ரஜினியின் பேச்சுகளுக்குப் பெரிய ரசிகன். அவர் கூறிய பல கருத்துகள் எனக்கு வாழ்க்கையில் மிக உதவியாக இருந்தது, சில நம் வாழ்க்கையை பிரபதிபலிக்கும்.
அது போன்று அவர் கூறிய கருத்து பற்றிய கட்டுரையே இது. Image Credit
கிடைக்கும் வரையே ஆர்வம்
எப்பவுமே கிடைக்கும் வரை, அது எப்போது கிடைக்கும்? எப்படிக் கிடைக்கும்? கிடைக்குமா? என்று நூறு கேள்விகள் இருக்கும்.
இன்னொன்று எதையாவது சாதிக்க வேண்டும் அல்லது ஒன்றை அடைய வேண்டும் என்ற வேட்கை, வெறி, கொள்கை இருக்கும்.
அதை நோக்கிச் செல்லும் போது சுவாரசியமாக இருக்கும், அதை அடைய வாழ்க்கை கடினமாக இருந்தாலும், அதில் ஒரு த்ரில், எதிர்பார்ப்பு நம்மை வழி நடத்தும்.
ஆனால், அதை அடைந்து விட்டால், அந்த மகிழ்ச்சி சில நாட்களே நீடிக்கும். இதையே ரஜினி அடிக்கடி கூறுவார்.
எவரெஸ்ட்டாக இருந்தாலும்…
20 வருடங்கள் போராடி கடனைக் கட்டும் போது கடினமாக இருந்தாலும், அதிலொரு த்ரில் எனக்கு இருந்தது. அது முடிந்த பிறகு Excitement போய் விட்டது.
அதன் பிறகு பலவற்றைத் தாண்டி வந்து இருந்தாலும் போராட்டத்தில் இருந்த Excitement தற்போது இல்லை.
எவரெஸ்ட் ஏறும் வரை ஆர்வம், சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும் ஆனால், ஏறிய பிறகு ‘அட! அவ்வளவு தானா!‘ என்ற நிலையே ஏற்படும்.
பின்னர் அடுத்த சிகரத்துக்கு ஆர்வம் வருமே தவிர எவரெஸ்ட் சுவாரசியமற்று போய் விடும். சிலது மட்டுமே விதிவிலக்காக எப்போதும் Excitement தரும்.
ரஜினி பேட்டி
ரஜினியை விவேக் பேட்டி எடுத்தார். அதில் இதைப்பற்றிப் பேச்சு வரும் போது,
‘எதையுமே கிடைக்கும், அடையும் வரை தான் Excitement இருக்கும், கிடைத்த, அடைந்த பிறகு அதில் உள்ள ஆவல், த்ரில் போய் விடும்‘.
‘சிலது கிடைக்காம இருக்கும் வரை நல்லது, சிலது கிடைக்காம இருப்பதே நல்லது’.
என்றார் 🙂 .
காதல்
சாந்தி எனும் நடிகை மற்றும் நடனம் ஆடுபவரை உங்களில் பலருக்குத் தெரிந்து இருக்கும். ராஜு சுந்தரம் குழுவில் ஆடுவார், ஒல்லியாக இருப்பார்.
‘மெட்டி ஒலி’ துவக்கப்படலில் இவர் ஆடிப் பிரபலமானார்.
ஒருமுறை படப்பிடிப்பில் தலைவருடன் பேசிக்கொண்டு இருந்த போது இவருடைய காதல் பற்றிக் கேட்ட போது, இவரது காதல் கை கூடவில்லை என்பதை தெரிவித்தார்.
அதைக்கேட்ட ரஜினி
‘அப்படியா! கை கூடவில்லையென்றாலும் அதிலொரு சுகம் உள்ளது. நம் மனதில் அக்காதல் பசுமையாக, எப்போதும் நீங்காத நிகழ்வாக இருக்கும்‘
என்று கூறி இருக்கிறார். இதைச் சாந்தி பேட்டியில் கூறினார். இது உண்மையே.
காதல் கை கூடி திருமணமான பலர் சண்டையாகத் தான் இருக்கிறார்கள், காதலித்த போது இருந்த காதல், அன்பு திருமணத்துக்குப் பிறகு இருப்பதில்லை.
ஒருதலைக்காதல்
ஆனால், அதே ஒரு தலைக்காதலாக இருக்கும், கடைசி வரை காதல் கை கூடாமல், ஆணோ பெண்ணோ வேறு ஒருவரைத் திருமணம் செய்து இருப்பார்கள்.
அல்லது எதோ காரணத்தால், திருமணம் வரை செல்லாது.
ஆனால், இவ்வகை காதலுக்கு அழிவே இல்லை. எவ்வளவு வருடங்கள் கடந்தாலும் ரசித்த காதல் எப்போதுமே மனதில் ஒரு ஓரத்தில் இருக்கும்.
எனக்கு ஒருதலை காதல் என்று கூற முடியாது ஆனால், அப்போது இருந்த வயதில் இனக்கவர்ச்சியாக இருக்கலாம் ஆனால், இன்று வரை மறக்க முடியவில்லை.
இது போல லட்சக்கணக்கானவர்கள் இரு தரப்பிலும் உள்ளார்கள். அவர்களுக்கு எப்போதுமே அந்நினைவுகள் சுகமாகவே இருக்கும்.
