தமிழகம் உட்கட்டமைப்பில் மிகப்பெரிய அளவில் பின்தங்கி வருகிறது ஆனால், அதன் ஆபத்து புரியாமல், எதிர்காலத்தைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் அரசியல் செய்து கொண்டுள்ளார்கள். Image Credit
உட்கட்டமைப்பு (Infrastructure)
ஒரு நகரத்தின், மாநிலத்தின் வளர்ச்சி என்பது பெரிய கட்டிடங்கள், நிறுவனங்கள் மட்டுமல்ல, உட்கட்டமைப்புமாகும்.
நகரச் சாலை, தேசிய நெடுஞ்சாலை, மழை நீர் வடிகால், மேம்படுத்தப்பட்ட சிக்னல், ஏரி குளம் சீரமைப்பு, தரமான சேவையுடன் மருத்துவமனைகள்.
கழிவு மேலாண்மை, பொதுப் போக்குவரத்து, சூரியசக்தி பயன்பாடு, போதுமான நடைபாதையுடன் அகலமான சாலைகள், புதிய ரயில்வே பாதை போன்றவை.
மேற்கூறியவற்றில் தமிழகம் சிறந்து விளங்குவது கிராம சாலைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மட்டுமே.
மற்றபடி அனைத்து உட்கட்டமைப்பிலும் பின்தங்கியுள்ளது.
எளிமையாக புரிந்து கொள்ள, சென்னை 25 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட மிக மோசமான உட்கட்டமைப்பில் உள்ளது.
அதே சாலை பிரச்சனை, போக்குவரத்து நெரிசல், தரமற்ற சாலை, மழை நீர் வடிகால் பிரச்னை, மோசமான கழிவு மேலாண்மை என்று எதுவுமே மாறவில்லை.
போராட்டம்
தமிழகத்தின் பிரச்சனை என்னவென்றால், எந்தத் திட்டம் அறிவித்தாலும் அதில் அரசியல் செய்கிறார்கள், நடத்த விடுவதில்லை.
எடுத்துக்காட்டுக்கு சேலம் சென்னை பசுமை தேசிய நெடுஞ்சாலை திட்டம் திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
இதனுடன் ஆரம்பித்த மஹாராஷ்டிரா நெடுஞ்சாலை தற்போது திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இது போன்று ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
தற்போதும் என்ன திட்டம் வந்தாலும் கண்மூடித்தனமாக எதிர்க்க ஒரு கூட்டமுள்ளது. இதனால் வாக்கரசியல் பாதிக்கும் என்று ஆளும் கட்சிகள் அமைதியாகி விடுகின்றன.
இதனால், தமிழகத்துக்கு வரும் பல்வேறு திட்டங்கள் கைவிட்டுப் போய் விட்டது. மிக முக்கியமாகத் துறைமுக வாய்ப்பு கேரளா விழிஞ்சம் துறைமுகத்துக்குச் சென்று விட்டது.
தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகள் சீனா மற்றும் நாட்டின் எதிரிகளிடையே பணத்தைப் பெற்றுக்கொண்டு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
தலைவன் என்பவன் மக்கள் வேண்டுவதைக் கொடுப்பவனல்ல, மக்களுக்கு எதைக் கொடுத்தால் சரி என்று எதிர்ப்பு வந்தாலும் செயல்படுத்துபவனே!
தமிழகத்தில் அப்படியொரு தலைவர் கிடையாது.
இவையேன் ஆபத்தானது?
தற்போதே நெடுஞ்சாலைகளை அமைக்கவில்லையென்றால், எதிர்காலத்தில் மக்கள் பரவல் காரணமாக நிலத்தை ஒதுக்குவது மேலும் கடினமாகி விடும்.
மஹாராஷ்டிரா, குஜராத், உபியில் கடந்த ஐந்து வருடங்களாக மிகப்பெரிய அளவில் நெடுஞ்சாலைகளை, உயர் மட்ட பாலங்களை அமைத்து வருகிறார்கள்.
இவை அம்மாநில வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும். தங்களுக்குக்கிடைக்கும் வாய்ப்புகளை அற்புதமாகச் செயல்படுத்துகிறார்கள்.
