நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் முதல் மரியாதை படத்தில் நடித்ததை பற்றியும் மற்ற சில தகவல்களையும் பற்றிய இக்கட்டுரை. Image Credit
முதல் மரியாதை
நடிகர் திலகத்துக்கு ஒப்பனை செய்யாமல் அப்படியே இயல்பாக பல காலங்களுக்குப் பிறகு உலவவிட்ட படம் முதல் மரியாதை.
நடிகர் திலகத்தை வேறொரு பரிணாமத்தில் காட்டிய திரைப்படம்.
சிறுவனாக இருந்த போது பழனிக்குக் குடும்பத்துடன் சென்று இருந்தோம். அப்போது அங்கு இருந்த திரையரங்கில் பார்த்த படம், மற்றபடி வேறு எந்த நினைவும் இல்லை.
பெரியவனாகித் திரும்பப்பார்த்து வியப்பான படம் 🙂 .
பாக்யராஜ்
தாவணிக்கனவுகள் படத்தில் நடிகர் திலகத்தை பாக்யராஜ் நடிக்க வைத்து இருப்பார்.
படப்பிடிப்பில் எப்போதும் தயாராக இருக்கும் நடிகர் திலகத்துக்கு வசனங்களைக் கொடுக்காமல் உதவி இயக்குநர்கள் இழுத்தடித்துள்ளனர்.
கடுப்பான சிவாஜி, பாக்யராஜ் வந்தவுடன் கேட்டதும் அவரிடமும் இல்லை. வசனத்தை அப்போது கூறி நடிக்கக் கூறி இருக்கிறார்.
கடுப்பான சிவாஜி காகிதமாக வசனம் கொடுக்காததைக் கேட்டவுடன்,
‘சார் ஏற்கனவே பல முறை படித்து எல்லாமே மனப்பாடம் ஆகி விட்டது‘ என்று கூறியவுடன், ‘இப்படி நான் நடித்ததே இல்லை‘ என்று சலிப்புடன் நடித்துள்ளார்.
பாரதிராஜா
தாவணிக்கனவுகளுக்கு பிறகு பாரதிராஜாவுடன் முதல் மரியாதை நடிப்பதாக முடிவாகி, ஒப்பனையுடன் (Wig) படப்பிடிப்பு தளத்துக்கு வந்துள்ளார்.
பாரதிராஜா, ‘சார் Wig எல்லாம் வேண்டாம், உங்களுடைய இயல்பான முடியுடன் வந்தால் போதும்‘ என்று கூறியுள்ளார்.
சிவாஜி அவ்வாறு நடிக்க மறுத்தாலும், பின்னர் பாக்யராஜ் பாரதிராஜா வற்புறுத்தலில் ஒப்புக்கொண்டுள்ளார்.
முதல்மரியாதை காட்சிகளைப் பின்னணி இசை இல்லாமல் ரசிக்க முடியாது.
பின்னணி இசையில்லாமல் முள்ளும் மலரும் பார்த்துத் தயாரிப்பாளர் எப்படி கோபமானாரோ அது போலத்தான் முதல் மரியாதையும் இருந்து இருக்கும்.
இயல்பான நடிப்பு
ஒரு நபர் தனது வழக்கமான வேலையைச் செய்தால் எப்படி இருக்குமோ அதே தான் முதல் மரியாதை.
சிவாஜியிடம், அப்படிப் பாருங்க, இங்கே திரும்புங்க, நடங்க என்று காட்சிகளைப் பாரதிராஜா எடுத்துள்ளார்.
இதனால் கடுப்பான சிவாஜி பாக்யராஜிடம்,
‘நீ படம் எடுத்த போது வசனம் தான் தெரியவில்லை, இங்க என்ன எடுக்கறாங்கன்னே தெரியல‘ என்று கடுப்பாகி இருக்கார் 🙂 .
‘என்னய்யா எடுக்குற! அப்படி பாரு இப்படி பாருன்னு சொல்ற . . என்னென்னே தெரியாம நான் எப்படி நடிக்கிறது?‘ என்று கோபப்பட்டுள்ளார்.
திட்டினாலும் அவர் கேட்டபடி நடித்துக்கொடுத்துள்ளார்.
கடைசி விவசாயி படத்தில் நடித்த பெரியவரிடம் இப்படிக் கூறித்தான் நடிப்பை இயக்குநர் மணிகண்டன் பெற்று இருக்க வேண்டும்.
