அமெரிக்காவில் இனவெறி எதிரொலித்தது ஏன்?

5
அமெரிக்காவில் இனவெறி எதிரொலித்தது ஏன்?

ட்ரம்ப் அதிபராகப் பதவி ஏற்கப்போவதால், அதையொட்டி அரசாங்கப்பொறுப்புகளில் பலரையும் நியமித்து வருகிறார். Image Credit

அவ்வாறு நியமித்து வருவதில், AI தொடர்பான ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்தவுடன் மிகப்பெரிய சர்ச்சையாகி விட்டது.

இதே போன்று Kashyap Patel என்ற இந்திய வம்சாவளி நபரை FBI தலைவராக நியமித்ததுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தியன்

ஸ்ரீராம் அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், அங்குள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, குறிப்பாக மற்ற நாட்டினரை ஏற்றுக்கொள்ளாத தீவிர வெள்ளை இனவெறியாளர்கள்.

அமெரிக்காவில் கறுப்பர்களை தவிர்த்து இதுவரை இப்படியொரு பிரச்சனை பெரியளவில் விவாதமாக வந்ததில்லை.

கறுப்பரான ஒபாமாவை அதிபராகத் தேர்ந்தெடுப்பார்களா மாட்டார்களா? என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது ஆனால், மக்கள் அவரை அதிபராகத் தேர்ந்தெடுத்து உலக மக்கள் பாராட்டைப் பெற்றார்கள்.

காரணம், அமெரிக்கா வளர்ந்த நாடாக இருந்தாலும், வெள்ளையின ஆதிக்கமுள்ள நாடாக இருந்தது. எனவே, அனைவருக்கும் சந்தேகம் இருந்தது.

ஆனால், இந்தியனை அவர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளாதது, எத்தனை தலைமுறையாக இருந்தாலும் அவர்கள் அமெரிக்கர்கள் ஆகி விட மாட்டார்கள் என்பதையே உணர்த்துகிறது.

இவ்வாறு அனைவரும் கருதவில்லையென்றாலும், பிரச்சனை என்று வரும் போது இந்தச் சர்ச்சையும் வருவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

X

இந்த அறிவிப்பு வெளியானவுடன் X ரணகளமாகி விட்டது.

இந்த வாய்ப்புக்காகவே காத்துக்கொண்டு இருந்தது போலப் பலரும் இந்தியர்கள் மீது வன்மத்தை கக்க துவங்கி விட்டனர்.

பதிலடியாக இந்தியர்களும் கருத்திட, இரு பக்கமும் சண்டை பெரிதாகி விட்டது.

சம்பந்தமே இல்லாமல் கொரியன்களில் சிலரும் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி கருத்து தெரிவிக்க 2024 டிசம்பர் இறுதி முழுக்க X போர்க்களமாக இருந்தது.

இனவெறி தாக்குதல் நாளுக்குநாள் தீவிரமடைந்து வந்தது.

இனவெறி தாக்குதல் நடத்திய அமெரிக்க, கொரியர்கள் X கணக்கை இந்தியர்கள் (Suspend) முடக்கினர், பலருக்கு Blue Tick போனது.

Blue Tick போனால் விளம்பர வருமானப் பகிர்வு இருக்காது, இது கிட்டத்தட்ட அடிமடியில் கைவைப்பது. இதன் பிறகு இனவெறி தாக்குதல் குறைந்தது.

இந்தியர்கள் / இந்துக்கள்

சண்டையின் போக்கு இந்தியர்களிலிருந்து இந்துக்களாக மாற்றம் பெற்று இந்துக்களை, இந்து கடவுள்களைக் கிண்டலடித்து விமர்சனங்கள் அதிகரித்தன.

எதனால் இந்தியர்கள் மீது அமெரிக்கர்களுக்கு வெறுப்பு?! என்று குழப்பமாக இருந்தது அதுவும் குறிப்பாக இந்துக்களை விமர்சித்து விமர்சனங்கள் அதிகம் வந்தன.

இந்தியர்கள், இந்துக்கள் எந்த நாட்டுக்குச்சென்றாலும் அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே வாழ்கிறார்கள்.

