நடிகர் அரவிந்தசாமி ஒரு பேட்டியில் கூறிய பணம்சார் உளவியல் புத்தகம் பிரபலமாகி பலரும் படித்துக் கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள். Image Credit
புத்தகம் படித்து ரொம்ப நாட்களானதாலும், யாரும் எதையும் பரிந்துரை செய்யவில்லை என்பதாலும், இப்புத்தகம் Kindle ல் இருந்ததாலும் வாங்கினேன்.
பணம்சார் உளவியல்
ஆசிரியர் Morgan Housel நிதி குறித்து எழுதிய புத்தகமே பணம்சார் உளவியல்.
பல்வேறு நபர்களின் அனுபவங்களைக் கூறி அவர்கள் எவ்வாறு பணத்தைச் சம்பாதித்தார்கள், செலவு செய்தார்கள், சம்பாதித்ததை இழந்தார்கள், மேலும் சம்பாதித்தார்கள் என்ற அனுபவங்களை விளக்கியுள்ளார்.
அனுபவம் என்பது பலரின் தொகுப்பே. யாரோ ஒருவரின் அனுபவத்தை மட்டும் அறிவுரையாகவோ, ஆலோசனையாகவோ ஏற்றுக்கொள்ள முடியாது.
காரணம், ஒருவருக்கு கிடைத்த அனுபவம் அடுத்தவருக்குக் கிடைத்து இருக்காது.
எனவே, பலரின் அனுபவங்களைத் தெரிந்து கொள்ளும் போது அதில் நமக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றவற்றைப் புறக்கணித்து விடலாம்.
இதை இப்புத்தகம் விளக்குவதோடு ஆசிரியரின் அனுபவத்தையும் கூறுகிறது.
எப்படியுள்ளது?
இப்புத்தகத்துக்கு கிடைத்த வரவேற்பு பிரமிக்க வைக்கிறது. படித்தவர்கள் பலரும் பாராட்டி, மற்றவர்களைப் படிக்க அறிவுறுத்துகிறார்கள்.
நிதி மேலாண்மை, பொருளாதாரத்தில் ஆர்வம் இருப்பதால், நம் எண்ணமும் இதில் கூறியுள்ளவற்றையும் ஒப்பீடு செய்து, எதில் பின்தங்கியுள்ளோம் என்று அறியலாம் என்ற அடிப்படையில் தான் இப்புத்தகத்தை வாங்கினேன்.
இதில் என்ன தெரிந்து கொண்டேன் என்றால், குறிப்பிட்ட சில ஆலோசனைகளை, அனுபவங்களைத் தவிர்த்து வேறு எதையும் தெரிந்து கொள்ளவில்லை 🙂 .
காரணம்,
- பெரும்பாலும் அடுத்தவரின் அனுபவமாக உள்ளது, நமக்கான ஆலோசனையாக நேரடியாக இல்லை.
- அமெரிக்கப் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து இருப்பதால், ஒன்ற முடியவில்லை.
- நிதி குறித்த புத்தகம் என்பதால், ஆங்கிலத்தில் படித்தால் புரிந்து கொள்ளச் சிரமமாக இருக்கும் என்று தமிழில் வாங்கினேன்.
- ஆனால், டப்பிங் படம் போல உள்ளது. ஆலோசனைகள் மனதில் ஒட்டவில்லை.
- அடுத்தவரின் அனுபவங்களே அதிகம் கூறப்படுவதால், இவர் என்ன கூறுவார் என்று எதிர்பார்த்து வாங்கியதற்கு எதிராக உள்ளது.
கருத்து
புத்தகம் கூடத் திரைப்பட விமர்சனம் போலத்தான்.
ஒருத்தருக்குப் பிடிக்கும் படம் இன்னொருவருக்குப் பிடிக்காது. சிலாகித்து எழுதும் பட விமர்சனத்தை அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் போலக் கூறி விடுவார்கள் 🙂 .
