பைரவர் கோவில்
ஈரோடு அருகே உள்ள இராட்டைசுற்றிபாளையம் பைரவர் கோவிலுக்கு பசங்களோடு சென்று இருந்தேன். மிகப்பெரிய பைரவர் சிலை உள்ளது.
கூகுள் காட்டிய வழியில் சென்றோம், செல்லும் வழி பசுமையாக செமையாக இருந்தது. இந்த வழியாக சென்றால் கோவில் வருமா? என்று சந்தேகமே வந்து விட்டது.
கிராமத்துப் பாதை என்பதால், ஒரு கார் செல்லும் அளவே இருந்தது ஆனால், சாலை சிறப்பாக இருந்தது.
தனியார் கோவில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, கருவறை செல்ல அனைவரையும் அனுமதிக்கிறார்கள் ஆனால், திருநீறு உட்பட மற்றவற்றைப் பணம் கொடுத்துப் பெற வேண்டியதாக இருந்தது.
பணம் கொடுத்து வாங்குவது பழக்கமில்லை என்பதால், வாங்கவில்லை. இந்தப்பக்கமாகச் செல்பவர்கள் கோவிலுக்குச் சென்று வரலாம்.
டிவிஎஸ் ஜூபிடர் வாங்கி 5+ வருடங்கள் ஆகி விட்டது, இன்னமு புதுசு போலவே உள்ளது. ஒரு பிரச்சனையும் இல்லை.
குளிர்
கடந்த ஆண்டை விட இந்தாண்டு குளிர் குறைவாக இருப்பதாக உணர்கிறேன், உங்களுக்கு அப்படியெதுவும் தோன்றியதா?!
வழக்கமாக சென்னையிலிருந்து ரயிலில் ஈரோடு செல்லும் போது ரொம்ப குளிரும் ஆனால், இந்த முறை அவ்வாறு இல்லை.
அதே போலக் கோபியிலும் அவ்வளவாகக் குளிர் இல்லை, குளிர் இருந்தது ஆனால், ரொம்ப இல்லை.
அதிகாலையில் வாகனத்தில் கோவை சென்ற போதும் சமாளிக்க முடியாத குளிராக இல்லை. கோவையை நெருங்கும் போதே குளிர் அதிகரித்தது.
காலநிலை மாற்றமா அல்லது இந்த வருடம் அப்படியிருந்ததா என்று தெரியவில்லை.
அம்மா
அம்மாக்கு 84 வயதாகிறது, தளர்ந்து விட்டார்.
வயதாகிறது என்பதால், அவ்வப்போது ஊருக்கு வந்து செல்லக் கேட்டுக்கொண்டார், சரியென்று கூறியுள்ளேன்.
உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது அங்குள்ள வயதானவர்களைப் பார்த்துக் கொள்ளச் சில வீட்டில் ஆள் இருப்பார்கள், சில வீடுகளில் அவர்களே சமாளித்துக்கொள்கிறார்கள்.
எதிர்காலத்தில் வயதானவர்களின் நிலை மிக மோசமாக இருக்கப்போகிறது. எனவே, பொருளாதாரத்தையும் பராமரிப்புக்கும் தயார் செய்து கொள்வது நல்லது.
குடும்பத்தினர் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை வேண்டாம், அவர்களாலும் முடியாத சூழல் இருக்கலாம். யாரையும் குற்றம் கூறி ஒன்றும் ஆகப்போவதில்லை.
பெரியவர்களுக்கான முக்கியத்துவம் தற்காலத் தலைமுறையினரிடையே குறைந்து வருவது கவலையளிக்கிறது.
வயதானவர்களைச் சுமையாக நினைப்பவர்கள் அதிகரித்து விட்டனர் ஆனால், அவர்களுக்கும் வயதாகும் என்பதை மறந்து விட்டனர்.
பாரியூர்
இந்தாண்டும் வழக்கம் போலப் பாரியூர் தேர்த் திருவிழா விளையாட்டுக் கட்டணங்கள் அதிகமாக இருந்தது. அதிக கட்டணத்தால் பசங்க செல்ல மறுத்து விட்டார்கள்.
பெரும்பாலான கடைகளில் UPI வைத்து இருந்தார்கள்.
குண்டம் திருவிழாக்கு வரிசையில் அனுப்பி, கூட்டம் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறினார்கள்.
பலரும் இந்து சமய அறநிலையத்துறை அடிக்கும் கொள்ளையின் மீது அதிருப்தியில் உள்ளார்கள். கோவிலுக்கு வசூலாகும் பணம் கோவிலுக்குச் செலவு செய்யப்படுவதில்லை.
கோவிலுக்கு உரிமையுள்ள ஊர் மக்கள் தான் செலவைச் செய்து வருகிறார்கள். சம்பிரதாயத்துக்கு அறநிலையத்துறை செலவு செய்கிறது.
பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை நீக்கப்படும் என்று அண்ணாமலை கூறி வருகிறார், பார்ப்போம் எப்போது நடக்கிறது என்று.
இந்நாளுக்காகக் காத்துக்கொண்டுள்ளேன். திராவிடம், அறநிலையத்துறை ஒழிந்தால், இந்து மதம், கோவில்கள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெறும்.