அவர்களால் எந்த நாட்டிலும் வன்முறை ஏற்பட்டதில்லை. எனக்கு நினைவு தெரிந்து சிங்கப்பூரில் வன்முறை ஏற்பட்டது ஆனால், அதுவும் குடியின் காரணமாக.

இந்துக்களால் வன்முறையாலோ, மத ரீதியாகவோ வெளிநாடுகளில் பிரச்சனை நடந்ததில்லை. எங்காவது தனிப்பட்ட நபரால் நடந்து இருக்கலாம்.

அப்படியிருக்கையில் எதனால் இவ்வளவு வன்மம்! என்று குழப்பமாக இருந்தது.

கேள்வி

ஏனென்றால், அடிப்படைவாத முஸ்லிம்கள் அமெரிக்காவை இஸ்லாம் நாடாக்கப் போகிறோம், ஷரியா சட்டம் கொண்டு வரப்போகிறோம் என்று கூறி வருகிறார்கள்.

மிகப்பெரியளவில் கிறித்தவர்களை மதமாற்றமும் செய்து வருகிறார்கள்.

பல இடங்களில் போராட்டம், வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இவ்வளவு செய்தும் இவர்கள் மேல் வராத மதக்கோபம் இந்துக்கள் மீது ஏன் வந்தது?! என்று குழப்பமானது.

ஏனென்றால், இதுவரை X காணாத எதிர்ப்பு இந்துக்கள், இந்தியர்கள் மீது அமெரிக்கர்களிடம் இருந்தது.

எனக்குக் கோபம் வருவதற்குப் பதிலாக, எதனால் இவர்களுக்குக் கோபம் வந்தது? என்பதற்கான காரணத்தை அறிவதிலேயே ஆர்வம் இருந்தது.

Knowledge

பல பதிவுகளைப் படித்த பிறகு புரிந்து கொண்டது, இந்தியர்கள், இந்துக்கள் புத்திசாலிகளாக இருப்பதால், அமெரிக்கர்களுக்கு எரிச்சலைத் தந்து தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் CEO க்களும் இந்தியர்களாக, இந்துக்களாக இருக்கிறார்கள்.

பணியிலும் இந்தியர்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கிறார்கள். நிறுவனங்களும் இந்தியர்களைப் பணிக்கு அமர்த்துவதை, CEO வாக நியமிப்பதை விரும்புகின்றன.

அமெரிக்கா தற்போது வளர்ந்து இருப்பதற்குக் காரணம் அமெரிக்கர்கள் மட்டுமே அல்ல. இந்தியா, சீனா, கொரியா, ஆப்ரிக்கா உட்பட பல நாடுகளிலிருந்தும் திறமையானவர்களை அமெரிக்கா எடுத்துக்கொண்டதும் முக்கியக்காரணம்.

அமெரிக்கா வரும் இந்தியர்கள் H1B விசாவில் வருபவர்களே!

அமெரிக்கா சென்ற இந்தியர்களால் அங்குள்ளவர்களின் பணி பாதிக்கப்பட்டதோடு இந்தியர்கள், இந்துக்கள் புத்திசாலிகள் என்பதை ஏற்க முடியவில்லை.

நீறுபூத்த நெருப்பாக இருந்தது, இச்சர்ச்சையில் வெடித்து விட்டது.

இந்தியர்கள் மீது நடந்த இணைய இனவெறி தாக்குதலுக்கு மேற்கூறியவையே காரணங்களாக இருக்கும் என்று கருதுகிறேன்.

வேறு எந்தக்காரணமும் இருப்பதாக தோன்றவில்லை. உங்களுக்கு வேறு காரணம் தெரிந்தால், பகிர்ந்து கொள்ளவும்.

சரியா தவறா?

எந்தவொரு நாட்டினருக்குமே இருக்கும் கோபமே இது. எனவே, அவர்கள் பார்வையிலிருந்து பார்த்தால், அவர்கள் கோபம் நியாயமானதாக இருக்கும்.

இந்தியாவிலேயே இருக்கும் வட மாநிலத்தார் தமிழகம் வந்தால், வடக்கன் என்று கிண்டலடித்து அவமானப்படுத்தும் நிகழ்வு நடக்கிறது.