வாக்கு இழப்பு ஏற்படும் என்று சாலை அகலப்படுத்துவதை, புதிய சாலை அமைப்பதை தமிழகத்தில் தள்ளிப்போட்டு வருவது மிகப்பெரிய சிக்கலை எதிர்காலத்தில் உறுதியாக ஏற்படுத்தும்.
வாக்குக்குப் பணத்தை, இலவசத்தை, மதுவைக் கொடுத்துப் பொய் செய்திகளால் மக்களைத் தொடர்ந்து முட்டாளாகவே வைத்துள்ளது திராவிடம்.
பின்னடைவு
குறித்து வைத்துக்கொள்ளுங்கள், எதிர்காலத்தில் திராவிடக் கட்சிகளால் தமிழகம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கும்.
அனைவராலும் கிண்டலடிக்கப்படும் உபி, தமிழகத்தை எளிதாகத் தாண்டிச்சென்று விடும். இதற்கு யோகி ஆட்சி அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தொடர்வது கட்டாயம்.
தமிழக அரசால் உட்கட்டமைப்புக்கு வாங்கப்படும் கடன் முழுக்க இலவசம், பெண்கள் உரிமைத்தொகை போன்றவற்றுக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கிடைக்கும் நிவாரண நிதிகள் எங்கே செல்கின்றன என்றே தெரியவில்லை, எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை.
வெளி வட்டச்சாலை போன்றவை எப்போதாவது நடக்கிறது, அதிலும் ஏராளமான ஊழல் காரணமாகத் தரமான சாலைகள் அமைக்கப்படுவதில்லை.
தமிழகத்தில் அனைத்து அரசுத்துறைகளும் கடனில், நட்டத்தில் இயங்கி வருகிறது, ஓய்வூதியம் கொடுக்கக் கூடப் பணமில்லை.
இந்த லட்சணத்துல சோழர் ஆட்சிக்குப் பிறகு திமுக ஆட்சி தான் சிறந்தது என்று முதல்வர் ஸ்டாலின் கூச்சமே இல்லாமல் எப்படி கூறுகிறாரோ!
நம்பிக்கையில்லை
திமுக அதிமுக என்ற இரு கட்சிகள் இருக்கும் வரை தமிழகம் எந்த உட்கட்டமைப்பு வளர்ச்சியையும் காணாது, கண்டாலும் தரமாக இருக்காது.
காரணம், இவர்கள் திட்டங்களை வளர்ச்சிக்காக அல்லாமல் அதில் எப்படி கொள்ளையடிக்கலாம், ஊழல் செய்யலாம் என்றே கணக்கிடுகிறார்கள்.
Smart City திட்டத்தில் மற்ற மாநிலங்கள் சிறப்பான மாற்றத்தை, வசதிகளை, பொலிவைக் கொண்டு வந்துள்ள நேரத்தில், தமிழகத்தில் இத்திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட ஒரு இடம் கூட உருப்படியாக இல்லை.
ஆந்திராவுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து அவர்கள் மாநிலத் தலைநகர உருவாக்கத்துக்கு ₹20,000+ கோடியை நிதியாகப் பெற்றார்கள்.
தமிழகத்துக்கு இப்படியொரு நிலை வந்து இருந்தால், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்துப் பசையான துறையில் அமைச்சர் பதவியை வாங்கி இருப்பார்கள்.
இது தான் தமிழகத்துக்கும் மற்ற மாநிலத்துக்கும் உள்ள வித்தியாசம். மனசாட்சியைத் தொட்டுக் கூறுங்கள், இது நடந்து இருக்காது என்று.
தமிழக அரசின் தவறுகளை மறைத்துத் தேவையற்ற விவாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தேவையான விவாதத்தைத் தமிழக ஊடகங்கள் தவிர்க்கின்றன.
நாட்டின் வளர்ச்சி
எதிர்மறை செய்திகளை மட்டுமே தமிழக ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் பரப்பி வருகின்றன ஆனால், இந்தியா முழுக்க வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
பின்வரும் காணொளியை அவசியம் காணுங்கள்.
