இணையத்தை பயன்படுத்துபவர்களிடமிருந்து YouTube பிரிக்க முடியாததாக மாறி விட்டது. Image Credit
YouTube Premium
பாடல்கள், நேர்முகம், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், விவாதங்கள், கார்ட்டூன், விளையாட்டு, திரைவிமர்சனம், நகைச்சுவை என்று இதில் இல்லாததே கிடையாது.
விளம்பரங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது. எதிர்காலத்தில் YouTube Premium வரும் என்று எதிர்பார்த்தது போலவே வந்து விட்டது.
இதில் விளம்பரங்கள் இல்லை, Minimize செய்து கேட்கலாம், Download videos to watch later, YouTube Music உட்படப் பல்வேறு வசதிகள் உள்ளது.
YouTube Premium பயன்படுத்துகிறேன்.
YouTube Light என்ற வசதி வரப்போவதாகக் கூகுள் கூறியுள்ளது. இதில் விளம்பரங்கள் இருக்காது, மேற்கூறிய சேவைகளும் இருக்காது.
குறைவான கட்டணத்தில் விளம்பரங்களைத் தவிர்க்கலாம்.
சுவாரசியமாக உள்ளதா?
முன்பு ஏராளமான அரசியல் விவாதக் காணொளிகளைப் பார்ப்பேன் ஆனால், தற்போது அவற்றில் ஆர்வம் குறைந்து விட்டது.
காரணம், ஒரே மாதிரியாக இருப்பதும், தொடர்ச்சியாகப் பார்ப்பதால் என்ன பேசுவார்கள் என்று முன்பே ஊகிக்க முடிவதாலும், முக்கிய நேர்முகங்களை மட்டும் பார்க்கிறேன்.
தற்போது திரைப்படப் பிரபலங்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் அனுபவங்களை அதிகம் பார்க்கிறேன் / கேட்கிறேன்.
அலுவலகம் செல்லும் போதும், வரும் போதும் உள்ள நேரம் இதற்கு பயன்படுகிறது.
வீட்டில் இருக்கும் போது என் விருப்பம் எப்போதும் பாடல்கள் தான். வீட்டிலிருந்தால் பாடல் ஓடிக்கொண்டே இருக்கும், இல்லையேல் கவுண்டர், வடிவேல் நகைச்சுவை.
விளம்பரங்களும் இல்லையாததால், தொல்லையும் இல்லை. தற்போது முழுக்க YouTube மற்றும் OTT தான்.
விவாதங்கள்
எனக்குச் சலிப்பை ஏற்படுத்தியது அரசியல் விவாதங்கள் தான். இதில் பாண்டே பேசுவது மட்டும் சலிக்காமல் பார்ப்பேன்.
அதாவது ஒன்று அவர் தனியாகப் பேச வேண்டும் அல்லது அவர் யாருக்காவது பேட்டி கொடுக்க வேண்டும். இவர் பேட்டி எடுப்பதை அதிகம் விரும்ப மாட்டேன்.
காரணம், அவர் நினைப்பதை எதிரில் உள்ளவர் ஏற்க வேண்டும், கூற வேண்டும் என்று ஒரே விஷயத்திலேயே சுற்றிக்கொண்டு இருப்பார்.
மேஜர் மதன் குமார் காணொளிகளைத் தொடர்ந்து பார்ப்பேன். காரணம், இவர் இந்தியா, Geo Politics பற்றி விவரங்கள் கூறுவார், எனக்கு பிடித்தமானது.
சித்ரா லட்சுமணன் அவர்களது நேர்முகம், அவ்வப்போது தமிழ் பொக்கிஷம். சில வலது சாரி சேனல்களைத் தலைப்பைப் பொறுத்துப் பார்ப்பேன்.
பாடல்கள் மற்றும் நேர்முகங்கள் தான் எனது YouTube விருப்பம்.
சலிப்பு
தொடர்ந்து பார்க்கும் போது ஒருவர் எப்படிப் பேசுவார் என்று ஊகித்து விட முடியும், அவருடைய எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும்.