இளையராஜா
முதல் மரியாதை படத்துக்குப் பாடல்களும், பின்னணி இசையும் எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும்.
பலருக்கும் தெரியாதது, இளையராஜாக்கு முதல் மரியாதை பிடிக்கவில்லை என்பது.
படம் ஓடாது என்றே முடிவு செய்து படத்துக்கு இசையமைத்துள்ளார் 🙂 பின்னணி இசையை இரு நாட்களில் அமைத்துள்ளார்.
ஒரு மனுசன் பிடிக்காமலே இவ்வளவு அற்புதமாக இசையமைத்துள்ளார் என்றால், இவரின் திறமையை எப்படிக் கணக்கிடுவது?
தொழில் நேர்மை என்று எடுத்துக்கொள்வதா? அல்லது அப்போது தொட்டதெல்லாம் பொன் என்பதாக இவர் எப்படி இசையமைத்தாலும் சிறப்பாக வந்ததா?!
இவரின் தொழில் நேர்மை என்று எடுத்துக்கொள்கிறேன்.
இப்படத்துக்காக SPB யை அணுகிய போது அவரால் வர முடியவில்லை அதனால், திடீர் வரவாக வந்தவர் மலேசியா வாசுதேவன்.
ஆனால், சிவாஜிக்கு இவரின் குரல் அற்புதமாகப் பொருந்தியது. எல்லாமே அமைய வேண்டும்! முதல் மரியாதைக்கு எல்லாமே அமைந்தது.
பாரதிராஜா எப்படி எடுத்து இருப்பார்?
பின்னணி இசை பற்றிப் பல கட்டுரைகளில் கூறியுள்ளேன்.
இயக்குநரின் உணர்வுகளை எப்படி இசையமைப்பாளர் புரிந்து கொள்கிறார் என்பது பலநாள் சந்தேகம்.
முதல் மரியாதை படத்தைப் பின்னணி இசை இல்லாமல் வெளியிட்டால் படம் அனைவரும் நினைத்தது போலத் தோல்வியடைந்து இருக்கும்.
இறுதிக்காட்சியில் பின்னணி இசை இல்லையென்றால் படமே இல்லை.
எடுத்துக்காட்டுக்கு, ராம்கோபால் வர்மா ‘Sarkar‘ படத்தில் துவக்கக் காட்சியில் ஒரு பெரியவர் நடந்து அமிதாப்பிடம் வருவார்.
இப்படியொரு காட்சியை எடுக்கும் போது பின்னணி இசையை மனதில் வைத்து எடுப்பார்களா? முன்னரே திட்டமிடுவார்களா? எப்படி எடுக்கிறார்கள்?!
இதை எப்படி இயக்குநர்கள் சிந்திக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.
நாம் எடுக்கும் காட்சியை இசையமைப்பாளர் இசையாக உணர்வுப்பூர்வமாகக் கொடுப்பார் என்று நினைப்பார்களா?
இந்தச் சந்தேகம் என்னை அரித்தெடுக்கிறது!
ரஜினி கூறியது போல பாட்ஷா, ஜெயிலர் போன்ற படங்களுக்கு பின்னணி இசை படத்தைப் பல படி மேலே தூக்கியது என்றால், மிகையில்லை.
ஒளிப்பதிவு கோணங்கள்
பலரும் நினைப்பது போல அனைவரும் சிறப்பாக நடித்துத்தான் படம் வெற்றியாகிறது என்பது தவறு.
ஒளிப்பதிவு கோணங்கள், பின்னணி இசை மூலமாகக் காட்சியை மேம்படுத்தி விடுகிறார்கள். திரையில் நம்மால் உணர முடியாது.
வெவ்வேறு கோணங்களில் எடுக்கும் போது தவறுகளை மறைத்து விடுவார்கள். சரியாக முகபாவனை கொடுக்காத காட்சியைப் பின்புறம் இருந்து எடுக்கும் ஒளிப்பதிவால் காண்பித்து விடுவார்கள்.
சிவாஜியை அப்படி திரும்புங்க, நேரா நடங்க, அந்தப்பக்கம் பாருங்க, சிரிச்சிட்டே வாங்க, கோபமா நடங்க என்று கூறி சிறு சிறு காட்சியாக எடுத்துள்ளார்.
எனவே, சிவாஜி கோபப்பட்டதில் நியாயம் இருந்துள்ளது.
‘என்னய்யா எடுக்குற?! எனக்கு நடித்த திருப்தியே இல்லை‘ என்று கோபப்பட்டுள்ளார் 🙂 .