இப்புத்தகம் பலராலும் சிலாகித்து, பாராட்டிக் கூறப்பட்டுள்ளது. எனவே, விஷயம் இல்லாமல் இவ்வளவு பேர் பாராட்ட மாட்டார்கள்.
எதிர்பார்த்தது இல்லாதது எனக்கு ஏமாற்றத்தை அளித்து இருக்கலாம்.
புத்தகத்தில் குறிப்பிடத்தக்கவை
- லாட்டரியை எதனால் ஏழை மக்கள் வாங்குகிறார்கள், வசதியானவர்கள் எதனால் வீண் என்று நினைக்கிறார்கள் என்பதற்குக் கூறும் காரணம் சிறப்பு.
- இலக்கை அடைந்த பிறகு, மீண்டும் தேவைகள் பெருகுமாயின், அத்தகைய தேவைகளை நோக்கி மீண்டும் செல்லும் பயணத்தால், எந்தப் பயனும் இல்லை.
- காரணம், உங்கள் தேவைகள் பெருகிக்கொண்டே செல்லும்.
- செல்வம், கௌரவம், வலிமை இம்மூன்றையும் சுவைக்கச் சுவைக்க அபாயகரமானதாக மாறிக்கொண்டே செல்லும்.
- நம்மிடம் சேர்ந்த வளத்தில் ஒரு பங்காவது அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று நம்பும் மனப்பான்மையும், சிக்கனமாக இருத்தலும் முக்கியமாகும்.
- கிடைத்த வெற்றியின் அடிப்படையில், அதைப்போன்றே ஒவ்வொரு முறையும் எதிர்காலத்திலும் நடக்கும் என்று நம்புவது தவறானதாகும்.
- பெரும்பாலான தோல்விகளுக்கு முக்கியக்காரணங்களில் ஒன்று தலைக்கனம்.
- பங்குச்சந்தையில் நீண்ட காலத் திட்டங்களில் பொறுமை அவசியம்.
- பொருத்தமற்ற ஒப்பீடு, செலவுகளைத் தேவையற்று அதிகரிக்கிறது.
- எது முக்கியமானதோ அதைப்பணயம் வைத்து, எது முக்கியம் இல்லையோ அதைப்பெற நினைக்கும் முறை பொருளற்றது என்று வாரன் பஃப்பெட் கூறுகிறார்.
அறிவார்ந்த முடிவுகளா? மனமகிழ்ச்சி முடிவுகளா?
‘எல்லா நல்ல முடிவுகளுமே எப்போதுமே அறிவார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. சில கட்டங்களில் மனமகிழ்ச்சி, சரியான தீர்வு இவையிரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது‘ என்கிறார்.
இதற்கு மிகப்பொருத்தமான எடுத்துக்காட்டு நான் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்தது.
கடனைக் கட்டிய பிறகு அங்குத் தொடர நினைக்கவில்லை. மகிழ்ச்சி என்பது என் குடும்பம், நண்பர்கள், உறவினர், இந்தியா, சென்னை, கோபி என்று இருந்தது.
எனவே, இந்தியாக்கு திரும்பியது மனமகிழ்ச்சியை எனக்குக் கொடுத்தது.
சிலர் எதற்கு இந்தியா வர வேண்டும்? அங்கேயே இருந்தால் மேலும் சிறப்பான, வசதியான வாழ்க்கை வாழலாமே! என்று அறிவார்ந்து யோசிக்கலாம்.
இரண்டுமே அவரவர் எண்ணத்தில் சரி ஆனால், சம்பந்தப்பட்டவருக்கு எது சரியோ அதைத் தேர்ந்தெடுக்கிறார். நான் இந்தியா திரும்புவதை தேர்ந்தெடுத்தேன்.
ஆசிரியர் கூறுவது 100% சரி.
இதைப் பற்றி Bye Bye சிங்கப்பூர் கட்டுரையில் கூறியுள்ளேன்.
பணம் இருந்தால் மகிழ்ச்சியா?
எவரின் வாழ்க்கைக்கும் பணம் அவசியம், தவிர்க்க முடியாதது.