இதையே சாந்திக்கு தலைவர் கூறி இருக்க வேண்டும். உண்மையாகவே நினைத்தும் கூறி இருக்கலாம் அல்லது அவரின் ஆறுதலுக்காகவும் கூறி இருக்கலாம்.
சாந்தியும், ‘சார்! உங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் உள்ளதா?!‘ என்று கேட்ட போது ‘ஆமாம்!‘ என்று கூறி இருக்கிறார்.
எதிர்பார்ப்பில் இருக்கும் Excitement, நடந்த பிறகு இருப்பதில்லை.
இன்று பிறந்தநாள் காணும் ரஜினிகாந்த் அவர்கள் அனைத்து வளங்களும் பெற்று, நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா! 🙂 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
புகழின் உச்சியில் இருந்தாலும் பெரும் செல்வம் இருந்தாலும்
எளிமை, பணிவு, தன்னடக்கம், செய்யும் உதவி உபகாரங்களை விளம்பரங்கள் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டும் பண்பு இல்லாத நற்குணம், இவ்வாறு பல நற்குணங்கள் பொருந்திய திரு. ரஜினி அவர்கள் நேர் வழி பெற்று நேர் வழி நடந்து நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ரஜினி சாரின் வாழ்வில் சிலது மிகவும் பிடிக்கும்.. குறிப்பாக அவரது சுறுசுறுப்பு, உழைப்பு மற்றும் எளிமை.. இந்த வயதிலும் உழைக்க வேண்டும் என்ற தணல் அவரிடம் எரிந்து கொண்டு இருப்பது கண்டு வியந்து போகிறேன்.. அரசியல் தவிர்த்து மற்ற எல்லாவற்றிலும் ரஜினி சாரை எனக்கு பிடிக்கும்..
முதலில் காதலித்த பெண் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவருக்கு திருமணமான பிறகு, கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் போது இதழியல் வகுப்பில் என்னுடன் 6 மாதம் பயின்ற ஒரு பெண்ணை பார்க்கும் போது இயல்பாகவே ஒரு நல்ல பீலிங் உள்ளுக்குள் வரும்.. இருவரும் ஒரு வார்த்தை பேசியது கிடையாது.. அவளுக்கு தெரியாமலே, தினமும் அவளை நான் பார்ப்பேன்..
யாருக்கும் தெரியாமல் அவரின் நெருங்கிய தோழியிடம் மட்டும் மெதுவாக பேசும் தோரணை, வறுமை இருந்தாலும் அவளது நேர்த்தியான உடை அணியும் விதம், ,அவளது நடை என பலவற்றை நான் ரசிப்பேன்.. சத்தியமா இது காதல் மட்டும் இல்லை.. அந்த முதிர்ந்த பருவத்தில் என் மனதில் தோன்றியது இவளை போல் ஒருத்தர் மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என்ற ஒன்று மட்டும் தான்..
சொல்லாததும் உண்மை புத்தகத்தில் ஒரு வரி வரும்… (ஒரு இரவு முழுவதும் தனிமையில் அவளிடம் பேசிய போது ஏற்பட்ட சுகம்… அவளை தொடும் போது ஏற்படவில்லை ). சத்தியமா எனக்கும் இது போல தான்..
கல்லூரி முடிந்து கடைசி நாளில் நான் செல்ல வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் அவளும் / தோழியும் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக என் அருகில் நின்று கொண்டிருந்தார்கள்.. நானும் நின்று கொண்டிருந்தேன்.. (இடையில் இரண்டு தேனீரும் அருந்தினேன்..) அப்போதும் ஒரு வார்த்தையும் யாரும் பேசி கொள்ளவில்லை… அவள் எதற்காக அவ்வளவு நேரம் நிற்க வேண்டும்??
எனக்காகவா??? அவளது காதலை சொல்லவா??? அல்லது என் காதலை அவளிடம் சொல்லுவேன் என்பதாலா ??? கல்லூரியின் கடைசி நாள் என்பதாலா?? தோழியை விட்டு பிரிகிறோம் என்பதாலா?? என்ற பல கேள்விகளோடு அவள் சென்ற பின் நானும் பின்னிரவில் பேருந்தில் வீட்டுக்கு சென்றேன்… தற்போதும் எப்போதவது இந்த நிகழ்வை நினைத்து பார்த்தாலும் அவ்வளவு இனிமையாக இருக்கும்… சம்பவம் நடந்து 20 வருடம் ஆகியும் இந்த நொடி வரை அவளது பெயரை மட்டும் என்னால் நினைவு கூற முடியவில்லை…
@Fahim நன்றி 🙂
@யாசின்
“இந்த வயதிலும் உழைக்க வேண்டும் என்ற தணல் அவரிடம் எரிந்து கொண்டு இருப்பது கண்டு வியந்து போகிறேன்.”
அவர் இன்னும் உழைப்பதால் தான் நடமாடிக்கொண்டு இருக்கார். உட்கார்ந்தால், அவர் உடல்நிலை படுக்க வைத்து விடும்.
“அப்போதும் ஒரு வார்த்தையும் யாரும் பேசி கொள்ளவில்லை”
பல காதல்கள் இதயம் முரளி போல பேசாமலே முடிந்து விடுகிறது போல.
“பல கேள்விகளோடு அவள் சென்ற பின் நானும் பின்னிரவில் பேருந்தில் வீட்டுக்கு சென்றேன்”
அப்போதைய பலரின் காதலுக்கும் அல்லது காதல் போன்ற எண்ணத்துக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு பெரிய சம்பந்தம் இருக்கும் போல 🙂 .