திரைப்படம்
திரைப்படங்கள் எப்போதும் வியக்கத்தக்கவை!
எப்படிப்பட்ட நடிகர் சிவாஜி! ஆனால், அவருக்கே சந்தேகம் வந்து கடுப்பாகி நடித்தாலும், அவரே எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றியானது.
சிவாஜி அவர்கள் எப்போதுமே உணர்ச்சிவசப்பட்டு ஆக்ரோஷமாக நடிப்பார், இதற்கு இவர் முன்னர் நாடகத்தில் நடித்ததின் பாதிப்பும் உள்ளது.
முன்பு வசனங்கள் பக்கம் பக்கமாக இருக்கும் ஆனால், இதன் பிறகு வசனங்களின் நீளம் குறைந்து விட்டது.
எனவே, இவை எதுவுமே இல்லாமல் மென்மையாக உணர்வுகளை வெளிப்படுத்தும் இயல்பான காட்சியாக அனைத்துமே இருந்ததால், கடுப்பாகியுள்ளார்.
ஆனால், கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் அவர் எண்ணத்துக்கு முற்றிலும் மாறாக அசத்தலாக படம் வெளியானதில் மிக மகிழ்ந்து உள்ளார்.
வடிவுக்கரசி அநாகரீகமாக நடக்கும் போது, அவரிடம் வெறுப்பைக் கூட மென்மையான முகபாவனைகளில் காண்பித்து நகர்வார்.
நடிகர் திலகத்தின் சிறந்த 10 படங்களை எடுத்தால், பத்தில் ஒன்றாக முதல் மரியாதை நிச்சயம் இருக்கும்.
16 வயதினிலே, முதல் மரியாதை படங்களே தமிழ் திரைப்படங்களின் பாணியையே, பார்வையையே அக்காலத்தில் மாற்றி விட்டது.
எனவே தான் பாரதிராஜா ஒரு Trendsetter ஆக பெயர் பெற்றுள்ளார்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு வித்தியாசமான பதிவை படித்த உணர்வு ஏற்படுகிறது.. இந்த பதிவில் சில தகவல்களை பகிர விரும்புகிறேன்.. படத்துக்கு முதலில் சிவாஜி இடத்தில் தேர்வு செய்யபட்ட நடிகர் SPB .. பாடுவதற்கு அல்ல, படத்தில் நடிப்பதற்காக.. ஆனால் ரொம்ப பிசியாக பாடிக் கொண்டிருந்த்தத்தால் தொடர்ச்சியாக 30 / 40 நாட்கள் கால்ஷீட் SPB யால் தர இயலவில்லை..
மலேசியா வாசுதேவன் உள்ளே வந்தது, (16 வயதினிலே படத்தில் SPB க்கு தொண்டை கட்டியதால் பாட முடியாமல் போனதால் இவர்க்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.. இது கங்கை அமரன் கூறிய தகவல்.. )
அதன் பிறகு தான் நீண்ட தயக்கத்துக்கு பிறகு தான் நடிகர் திலத்திடம் கேட்டு (அவர் நடிப்பாரா ?? இல்லையா ? என்ற சந்தேகத்துடன்) அவர் நடிக்க ஒப்பு கொண்டார்.. முதல் சில நாட்கள் இயக்குனருக்கும் / நடிகர் திலத்துக்கும் சுத்தமாக செட் ஆகவில்லை. அதன் பிறகு படபிடிப்பு சுமூகமாக நடைபெற்றது.. மேக்கப் செய்திகள் எல்லாம் நீங்கள் கூறியது சரி தான்..
இந்த படத்தோட தயாரிப்பாளர் பாரதிராஜா .. சென்னையில் தன் இரண்டு வீட்டை விற்று பணத்தை எடுத்து கொண்டு சூட்டிங் சென்று இருத்தோம் என்று செல்வராஜ் (இவரோட கதை தான்) ஒரு நேர்காணலில் கூறி இருந்தார்..இதற்கு முந்தைய பாரதிராஜாவின் சில படங்கள் சரியாக போகவில்லை.. அதனால் இரண்டு மடங்கு உழைப்பை இந்த படத்துக்காக பாரதிராஜா மேற்கொண்டுள்ளார்..