காய்ச்சல்
தற்போது அனைவருக்கும் காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி ஆகியவை வந்து சென்று கொண்டுள்ளது.
இதில் பாதிக்கப்படாமல் தப்பிப்பவர்கள் குறைவாகவே உள்ளனர். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.
முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது.
அன்னதானம்
தற்போது கோவில் நிகழ்வுகளில் அன்னதானத்துக்காக பணம், பொருளுதவி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னையிலும் இதை வெளிப்படையாக காண முடிகிறது.
பலரும் இணைந்து அமாவாசை, விழாக்கள், சிறப்பு நாட்கள், பண்டிகை காலங்கள் என்று அன்னதானம் செய்கிறார்கள்.
முன்பு பிரசாதம் என்றால் தொன்னையில் கொடுப்பார்கள் ஆனால், தற்போது பெரிய தட்டத்திலேயே பல உணவு வகைகளைக் கொடுக்கிறார்கள்.
குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத சிறு கோவில்களில் இவற்றை அதிகம் காண முடிகிறது.
கோவை நெடுஞ்சாலை
ஒரு வழியாக கோவை தேசிய நெடுஞ்சாலையைப் புதுப்பித்து விட்டார்கள்.
சுங்கச்சாவடி பணத்தையும் கொடுத்து, கொடுமையான சாலையில் சென்று கொண்டு இருந்த வாகனங்களுக்கு தற்போது நிம்மதி.
குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் சென்றால், spinal cord பிரச்சனையே வந்து விடும் அளவுக்கு மிக மோசமாக இருந்தது.
தற்போது புதுப்பிக்கப்பட்டு தரமான சாலையாக்கி விட்டார்கள்.
இந்தமுறை எங்கேயுமே அதிகம் செல்லவில்லை. வெகுசில இடங்களோடு பொங்கல் பயணம் முடிந்து விட்டது.
Read கோவை சுங்கச்சாவடி | நிறை குறைகள்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, உங்களோட பயண கட்டுரையில் எப்போதும் டிவிஎஸ் ஜூபிடர்க்கு ஒரு தனியிடம் உண்டு.. விடுமுறையில் ஊருக்கு செல்லும் போது நானும் சில நாட்கள் ஜூபிடர் பயன்படுத்துவேன்.. என்னுடைய கனவு மோட்டார் சைக்கிள் என்றால் ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டர் தான்.. இன்று வரை கனவாகவே போகிவிட்டது..
குளிர் : குளிர் நாட்கள் என்றாலே எனக்கு கோவை அதிகம் நினைவில் வந்து செல்லும்.. பொதுவாக எங்கள் பகுதில் குளிர் குறைவு தான்.. கோவையில் இருந்த சமயத்தில் குளிர் நாட்களை அவ்வளவு ரசிப்பேன்.. குளிர் நாட்களில் அதிகம் பயணம் செல்ல விருப்பமாக இருக்கும்.. சக்தியுடன் அதிக பயணத்தினை மேற்கொண்டுளேன்..
வயதானவர்களை பற்றி உங்கள் இந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை… எதிர்காலம் இவர்களுக்கு எவ்வாறு செல்லும் என்பதை யோசித்து பார்க்க முடியவில்லை.. கோவையில் பணிபுரிந்த போது விடுமுறையில் ஊருக்கு செல்லும் போது, அந்த பயணத்தை ரொம்ப ரசிப்பேன்..
இரவு நேர பயணத்தை விட அதிகாலை பயணம் மிகவும் பிடிக்கும்.. என் விடுமுறையில் 1/2 நாள் தேவையில்லாமல் செலவானாலும் அந்த feeling செமையாக இருக்கும்.. எனக்கும் கோவைக்குமான தொடர்பு என் வாழ்நாளில் மறக்க முடியாது.. இந்த தொடர்பு தான் எனக்கு சக்தி என்ற இனிய நண்பரை காலமெல்லாம் நட்பு பாராட்ட வைத்தது..
@யாசின்
“உங்களோட பயண கட்டுரையில் எப்போதும் டிவிஎஸ் ஜூபிடர்க்கு ஒரு தனியிடம் உண்டு”
🙂 ஆமாம். இவ்வளவு ஆண்டுகள் பிரச்சனையில்லாமல் சிறப்பாக ஓடும் என்று எதிர்பார்க்கவில்லை.
“என்னுடைய கனவு மோட்டார் சைக்கிள் என்றால் ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டர் தான்.. இன்று வரை கனவாகவே போகிவிட்டது..”
ஏற்கனவே ஒருமுறை கூறியுள்ளீர்கள் என்று நினைக்கிறன்.
நான் சென்னையில் துவக்கத்தில் இருந்த போது Splender + வாங்கினேன். எனக்கு பிடித்த வாகனம். தற்போதும் இந்த வண்டியை அக்கா கணவர் ஓட்டிக்கொண்டுள்ளார்.
“இரவு நேர பயணத்தை விட அதிகாலை பயணம் மிகவும் பிடிக்கும்.. என் விடுமுறையில் 1/2 நாள் தேவையில்லாமல் செலவானாலும் அந்த feeling செமையாக இருக்கும்.”
இரவு நேரப்பயணம் எப்போதுமே ஆபத்தானது என்பதே என் கருத்து.
Thanks for writing