு 1 பில்லியன் பணம் சேமிக்கப்படுவதாகவும், விரைவில் தினமும் 3 பில்லியன் என்ற அளவை எட்டும்‘
என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இந்தியா
18,0000 கள்ளக்குடியேறிகளை இந்தியா எந்த மறுப்பும் கூறாமல், பிரச்சனையும் செய்யாமல், எடுத்துக்கொள்வதாகக் கூறிய முதல் நாடாகும்.
பலரும் இந்தியா பயந்து விட்டதாகக் கூறி வருகிறார்கள், உண்மை அதுவல்ல.
பங்களாதேஷ், ரோஹிங்கியா கள்ளக்குடியேறிகள் மிகப்பெரிய தலைவலியாக உள்ளார்கள். இவர்களால் பெருமளவில் குற்றச்செயல்கள் நடைபெறுகிறது.
போராட்டத்துக்கு இவர்களை அழைத்து இடது சாரிகள் பிரச்சனை செய்கிறார்கள்.
இதோடு பொய் சான்றிதழ்களால் இந்திய குடிமக்களின் நிதி இவர்களுக்குச் செலவழிக்கப்படுகிறது, வேலை வாய்ப்பையும் பறிக்கிறார்கள்.
அதோடு அடிப்படைவாதிகளோடு இணைந்து பிரச்சனைகளில் ஈடுபட்டு மதப்பிரச்சனையை உருவாக்க இவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
புத்திசாலித்தனமான செயல்
இதையொட்டி இந்தியாவிலிருந்த கள்ளக்குடியேறி ரோஹிங்கியா, பங்களாதேஷிகளை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மிக மெதுவாக நடப்பதற்குக் காரணமாக கருதுவது, வழக்கம் போல உச்சநீதிமன்றம் எதையாவது கூறி தடை விதிக்கலாம்.
எடுத்தவுடன் பெரியளவில் வெளியேற்றம் செய்தால், இடது சாரிகள் கூப்பாடு போட்டு, சர்ச்சையாக்கி இதற்குத் தடை வாங்கிவிடுவார்கள். அதோடு மற்ற நாடுகளும் இந்தியாவை எதிர்க்கும்.
எனவே, மெதுவாக நடைபெற்று வந்தது.
தற்போது அமெரிக்காவிடமிருந்து கள்ளக்குடியேறிகளைப் பெறுவதை ஒப்புக்கொண்டதால், அமெரிக்காவின் ஆதரவு இருக்கும். இந்தியாவும் கொள்கை அளவில் உறுதியாகியுள்ளது.
இதையொட்டி, கள்ளக்குடியேறிகள் ஒரு நாட்டுக்குப் பிரச்சனை என்று கூறி, இந்தியா தனக்கான நிலையை உறுதியாக்கி வருகிறது.
நாளை மற்ற நாடுகள் பிரச்சனை செய்தால், அமெரிக்கச் சம்பவத்தைக் கூறி இந்தியா தனது நடவடிக்கையை நியாயப்படுத்த முடியும்.
எனவே, இது பணிந்து போவதல்ல மாறாகப் புத்திசாலித்தனமான செயல்.
அடையாளம் காணப்பட்டுள்ளனர்
தற்போது வரை (ஜனவரி 30 2025) கிட்டத்தட்ட 100 பங்களாதேஷிகள் தமிழகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது. தமிழக அரசு ஒத்துழைக்காது என்று நினைத்தேன் ஆனால், மாறாக சிறப்பான ஒத்துழைப்பு.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகளவு பிடிப்பட்டுள்னர். பல ஆயிரக்கணக்கில் போலி பிறப்பு சான்றிதழை உருவாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
மஹாராஷ்டிராவில் ஜல்னா மாவட்டத்தில் மட்டுமே 11,491 போலிச் சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் நடவடிக்கை தீவிரமாக இருக்கும், இதற்கு உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டை போடாமல் இருக்க வேண்டும்.
இந்தியாவில் 2 கோடி முதல் 5 கோடி வரை கள்ளக்குடியேறிகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ட்ரம்ப் வந்தால் இந்தியாக்கு இலாபமா?
கண்டிப்பாக கிடையாது, ஒரு சில நிகழ்வுகளில் மட்டும் இருக்கலாம்.
முன்னரே கூறியபடி ட்ரம்ப் ஒரு தேசியவாதி. எனவே, அவர் நாட்டுக்கு எது நல்லதோ, இலாபமோ அதைத்தான் செய்வார்.
எனவே, அவ்வாறு முடிவெடுக்கும்போது இந்தியாக்கு பல பாதகமாக முடியும்.
ஆனால், அதை இந்திய அரசு மிகத்திறமையாகக் கையாளும் என்ற நம்பிக்கையுள்ளது. காரணம், இதை முன்னரே உணர்ந்து திட்டமிட்டு இருப்பார்கள்.
எனவே, இதுவொன்றும் அதிர்ச்சியான செய்தியாக இருக்க வாய்ப்பில்லை.
ட்ரம்ப் அவரது நாட்டுக்காக மற்ற நாடுகளை மிரட்டினாலும் எதிர்காலத்தில் பிரச்சனைகளைக் கொண்டு வரலாம். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு.
ட்ரம்ப்புடன் நட்பு பாராட்டினாலும் இந்தியாக்கு இலாபமான, நன்மை பயக்கும் செயல்களையே இந்தியா முன்னெடுக்கும்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்ற அமெரிக்க மிரட்டலையும் தாண்டி எண்ணெய்யை இந்தியா வாங்கியது.
யாராலும் எதையும் செய்ய முடியவில்லை. எனவே, இப்பிரச்சனையையும் இந்தியா சரியாகக் கையாளும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியாவில் உள்ள கள்ளக்குடியேறிகளை வெளியேற்றினால் இந்தியாவில் பல்வேறு பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
தொடர்புடைய கட்டுரை
ஐரோப்பாவைத் திணறடிக்கும் அகதிகள் பிரச்சனை [FAQ]
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி வழக்கம் போல் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.. தமிழ் சினிமா போக்கு குறித்தும் தற்போது வரும் படங்களின் உண்மையான பின்னணி நோக்கம் இவற்றையும் கொஞ்சம் எழுதுங்கள்
சரத் நன்றி 🙂 .
இது பற்றி எழுதும் திட்டமுள்ளது, விரைவில் எழுதுகிறேன்.
என்னுடைய பின்னுட்டம் இந்த பதிவில் வர வில்லை கிரி..
@யாசின்
மன்னிக்க . . ஸ்பேம் கமெண்ட்ஸ்ல நீக்கப்பட்டு விட்டது போல 🙏