எல்லோருக்குமே ஒரு கனவு இருக்கும், அது நடந்தால் மகிழ்வோம். அது போன்று எனக்குக் கனவு முதலமைச்சர் உள்ளார், அவர் தான் யோகி ஆதித்யநாத்.
கனவு முதலமைச்சர்
நமது நாடு, மாநிலம், நகரம், கிராமம் மற்றவர்கள் வியக்கும்படி சிறப்பாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பார்கள். Image Credit
அது போன்று எண்ணுபவர்களில் ஒருவன்.
தமிழக அரசியலால் வெறுத்து, தமிழகத்தை பாதுகாக்க, வளர்ச்சியடையச் செய்ய ஒரு முதலமைச்சர் கிடைக்கமாட்டாரா? என்ற ஏக்கம் எப்போதும் இருக்கும்.
காரணம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொள்ளை, கொலை, லஞ்சம், ஊழல் என்று தினம் தினம் செய்திகளைக் காணும் போது இயலாமையால் உள்ளுக்குள்ளே எரிமலையே வெடித்துக்கொண்டுள்ளது.
கண்முன்னே தினம் தினம் நடக்கும் அத்துமீறல்களை, அலட்சியத்தை, சேதப்படுத்துவதை, வீணாவதை காண்கையில் மன உளைச்சல் ஏற்படுகிறது.
எதுவுமே செய்ய முடியவில்லையே, யாருமே நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறார்களே, சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில்லையே, அரசியல்வாதிகள் எளிதாக தப்பித்து செல்கிறார்களே! என்ற எரிச்சல் தொடர்கிறது.
இவ்வாறு விடிவே இல்லாமல் தொடர்கையில் நான் எதிர்பார்க்கும், எதிர்பார்ப்பதைச் செய்யும் முதலமைச்சராக யோகி உள்ளார்.
மிகவும் பொறாமையாக உள்ளது, இவரைப் போன்ற ஓர் முதலமைச்சர் நமக்குக் கிடைக்கவில்லையே என்று 🙁 .
குற்றங்கள்
தமிழகத்தில் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேனோ, அவ்வளவையும் யோகி உபியில் செய்து கொண்டுள்ளார்.
2017 ல் யோகி ஆட்சிக்கு வந்தார், அவர் வந்த போது இந்தியாவின் மிக மோசமான மாநிலங்களில் ஒன்றாக உபி இருந்தது, குற்றங்கள் இயல்பானதாக இருந்தது.
அதாவது எவரும் எதையும் செய்யலாம், கேள்வி கேட்க யாருமில்லை.
ஆனால், முதல் 5 ஆண்டுகளில் செய்த ஆகச்சிறந்த செயல், மொத்த கேங்ஸ்டர் கும்பல்களையும் ஒழித்தார், தொடர்ந்தவர்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
துவக்கத்தில் எதோ ஓர் ஆர்வத்தில் செய்வதாக நினைத்தவர்கள், நாளுக்குநாள் அதன் தீவிரம் அதிகரித்த போது தான் இவர் வழக்கமானவரல்ல என்ற ஆபத்தை உணர்ந்தார்கள், சிலர் தானாகவே சரணடைந்தார்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைத்தது. ஒன்று என்கவுன்ட்டர் செய்து கொல்லப்பட்டார்கள் அல்லது காலில் சுடப்பட்டார்கள்.
மேலும் சிலர் நடக்கவே முடியாத அளவுக்குத் துவைக்கப்பட்டனர்.
குற்றங்கள் குறையக்காரணம் என்ன?
குற்றம் நடந்த ஓரிரு நாட்களில் குற்றவாளி கைது செய்யப்படுகிறார். மதம், கட்சி சாராது யார் குற்றவாளி என்றாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எடுத்துக்காட்டுக்கு, ஒரு பெண்ணை அடித்த ஒரு பாஜக ஆதரவாளர் ஆக்கிரமிப்பு செய்த கட்டிடம் ஒரே இரவில் இடிக்கப்பட்டது, அவரும் கைது செய்யப்பட்டார்.
கேங்ஸ்டர்கள் பாரபட்சமின்றி என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர், பொதுமக்களுக்கு, பொது சொத்துக்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்டால் தப்பிக்கவே முடியாது.