இதில் தமிழகத்தில் பாம்பன் பாலம், வந்தே பாரத் ஏற்கனவே இருந்த உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. டைடல் பூங்கா, SIPCOT, திருச்சி விமான நிலையம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் தொழில் வளர்ச்சிக்கான கட்டிடங்களே தவிர உட்கட்டமைப்பு அல்ல.
தொழில் வளர்ச்சிக்கு டைடல் பூங்கா, SIPCOT நல்லது ஆனால், உட்கட்டமைப்பு மேம்படாமல் இவை மட்டுமே அதிகரிப்பதால், முன்னேற்றம், வளர்ச்சி வராது.
அத்தொழில்துறை தங்கள் பொருட்களை எளிதாக, விரைவாக, குறைந்த செலவில் கொண்டு செல்லப் போக்குவரத்து வசதி முக்கியம்.
எவ்வளவு திட்டங்கள் இந்த வருடம் இந்தியா முழுக்க செயல்படுத்தப்பட்டுள்ளது என்று, ஒப்பிட்டுப் பார்த்தாலே தமிழகத்தின் நிலை என்னவென்று புரியும்!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஏதேனும் புதிய யுக்தியின் மூலம் மக்களின் எண்ண ஓட்டத்தை முற்றிலும் மாற்றி விட்டு ஆட்சியை பிடித்து விடுகின்றனர்.. இதில் இலவசங்கள் முன்னிலை வகிக்கிறது.. எந்த இலவசத்துக்கும் (பொருளோ / பணமோ ) பின் மிக பெரிய அரசியல் சூழ்ச்சி உள்ளது என்பதை மக்கள் அறியவில்லை என்பது தான் நிஜம்.. குறிப்பாக தற்போது என்ன கிடைக்கிறது??? என்பதில் உள்ள கவனம் அது எவ்வாறு கிடைக்கிறது என்பதை பற்றி பெரும்பாலும் மக்கள் சிந்திப்பதில்லை…
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியில் படித்தது.. தன் ஓய்வுக்கு சில மாதங்கள் இருக்கும் தருவாயில் ஒரு அரசு பெண் அதிகாரி லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டார் என்று, செய்தியா இதை படிக்கும் போது என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.. வேலைக்கு சேர்ந்த புதிதில் லஞ்சம் வாங்கி இருந்தால் கூட ஏதோ (அதுவும் தவறு தான்) ஆர்வ கோளாறில், பணத்தாசையில் செய்து விட்டார் என்று கூறலாம்..
ஓய்வு பெறும் தருவாயிலும் லஞ்சம் வாங்குகிறார் என்றால் இவர் பணி காலத்தில் எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கி இருப்பார் என்பதை யூகிக்க முடியவில்லை.. எல்லாத்தோட கொடுமை என்னவென்றால் இது தவறு என்று ஒரு நாளும் யோசித்து இருக்க மாட்டார்…
@யாசின்
“தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஏதேனும் புதிய யுக்தியின் மூலம் மக்களின் எண்ண ஓட்டத்தை முற்றிலும் மாற்றி விட்டு ஆட்சியை பிடித்து விடுகின்றனர்”
ஆமாம்.
“அரசியல் சூழ்ச்சி உள்ளது என்பதை மக்கள் அறியவில்லை என்பது தான் நிஜம்”
கசப்பான உண்மை.
“ஓய்வு பெறும் தருவாயிலும் லஞ்சம் வாங்குகிறார் என்றால் இவர் பணி காலத்தில் எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கி இருப்பார் என்பதை யூகிக்க முடியவில்லை.”
லஞ்சம் வாங்கி பழகிய ஒருவரால் அதை எக்காலத்திலும் நிறுத்த முடியாது. அதுவொரு போதை.
“எல்லாத்தோட கொடுமை என்னவென்றால் இது தவறு என்று ஒரு நாளும் யோசித்து இருக்க மாட்டார்”
கொலை, பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கேட்டால் கூட ஒரு காரணம், நியாயம் வைத்து இருப்பார்கள்.