அண்ணாமலை படத்தில் மிகப்பெரிய பணக்காரரான ரஜினி, பல்வேறு பிரச்சனைகளால் வெறுத்து தனிமையான இடத்துக்குச் செல்லும் போது அங்கே ஒரு மாடு மேய்ப்பவர் மகிழ்ச்சியாக பாடிக்கொண்டு செல்வார்.
இதைப் பார்த்து அமைதியான ரஜினி திரும்ப வீட்டுக்குக் கோபம் குறைந்து செல்வார்.
இவ்வளவு பணம் வைத்து இருந்தால் தான் மகிழ்ச்சி என்ற அளவீடு இல்லை. ஒருவர் எந்நிலையில் திருப்தி அடைகிறார் என்பதைப்பொறுத்து மகிழ்ச்சி அமைகிறது.
எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், நம்மை விட ஒருவர் பணக்காரராக இருப்பதால், ஒப்பிட்டுக்கொண்டே செல்வது சரியான வழி முறையாக இருக்காது.
முன்னேற்றம் அடைவது வேறு ஆனால், பணத்தை துரத்துவது வேறு.
Read : மகிழ்ச்சி தருவது எது?
சுதந்திரம்
‘நாம் எப்படிச் சேமிக்கிறோம், முதலிடுகிறோம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சுதந்திரத்தை நாம் இலக்காகக் கொண்டிருத்தல் வேண்டும்.
இரவில் அமைதியாக உறங்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நாம் செய்தாக வேண்டும்.
அதையே நம்முடைய முதன்மையான இலக்காக நினைத்தல் வேண்டும்‘
என்று ஆசிரியர் கூறுகிறார்.
ஒருவரின் சுதந்திரத்தை, தைரியமான முடிவுகளைத் தீர்மானிப்பதில் அவரது பொருளாதாரம் முக்கியப்பங்கு வகிக்கிறது.
Read : நடுத்தர வகுப்பு மக்கள் என்பவர்கள் யார்?
யார் வாங்கலாம்?
இப்புத்தகம் படித்த போது ‘ஒரே நாளில் பணக்காரன் ஆவது எப்படி?‘ வடிவேல் நகைச்சுவை தான் நினைவுக்கு வந்தது 😀 .
இது சாமானியர்களுக்கான புத்தகம் அல்ல, Advanced பயனாளர்களுக்கானது.
அமெரிக்காவை, அமெரிக்கரை, அமெரிக்க பங்குச்சந்தையை மனதில் வைத்து எழுதப்பட்டுள்ளதால், அன்னியமாகவும், ஆர்வம் இல்லாததாகவும் தோன்றலாம்.
முன்னரே கூறியபடி இவை என் கருத்து மட்டுமே! பலரும் பாராட்டி இருப்பதால், பரிந்துரைப்பதால், நான் கூறுவது தவறாகக் கூட இருக்கலாம்.
ஒப்பீட்டளவில் தமிழை விட ஆங்கிலப்புத்தகம் சிறப்பானதாக இருக்கலாம்.
எனவே, விமர்சனங்களைப் படித்து அதனடிப்படையில் புத்தகத்தை வாங்குங்கள்.
அமேசானில் வாங்க Link
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. இது போல புத்தங்கங்களின் மீது ஆர்வம் மிக மிக குறைவு.. குறைவு என்பதை விட இது குறித்து நான் படித்தது ரொம்ப குறைவு.. பொதுவாக முதலீடுகள், பங்குசந்தை, கடனட்டை, நிதி மேலாண்மை இவைகளை குறித்த தரவுகளை தெரிந்து கொள்வதில் உள்ள ஆர்வம், அவைகளை வாழ்க்கையில் APPLY பண்ணுவதில் இல்லை..
2010 திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதிதில் மனைவியிடம், எனக்கு கிரிக்கெட் விளையாடுவதிலும், புத்தகம் படிப்பதிலும் மிக மிக ஆர்வம் என்றேன்.. உடனே மனைவியும் கிரிக்கெட் பிடிக்கவே பிடிக்காது.. ஆனால் வாசிக்க பிடிக்கும் என்றார்..