அப்படியிருக்கையில் வேறொரு நாட்டிலிருந்து வந்தவர்களிடம் அவர்கள் நாட்டினர் கோபப்படுவது இயல்பு தானே!

பூர்வக்குடி பழங்குடியினரைத் துரத்தி விட்டு வந்தவர்களே அமெரிக்கர்கள்.

அமெரிக்க கிறித்துவ மதவெறியாளர்கள் கொடுக்கும் நிதியில் தான் இந்தியாவில் மதமாற்றங்களே பெருமளவில் நடந்து வருகிறது.

ஆனால், நேரடி மத ரீதியான எதிர்ப்பாக, பிரச்சனையாக உள்ள, அனைத்துக்கும் போராட்டம் நடத்தும் அடிப்படைவாத முஸ்லிம்களைத் தாண்டி இந்துக்கள் மீது வெறுப்பாகிறது என்றால், ஈகோ, பொருளாதாரம் முக்கியம் என்று புரிகிறது.

ஏன் புரிந்து கொள்ள வேண்டும்?

ஒவ்வொரு மாநிலமும், நாடும் இன்னொரு மாநிலம், நாட்டைச் சார்ந்து இருக்கிறது.

வடக்கன் வேண்டாம் என்றால், தமிழகத்தில் ஒரு நிறுவனம் கூட நடத்த முடியாது என்பதே நிதர்சனம்.

எனக்கும் வடமாநிலத்தவரைத் துவக்கத்தில் பிடிக்காது ஆனால், நாளடைவில் அந்த எண்ணத்தை, வெறுப்பை மாற்றிக்கொண்டேன்.

காரணம், இங்கே ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டிய சூழல் உள்ளது. இதைக் கோயம்புத்தூர் பற்றிய கட்டுரையில் (2014) குறிப்பிட்டு இருந்தேன்.

எனவே, அமெரிக்கர்களும் மற்ற நாட்டினர் துணை இல்லாமல் அமெரிக்கா உயரத்தை எட்ட முடியாது என்ற நிதர்சனத்தை உணர வேண்டும்.

இதை உணர்ந்ததால் தான், எலன் மஸ்க் H1B விசாவை ஆதரிக்கிறார், கள்ளக்குடியேறிகளை எதிர்க்கிறார்.

இந்தியாவிலிருந்து ஊழியர்களைப் பெற்று கட்டுமானத்துக்கு இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது, தைவான் தற்போது கட்டுமான பணியாளர்களை எடுப்பதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் போடவிருக்கிறது.

பிரச்சனைகளைச் செய்யாமல் அந்நாட்டுக்கு, மாநிலத்துக்கு உழைப்பவர்களை வெறுப்பது, தாக்குவது சொந்தச் செலவில் சூனியம் வைப்பதைப் போன்றது.

அது அமெரிக்காவாகவே இருந்தாலும், தமிழகமாக இருந்தாலும் பொருந்தும்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

5 COMMENTS

  1. ஆராய்ந்து நீங்கள் குறிப்பிட்ட அது உண்மை தான். இதே மாதிரியான தாழ்வு மனப்பான்மை தான் வன்மமாக மாறி இலங்கையில் தமிழர்களும்
    சிங்களவர்களும் சண்டையிட்டுக் கொள்ள காரணமாக அமைந்தது. புத்தி சாதுர்யம் அமைதியான சுபாவம் ஏன் மற்றவர்களின் நிம்மதியை ஏன் கெடுக்கிறது என்பதுதான் எனக்கு புரியவில்லை. புத்தி சாதுர்யமாக இருப்பதும் பிரச்சினையை கொண்டு வருகிறது. எல்லாம் காலத்தின் வசம். நாம் ஒன்றும் செய்வதற்கில்லை என்ற முடிவுக்குதான் கடைசியாக வரவேண்டியுள்ளது..