படம் வசூலில் செக்க போடு போட்டுள்ளது.. இந்த படத்தோட ஒரு பிரதியை ரஷ்ய அரசு அவர்களின் கலாச்சார அமைப்பு இவர்களிடம் வாங்கி சென்றதாம்.. பின்பு மிக அதிக அளவில் பணத்தை கொடுத்து மேலும் பல பிரதிகளை வாங்கி சென்றதாம்.. யோசிக்க முடியாத இலாபத்தை இந்த படம் கொடுத்தது என்று செல்வராஜ் கூறினார்.. பாரதிராஜாவின் பல படங்களுக்கு இவர் தான் கதை வசனம் எழுதுவார்.
எல்லாவற்றிற்கும் மேல் சத்யராஜின் கதாபாத்திரம் சிறிது என்றாலும் அவர் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பியதால், தன்னுடைய பிசி ஷேடுளில் சென்னையிலிருந்து தினமும் விமானம் மூலம் சாயந்தரம் சூட்டிங் ஸ்பாட்க்கு வந்து நடித்து விட்டு பின்பு மீண்டும் சென்னை திரும்பி விடுவாராம்.. ஒரு வாரத்துக்கு மேலாக இப்படியே நடித்து கொடுத்துள்ளார்.. ஏர்போட்க்கும் சூட்டிங் ஸ்பாட்க்கும் தூரம் அதிகமாம்.. சிரமம் பாராமல் நடித்து கொடுத்துள்ளார்..
வாலி கூறியது போல பாரதிராஜா ஒரு ஏட்டை புரட்டினேன்.. சினிமாவின் ஏட்டை 16 வயதுக்கு முன் / 16 வயதுக்கு பின் என இரு வேறாக பாரதிராஜவின் வருகைக்கு பின் பிரிக்கலாம் என்றார். உண்மையில் திரைமறைவில் இருந்த சினிமாவை வெளியில் கொண்டு வந்தது இவர் தான்.. DIRECTION / தயாரிப்பு மட்டும் மேற்கொண்டது தான் சரி.. எல்லாவற்றிலும் TR போல் ஈடுபடாமல் தான் குறிப்பிட்ட எல்லையோடு நிறுத்தி கொண்டது தான் சரி. தமிழ் சினிமா உள்ளவரை இவருக்குக்காக இடம் என்றும் நிலைத்து இருக்கும்..
படத்தோட பின்னனி இசை தருமாறு.. அதையும் மீறும் விதமாக படத்தோட பாடல்கள்.. இன்றும் படத்தோட எல்லா பாடல்களையும் விரும்பி கேட்கும் பல பேர் உலகம் முழுவதும் உள்ளார்கள்.. வைரமுத்துக்கு தேசிய விருது கிடைத்தது 200% தகுதி உள்ள ஒரு படம் .. மலேசியா வாசுதேவனுக்கும் கொடுத்து இருக்க வேண்டும்.. படத்தோட முழு கதையையே பூங்காற்று திரும்புமா? இந்த பாடலில் வைரமுத்து கூறி இருப்பார்..
@யாசின்
“முதல் சில நாட்கள் இயக்குனருக்கும் / நடிகர் திலத்துக்கும் சுத்தமாக செட் ஆகவில்லை.”
நடிகர் திலகம் குறிப்பிட்ட நடிப்புக்கு செட் ஆகி விட்டார். அதிலிருந்து மாற்றி எடுக்கும் போது மாறுவது எளிதல்ல.
எனவே, அவ்வாறு நடந்ததில் எனக்கு வியப்பில்லை.
“சென்னையில் தன் இரண்டு வீட்டை விற்று பணத்தை எடுத்து கொண்டு சூட்டிங் சென்று இருத்தோம்”
பெரிய ரிஸ்க் தான்.
சத்யராஜ் கதாப்பாத்திரம் வரும் நேரம் குறைவு என்றாலும், மனதில் நிற்கும் கதாப்பாத்திரம்.
ஒருவேளை இவ்வாறு நடித்துக் கொடுத்ததற்காக தான் வேதம் புதிது கொடுத்து இருப்பாரோ!
“உண்மையில் திரைமறைவில் இருந்த சினிமாவை வெளியில் கொண்டு வந்தது இவர் தான்”
வெளிப்புற படப்பிடிப்பு என்று மாறியது இதன் பிறகு தான். முள்ளும் மலரும் போன்ற படங்கள் இதை முன்பே செய்து இருந்தாலும், இப்படங்கள் வரவேற்பை பெற்றது.
“படத்தோட முழு கதையையே பூங்காற்று திரும்புமா? இந்த பாடலில் வைரமுத்து கூறி இருப்பார்..”
ஆமாம் 🙂 .