இது போன்று எடுத்துக்காட்டுகள் ஏராளம் உள்ளது.
உபியில் நடக்கும் குற்றங்கள் உங்கள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மோசமாக இருக்கும். காரணம், குற்றங்களை இயல்பாகக் கருதி அவ்வாறு பழகி விட்டனர்.
தமிழகமும் இது போன்ற பாதுகாப்பாற்ற சூழலை நோக்கித்தான் சென்று கொண்டுள்ளது ஆனால், ஒரே வித்தியாசம் உபி மலை என்றால் தமிழகம் மடு.
தமிழகத்தில் குற்றங்கள் தொடரக்காரணம் தண்டனை கிடைக்காது என்ற தைரியமே! இதுவே ஒருவரைத் தைரியமாகத் தொடர்ந்து தவறு செய்யத் தூண்டுகிறது.
அதே உபியில் குற்றம் செய்தால் தண்டனை உடனே கிடைக்கும் என்ற பயமே குற்றங்கள் குறையக் காரணமாக உள்ளது.
வளர்ச்சி
உபி போன்ற மாநிலத்தை வளர்ச்சியடைய வைப்பது யோகி போன்ற கண்டிப்பும், உறுதித்தன்மையும், மாநிலத்தின் மீதான பெருமையும் இருப்பவராலையே சாத்தியம்.
இதுவரை 70 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட மாநிலமாக உபி இருந்தது. இங்கு ஆட்சியில் இருந்த எவராலும் மாற்றத்தைக் கொண்டு வர முடியவில்லை.
கொண்டுவர முடியாதற்குக் காரணம், அரசியல்வாதிகளுக்கு மாநிலத்தின் மீது அக்கறை இல்லை. வாக்கு அரசியலுக்காக நடவடிக்கை எடுக்கத் தைரியம் இல்லை.
அரசியல்வாதிகள் மக்களை அடிமையாக, அவர்களை வளர்ச்சிபெறாமல் வைத்து, தங்களின் கைப்பாவையாக வைத்துக்கொண்டார்கள்.
வளர்ச்சி என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தார்கள்.
ஆனால், மோடி யோகி இரட்டை என்ஜின் ஆட்சி நலத்திட்ட உதவிகளால் நேரடியாகப் பயன்பெற்ற பொதுமக்கள், மக்கள் சேவை, வளர்ச்சி என்றால் எப்படி இருக்கும் என்பதையே தற்போது தான் உணர்கிறார்கள்.
சுற்றுலா
சுற்றுலாவில் தமிழகத்தை உபி மிஞ்சி இந்தியச் சுற்றுலாப் பயணிகளில் அடைந்து விட்டது, வெளிநாட்டுப் பயணிகளிலும் விரைவில் அடைந்து விடும்.
இந்தியாவின் ஆகச்சிறந்த ஆன்மீக சுற்றுலாத்தலமாக உபி மாறி வருகிறது.
இந்தியாவின் ஆன்மீக பூமியாக தமிழகம் உள்ளதோடு, இந்தியளவில் பெருமைவாய்ந்த கோவில்களை அதிகளவில் கொண்ட மாநிலமாகவும் திகழ்கிறது.
ஆனால், திராவிட கட்சிகளால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு தமிழகம் அதன் சிறப்பை, வருமானத்தை இழந்து வருகிறது.
உபியில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்தும் புணரமைக்கப்பட்டு, புதிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, வணிகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து, இப்பகுதி வணிகர்கள் அதிகப் பலனை அடைந்து வருகிறார்கள்.
குறிப்பாக காசி, அயோத்தி ராமர் கோவில் பகுதியில் உட்கட்டமைப்பு, வணிகம் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது.
வரும் காலங்களில் மீதமுள்ள நெடுஞ்சாலை பணிகளும் முடிக்கப்பட்டால், இப்பகுதி மக்கள் பெறும் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.
இதன் தொடர்ச்சி அடுத்த கட்டுரையில்….
Read: கனவு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் | 2
தொடர்புடைய கட்டுரை
யோகி ஆதித்யநாத் | காவியில் ஒரு காக்கி
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கலக்குங்க கிரி… எனது மனதில் இருப்பது அப்படியே கூறிக்கொண்டு உள்ளீர்கள்
நன்றி சுந்தர்