எனவே, இது தான் இருக்கும் என்று தெரிந்து விடுகிறது.
இருப்பினும் இவற்றையும் தவிர்த்துப் பாண்டே போன்றவர்கள் பார்க்க வைத்து விடுகிறார்கள். இவரது அரசியல் பேச்சு, பதில்கள் சலிப்பை ஏற்படுத்துவதில்லை.
புதிய செய்திகளை, கோணங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
பொய்களின் கூடாரம்
YouTube பணம் கொழிக்கும் இடமாக மாறி விட்டதால், பார்வையாளர்களை இழுக்க முழுப் பைத்தியமாகவே மாறி விட்டார்கள்.
Hits க்காக கண்டதையும் வெளியிடுகிறார்கள், Thumbnail சர்ச்சையாக வைக்கிறார்கள், வேண்டும் என்றே ஏதாவது விவகாரத்தைக் கூட்டுகிறார்கள்.
YouTube என்றாலே பொய்களின் கூடாரம் என்பதாகி விட்டது.
இவையெல்லாம் கூட மற்றவற்றை வெறுக்கக் காரணமாக உள்ளது. எனவே, YouTube ல் என் விருப்பங்கள் மிகக்குறைவு ஆனால், அதன் பயன்பாடு அதிகம்.
புறக்கணிப்பு
இத்தளத்தை கூட தொடர்ந்து படிக்கும் போது என்ன மாதிரி எழுதுவேன் என்று ஊகிக்க முடியும். சில கட்டுரைகளைப் புறக்கணிப்பார்கள், சிலர் தொடர்வார்கள்.
பல்வேறு காரணங்களால் சிலர் முற்றாகவே தளத்தைத் தவிர்த்து விடுவார்கள்.
முடிந்தவரை ஒரே மாதிரி எழுதக் கூடாது என்பதைப் பின்பற்றி வந்தாலும், இருக்கும் அடையாளத்தை மாற்ற முடியாது, மாற்றவும் விரும்புவதில்லை.
100% சாத்தியமா?!
YouTube, Reels, X, facebook என்று யாரைத் தொடர்ந்தாலும், அனைத்தும் நமக்குப் பிடித்த மாதிரி பேச, எழுத வேண்டும் என்றால் யாரையுமே தொடர முடியாது.
அப்படி வேண்டும் என்றால் நாமே எழுதி, பேசிக்கொள்ள வேண்டியது தான் 🙂 . எனவே, பெரும்பாலும் யாரையும் முழுக்க புறக்கணிப்பதில்லை.
பிடிக்கவில்லையென்றால் தவிர்த்து ‘Not Interested’ தேர்வு செய்து விடுவேன். முழுக்க பிடிக்காதவர்களைப் பின்தொடரப்போவதில்லை என்பதால், பிரச்சனையே இல்லை.
பிடிக்காததை ஒதுக்கி விட்டுப் பிடித்ததை மட்டும் தொடர்ந்து பார்த்தால், YouTube AI அற்புதமாகப் பரிந்துரைப்பதால், எளிதாக உள்ளது.
YouTube என்ற ஒன்று இல்லையென்றால், எனக்குக் கடினமே 🙂 .
குறிப்பாகப் பாடல்களையும், சில விவாதங்களையும், நேர்முகங்களையும், அவர்களது அனுபவங்களையும் ரொம்ப தவற விடுவேன்.
உங்கள் YouTube அனுபவம் எப்படியுள்ளது?!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. YouTube சுவாரசியமாக இருக்கிறதா என்றால் என்னை பொறுத்தவரை நிச்சயம் இருக்கிறது.. நான் விரும்பிய, நேசித்த, தவறவிட்ட பலவற்றை என்னால் Youtube மூலம் காண முடிகிறது.. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் காணொளிகள்.. மற்றும் பழைய திரைப்பட பாடல்கள்.. வேறு எந்த சமூக வலைத்தளங்கள் எதையும் நான் பயன்படுத்துவது இல்லை YOUTUBE / WHATSAPP தவிர்த்து..