சரி குறைந்தபட்சம் வாசிக்கவாது பிடிக்கிறதே என்றெண்ணி, நான் வாசித்த புத்தகங்கள், படித்ததில் பிடித்தது இவைகளை குறித்து பேச ஆரம்பித்தோம்.. அந்த தருணத்தில் வைரமுத்து எழுதிய நான் படித்த தண்ணீர் தேசம் புத்தகத்தை வாங்கி படிக்கச் சொன்னேன்.. இடைக்கிடையில் பேசும் போது வாங்கி படித்து விட்டாயா? என்ற போது இல்லை.. இங்கு ஸ்டாக் இல்லை.. கிடைக்கல.. என்றார்..
நான் தொடர்ந்து அடிக்கடி கேட்பதால், என் மனைவி அவரின் தம்பியிடம் கூறி புத்தகத்தை வாங்கி விட்டார்.. தம்பி புத்தகத்தை வாங்கி ரெண்டு பக்கம் திருப்பி சும்மா பார்த்துவிட்டு (என்னை சரியான பிளேடு போலனு) நினைச்சனாம்..
பின்பு மனைவிடம் இடையில் பேசும் போது புத்தகத்தில் சில வரிகளை குறித்து சிலாகித்து பேசுவேன்.. நான் 95 % பேசினால் மனைவி 5 % தான் பேசுவார்.. ஆமாம்.. சூப்பர்.. சிறப்பு என்பார்.. சரி ரொம்ப அடக்கமான பொண்ணு கூச்சபடுதோனு நெனச்சேன்..
இப்படியே திருமணமாகி சில நாட்களிலே தெரிந்து விட்டது ஆரம்பத்தில் என் மனைவி சொன்ன புத்தக வாசிப்பு ஆர்வம் (வாரமலர், குமுதம், குங்குமம்).. அதிலிருந்து புத்தக வாசிப்பு ஆர்வம் இல்லாதவர்களுக்கு எந்த புத்தகத்தையும் அறிமுகம் செய்வது இல்லை…
@யாசின்
“கிரி.. இது போல புத்தங்கங்களின் மீது ஆர்வம் மிக மிக குறைவு.. குறைவு என்பதை விட இது குறித்து நான் படித்தது ரொம்ப குறைவு.”
The Scam படத்தில் வருவது போன்ற சம்பவங்களும் உள்ளது.
“நான் தொடர்ந்து அடிக்கடி கேட்பதால், என் மனைவி அவரின் தம்பியிடம் கூறி புத்தகத்தை வாங்கி விட்டார்.”
உங்க தொல்லை தாங்காமல் 😀 😀
“தம்பி புத்தகத்தை வாங்கி ரெண்டு பக்கம் திருப்பி சும்மா பார்த்துவிட்டு (என்னை சரியான பிளேடு போலனு) நினைச்சனாம்..”
இப்ப உங்க மாப்பிள்ளையின் மனைவியிடம் அவர் எப்படி என்று கேட்டால், பல கதைகளை வைத்து இருப்பார் 🙂 .
“சூப்பர்.. சிறப்பு என்பார்.. சரி ரொம்ப அடக்கமான பொண்ணு கூச்சபடுதோனு நெனச்சேன்”
அப்புறம் தான் யாசினுக்கு தெரிந்து இருக்கு இது அடக்கமில்லை . . அமைதிக்கு பின் புயல்ன்னு 🙂 .
“இப்படியே திருமணமாகி சில நாட்களிலே தெரிந்து விட்டது ஆரம்பத்தில் என் மனைவி சொன்ன புத்தக வாசிப்பு ஆர்வம் (வாரமலர், குமுதம், குங்குமம்).. அதிலிருந்து புத்தக வாசிப்பு ஆர்வம் இல்லாதவர்களுக்கு எந்த புத்தகத்தையும் அறிமுகம் செய்வது இல்லை…
ஹா ஹா ஹா