  2. ஆராய்ந்து நீங்கள் குறிப்பிட்ட அது உண்மை தான். இதே மாதிரியான தாழ்வு மனப்பான்மை தான் வன்மமாக மாறி இலங்கையில் தமிழர்களும்
    சிங்களவர்களும் சண்டையிட்டுக் கொள்ள காரணமாக அமைந்தது. புத்தி சாதுர்யம் அமைதியான சுபாவம் ஏனமற்றவர்களின் நிம்மதியை ஏன் கெடுக்கிறது என்பதுதான் எனக்கு புரியவில்லை. புத்தி சாதுர்யமா
    க இருப்பதும் பிரச்சினையை கொண்டு வருகிறது. எல்லாம் காலத்தின் வசம். நாம் ஒன்றும் செய்வதற்கில்லை என்ற முடிவுக்குதான் கடைசியாக வரவேண்டியுள்ளது..

  3. கிரி.. இந்த நிறவெறி / இனவெறி இதை படிக்கும் போதே உள்ளுக்குள் ஒரு ஆத்திரம் எனக்கு ஏற்படுவது இயல்பு.. பிறப்பால் அனைவரும் சமம் என்பது என் நிலைப்பாடு.. அமெரிக்கா / மேற்கத்திய நாடுகள் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் இது போல விஷியங்களில் சில்லறை தனமாகவே நடந்து கொள்வார்கள்.. அதற்கு கடந்த காலத்தில் நடைபெற்ற பல உதாரணங்களை கூறலாம்..

    முறையான குடியுரிமை பெற்று பல வருடங்கள் தலைமுறைகளாக அங்கு வசித்தாலும் நம்மை அவர்கள் அவ்வளவு எளிதாக ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பது தான் நிஜம்.. அங்கு பிறந்து சொந்த குடிமக்களாக வசிக்கும் கறுப்பின மக்களை அவர்கள் எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதை பார்த்தலே நமக்கு எளிதில் விளங்கும்…

    உங்களுக்கு அமெரிக்கா செல்வது என்பது ஒரு கனவு.. எனக்கு கனவில் கூட அமெரிக்கா வர கூடாது என்பது தான் எண்ணம்..மேற்கத்திய நாடுகளை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இயல்பாகவே உண்டு..

  4. @விபுலானந்தன்

    “புத்தி சாதுர்யம் அமைதியான சுபாவம் ஏன் மற்றவர்களின் நிம்மதியை ஏன் கெடுக்கிறது என்பதுதான் எனக்கு புரியவில்லை.”

    எப்போதுமே நம்மை விட ஒருவர் புத்திசாலியாக அனைவரும் பாராட்டும் நபராக இருக்கும் போது வரும் இயல்பான பொறாமை தான்.

    சிலவற்றை எதிர்நோக்கினால் சிலவற்றை சகித்து செல்ல வேண்டியதிருக்கும், எதையாவது விட்டுக் கொடுக்க வேண்டியதிருக்கும்.

  5. @யாசின்

    “அமெரிக்கா / மேற்கத்திய நாடுகள் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் இது போல விஷியங்களில் சில்லறை தனமாகவே நடந்து கொள்வார்கள்”

    உண்மை தான். நாட்டுக்குநாடு அளவில் மாறுபாடு அவ்வளவே.

    “முறையான குடியுரிமை பெற்று பல வருடங்கள் தலைமுறைகளாக அங்கு வசித்தாலும் நம்மை அவர்கள் அவ்வளவு எளிதாக ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பது தான் நிஜம்.”

    புதிதாக வந்தவர்களை ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும், பல தலைமுறைகளாக இருப்பவர்களை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்சனை என்று புரியவில்லை.

    “உங்களுக்கு அமெரிக்கா செல்வது என்பது ஒரு கனவு.. எனக்கு கனவில் கூட அமெரிக்கா வர கூடாது என்பது தான் எண்ணம்”

    ஆமாம் 🙂 . நினைவு வைத்து இருக்கீங்க.

    எனக்கு அமெரிக்க செல்ல வேண்டும் என்றால், நயாகரா பார்க்க வேண்டும், டிஸ்னி லேண்ட் பார்க்க வேண்டும் என்பது விருப்பமல்ல.

    உட்கட்டமைப்பான சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் மற்றும் பாலைவனம், காடுகள் ஆகியவற்றை காண வேண்டும் என்பதே விருப்பம்.

    அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்புகள் இனி இருப்பதாக தோன்றவில்லை. எனவே, கனவு கனவாகவே போய் விட்டது 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!