எனக்கு அரசியல் விவாதம், அரசியல் செய்திகள், டிவி யில் நிகழ்ச்சிகள் இதில் எப்போதும் ஆர்வம் இல்லை.. அதிகம் பழைய கிரிக்கெட் போட்டிகள் HIGHLIGHTS , பாடல்கள், உலக வரலாறு, CHAI வித் சித்ரா, சமையல் குறித்த காணொளிகள், இந்தியா / உலகின் சுற்றுலா தளங்கள், பழைய கோட்டைகள் இவற்றை குறித்து அதிக காணொளிகள் நேரம் கிடைக்கும் போது கண்டு வருகிறேன்.
எந்த மனநிலையில் இருக்கிறேனோ அதற்கு தகுந்தது போல நிகழ்ச்சிகளை பார்ப்பேன்.. குடும்பம் இல்லாமல் வீட்டில் தனியாக இருந்தால் பாடல்கள் ஓடிகொண்டே இருக்கும். நான் விரும்பி கேட்கும் பாடல்கள் என் மனைவிக்கும் / பையனுக்கும் சுத்தமாக பிடிக்காது.. அதனால் இவர்கள் உள்ள போது நான் பாடல்கள் கேட்பது குறைவு (செவ்வரளி தோட்டத்துல.. என்றதும் தெறிச்சி ஓடிடுவாங்க….)
என்னாலும் YOUTUBE பயன்படுத்தாத நாட்களை நினைத்து பார்க்க முடியவில்லை.. முடிந்த வரையில் எனக்குளே ஒரு கட்டுப்பாடு வைத்து பயன்படுத்தி வருகிறேன்.. YouTube Premium ஒரு ஆண்டுக்கான கட்டணம் என்ன என்று கூறவும்?.
@யாசின்
“குடும்பம் இல்லாமல் வீட்டில் தனியாக இருந்தால் பாடல்கள் ஓடிகொண்டே இருக்கும்.”
🙂 நானும்.
“நான் விரும்பி கேட்கும் பாடல்கள் என் மனைவிக்கும் / பையனுக்கும் சுத்தமாக பிடிக்காது.. அதனால் இவர்கள் உள்ள போது நான் பாடல்கள் கேட்பது குறைவு ”
என் மனைவி எதுவும் சொல்ல மாட்டாங்க . . ஆனால் , என் பையன் இருந்தால் ஏதாவது கார்ட்டூன் ஓடிட்டு இருக்கும் அதனால் என்னால் எதையும் பார்க்க, கேட்க முடியாது.
மனைவிக்கு பெரும்பாலான பாடல்கள் பிடிக்கும், பிடிக்கவில்லையென்றால் எதுவும் சொல்ல மாட்டாங்க. சத்தமா இருந்தால் மட்டும் சில நேரங்களில் புகார் வரும்.,
“செவ்வரளி தோட்டத்துல.. என்றதும் தெறிச்சி ஓடிடுவாங்க…”
😀
“YouTube Premium ஒரு ஆண்டுக்கான கட்டணம் என்ன என்று கூறவும்?.”
கட்டணம் நாட்டுக்குநாடு மாறுபடும்.
https://www.youtube.com/premium இங்கே சென்றால் உங்கள் நாட்டுக்கு என்ன கட்டணம் என்று இருக்கும்.
இந்தியாவில் மாதம் ₹159, வருடம் ₹1490. நான் வருடத்துக்கான சேவையைப் பயன்படுத்துகிறேன்.
OTT யோடு ஒப்பிடும் போது இதற்கு கொடுக்கும் கட்டணம் எனக்கு ஒர்த் ஆக உள்ளது.
ஏனென்றால் தினமும் YouTube பயன்படுத்துகிறேன். Android TV யில் என் பையன் பயன்படுத்துகிறான் ஆனால், OTT பெரும்பாலும் வார இறுதி நாட்களில் மட்டுமே!
எனவே, YouTube Premium எனக்கு பயனுள்ளதாக உள்ளது.